Wednesday, April 24, 2024
HomeResource Centerதவறான தகவல்களின் மூலக் காரணிகளை  கண்டறிவதற்கான  நிபுணர் குறிப்புகள்

தவறான தகவல்களின் மூலக் காரணிகளை  கண்டறிவதற்கான  நிபுணர் குறிப்புகள்

தவறான தகவல் மற்றும் நிகழ்ச்சி நிரலின் அடிப்படையில் வேண்டுமென்றே பரப்பப்படும் பிழையான தகவல்களின் பிரச்சாரங்கள் தொடர்பில் ஆராயும்  புலனாய்வு ஊடகவியலாளர்களுக்கு, அவற்றிற்கு பின்னால் யார் இருக்கிறார்கள் என்பதைக் கண்டறிவது முக்கியமாகும். ஆனால் அது மட்டும் போதாது என்று 12வது உலகளாவிய புலனாய்வு இதழியல் மாநாட்டில்12th Global Investigative Journalism Conference (#GIJC21))  இணையவழி புலனாய்வு நிபுணரான  கிரேக் சில்வர்மேன் (Craig Silverman) எச்சரித்தார்.  லாப நோக்கமற்ற செய்தி அறையான ProPublica இன் ஓர் நிருபரான சில்வர்மேன், இவ்வாறான பிரச்சாரங்களின் பின்னணியில் சம்பந்தப்பட்டவர்களின் நோக்கங்களை  புரிந்துகொள்வதும் அதற்கு சமமாக முக்கியமானதொன்று என்று கூறுகிறார்.

இந்த பிரச்சாரங்களில் உள்ள மிகவும் பொதுவான விடயமாக ஓர்  தவறான சூழ்நிலையை  உள்ளடக்கி  இருப்பதாக சில்வர்மேன் விளக்குகின்றார். அதாவது ஒரு உண்மைக்கூற்று அல்லது துல்லியமான மேற்கோள் ஒன்று அதன் உண்மையான பொருள் அல்லது அமைப்பிலிருந்து அகற்றப்பட்டு, தவறாக வழிநடத்துவதற்கு மீண்டும் பயன்படுத்தப்படுகிறது. “எனவே, தவறான தகவல் மற்றும் பிழையான தகவல்கள் தொடர்பில் ஆராயும்போது அல்லது கண்காணிப்பது பற்றி நீங்கள் சிந்திக்கும்போது, ​​அவற்றின்  சூழ்நிலை பற்றியும்  நீங்கள் மனதில் கொள்ள வேண்டும்,” என்று அவர் கூறினார். “ஏனென்றால், நீங்கள் 100% தவறான விஷயங்களை மட்டுமே தேடுகிறீர்கள் என்றால் அல்லது செய்தி என்று கூறப்படும்  ஒன்றை மட்டுமே நீங்கள் தேடுகிறீர்கள் என்றால்,  அவை தொடர்பில் இணையவெளியில் இருக்கும் பெரும்பாலானவற்றை நீங்கள் இழக்க நேரிடும்.”

இணையவழி கட்டுக்கதைகள் மற்றும் போலிச் செய்திகளை புலனாய்வு செய்வதில்  நிபுணத்துவம் பெற்ற ஹார்வாட் பல்கலைக்கழகத்தின்  ஷோரென்ஸ்டீன் மீடியா, அரசியல் மற்றும் பொதுக் கொள்கை (Shorenstein Center on Media, Politics and Public Policy)  நிலையத்தின் மூத்த ஆய்வாளரும்  சக பத்திரிக்கையாளருமான  ஜேன் லிட்வினென்கோ (Jane Lytvynenko), GIJC21- Exposing the Roots of Disinformation  என்னும் தலைப்பில் நடைபெற்ற பயிற்சி பட்டறையில்  சில்வர்மேனுடன் இணைந்து கொண்டார். தவறான தகவல் மற்றும் பிழையான தகவல்கள் எப்போதும் தந்திரமாக வழங்கப்படுகிறது என லிட்வினென்கோ குறிப்பிடுகிறார். “பிரச்சாரங்கள் பல கட்டங்களாக இடம்பெறுகின்றன. அவை திட்டமிடப்பட்டு பின்னர் சமூக ஊடகங்களூடாக பரவுகின்றன, அங்குதான் ஊடகவியலாளர்களின் பதில்களை நாங்கள் சந்திக்க நேரிடும்,” என்று அவர் கூறினார். “நிச்சயமாக, பல பிரச்சாரங்களை  நாங்கள் பிழையானது என்று நிறுவுவதால் மட்டும் அவை மறைந்துவிடாது. மாறாக,  அவை நிலைமைக்கு ஏற்ப தம்மை மாற்றிக்கொள்கின்றன,”

