Sunday, December 22, 2024
32 C
Colombo

ஆட்கடத்தலை புலனாய்வு செய்தல்: சாதாரண பார்வையில் மறைந்திருக்கும் ஒரு தீமை

ஆசிரியர் குறிப்பு: GIJN ஆனது அடுத்து வரும்  சில மாதங்களுக்கு, திட்டமிடப்பட்டு மேற்கொள்ளப்படும்  குற்றங்களை புலனாய்வு செய்வதற்காக எம்மால் வெளியிடப்படவிருக்கும்  ஊடகவியலாளர்கள் வழிகாட்டியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட தொடர் கட்டுரைகளை வெளியிட உள்ளது.  இது நவம்பர் மாதம் முதல் வாரத்தில் ஆரம்பமாகும்  உலகளாவிய புலனாய்வு இதழியல் மாநாட்டில் முழுமையாக அறிமுகப்படுத்தப்படும். ஆட்கடத்தலைப் பற்றி விசாரணை செய்வதில்  விசேட கவனம் செலுத்தும் இந்தப் பகுதி, தாய்லாந்து கடல் உணவுத் தொழிலில் அடிமைத் தொழிலைப் பயன்படுத்துவதை அம்பலப்படுத்திய அசோசியேட்டட் பிரஸ் (Associated Press) ஊடகக்குழுவில் உறுப்பினராக இருந்தவரும்  இரண்டு முறை புலிட்சர் பரிசு பெற்ற பத்திரிகையாளருமான மார்த்தா மென்டோசாவால் (Martha Mendoza) எழுதப்பட்டது. ஆட்கடத்தலை மறைப்பதற்கான மேலதிக  உதவிக்குறிப்புகள் மற்றும் அது தொடர்பிலான கருவிகளில் ஆர்வமுள்ளவர்கள், மெண்டோசா பங்கேற்ற இந்த GIJN கந்துரையாடலை பார்க்கவும்.

ஆட்கடத்தல் என்பது உலகெங்கிலும் தொடர்ச்சியாக நடைபெற்று வரும் ஒரு  பரவலான குற்றமாக இருப்பதனால் ஊடகவியலாளர்கள் அதன் முக்கியத்துவம் மற்றும்  தாக்கம் கருதி  புலனாய்வு செய்வது அறிக்கையிடுவது மிக அவசியமான ஒரு விடயமாகும். பொதுவாக  நவீன அடிமைத்தனம் என்பது , நம் வெற்றுக்கண்களுக்குத் தெரியாது நமது சுற்றுப்புறத்தில் உள்ள ஒரு மசாஜ் பார்லரிலோ  அல்லது உள்ளூரில் உள்ள மீன்பிடித்துறைமுகத்தில் உள்ள  ஒரு மீன்பிடி படகில் மறைவாக நடைபெறும் ஒர் அநீதியாகும். ஆட்கடத்தலில் இரண்டு அடிப்படையான பிரிவுகள் உள்ளன: ஓன்று மொத்த ஆட்கடத்தல் நடவடிக்கைகளில் பாதிக்கும் மேலானதாக இருக்கும் பாலியல் சுரண்டல் மற்றயது தொழிலாளர் துஷ்பிரயோகமாகும். ஐக்கிய நாடுகள் சபையின் தரவுகளின்படி, எந்த ஒரு குறிப்பிட்ட நாளிலும், சுமார் 40 மில்லியன் பேர் நவீன அடிமைத்தனத்தினால் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் பெரும்பாலானோர் பெண்களாக இருப்பதுடன் இவர்களில்  ஆண்கள் மற்றும் குழந்தைகளும் உள்ளடங்குகின்றனர். சர்வதேச தொழிலாளர் அமைப்பின் (International Labour Organization) அறிக்கையின்படி, குற்றவாளிகள், கடத்தல்காரர்கள் மற்றும் அடிமை எஜமானர்கள் என்று அழைக்கப்படுபவர்கள், கூட்டாக ஆண்டுக்கு 150 பில்லியன் டொலர் லாபத்தை சட்டவிரோதமாக பெறுகிறார்கள்.

