சுனில் பெரேரா (பெயர் மாற்றப்பட்டுள்ளது) தனது நண்பர்களுடன் ஆர்வமாக அங்கு அமைக்கப்பட்டுள்ள மேடையை நோக்கி வீறு நடைப்போடுகின்றார். தேர்தல் பிரச்சார கூட்டத்துக்காக அமைக்கப்பட்ட மேடை அது. “நேரமாகின்றது சீக்கிரம் போவோம் மீட்டிங் மாலை நான்கு மணிக்கு ஆரம்பமாகின்றது” என கூறும் பெரேராவுடன் சேர்ந்து சுமார் 20 -30 பேர் கூட்டம் நடைப்பெறும் இடத்திற்கு செல்கின்றனர்.
கொழும்பு கிராண்பாஸ் நவகம்புர “ஏ” ஒழுங்கையின் பிரதான வீதியோரமாக கடந்த புதன்கிழமை 29ஆம் திகதி மாலை 4 மணிக்கு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் வேட்பாளர் சுசில் பிரேம ஜயந்தவுக்கு ஆதரவளிக்க கோரி ஒழுங்கு செய்யப்பட்ட தேர்தல் பிரச்சார கூட்டம் அது.
குழந்தைகள் பெண்கள் வயோதிபர்கள் ஆண்கள் என சுமார் 75 பேர் அந்த தேர்தல் பிரச்சார கூட்டத்திற்கு வந்திருந்தார்கள்.
மேடைக்கு முன்னால் அருகருகே போடப்பட்டிருந்த நாற்காலியில் பெரேரா போய் அமர்ந்துக்கொள்கின்றார். அவரருகே அவரது நண்பர்களும் அமருகின்றார்கள். அந்த கூட்டத்துக்கு வந்திருந்த சிலர் முகக்கவசத்தை அணிந்திருக்கவில்லை அதேவேளை அதனை அணிந்திருந்தவர்களில் பலர் அதனை மூக்கு பகுதி மறையும் படி அணிந்திருக்கவில்லை.
கூட்டம் ஆரம்பிக்க காலதாமதம் ஆகும் என அறிவிக்கப்படுவதுடன் அங்கு வந்திருந்தவர்களுக்கு பால் பக்கட் வழங்கப்பட்டது. கூட்டத்திற்கு வந்திருந்த பெண்கள் அருகருகே அமர்ந்த வண்ணம் கதைத்துக்கொண்டிருந்தார்கள். “இம்முறை பொதுத் தேர்தலில் மொட்டு சின்னத்துக்கு வாக்களித்து வெற்றிப்பெறச் செய்ய வேண்டும்” என்பதே அவர்களது பேசுபொருளாக இருந்தது.
இளைஞன் ஒருவர் கையில் பைலொன்றை கொண்டு வந்து கூட்டத்தில் அமர்ந்திருந்தவர்களிடம் கொடுத்து அதிலுள்ள வெற்றுத்தாளில் வந்தவர்களின் பெயர் விலாசம் என்பவற்றை எழுதச் சொல்கின்றான்.
70 வயதான பெரேரா அந்த பைலை எடுத்து தனது பெயர் விலாசம் என்பவற்றை எழுதுகின்றார். பைலையும் பேனாவையும் அருகிலுள்ள நண்பரிடம் கொடுக்கின்றார். இந்த பேனாவும் பைலும் அங்குள்ள அனைவரிடமும் கைமாறுகின்றது.
இலங்கையில் கொரோனா வைரஸ் பரவுவதை கட்டுப்படுத்தும் முகமாக சுகாதார அதிகாரிகள் பல்வேறு அறிவுறுத்தல்களை மேற்கொண்டு வருகின்றனர். ஆனால் இந்த தேர்தல் பிரச்சார கூட்டத்தில் சுகாதார அமைச்சினால் வெளியிடப்பட்ட கொவிட்-19 சுகாதார வழிகாட்டுதல்கள் முறையாக பேணப்படாமையை அவதானிக்க கூடியதாக இருந்தது.