இந்த பிரச்சாரங்களின் மூலக் காரணிகளை கண்டறிவதற்கு இரு ஊடகவியலாளர்களும்  பல குறிப்புகள் மற்றும் கருவிகளை வழங்கினர்.

தவறான தகவல்களை முறியடிப்பதற்கான உதவிக்குறிப்புகள்:

வீடியோக்கள் மற்றும் புகைப்படங்கள்

வீடியோக்கள் மற்றும் புகைப்படங்களின்  உண்மைத்தனமையை  சரிபார்க்க முயற்சிக்கும்போது, ஊடகவியலாளர்கள் தங்களைத் தாங்களே இவ்வாறு  கேட்டுக் கொள்ள வேண்டும்: இது உண்மையான அசல் படம் அல்லது வீடியோவா? குறிப்பிட்ட காணொளி அல்லது புகைப்படத்தை யார் ஒளிப்பதிவு செய்தார்கள்?, எப்போது? இறுதியாக, குறித்த படம் அல்லது வீடியோ எங்கு எடுக்கப்பட்டது – இது பூகோள ரீதியிலான இருப்பிடத்தைக் கண்டறிய உதவும்.

லிட்வினென்கோ மற்றும் சில்வர்மேன் ஆகியோர் Chrome இணைய உலாவியுடன் பயன்படுத்தக்கூடிய சரிபார்ப்பு செருகுநிரலான WeVerify  கருவியை பரிந்துரைத்தனர். இணைய உலாவியில் நிறுவப்பட்டதும், செருகுநிரலானது பயனர்களுக்கு TinEye, Bing மற்றும் Yandex உள்ளிட்ட பல்வேறு தேடுபொறிகள் மூலம் புகைப்படத்தை இயக்குவதற்கான வசதியினை  வழங்குகிறது, மேலும் பயனர் படத்தின் குறிப்பிட்ட ஒரு பகுதியை மட்டும் முன்னிலைப்படுத்தி தேடவும் அனுமதிக்கிறது. Yandex ஆனது முக அமைப்பை  அடையாளம் காணும்  திறன்களையும் கொண்டுள்ளது – இருப்பினும் அந்த தொழில்நுட்பமானது கூடுதல் சரிபார்ப்புக்களை கோருகிறது. “படத் தேடலின் முக்கிய விஷயங்களில் ஒன்று Google ஐத் தாண்டிச் செல்வதாகும், இதற்கு  WeVerify தேடல் நீட்டிப்பு உங்களை அனுமதிக்கிறது” என்று லிட்வினென்கோ கூறினார்.

சமூக ஊடக கணக்குகள்

தவறான தகவல்களை பிழையென நிறுவ முற்படும் போது அதனை  தொடங்குவதற்கு உள்ள ஒரு நல்ல இடம், அவ்வாறான தகவல்களை பகிரும் சமூக ஊடக கணக்குகளை புலனாய்வு செய்வதே. 

முதலில், இது உண்மையான ஓர் கணக்குதானா என்பதைச் சரிபார்க்கவும்: இது உண்மையில் உரிமை கோரும் நபருக்குச் சொந்தமானதா? கணக்கு எப்போது உருவாக்கப்பட்டது? அவர்கள் தமது வசிப்பிடம் எங்கே என்று சொல்கிறார்கள்?