ஆட்கடத்தலை புலனாய்வு செய்வதென்பது சவால்கள் நிரம்பியதாக இருக்கலாம். இதனால்  ஊடகவியலாளர்களிடம் பேசுவது  தொடர்பில் பாதிக்கப்பட்டவர்கள் பெரும் ஆபத்தை எதிர்கொள்கின்றனர். மிகவும் அதிர்ச்சியில் உறைந்துள்ள அவர்களை தம் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் கடத்தல்காரர்கள், ஊடகவியலாளர்கள் உட்பட எவரிடமும்  உதவிகோரக்கூடாது என்று கடுமையாக எச்சரித்துள்ளனர். பாதிக்கப்பட்டவர்கள் ஊடகவியலாளர்களிடம் பேசும்போது தம் உயிரை பணயம் வைத்தே பேசுகிறார்கள் என்பதை கவனத்தில்கொண்டு, இவ்வாறான அறிக்கையிடல்களில் மிகுந்த அவதானத்துடன் செயற்படுவது அவசியமாகும். இக்கடத்தல்களில் ஈடுபடும் குற்றவாளிகள் மற்ற மனிதர்களை சுரண்ட தயாராக இருப்பதுடன் அவர்கள் இரக்கமற்றவர்களாகவும், தங்கள் சொந்த நலன்களை மட்டும் பாதுகாக்கபடுவதையே  விரும்புவார்கள்.

யாருடன் பேச வேண்டும்

இவற்றினைக் கருத்தில் கொண்டு, ஆட்கடத்தலை புலானய்வு செய்ய  ஊடகவியலாளர்களுக்கு  உதவும் பொருட்டு  நவீன கால அடிமைத்தனத்தை முடிவுக்குக் கொண்டுவரும் நோக்கில் இயங்கும் அரச சார்பற்ற  நிறுவனங்கள் (NGOக்கள்) தொடக்கம் சில சிறந்த வளங்கள் உள்ளன. இடம்பெயர்வுக்கான சர்வதேச அமைப்பு-(International Organization for Migration), மைண்டேரூ (வாக் ஃப்ரீ) அறக்கட்டளை-(Minderoo (Walk Free) Foundation), போலரிஸ் திட்டம் –( Polaris Project )மற்றும் கத்தோலிக்க அறக்கட்டளைகள் (Catholic Charities) போன்ற உலகளாவிய நிறுவனங்கள், குறிப்பிட்ட பிராந்தியங்களில் உள்ள சிக்கல்களைப் பற்றிய சிறந்த கண்ணோட்டத்தை வழங்கக்கூடிய உள்நாட்டு பிரதிநிதிகளைக் கொண்டுள்ளன.

சர்வதேச நீதித் தூதுக்குழு –International Justice Mission போன்ற சில நிறுவனங்கள், குற்றவாளிகளை அடையாளம் கண்டு, கைது செய்து வழக்குத் தொடரவும் சட்ட அமலாக்க பிரிவினருடன்  நெருக்கமாக பணியாற்றுகின்றனர். இஸ்ஸாரா இன்ஸ்டிட்யூட்- Issara Institute  போன்ற நிறுவனங்கள், புலம்பெயர்ந்த சமூகக் குழுக்கள் மற்றும் வணிக  நிறுவனங்கள் தணிக்கை பரிசோதனைகளை நடத்துவதற்கும் தொழிலாளர்களுக்கு குரல் கொடுப்பதற்கும் பணியாற்றுகின்றன. நவீன அடிமைத்தனம் தொடர்வதற்கு சாதகமாக இருக்கும் நிலைமைகளை மாற்றுவதை நோக்கமாகக் கொண்ட ‘அடிமைகளை விடுவித்தல் –Free the Slaves’ போன்ற குழுக்கள் உள்ளன. பல தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் நம்பிக்கை அடிப்படையிலானவையாக இருப்பதுடன் அவற்றில் சில அரசாங்கத்தால் நடத்தப்படுகின்றன. மேலும் சில நிறுவனங்கள்  குறிப்பிட்ட  தலைப்பு அல்லது நாடு சார்ந்தவையாக உள்ளன.