முகக்கவசத்தை அணியாது இந்த கூட்டத்திற்கு வந்திருந்த வயோதிபர் பெரேரா கூறுகையில் :
“நிகழ்ச்சியை ஏற்பாடு செய்தவர்கள் நேற்று வீட்டுக்கு வந்து இந்த கூட்டத்துக்கு வரச் சொன்னார்கள். சுகாதார வழிகாட்டல்கள் தொடர்பில் எதுவும் கூறவில்லை. எம்மிடம் வாக்கு கேட்டு வருவோரும் எந்தவொரு சுகாதார முறையையும் பின்பற்றுவதில்லை. வழமையாக தூர இடங்களுக்கு சென்றால் முகக்கவசத்தை அணிந்து தான் செல்வேன். எனது வீடு அருகில் இருப்பதால் நான் அதனை அணிந்து வரவில்லை” என பெரேரா தெரிவித்தார்.
கூட்டம் முடிந்த பின்னர் ஏற்பாட்டாளர்கள் வருகை தந்திருந்தவர்களுக்கு கைலாகு கொடுத்து, அருகருகே நிற்பது மாத்திரமன்றி கட்டித் தழுவினர். இதேவேளை நிகழ்ச்சி ஏற்பாட்டு குழுவினர் கைகளை கழுவாத நிலையில் அங்கு வந்திருந்த மக்களுக்கு வேட்பாளர்களின் விபரங்களடங்கிய துண்டுப் பிரசுரங்களையும் விநியோகித்ததையம் காணக்கிடைத்தது.
சுகாதார மேம்பாட்டு நிலையத்தின் தகவல்களின் அடிப்படையில் ஆகஸ்ட் மாதம் 1ஆம் திகதி வரை இலங்கையில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 2815 ஆக பதிவாகியுள்ளது. இதில் 2439 பேர் குணமடைந்துள்ளதுடன். 365 நோயாளர்கள் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.
தேர்தல் காலப்பகுதியில் கொரோனா வைரஸ் பரவுவதை கட்டுப்படுத்தும் சுகாதார வழிகாட்டுதல்கள் அடங்கிய விசேட வர்த்தமானி சுகாதார அமைச்சியினால் ஜுலை மாதம் 17ஆம் திகதி வெளியிடப்பட்டது.
“கூட்டத்தில் பங்குபற்றுவோர் கட்டாயமாக முகக்கவசத்தை அணிந்திருத்தல் வேண்டும். அதேவேளை கதிரைகள் ஒரு மீற்றர் இடைவெளியில் போடப்படுதல் வேண்டும், கூட்டத்தில் பங்கு பற்றும் அதிதிகள் ஒரு மீற்றர் இடைவெளியை பேண வேண்டும் என்பன வர்த்தமானியில் உள்ளடக்கப்பட்டிருந்த சில விடயங்கள்.
இதேவேளை நவகம்புரை தேர்தல் பிரச்சார கூட்டத்தின் போது கொவிட்-19 சுகாதார வழிகாட்டல்கள் பேணப்படாமை தொடர்பில் அப்பகுதியைச் சேர்ந்த ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனையின் பிரதான ஏற்பாட்டாளர் கயான் குலசேனவை தொடர்பு கொண்டு கேட்டப்போது சுகாதார வழிகாட்டுதல்களை பின்பற்றியே கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டது என கூறினார்.
“ நாற்காலிகளை இடைவெளி விட்டு அடுக்கியிருந்தோம். மக்கள் வந்து அவற்றை நெருக்கமாக போட்டு அமர்ந்திருந்தால் நாம் என்ன செய்வது ? முகக்கவசங்களை அனைவரும் அணிந்திருந்தார்கள்” என தெரிவித்தார்.