மேலும் ஒரு விரிவான பின்னணி சரிபார்ப்பு செய்யுங்கள்: அவர்களின் வலையமைப்பில்  அவர்களைப் பற்றி என்ன சொல்கிறது? அவர்கள் யாருடன் நண்பர்களாக உள்ளனர்? அவர்கள் வழக்கமாக யாருடன் பேசுகிறார்கள், பதிவுகளை பகிர்ந்து கொள்கிறார்கள் அல்லது லைக் (like) குறியினை இடுகிறார்கள்? அவற்றின் வடிவங்கள் என்ன? அவர்கள் தொடர்ந்து பதிவுகளை இடுகிறார்களா? என்ன விடயங்கள் பற்றி பதிவிடுகிறார்கள்?

“சில சமயங்களில் அவர்கள் தம்மை யார் எனக் கூறுகிறார்களோ அதற்கும் கணக்கில் நீங்கள் காணும் உள்ளடக்கத்திற்கும் இடையே சில தொடர்பற்ற தன்மை அல்லது முரண்பாடுகள் உள்ளன” என்று சில்வர்மேன் குறிப்பிட்டார். “இவ்வாறான விடயங்களே  நீங்கள் முக்கியமாக  கவனிக்க வேண்டியவையாகும்.”

Twitonomy  என்பது ஊடகவியலாளர்கள் தாங்கள் ஆய்வு செய்யும் ட்விட்டர் கணக்கின் விரிவான மற்றும் காட்சிப்படுத்தப்பட்ட பகுப்பாய்வுகளைப் பெற பயன்படுத்தக்கூடிய ஒரு கருவியாகும். “அவர்கள் எவ்வளவு நேர இடைவெளிகளில் ட்வீட் செய்கிறார்கள், எப்போது ட்வீட் செய்கிறார்கள், எந்தெந்த கணக்குகளுக்கு அவர்கள் பதிலளிக்கிறார்கள், யாரை retweet செய்கிறார்கள் என்பதை இது உங்களுக்குக் கூறுகிறது” என்று சில்வர்மேன் மேலும் கூறினார். “அவர்கள் எப்போது ட்வீட் செய்கிறார்கள் என்பது தொடர்பில் விளக்கமான அறிக்கையையும் இது உங்களுக்கு அளிக்கும், அவர்கள் எந்த நேர வலயத்தில்  இருக்கிறார்கள் என்பதைக் கண்டறிய இது உங்களுக்கு உதவும்.”

அரட்டை செயலிகள்

சில அரட்டை செயலிகள் பொதுவாக தவறான தகவல்களைப் பரப்பப் பயன்படுத்தப்பட்டாலும், அவற்றை புலனாய்வு  செய்வதற்கு வரம்புகள்  உள்ளன. “இது ஒருவர் வேண்டுமென்றே தகவல்களை பொதுவெளியில் வெளியிடும் ஒரு பொதுவான  ட்விட்டர் தளத்தில் உள்ள  சுயவிவரம் அல்லது பேஸ்புக் சுயவிவரத்திலிருந்து மிகவும் வித்தியாசமானது,” என்று லிட்வினென்கோ விளக்கினார். “அரட்டை செயலிகள் தனிநபர் இரகசியம் பற்றிய எதிர்பார்ப்பைக் கொண்டுள்ளன, அதைப் பற்றி நீங்கள் அறிக்கையிடும்போது  மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.”

அவ்வாறான வரையறைகளை கடந்து வருவதற்கான ஒரு வழி, பார்வையாளர்களிடமிருந்து அந்தத் தகவலை crowdsourcing (பொதுமக்களிடமிருந்து தகவல்களை பெற்று உறுதிப்படுத்தல்)   மூலம் பெறுவதாகும், என்று அவர் கூறினார்.  பிரேசிலின் Comprova Project  திட்டத்தில் இந்நடைமுறை வெற்றிகரமாகப் பயன்படுத்தப்பட்டது. அத்திட்டத்தில் கீழ் 2018 தேர்தல்களில் செல்வாக்கு செலுத்த பரப்பப்பட்ட  வதந்திகள் மற்றும் புனையப்பட்ட கதைகளை  அடையாளம் காண்பதற்காக 24 வெவ்வேறு ஊடக நிறுவனங்கள் ஒன்றிணைந்து செயல்பட்டன.