ஆட்கடத்தலை புலனாய்வு செய்வதற்கான முதல் படி, குறைந்தது ஒரு டசின் வரையான அரசுசாரா நிறுவனங்களுடன் தொடர்புகளை பேணுதல் ஆகும்.

ஊடகவியலாளர்கள் அடிமைப்படுத்தப்பட்டு  உயிர் பிழைத்தவர்களுக்கு தங்களை முதலில் அறிமுகம் செய்து கொள்ளலாம். ஆட்கடத்தல் தொடர்பாக முன்னர் நடைபெற்ற   வழக்குகளை சுட்டிக்காட்டுவதொடு மட்டுமின்றி, ஊடகவியலாளர்கள்  இவ்வாறான சந்திப்புக்கள் மூலம் ஆட்கடத்தல் நடைபெறக்கூடிய குறிப்பிட்ட பகுதிகளை அடையாளம் கண்டு கொள்ளகூடியதாகவும் இருக்கலாம்.

உதாரணமாக, மலேசியாவில் உள்ள ரப்பர் கையுறை தொழிற்சாலைகளில் பல ஆண்டுகளாக பணிபுரிவதற்கு புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் சட்டவிரோத ஆட்சேர்ப்புக் கட்டணம் செலுத்த நிர்ப்பந்திக்கப்படுவது போன்ற தொழிலாளர் துஷ்பிரயோகங்கள் சுட்டிக்காட்டப்பட்டுள்ளன.

துபாய் மற்றும் அபுதாபி போன்ற மத்திய கிழக்கு நாடுகளில்  பல தலைமுறைகளாக  பாலியல் வியாபாரம் செழித்து வளர்ந்து வந்துள்ளது.  வெளிநாட்டுப் பெண்கள் வீட்டு வேலைகென நாட்டிற்கு அழைத்து வரப்பட்டு பாலியல் தொழிலில் ஈடுபட நிர்பந்திக்கப்பட்டுள்ளனர். வணிகரீதியலான மீன்பிடித்தலில் இடம்பெறும் அடிமைத்தனம் நன்கு ஆவணப்படுத்தப்பட்டுள்ளது. பணியின் நிமித்தமாக நடுக்கடலில் தொழிலுக்கென கொண்டு செல்லப்படும் இவர்கள், போதிய மேற்பார்வையின்றி, புலம்பெயர்ந்த தொழிலாளர்களாக  தொடர்ந்து சிறைபிடிக்கப்பட்டு துஷ்பிரயோகத்திற்கும் ஆளாக நேரிடுகிறது.

மனித ஆதாரங்களுக்கு அப்பால், பல்வேறு  அரசாங்கங்களும் ஐக்கிய நாடுகள் சபையும் ஒவ்வொரு  ஆண்டும் குறிப்பிட்ட காலப்பகுதியில், புலத்தில் நடைபெறும் நவீன கால அடிமைத்தனம் பற்றிய விடயங்களைக்கொண்ட  ஆண்டறிக்கைகளை  வெளியிடுகின்றன. போதைப்பொருள் மற்றும் குற்றசெயல்கள் தொடர்பான ஐக்கிய நாடுகள் அலுவலகத்தின் (UN Office on Drugs and Crime) ஆட்கடத்தல் குறித்த உலகளாவிய குற்றஅறிக்கை (Global Report on Trafficking in Persons), அமெரிக்க வெளியுறவுத் துறை திணைக்களத்தின் (US State Department) ஆள் கடத்தல் தொடர்பான அறிக்கை (Trafficking in Persons Report) மற்றும் மனிதக் கடத்தலுக்கு எதிராக (Together Against Trafficking in Human Beings) ஐரோப்பிய ஒன்றியத்தின் அறிக்கை  (European Union) போன்றவை அவற்றில் சிலவாகும். அமெரிக்க தொழிலாளர் திணைக்களமானது (US Department of Labor), குழந்தைத் தொழிலாளர் அல்லது கட்டாயத் தொழிலாளர்களால் உற்பத்தி செய்யப்படும் 155 சந்தேகத்திற்கிடமான பொருட்களின் வருடாந்திரப் பட்டியலையும் வெளியிடுகிறது. கம்போடியாவிலிருந்து வரும் ஜவுளிகள், இந்தியாவில் தயாரிக்கப்படும் காற்பந்துகள் மற்றும் உக்ரைனிலிருந்து  பெறப்படும் நிலக்கரி போன்றவை விநியோகச் சங்கிலியில் உள்ள முறைகேடு காரணமாக இப்பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளன.