இக்கூட்டத்தில் பிரதான வேட்பாளர் சுசில் பிரேம ஜயந்த கலந்துக்கொள்ளவில்லை எனினும் அந்த கூட்டத்தில் கொவிட்-19 சுகாதார வழிகாட்டல்கள் முழுமையாக பின்பற்றப்படவில்லை.
பொதுத் தேர்தலுக்கு இன்னும் 4 நாட்கள் உள்ள நிலையில் தேர்தல் களம் சூடு பிடித்துள்ளது. அனைத்து கட்சிகளும் மும்மூரமாக பிரச்சார நடவடிக்கைகளில் ஈடுபட்டுக்கொண்டிருக்கின்றார்கள்.
இவ்வாறான சிறிய கூட்டங்களும் பிரதான கூட்டங்களும் நாடளாவிய ரீதியில் நடைப்பெற்று வருகின்றன. அவ்வாறு நடைப்பெறும் கூட்டங்களிலும் கட்சி பேதமின்றி அனைத்து தரப்பினராலும் கொவிட்-19 சுகாதார வழிகாட்டுதல்கள் மீறப்பட்டு வருவதாக தேர்தல் கண்காணிப்பாளர்கள் சுட்டிக்காட்டுகின்றார்கள்.
வர்த்தமானி வெளியிட முன்னரே பல கட்சிகளும் இது தொடர்பான மீறல்களில் ஈடுபட்டன என நீதியும் நியாயமுமான தேர்தலுக்கான மக்கள் இயக்கத்தின்(CaFFE) பிரதம நிறைவேற்று அதிகாரி ஹாமட் மனாஸ் சுட்டிக்காட்டினார்.
“அதிகளவான மக்கள் பங்குபற்றியவாறு கூட்டங்கள் நடைப்பெற்றன. வேட்பாளருக்கு அருகே வந்து மாலைகள் அணிவிக்கப்பட்டன. இங்கு சமூக இடைவெளியை பேணாத சம்பவங்கள் பல இடம்பெற்றன. இது தொடர்பில் இது வரை 106 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளன” என்றார்.
தேர்தல் வன்முறைகளை கண்காணிப்பதற்கான நிலையத்தின் புள்ளிவிபரங்களுக்கமைய ஜுலை மாதம் 30ஆம் திகதி வரை சுகாதார வழிக்காட்டுதல்களை மீறிய 132 சம்பவங்கள் பதிவாகியுள்ளன.
இதேவேளை தேர்தல் மேடைகளில் கொவிட்-19 சுகாதார வழிகாட்டல்கள் பெருமளவில் மீறப்பட்டு வருவதாக முகநூல் மூலமாக அதனை அவதானித்து வரும் #தலைமுறை (#Generation) சுட்டிக்காட்டுகின்றது.
இது தொடர்பில் #தலைமுறையின் தமிழ் பிரிவு கண்காணிப்பாளாரான ஜோய் ஜெகார்த்தன் குறிப்பிடுகையில்
“வடக்கில் பலர் முகக்கவசத்தை அணியாமல் கூட்டங்களில் கலந்துக்கொள்கின்றர். இதேவேளை மலையகத்தை பொருத்த வரை சமூக இடைவெளியை பேணாமல் கூட்டங்கள் நடைபெறுகின்றன. அதேபோல் மேல் மாகாணத்தில் வீடு வீடாக சென்று பிரச்சார நடவடிக்கைகளில் ஈடுபடும் போது கைலாகு கொடுத்துக்கொள்ளல் மற்றும் கைகளை கழுவாமல் துண்டு பிரசுரங்களை விநியோகித்தல் போன்ற சம்பவங்கள் அதிகமாக இடம்பெற்று வருவதை நாம் அவதானிக்க கூடியதாக இருக்கின்றது” என்றார்..
