கொழும்பு/அக்டோபர் 5, 2020 (சி.ஐ.ஆர்) – திங்களன்று நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவை அறிவிக்கும் ஒரு தவறான ஊடக வெளியீட்டில் இலங்கை ஜனாதிபதியின் ஊடகப் பிரிவு (PMD) சரியான நேரத்தில் அதுகுறித்து தெளிவுபடுத்தியது மக்களுக்கு ஆறுதல் அளித்தாலும், “போலி ஊரடங்கு உத்தரவு” பற்றிய வதந்திகள் பீதியை உருவாக்கியுள்ளன.
ஒரு தனியார் தொலைக்காட்சி அலைவரிசையின் சின்னம் மற்றும் ஜனாதிபதி ஊடகப் பிரிவு பணிப்பாளர் நாயகம் மொஹான் சமரநாயக்கவின் கையொப்பம் ஆகியவற்றுடன் PMD இன் அதிகாரப்பூர்வ கடிதத் தாளில், இன்று (6) முதல் நாடளாவிய ரீதியான ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது.
கொரோனா வைரஸினால் (COVID-19) பாதிக்கப்பட்ட 39 வயதான பெண்ணுடன் தொடர்புடைய 69 பேருக்கு அதே வைரஸ் தொற்றியிருப்பதாக இராணுவத் தளபதி சவேந்திர சில்வாவை மேற்கோள் காட்டியிருந்த அதேவேளை, அதன் காரணமாக நாடு பூராகவும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாகவும் அந்த அறிக்கையில் கூறப்பட்டிருந்தது.
அந்த அறிக்கை வழமையான ஜனாதிபதி ஊடகப் பிரிவினால் வௌியிடப்படும் (PMD) பாணியிலான அறிக்கைகளைப் போன்றே தயாரிக்கப்பட்டிருந்தது.
இந்த அறிக்கை வாட்ஸ்அப் குழுக்களிடையே பரவலாகப் பகிரப்பட்டதுடன், பல பயனர்கள் அதனை சரிபார்க்காமல் பகிர்ந்து கொண்டனர்.
இதனையடுத்து “சமூக ஊடகங்களில் பரவுகின்ற போலிப் பிரசாரங்களை நம்ப வேண்டாம்” என்று பொதுமக்களுக்கு PMD வேண்டுகோள் விடுத்து மூன்று மொழிகளிலும் உடனடியாக ஒரு ஊடக அறிக்கையை வெளியிட்டது.
“நாளை (6) முதல் நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமுல்படுத்தப்படும் என்று சமூக ஊடக தளங்களில் பரப்பப்படும் தவறான பிரசாரத்தால் ஏமாற வேண்டாம் என்று அரசாங்கம் பொதுமக்களை கேட்டுக்கொள்கிறது,” என்று அந்த அறிக்கை கூறுகிறது.
“அனைத்து உண்மையான அரசாங்க பொது அறிவிப்புகளும் ஜனாதிபதியின் ஊடகப் பிரிவு மற்றும் அரசாங்க தகவல் திணைக்களம் மூலமாக மட்டுமே விடுக்கப்படும். அவை முக்கிய ஊடகங்களால் வெளியிடப்படும்”
போலி ஊடக வெளியீட்டை உருவாக்கியவரை அடையாளம் காண்பதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ள நிலையில், இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருவதாக ஜனாதிபதி அலுவலக அதிகாரி ஒருவர் சி.ஐ.ஆரிடம் (CIR) தெரிவித்தார்.
தற்போதைய பொது சுகாதார அவசர நிலையைப் பயன்படுத்தி பொதுமக்கள் மத்தியில் பீதியை உருவாக்கும் எந்தவொரு நபருக்கும் அதிகபட்ச தண்டனை வழங்கப்படும் என்று தனது பெயரைக் குறிப்பிட விரும்பாத அந்த அதிகாரி சி.ஐ.ஆரிடம் கூறினார்.
இதற்கிடையில், ஊரடங்கு உத்தரவு விதிப்பது குறித்து இராணுவ தளபதி எந்த அறிக்கையும் வெளியிடவில்லை என்று இராணுவ செய்தித் தொடர்பாளர் பிரிகேடியர் சந்தன விக்ரமசிங்க சி.ஐ.ஆரிடம் தெரிவித்தார்.
போலிச் செய்திகளை அரசாங்க அதிகாரிகள் முடிந்தவரை தெளிவுபடுத்துவதற்கு நடவடிக்கைகளை மேற்கொண்ட போதிலும், முடக்குதலுடன் ஊரடங்கு உத்தரவு இருக்கலாம் என்று கருதி மக்கள் ஏற்கனவே பீதியடைந்திருந்தனர்.