ஆட்கடத்தலை புலனாய்வு செய்யும் ஊடகவியலாளர்கள் பொறுப்புக்கூறல் தொடர்பில் சிரத்தையுடன் இருப்பதற்கான காரணம், அவர்கள் பணம் மற்றும் விநியோகச் சங்கிலிகளைப் பின்தொடர  வேண்டியிருப்பதாகும். இதற்கு நேரடியான கண்காணிப்பே சிறந்த வழியாகும். இயலுமாக இருந்தால் அட்டவணைகள், லேபிள்கள் மற்றும் பிராண்டுகளைப் பார்ப்பதுடன், தயாரிப்புகளையும் அது தொடர்பில் பாதிக்கப்பட்டவர்களையும் பின்தொடர்ந்து இவ்வாறான துஷ்பிரயோகங்கள் மூலம் இலாபமடைய முயற்சிப்பவர்களை அடையாளம் காண முயலுங்கள்.  ஊடகவியலாளர்கள்  தொழிலாளர் விநியோகச் சங்கிலிகள் தொடர்பான விபரங்களை பெறுவதற்காக குறிப்பிட்ட தொழிற்சாலைகளில் இருந்து மற்றொரு நாட்டிற்கு ஏற்றுமதி செய்வது தொடர்பான தகவல்களை கண்காணிக்க வர்த்தகத் தரவு உதவியாக உள்ளது.

பணத்தைப் பின்தொடர்வதற்கான மற்றொரு சிறந்த ஆதாரம் தனியார் பெருநிறுவனங்களின்  பதிவுகள் ஆகும். இது வருடாந்திர வரவு-செலவு கணக்குகள், வணிக கூட்டாளர்கள் மற்றும் நிறுவனத்தின் தொழில்சார் உறவுகளைக் காட்டுகிறது. நீதிமன்றம் தொடர்பிலான பதிவுகள் உதவிகரமாக இருக்கும் அதேவேளை, ஆட்கடத்தலுக்காக கைது செய்யப்பட்டவர்கள் மற்றும் பிற நிறுவனங்களுடனான அவர்களின் தொடர்புகள் பற்றிய விவரங்களையும் அறிந்துகொள்ள முடியும்.

சில ஆய்வுகள்

தி கார்டியன்: வட கொரிய அடிமைத் தொழிலாளிகளைக்கொண்டு ரகசியமாக உற்பத்தி செய்யப்படும் PPE அங்கிகளை பிரிட்டன் கொள்வனவு செய்திருந்தது.