இதேவேளை பிரச்சார நடவடிக்கைகளுக்கு வீடுகளுக்கு செல்லும் போது 5 பேர் வரை மாத்திரமே செல்ல வேண்டும். அதற்கு மேற்பட்டவர்கள் செல்ல முடியாது போன்ற விடயங்கள் தொடர்பிலும்; சுகாதார வழிகாட்டுதல்களில் குறிப்பிடப்பட்டுள்ளன. இது தொடர்பில் இந்த கூட்டத்தில் பங்குப்பற்றிய ழூஇந்திராணி குமாரி (பாதுகாப்பு காரணமாக பெயர் மாற்றப்பட்டுள்ளது) தெரிவிக்கையில்.
“வேட்பாளர்கள் அல்லது அவரது பிரச்சாரக் குழுவைச் சேர்ந்தவர்கள் வீடுகளுக்கு வரும் போது பலர் வருகின்றனர். அதேபோல் எமக்கு துண்டுபிசுரங்களை தரும் போது கைகளை தண்ணீர் அல்லது செனிடைசர் போட்டு கழுவி விட்டு வருவதில்லை” என்கின்றார் குடும்பத்தலைவியான குமாரி.
இந்த கூட்டம் சுகாதார முறைப்படி நடைபெறுகின்றதா என்பது தொடர்பில் அவதானிப்பதற்கு களத்தில் பொது சுகாதார பரிசோதகர்கள் இருக்கவில்லை.
கோவிட்-19 சுகாதார நடவடிக்கைகள் குறித்து கண்காணிப்பதற்கான அதிகாரங்களை பொது சுகாதார பரிசோதகர்களுக்கு வழங்குமாறு சட்டமா அதிபரால் சுகாதார அமைச்சின் செயலாளருக்கு ஆலோசனை வழங்கப்பட்டிருந்தது. இந்த அதிகாரங்கள் தமக்கு வழங்கப்படும் வரை தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடப்போவதாக பொது சுகாதார பரிசோதகர் சங்கம் கடந்த மாதம் 19ஆம் திகதி அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
இது தொடர்பில் நாம் பொது சுகாதார பரிசோதகர் சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹனவை தொடர்பு கொண்டு கேட்டப்போது.
“கடந்த காலங்களில் தேர்தல் பிரச்சார நடவடிக்கைகளின் போது அரசியல்வாதிகள் பலர் சுகாதார வழிகாட்டுதல்களை பின்பற்றவில்லை. இவை தொடர்பில் நாம் சட்ட நடவடிக்கை எடுப்போம் என்ற காரணத்தினால் தான் எமக்கான அதிகாரங்களை இன்னும் சட்டப்படி வழங்காமல் இருக்கின்றார்கள்.
எமக்கு அதிகாரம் வழங்கப்படும் பட்சத்தில் சுகாதார வழிகாட்டல்களை மீறுவோரை பிடியாணையின்றி கைது செய்து நீதி மன்றில் ஆஜர்படுத்த முடியும். இவ்வாறு சுகாதார வழிக்காட்டுதல்கள் தேர்தல் நடவடிக்கையின் போது முறையாக பின்பற்றப்பாடமையானது மீண்டும் கொரொனா பரவுவதற்கான அபாயத்தை ஏற்படுத்துகின்றது.” என்றார் ரோஹண.
இலங்கையில் கொரோனா தொற்று முற்றாக கட்டுப்படுத்தப்படாத நிலையில் சுகாதார அமைச்சினால் வெளியிடப்பட்ட கொவிட்-19 சுகாதார வழிகாட்டுதல்களை கடைப்பிடிக்க வேண்டியது சமூக பொறுப்புள்ள அனைவரினதும் கடமையாகும். தமது வாக்கு வங்கியை பலப்படுத்திக்கொள்ளும் முகமாக அனைத்து அரசியல் கட்சிகளாலும் வேட்பாளர்களினாலும் நடாத்தப்படும் இவ்வாறான பிரச்சார கூட்டங்களினால் மீண்டும் கொரோனா தலைதூக்கும் அபாயம் காணப்படுகின்றது.