- கொரோனா சூழலில் தேர்தலுக்கான திகதி தீர்மானிக்கப்பட்டதன் பின்னனி
- தேர்தல் கண்காணிப்பு நிலையங்களுக்கு ஏற்பட்ட சுகாதார ரீதியான சவால்கள்
- தேர்தல் ஆணைக்குழுவின் வினைத்திறன்
- வாக்களிப்பு வீதம் குறைந்ததில் கொரோனா சூழலின் பங்களிப்பு
- தேர்தல் ஆர்வலர்கள் மற்றும் அரசியல் ஆய்வாளர்களின் கருத்துக்கள்
வீட்டுக்குள்ளேயே இருக்க வேண்டும் என்ற தார்மீக பொறுப்பினை கருத்தில் கொண்டு பாதிமா ரிஸ்லா தனது கணவர் மற்றும் குழந்தையுடன் தொலைக்காட்சி பார்த்துக் கொண்டிருந்தார். நிகழ்ச்சியின் இடையில் விசேட செய்தியொன்று ஒளிபரப்பாகவே ரிமோட்டை எடுத்து தொலைக்காட்சியின் சத்தத்தை கூட்டிய ரிஸ்லா தேர்தல் ஆணைக்குழுவினால் மறுஅறிவித்தல் வரை பாராளுமன்றத் தேர்தல் பிற்போடப்பட்டுள்ளதை அறிந்து கொண்டார்.
கொவிட்-19 தொற்று அச்சுறுத்தல் இலங்கையில் தோன்றியதை அடுத்தே மார்ச் 19 அன்று இந்த அறிவித்தல் இலங்கை தேர்தல் ஆணைக்குழுவினால் வெளியிடப்பட்டது. ஏப்ரல் 25 இல் தேர்தல் நடைபெறும் என்று மார்ச் 3 ஆம் திகதியன்று செய்தி வெளியானபோது ரிஸ்லாவுக்கு தேர்தலில் வாக்களிக்கும் எண்ணம் இருக்கவில்லை.
இது தொடர்பாக கருத்து தெரிவித்த ரிஸ்லா “இப்படி ஒரு சூழலிலும் தேர்தலைப் பற்றி யோசிக்கிறார்களே என்றுதான் அந்த நேரம் எனக்கு தோன்றியது. கர்ப்பிணித் தாயாக இருந்த நான் இவ்வாறு கூட்டம் கூடும் இடத்திற்கு சென்று தொற்று ஏற்பட்டால் குழந்தைக்கும் சேர்ந்தே பாதிப்பு வரும். இதனால் வாக்கு போடுவதை பற்றி நான் சிந்திக்கவே இல்லை,” என தெரிவித்தார்.
மாவத்தகம தேர்தல் தொகுதிக்குட்பட்ட பிரதேசமொன்றில் சிறிய அளவில் சமய வகுப்பொன்றை நடத்தும் ரிஸ்லா தனது உடல் நிலையை கருத்தில் கொண்டு வாக்கு போடுவதில்லை என்ற முடிவை எடுத்திருந்தார். தேர்தல் ஆணைக்குழுவினால் திகதியொன்று அறிவிக்கப்படாமலேயே தேர்தல் பிற்போடப்பட்டதால் இந்த வருடம் தேர்தல் நடைபெறாது என்றே அவர் நினைத்துக் கொண்டார்.
வர்த்தமானியில் வெளியான அறிவித்தலின்படி தேர்தலை நடத்த முடியாமல் போனதால் புதிய திகதியொன்றில் தேர்தலை நடத்த அல்லது இதற்கு மாற்று வழியென்றை பெற்றுக்கொள்ள வேண்டும் என்ற காரணங்களுக்காக தேர்தல் ஆணைக்குழு ஜனாதிபதிக்கு கடிதம் ஒன்றை எழுதுகின்றது. இதற்கு ஜனாதிபதியின் சார்பாக அவரது செயலாளர் பி.பி. ஜயசுந்தர பதிலளித்தபோது தேர்தல் தொடர்பாக ஜனாதிபதி நீதிமன்றங்களிடம் எந்தவித ஆலோசனையும் பெற மாட்டார் என்றும் அரசியலமைப்பு நெருக்கடி குறித்து எச்சரிக்கையுடன் தேர்தல்களை நடத்துவது தேர்தல் ஆணைக்குழுவின் பொறுப்பாகும் என்றும் தெரிவித்திருந்தார்.
அரசாங்கத்தின் செல்வாக்குடன் தேர்தலை மே 28 இல் நடாத்துவதற்கு தேர்தல் ஆணைக்குழுவின் உறுப்பினரான பேராசிரியர் ரத்னஜீவன் ஹூல் எதிர்ப்பு தெரிவித்ததை அடுத்து ஜுன் இருபதாம் திகதி தேர்தல் நடாத்துவதாக இலங்கை தேர்தல் ஆணைக்குழு ஏப்ரல் 20 அன்று வர்த்தமானி மூலம் தெரிவித்தது. கொரோனா தொற்று அச்சுறுத்தல் தொடர்ந்தும் இருந்த நிலையில் தேர்தல் நடாத்துவதற்கு பல்வேறு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்தனர்.
ஜுன் 20 இல் தேர்தல் நடத்துவதற்கான வர்த்தமானி அறிவித்தலுக்கு எதிராக ஊடகவியலாளர் விக்டர் ஐவன் உட்பட 7 பேர் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தனர். மே 6 அன்று ஐக்கிய மக்கள் சக்தியும் ஜுன் 20 இல் தேர்தல் நடத்துவதற்கு எதிராக உச்ச நீதி மன்றத்தில் அடிப்படை உரிமை மீறல் வழக்கொன்றை தொடுத்தது. இவர்ளோடு அடுத்ததாக ஜாதிக ஹெல உருமய கட்சியின் முன்னாள் செயலாளர் சம்பிக்க ரணவக்க மற்றும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் குமார வெலிகம ஆகியோர் உச்ச நீதிமன்றத்தில் தேர்தல் ஆணைக்குழு வெளியிட்ட வர்த்தமானிக்கு எதிராக வழக்கு தொடுத்தனர்.
பாராளுமன்றத் தேர்தலினை ஜுன் 20 இல் வைப்பதற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட எட்டு மனுக்களை விசாரணை செய்வதற்கு உச்ச நீதிமன்றம் ஐந்து பேரைக் கொண்ட நீதிபதி குழுவொன்றை நியமித்தது. இந்த சந்தர்ப்பத்தில் ஜுன் 20 ஆம் திகதி தேர்தலுக்கு சாத்தியமான திகதி கிடையாது என உச்ச நீதிமன்றத்திற்கு தேர்தல் ஆணைக்குழு அறிவித்தது.
இதனைத் தொடர்ந்து பாராளுமன்றத் தேர்தல் தொடர்பாக சமர்பிக்கப்பட்ட மனுக்கள் அனைத்தையும் விசாரணைகள் இன்றி தள்ளுபடி செய்யுமாறு சட்டமா அதிபர் கோரினார். அதற்கமைய ஜுன் 2 அன்று தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமைகள் தொடர்பான அனைத்து மனுக்களும் எவ்வித தகுந்த காரணங்களுமின்றி தள்ளுபடி செய்யப்பட்டதுடன் ரிஸ்லா நினைத்ததற்கு மாற்றமாக ஆகஸ்ட் 5 ஆம் திகதி தேர்தல் நடைபெறும் என ஜுன் 10 அன்று தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்தது.
தேர்தலுக்கு ஒரு மாதத்தை விடவும் குறைவாகவே காலம் இருந்த தருணத்தில் சுகாதார வழிமுறைகளை பின்பற்றி தேர்தல் ஒன்றை நடத்துவதற்கான பிரயத்தனங்களை தேர்தல் ஆணைக்குழு ஏற்பாடு செய்தது. கொவிட்-19 அச்சுறுத்தலுக்கு மத்தியில் பொதுத்தேர்தல் ஒன்றை நடத்தும் தென் கொரியா, போலந்து, சிங்கப்பூர், சிரியா மற்றும் செர்பியா ஆகிய நாடுகளின் வரிசையில் இலங்கையும் இணைந்து கொண்டது. அச்சுறுத்தலுக்கு மத்தியில் தேர்தலை நடத்தும் முதல் தென்னாசிய நாடாக இலங்கை பதிவானது.
வாக்காளர்கள் யாருக்கும் தொற்று பரவாமல் இருப்பதற்கான ஏற்பாடுகளை சுகாதார அதிகாரிகள் மிகவும் கவனமாக மேற்கொண்டனர். வாக்குச்சாவடியில் கடமை செய்பவர்களுக்கு தொற்று நீக்க வசதிகளும் தொற்று ஏற்படாமல் தடுப்பதற்கான வழி வகைகளும் சுகாதார ஆலோசனைகளின் அடிப்படையில் தேர்தல் ஆணைக்குழு முன்னெடுத்திருந்தது.
தொடர்ச்சியாக சமூக வலைதளங்களை பாவித்த ரிஸ்லா தேர்தலுக்காக ஏற்பாடு செய்யப்படும் சுகாதார பாதுகாப்பு வசதிகள் தொடர்பாக அதிகம் பார்த்தார். “தேர்தல் ஒத்திகைகள் நடைபெறும் வீடியோக்களை பார்த்தேன். தொற்று நீக்க வசதி அறிவுறுத்தல்கள் என்பவற்றை மஹிந்த தேஷப்பிரிய அவர்கள் அழகாக சொன்னார். தேர்தல் கண்டிப்பாக தொற்று ஏற்படாத தேர்தலாக அமையும் என்ற நம்பிக்கை பிறந்தது. தேர்தலுக்கு செல்லலாம், வாக்களிக்கலாம் அதனால் எனக்கும் எனது குழந்தைக்கும் பாதிப்பு வராது என்று நம்பினேன்! அது நடந்தது,” என ரிஸ்லா தெரிவிக்கின்றார்.
தேர்தல் ஆணைக்குழுவின் அறிக்கைகளின்படி 16,263,885 பேர் வாக்களிக்க தகுதி பெற்றிருந்தனர். ஏறத்தாழ 82,000 பேர் பாதுகாப்பு கடமைகளில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர். அத்துடன் 60,000 சுகாதார அதிகாரிகள் தேர்தல் தினத்தன்று கடமையில் இருந்தனர். தேர்தலுக்காக 7 பில்லியன் ரூபா அளவிலான நிதி ஒதிக்கீடு செய்யப்பட்டதாக முன்னாள் தேர்தல் ஆணையாளர் மஹிந்த தேஷ ப்பிரிய தெரிவித்திருந்தார். இதில் சுமார் ஒரு பில்லியன் ரூபா வரையான தொகை செனிடைசர் உபயோகத்திற்காக ஒதுக்கப்பட்டதாக தேர்தலுக்கு முன் ஊடகங்களை சந்தித்து உரையாடிய தேஷப்பிரிய தெரிவித்தார்.
ஆகஸ்ட் 5 ஆம் திகதியன்று அதிகாலை 7 மணிக்கு ஆரம்பமான தேர்தல் வாக்கெடுப்புகள் நூறு வீதம் சுகாதார பாதுகாப்பை உறுதிப்படுதியதாகவே இருந்தது. மாவத்தகம தேர்தல் தொகுதியின் வாக்கெடுப்பு நிலையங்களுல் ஒன்றான பரகஹதெனிய மத்திய கல்லூரிக்கு வாக்களிக்கச் சென்ற ரிஸ்லா தேர்தல் ஆணைக்குழுவினால் வெளியிடப்பட்ட சுகாதார ஆலோசனைகளின்படி வாக்குச்சாவடிக்கு வந்தார். அனைவரும் முகக்கவசம் அணிய வேண்டும்இ பேனை எடுத்து வர வேண்டும்இ ஒரு மீற்றர் இடைவெளி பேண வேண்டும் மற்றும் தொற்று நீக்க செனிடைசர் பயன்படுத்த வேண்டும் போன்ற அறிவுறுத்தல்கள் தேர்தல் ஆணைக்குழுவினால் மக்களுக்கு வழங்கப்பட்டன.
“கூட்டம் குறைவாகவே இருந்தது. நான் கர்ப்பிணித்தாய் என்பதால் வரிசையில் நிற்காமல் நேரடியாக வாக்குச் சாவடிக்கு செல்ல அனுமதித்தார்கள். வாக்குச்சாவடியில் இருந்தவர்கள் சுகாதார பாதுகாப்பு கவச உடைகளை அணிந்திருந்தார்கள். செனிடைசர் போட்டு கைகளை தொற்று நீக்கிய பின்னரே உள்ளே அனுமதித்தார்கள். பாதுகாப்பு நூறு வீதம் உறுதிப்படுத்தப்பட்டிருந்தது,” என ரிஸ்லா தெரிவிக்கின்றார்.
தென் கொரியாவுக்கு அடுத்ததாக கொரோனா அச்சுறுத்தலை வெற்றிகொண்ட தேர்தலை நடத்திய நாடாக இலங்கை பதிவாகியுள்ளது. சுகாதார விதிமுறைகளை மீறிய வன்முறைகள் 15 பதிவான போதும் இது இலங்கை சனத்தொகையுடன் ஒப்பிடும்போது மிகக்குறைந்த எண்ணிக்கை என்பதன் அடிப்படையில் இது ஒரு வெற்றியாகவே பார்க்கப்படுகின்றது.
இலங்கை தேர்தல் ஆணைக்குழுவுடன் இணைந்து தேர்தல் வன்முறைகளை கண்காணிப்பதற்கான மத்திய நிலையம் (சி.எம்.ஈ.வி) மற்றும் நீதியானதும் சுதந்திரமானதுமான தேர்தலுக்கான மக்கள் இயக்கம் என்பன தேர்தல் வன்முறைகளை உடனுக்குடன் கண்காணித்து அறிக்கையிடுவதன் மூலம் ஆரோக்கியமான தேர்தல் ஒன்றுக்கு வழிவகுத்தன.
நீதியானதும் சுதந்திரமானதுமான தேர்தலுக்கான மக்கள் இயக்கம் தேர்தல் வன்முறைகளை கண்காணித்து அது தொடர்பாக உரிய நடவடிக்கைகளை எடுக்கும் அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு செல்கின்றது. அந்தவகையில் தேர்தலின்போது சுகாதார விதிமுறைகளை மீறுவது தண்டனைக்குறிய குற்றம் என்பதன் அடிப்படையில் அவற்றை அறிக்கையிட்டு சுகாதாரமான தேர்தலுக்கு வழியமைத்தது.
வரலாற்று ரீதியில் மிகவும் வித்தியாசமாக இடம்பெற்ற தேர்தல் என்பதன் அடிப்படையில் இந்த தேர்தல் மிகவும் முக்கியம் பெறுவதாக நீதியானதும் சுதந்திரமானதுமான தேர்தலுக்கான மக்கள் இயக்கத்தின் நிர்வாக இயக்குனர் ஏ. மனாஸ் மகீன் தெரிவிக்கின்றார். இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில் “இம்முறை தேர்தலுக்கு அதிகளவிலான பணத்தை தேர்தல் ஆணைக்குழு செலவளித்துள்ளது. தேர்தல் திகதி உறுதியானதில் இருந்து தேர்தல் போட்டியாளர்கள் அல்லது அவர்களது ஆதரவாளர்களின் கவனயீனத்தினால் கொரோனா இரண்டாவது அலை ஏற்படுத்துவதற்கான வாய்ப்பு இருந்தது.
இந்த விடயம் தொடர்பான கண்காணிப்பு நடவடிக்கைகளை நாம் மேற்கொண்டோம். இதை உரிய அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டுவந்து சுகாhதார அறிவுறுத்தல்களை வர்த்தமானியுடாக வெளியீடு செய்ய அழுத்தம் கொடுத்தோம். அதன் அடிப்படையில் தேர்தல் காலத்தில் கடைபிடிக்க வேண்டிய சுகாதார ஒழுக்கங்களை தேர்தல் இடம்பெறுவதற்கு மூன்று வாரங்களுக்கு முன்னர் வரத்தமானி மூலம் தேர்தல் ஆணைக்குழு வெளியிட்டுள்ளது,”
தேசிய மட்டத்தில் தேர்தல் இடம்பெறும்போது வெளிநாட்டு கண்காணிப்பாளர்கள் இலங்கைக்கு வருகை தந்து தேர்தல்களை கண்காணிக்கின்ற போதும் இந்த வருடம் அச்சுறுத்தும் கொரோனா காரணமாக அதில் சிக்கல்கள் ஏற்பட்டதாக மக்கீன் தெரிவித்தார். ஆனாலும் வெளிநாட்டு தேர்தல் ஆர்வலர்கள் உள்நாட்டு கண்காணிப்பாளர்களை தொடர்புகொண்டு இலங்கையின் தேர்தல் நிலைவரங்களை அறிந்து கொண்டதாக மக்கீன் அடையாளப்படுத்தினார்.