“கடந்த இரண்டு நாட்களுக்குள் எதிர்பாராத நிகழ்வுகள் மற்றும் கொவிட்-19 நோயாளிகளின் எண்ணிககையில் அதிகரிப்பு ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு ஊரடங்கு உத்தரவு அறிவிக்கப்படலாம் எனத் தோன்றுகிறது” என்று 46 வயதான தொழிலதிபர் சுதத் பெரேரா கூறினார்.
“இப்போது அரிசி மற்றும் வெங்காயத்தின் விலையை பார்த்தீர்களா? அரிசியின் விலை ஒரு கிலோவிற்கு 10 ரூபாவும் வெங்காயத்திற்கு 20 ரூபாவாலும் இநத வதந்தியால் அதிகரித்துள்ளது,” என்று அவர் கூறினார்.
பெண் தொழிலாளிக்கு நடத்தப்பட்ட பரிசோதனையில் COVID-19 தொற்றுதல் உறுதியானதைத் தொடர்ந்து, பாடசாலைகள் மூடப்பட்டன. சில குறிப்பிட்ட பிரதேசங்கள் முடக்கப்பட்டன. அத்துடன் திவுலப்பிட்டி மற்றும் மினுவங்கொட பகுதிகளில் பி.சி.ஆர் பரிசோதனைகள் அதிக எண்ணிக்கையில் மேற்கொள்ளப்பட்டன. இவ்வாறான கடுமையான கட்டுப்பாடுகளை அதிகாரிகள் விரைவாக முன்னெடுக்க ஆரம்பித்தனர்.
சமீபத்திய COVID-19 கொத்தணி இலங்கையில் சமூக ரீியான பரவல் அல்லது இரண்டாவது அலையாக இருக்கலாம் என்று பொது மக்கள் மத்தியில் சந்தேகத்தை உருவாக்கியுள்ளது. 21 மில்லியன் மக்கள் வாழ்கின்ற நாட்டில் COVID-19 ஐ திறம்பட கட்டுப்படுத்தியதற்காக மூன்று நாட்களுக்கு முன்பு கொழும்பிலுள்ள ஐக்கிய நாடுகள் அலுவலகம் இலங்கையைப் பாராட்டியது.
கொவிட்-19 தொற்று அடையாளம் காணப்பட்ட பெண் ஊழியரைத் தாண்டி புதிய கொத்தணிக்குக் காரணமான ஆரம்ப ஆதாரத்தை அதிகாரிகள் இன்னும் கண்டுபிடிக்கவில்லை என்று இராணுவத் தலைவர் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
பொது சுகாதார பரிசோதகர்கள் (PHI) ஞாயிற்றுக்கிழமை (4), நோய் தொற்றிய பெண் தொழிலாளி முதலில் எவ்வாறு பாதித்திருக்கலாம் என்பது குறித்து எந்த தகவலும் கண்டறிப்படவில்லை என்று கூறியிருந்தனர்.
திங்களன்று அரசாங்கத்தின் உத்தியோகபூர்வ அறிக்கையின்படி, சம்பந்தப்பட்ட தொழிற்சாலை பெண் தொழிலாளியுடன் தொடர்புகளை ஏற்படுத்தியிருந்த சில புதிய வைரஸ் தொற்றாளர்கள் யாழ்ப்பாணம், குருநாகலை மற்றும் மொனராகலை ஆகிய இடங்களில் கண்டறியப்பட்டுள்ளர்.
திறம்பட கட்டுப்படுத்தப்பட்ட முதல் அலைக்குப் பிறகு, ஆடைத் தொழில்துறை பெண் தொழிலாளிக்குத் தொற்று இருப்பது தெரியும் வரை பெரும்பாலும் புலம்பெயர்ந்த தொழிலாளர்களைக் கொண்ட கொத்தணி மட்டுமே இலங்கையில் இருந்தது.
இலங்கையின் முதல் மூன்று மாத முடக்கம் பொருளாதாரம் மற்றும் பலரின் வாழ்வாதாரங்களைத் தாக்கியது, அவர்களில் பெரும்பாலானோர் தினசரி ஊதியம் பெறுபவர்கள் ஆவார்கள்.
நாடு முடக்கப்பட்டதால் திட்டமிடப்பட்ட பாராளுமன்றத் தேர்தலை ஒத்திவைக்க அரசாங்கம் நிர்ப்பந்திக்கப்பட்டது.
COVID-19 நிலைமையை வெற்றிகரமாக கட்டுப்படுத்தியதாக தற்போதைய அரசாங்கம் முன்னெடுத்த பிரசாரங்கள் ஆகஸ்ட் 5 தேர்தலில் அதன் மகத்தான வெற்றிக்கு வித்திட்டது.