ஒவ்வொரு தேர்தல் காலத்திலும் மூதூரை சேர்ந்த திருகோணமலை நூலகத்தில் கடமையாற்றி வரும் தங்கதுரை(பெயர் மாற்றப்பட்டுள்ளது) ஒரு பாரிய தொல்லையை எதிர் நோக்கி வருகிறார். தேர்தல் சட்ட விதி முறைகளை மீறி அவரது வீட்டு மதிலில் வேட்பாளர்கள் பிரச்சார சுவரொட்டிகளை ஒட்டிச் செல்வதையே அவர் பாரிய தொல்லையாக கருதுகிறார்.
அவரது வீடானது திருகோணமலை நகர சபை கட்டிடத் தொகுதியில் உள்ளது.அவரது மதிலானது பிரதான வீதியோடு 11 அடி உயரத்திற்கு கட்டப்பட்டுள்ளது.
அவரது மதிலில் 5 அடிக்கு மேலாக சுவரொட்டிகள் இருப்பதை காணக்கூடியதாக இருந்தது
“எங்களது வீட்டு சுவரில் சுவரொட்டிகளை ஒட்டிச் செல்கின்ற அரசியல் கோமாளிகளின் தொல்லை தாங்க முடியாது” என 48 வயதஉடைய, இரு பிள்ளைகளின் தந்தை தெரிவித்தார்.
“இதனை அகற்றுவதற்காக கிழித்து பார்த்தால் சில வேலைகளில் முழுமையாக கிழி படாது .இதனால் மதில் அலங்கோலமாய் ஆக்கப்படுகிறது.தம்மால் ஒன்றுமே செய்ய முடியாது எனக் கூறும் பொலிஸார் அந்த சுவரொட்டிகள் மீது கறுப்பு நிற எண்ணெயை பூசுகின்றனர்,”. எனக் கூறிய அவர் ஒவ்வொரு தேர்தலின் பின்னரும் மதிலை சுத்தம் செய்வதற்கு பணம் செலவிடப்பட வேண்டி உள்ளதாக தெரிவித்தார்.
அவரது வீட்டின் மதிலின் மீது தமிழ் அரசு கட்சி ,தேசிய மக்கள் சக்தி ஆகியவற்றின் சுவரொட்டிகளை காணக் கூடியதாக இருந்தது.அவற்றின் மீது கறுப்பு எண்ணெய் பூசப்பட்டிருந்தது.
இவரை போலவே சமூக ஆர்வலரான தில்லையம்பலம் ஹரிஸ்ரனின் (வயது 51) தோப்பூரில் உள்ள வீட்டுக் கடைக்கு முன்னால் உள்ள சுவரில் சுவரொட்டிகள் மாத்திரமல்லாது அபேட்சகரின் சின்னம் வரையப்பட்டதை காணக்கூடியதாகவுள்ளது. அவற்றின் மீதும் பொலிஸார் கறுப்பு எண்ணெயை தடவி இருந்தார்கள்.
“இவ்வாறான சட்ட விரோத சுவரொட்டிகளை பொலிஸாருக்கு பயந்து இரவிலே ஒட்டி விட்டு செல்கின்றார்கள். கடந்த கால தேர்தலை விடவும் இம் முறை சுவரொட்டிகள் அதிகமாக ஒட்டப்பட்டுள்ளது”என தெரிவித்தார்.
தேர்தல் சட்டத்தின் பிரகாரம் சுவரொட்டிகள்,பதாகைகள் ஆகியவற்றை தனியார் ,பொது அரச இடங்களில் காட்சிப்படுத்த முடியாது.இச் சட்டத்தின் படி அபேட்சகர் ஒருவரின் காரியாலயத்தில் கட்சியின் சின்னத்தை மாத்திரம் காட்சிப்படுத்த முடியும்.
வேட்பாளர் பயணிக்கும் சந்தர்ப்பத்தில் மாத்திரம் அவரது வாகனத்தில் சின்னத்தையும் ,விருப்பு இலக்கத்தையும் காட்சிப்படுத்த முடியும். அத்துடன் பிரச்சார கூட்டங்களின் போது மேடைக்கு அருகாமையில் சுவரொட்டிகளை காட்சிப்படுத்தலாம் என தேர்தல் சட்ட விதி முறையில் உள்ளது.