“அனைத்து செய்தி அறைகளும் தங்கள் வாசகர்களுக்கும் பார்வையாளர்களுக்கும் ஒரே வாட்ஸ்அப் (WhatsApp ) எண்ணை அனுப்பியது, அவர்கள் தாம் எதிர்கொள்ளும் எந்தப் போலி தகவலையும் சரி பார்ப்பதற்காக அல்லது மறுப்பதற்காக செய்தி அறைகளுக்கு அனுப்பினார்கள்,” என்று அவர் கூறினார். “எனவே உதவிக்குறிப்புகளை கோருவதன் பலத்தை குறைவாக மதிப்பிடாதீர்கள்,”

  வாட்ஸ்அப் போன்ற அரட்டை செயலிகளில் கிரவுட் சோர்சிங் முறை நன்றாக வேலை செய்கிறது, ஏனெனில் பகிரங்கப்படுத்தபடாத குழுக்களில் சேர்வது கடினம் என்பதால் அவற்றினை ஆராய்வது  சவாலாக உள்ளது.

குறியீடு மூலமான  (encrypted) செய்திச் செயலியான டெலிகிராமில் (Telegram )உள்ள உள்ளடக்கத்தை விசாரிப்பதற்கான மிகவும் பயனுள்ள கருவிகளில் ஒன்று சேனல் தேடல் மற்றும் பகுப்பாய்வுக் கருவியான  Tgstat ஆகும். இதன் மூலம், ஒரு ஊடகவியலாளர்  குறிப்பிட்ட சேனலில் ஈடுபடுபவர்களைப் பற்றிய ஆழ்ந்த அறிவைப் பெற முடியும். “எனவே, நீங்கள் ஒரு பயனர்பெயரை … Tgstat இல் உள்ளீடு செய்தால் , நீங்கள் 90 நாட்கள் வரை பகுப்பாய்வுகளைப் பெறலாம், மேலும் சேனலுக்கு அதிக சந்தாதாரர்கள் வந்துள்ளனரா அல்லது அவர்களின் உள்ளடக்கம் மிகவும் பிரபலமானதாக மாறிய ஏதாவது  ஒரு நாள் இருந்ததா என்பதை நீங்கள் பார்க்கலாம். ” என்று லிட்வினென்கோ கூறினார்.

இந்தக் கருவிகள் மற்றும் கவனமாக அறிக்கையிடல் இருந்தாலும் கூட, கூடுதல் கவனமாக இருக்குமாறும், இறுதி முடிவுக்கு வருவதற்கு முன் உறுதியான ஆதாரங்களை சேகரிக்குமாறும் இரு வளவாளர்களும் வலியுறுத்தினர்.

“இந்த வேலையைச் செய்பவர்கள் உண்மையில் தவறாகப் போகும் வழிகளில் ஒன்று, அவர்கள் ஒரு குறிப்பிட்ட மேற்கோளை  உருவாக்குவதுடன், மேலும் அவர்கள் ஆதாரம் இல்லாமல் குற்றச்சாட்டுகளை முன்வைப்பதே,” என்று சில்வர்மேன் எச்சரித்தார். “எனவே எச்சரிக்கையாக இருங்கள். உங்கள் ஆதாரங்களைச் சேகரிக்கவும் – நீங்கள் அது தொடர்பில் அதிக நம்பிக்கையைப் பெறும் வரை அவற்றினை ஒவ்வொன்றாக அடுக்கவும்.”

கிரேக் சில்வர்மேன் இனால் செம்மபடுத்தப்பட்ட  “Verification Handbook: For Disinformation And Media Manipulation,” கையேடானது, தவறான தகவல் மற்றும் ஊடக கையாளுதல்களைக் கண்டறிய ஊடகவியலாளர்களுக்கு உதவுவதை நோக்கமாகக் கொண்டதாகும். படம்: Screenshot

மூலம்

This story was originally published by the Global Investigative Journalism Network (GIJN)

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments