BOOM Live மற்றும் இலங்கை புலனாய்வு ஊடகவியல் மையம் (CIR) ஆகியன சர்வதேச தகவல் சரிபார்ப்பு வலையமைப்புடன் (IFCN) இணைந்து இலங்கையில் நடத்தவுள்ள முதலாவது தகவல் சரிபார்ப்பு பயிற்சித் தொடர் ஜூன் 10 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது.
இந்த பயிற்சித் தொடர் சிங்களம், தமிழ் மற்றும் ஆங்கிலம் ஆகிய மொழி மூலங்களில் நடத்தப்படவுள்ளது.
ஒன்லைன் ஊடாக முன்னெடுக்கப்படும் இந்த பயிற்சி அமர்வுகளில் பங்குபற்றுபவர்களுக்கு டிஜிட்டல் பகுப்பாய்வுக் கருவிகளைப் பயன்படுத்தி Text, image, video மற்றும் audio மூலமான சரிபார்ப்புகளை (verify) மேற்கொள்வது தொடர்பாக கற்பிக்கப்படும். அடி மட்டத்தில் இருந்து தகவல்களின் உண்மைத்தன்மையை உறுதிசெய்வதற்கும், தகவல் சரிபார்ப்புகளை (Fact-Check) அதிகபட்ச சர்வதேச தரங்களுக்கு ஏற்றவாறு எழுத்து வடிவில் கொண்டுவரவும் பயிற்சியளிக்கப்படும்.
இந்தப் பயிறசித் திட்டத்தின் முக்கிய பாகம் ஆதரவளித்தலாகும். BOOM Live மற்றும் CIR ஆகியவற்றின் ஒத்துழைப்புடன் சர்வதேச தகவல் சரிபார்ப்பு வலையமைப்பினது (IFCN) அங்கீகாரத்தைப் பெறுவதற்காக சில அமைப்புகளுக்கு வழிக்காட்டல்கள் வழங்கப்படவுள்ளன. அத்துடன் இதற்கான செயன்முறைகளுக்கு வசதிகளை ஏற்படுத்திக் கொடுப்பதற்கான தலைமைத்துவத்தை இந்த இரண்டு அமைப்புகளும் கட்டியெழுப்பவுள்ளன. உண்மையை சரிபார்ப்பதில் நெறிமுறைகளுடன் கூடிய நிலை ஆய்வுகளும் (Case Studies) கற்பிக்கப்படவுள்ளன.
இலவசமாக முன்னெடுக்கப்படவுள்ள இந்த பயிற்சியிக்கான பயிலுநர்கள் போட்டித் தன்மையின் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.
BOOM Live (boomlive.in) என்பது இந்தியாவின் மும்பையை தலைமையகமாகக் கொண்டியங்கும் சர்வதேச தகவல் சரிபார்ப்பு வலையமைப்பின் (IFCN) அங்கீகாரம் பெற்ற உண்மைத் தன்மையை சரிபார்க்கும் ஒரு அமைப்பாகும். விருதுவென்ற இந்த அமைப்பானது மூன்று நாடுகளில் (இந்தியா, பங்களாதேஷ், மியன்மார்) நான்கு மொழிகளில் (ஆங்கிலம், ஹிந்தி, பங்ளா, பர்மியன்) உண்மை சரிபார்ப்பு (Fact-Check) நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றது.
இலங்கை புலனாய்வு ஊடகவியல் மையம் (cir.lk) இலங்கையின் முதலாவது புலனாய்வு ஊடகவியல் அமைப்பு என்பதுடன், இலங்கை மற்றும் தெற்காசிய வலையத்தில் புலனாய்வு ஊடகவியலை ஊக்குவிக்கும் நோக்குடன் செயற்பட்டு வருகின்றது.
சர்வதேச தகவல் சரிபார்ப்பு வலையமைப்பு அல்லது IFCN அமைப்பானது (poynter.org/ifcn) Poynter அமைப்பின் ஓர் அங்கமாக சர்வதேச ரீதியில் இருக்கின்ற தகவல் சரிபார்ப்பாளர்களை (Fact-Checkers) ஒன்றிணைப்பதற்கான பணிகளை அர்ப்பணிப்புடன் மேற்கொண்டு வருகின்றது.