ஆசியாவின் ஒரேயொரு சுயாதீனமான தேர்தல் வன்முறைகளை கண்காணிக்கும் நிலையமான சி.எம்.ஈ.வி. ஆனது தேர்தல் வன்முறைகளை கண்காணித்து அறிக்கையிட்டு தேர்தலுக்கு மிகப்பெரியதொரு பங்களிப்பை வழங்கியது. தேர்தல் கண்காணிப்பாளர்களை இணைத்துக் கொள்வது தொடக்கம் பதிவு செய்தல்இ அறிக்கையிடல் வரை அனைத்து செயற்பாடுகளையும் சுகாதரத்தை உறுதிப்படுத்திய பின்னரே சி.எம்.ஈ.வி செயற்பட்டது. இது தொடர்பாக சி.எம்.ஈ.வி பிரதம இயக்குனர் மஞ்சுல கஜநாயக்க தெரிவிக்கும்போது “தேர்தல் காலப்பகுதியில் சுகாதார விதிமுறைகளை மீறுவது ஒரு குற்றம் என வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலின்படி சுகாதார விதிமுறைகளை மீறுவதும் ஒரு வன்முறையாகும். இதனை கண்காணிப்பாளர்களுக்க தெரிவித்த நாம் இது தொடர்பாக கூடுதல் கவனம் செலுத்தினோம்,” என்றார்.
இவ்வாறு ஊடகங்களில் சுகாதார விதிமுறைகளை பின்பற்றுமாறு கடுமையாக கூறப்பட்டபோதும் தேர்தல் கூட்டங்களில் பெரிதளவில் சுகாதார வரையரைகள் பின்பற்றப்படவில்லை என்பது ஒரு புலனாய்வு அறிக்கையிடல் மூலம் தெளிவாகியிருக்கின்றது.
2020 பாராளுமன்றத் தேர்தல் குறித்து கருத்து தெரிவித்த லேக் ஹவுஸ் டிஜிடல் ஊடகத்தின் தலைவர் மஞ்சுல சமரசேகர தெரிவிக்கையில்இ “ஜனநாயகத்தின் அடிப்டையில் இந்த தேர்தல் கொவிட் சூழலுக்கு மத்தியில் வைக்கப்பட்டதானது மிகவும் சிறப்பான ஒன்று. இது தலைமைத்துவத்தின் தரத்தை பரீர்ச்சித்து பார்க்கும் வகையில் அமைந்திருந்தது,” என்றார்.
ரிஸ்லா வசிக்கும் தேர்தல் மாவட்டம் குருணாகலில் 2019 தேர்தலில் 78.82 வாக்குகள் பதிவாகின. ஆனால் இவ்வருடம் 75.45 வீதமே பதிவாகியது. இலங்கை முழுவதும் சுகாதார அச்சுறுத்தலுக்கு மத்தியிலும் இந்த வருடம் 75.89 வீதமானோர் வாக்களித்திருந்தனர். இது கொவிட் சூழலில் இடம்பெற்ற தேர்தலின் வெற்றியாக பார்க்கப்பட்டாலும் 2019 ஜனாதிபதித் தேர்தலோடு ஒப்பிடும்போது குறைவான சதவீதமாகும். 2019 தேர்தலின் வாக்களிப்பு வீதம் 83.72 ஆகும்.
தென் கிழக்கு பல்கலைகழகத்தின் அரசியல் விஞ்ஞான துறை சிரேஷ்ட விரிவுரையாளர், வாக்களிப்பு வீதம் தொடர்பாக கருத்து தெரிவிக்கையில் கொவிட் சூழலில் ஏற்கனவே பொருளாதாரத்தை இழந்துள்ள மக்கள் தொழிலை இடைநிறுத்திவிட்டு வாக்களிக்க வருவதை சிரமமாக கருதியதால்தான் இந்த நிலைமை தோன்றியதாக தெரிவிக்கிறார். “கொவிட் தொடர்பான அச்சத்தை தாண்டி பொருளாதரத்தை சேமிக்க வேண்டிய கட்டாயத்தில் பலர் வாக்களிக்க வரவில்லை. அவர்களுக்கு வாக்களிக்க வருவதைக் காட்டிலும் வருமானத்தை ஈட்டுவதே முக்கிய விடயமாக இருந்ததால் அது வாக்களிப்பு வீதத்தில் தாக்கம் செலுத்தியுள்ளது” என அவர் மேலும் தெரிவித்தார்.