தேர்தல் சட்ட விதி முறைகள் தொடர்பில் முன்னால் பிரதி தேர்தல் ஆணையாளர் எம்.எம். முஹம்மட் கூறும் போது வேட்பாளர்கள் தேர்தல் சட்ட விதி முறைகளை மீறும் பட்சத்தில் நீதிமன்றத்தில் குற்றத்தை உறுதிப்படுத்தினால் ஆறுமாத கால கடூழிய சிறைத் தண்டனையுடன், 500 ரூபா தண்டப் பணமும் செலுத்த வேண்டும். ஒரு வேட்பாளர் ஒரு மாத கால சிறைத் தண்டனை அனுபவித்தால் 7 வருட காலத்துக்கு அவருக்கு வாக்களிக்க முடியாது,தேர்தலில் போட்டியிடவும் முடியாது, எனவும் தெரிவித்தார்.
தனியார் வீட்டுச் சுவர்களின் மீது சுவரொட்டிகள் ஒட்டப்படுவது சாதாரணமாக நடைபெற்று வருகிறது.
“எனது வீட்டு முன் பக்க மதிலில் வெள்ளை நிற பெயின்டினால் டெலிபோன் சின்னம்,வேட்பாளரின் இலக்கம் ஆகியவனவற்றை எழுதி விட்டு சென்றுள்ளார்கள்”, என கிண்ணியாவை சேர்ந்த நஸார் முஹம்மட் ஜமால்தீன் (பெயர் மாற்றப்பட்டுள்ளது) (வயது52) தெரிவிக்கிறார்.
அவரது மதிலில் இவ்வாறு வரையப்பட்டிருந்த தேர்தல் சின்னத்தின் மீது பொலிஸார் கறுப்பு எண்ணெயை பூசிச் சென்றிருப்பதை காணக் கூடியதாக இருந்தது.
” இப்போது நான் மதிலுக்கு அதே நிற பூச்சினை பூசவேண்டும் ,வீட்டினை அலங்கோலமாய் ஆக்கி விட்டு செல்கின்ற போது எமக்கும் அரசியல்வாதிகள் மீது எரிச்சல் ஏற்படுகிறது” என தெரிவித்தார்.
தேர்தல் முறைப்பாடுகள் தொடர்பில் கிழக்கு மாகாண பிரதி தேர்தல் ஆணையாளர் எஸ்.சுதாகரன் கூறும் போது 167 முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளதாக தெரிவித்தார். குறிப்பாக திருகோணமலை மாவட்டத்தில் மொத்தமாக கடந்த திங்கட் கிழமை (03.08.2020) வரை குறித்த முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளது. இதில் 128 முறைப்பாடுகளை பொலிஸாருக்கு அனுப்பியுள்ளதாகவும் சிறிய அளவிலான முறைப்பாடுகளே காணப்படுவதாகவும் தெரிவித்தார்.
அபிவிருத்தி தொடர்பில் 11 முறைப்பாடுகளும், அரச சொத்துக்களை பயன்படுத்தல் தொடர்பில் 15 முறைப்பாடுகளும், அரச வாகன பாவனை தொடர்பில் 05 முறைப்பாடுகளும், பொருட்கள் வினியோகம் தொடர்பில் 33 முறைப்பாடுகளும் , சட்டம் தொடர்பில் 24 முறைப்பாடுகளும்,பெயர் பதாகைகள் தொடர்பில் 51 உம், ஏனைய 18 முறைப்பாடுகளும் கிடைக்கப் பெற்றதாக தெரிவித்தார்.
தேர்தல் சுவரொட்டி விடயம் தொடர்பில் தேசிய மக்கள் சக்தியின் திருகோணமலை மாவட்ட முதன்மை வேட்பாளர் அருண் ஹேமச்சந்திர கூறும் போது ஒரு சில வேட்பாளர்களின் தேர்தல் கால நடவடிக்கையால் விளம்பரப்படுத்தல் மூலம் மக்கள் மத்தியில் தமக்கு வாக்களிப்பதற்கு தூண்டுவதாகவும் அவர்கள் பிரபலம் அடைவதற்கும் செய்வதாக தெரிவித்தார்.
இது பற்றி கெபே அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் மனாஸ் மகீன் கருத்து கூறிய போது அபேட்சகர்கள் அரசியல் இலாபத்திற்காக விருப்பு வாக்குகளை பெறுவதற்காக இவ்வாறு சட்டத்தை மதிக்காமல் நடந்து கொள்வதாக தெரிவித்தார்.