படம் : Screenshot

COVID-19 கொள்ளைநோய் தொற்று உலகம் முழுவதும் பரவியதால், மருத்துவ முகமூடிகள், கையுறைகள், ஸ்வாப்கள் (sawps) மற்றும் பாதுகாப்பு அங்கிகளுக்கான (gowns) தேவை அதிகரித்ததுடன் இப்பொருட்கள் பெருமளவில் உற்பத்திசெய்யப்படும் சீனாவில் உள்ள பெரும் தொழிற்சாலைகள் பாரிய நெருக்கடிக்குள்ளாயிருந்தன. நவம்பர், 2020 இல், த கார்டியன் (the Guardian) இதழ் வெளியிட்ட  ஒரு விசேட புலானய்வு அறிக்கையிடலின் பிரகாரம்,  பிரிட்டன் அரசு சீனாவில் வட கொரிய தொழிலாளிகளை ரகசியமாகவும்  வலுக்கட்டாயமாக பணியிலமர்த்தி வேலைவாங்கும்  நிறுவனங்களிடமிருந்து தனிப்பட்ட சுகாதார பாதுகாப்பு உபகரணங்களை (Personal protective equipment) வாங்குவது அம்பலமாகியது.

மூன்று மாத காலம் தொடர்ந்த இந்த புலனாய்வு அறிக்கையிடலில், அடிமைப்படுத்தப்பட்டவர்களில் பெரும்பாலான பெண்கள், தொழிற்சாலையை விட்டு வெளியேற அனுமதிக்கப்படாமல்  தொடர்ந்து கண்காணிப்பில் வைக்கப்பட்டு, ஒரு நாளைக்கு சுமார் 18 மணி நேரம் வரை வேலையில் ஈடுபடும் வகையில் நிர்ப்பந்திக்கப்பட்டுள்ளனர். வட கொரிய அரசாங்கமானது தனது குடிமக்களை வெளிநாட்டு வேலைகளுக்கு அனுப்புவதும், பின்னர் அவர்களின் சம்பளத்தை நேரடியாக வசூலிப்பதும் வழக்கமாக உள்ளது. இதனை ஒரு குற்றமாக ஐ.நாவும் அமெரிக்காவும் அறிவித்துள்ளன. இதற்குப் பதிலளிக்கும் விதமாக, பிரிட்டன் அரசாங்கம், அரசுக்களுக்கிடையிலான ஒப்பந்தங்களைப் பற்றி இனி வரும் காலங்களில் மிகவும் வெளிப்படைத்தன்மையுடன் இருப்பதாக உறுதியளித்ததுடன் இந்த விநியோகச் சங்கிலிகளில் நடைபெறும் தொழிலாளர் துஷ்பிரயோகங்களை வன்மையாக கண்டிப்பதுடன்  அதை முடிவுக்குக் கொண்டுவர முயற்சிப்பதாகக் கூறியது.

CNN: சிக்கலான நீர்நிலைகள்: சிறுவர் அடிமைத்தன வியாபாரம்

படம் : ஆவணப்படத்திலிருந்து எடுக்கப்பட்ட காட்சி

குழந்தைகள் சுமார் 250 அமெரிக்க டாலர்களுக்கு வாங்கப்படுகிறார்கள். மீன்பிடி வலைகளின் சிக்கல்களை அவிழ்த்துக்கொண்டே தங்கள் நாட்களைக் கழிக்கின்றனர். மேலும் அவர்கள் ஒருபோதும் ஊதியம் பெறுவதில்லை.  2019 பெப்ரவரி இல், CNN தொலைக்காட்சியின் ஒரு அறிக்கை, உள்ளூர் செய்தி நிறுவனங்கள் மற்றும் செயற்பாட்டாளர்கள் பல ஆண்டுகளாக சொல்லிக்கொண்டிருக்கின்றன என்பதை அம்பலப்படுத்தியது: அதாவது கானாவின் வோல்டா (Volta) ஏரியில் சுமார் 20,000 ஆபிரிக்க குழந்தைகள் அடிமைகளாக உள்ளனர் என்பதாகும். அங்கு பெற்றோர் தங்களின் பிள்ளைகளை ஒன்றில் மீனவர்களுக்கு விற்கிறார்கள் அல்லது ஒரு மாட்டுக்காக பண்டமாற்று முறையில் மாற்றிக்கொண்டுள்ளனர். சிறுவர்கள் ஈடுபடுத்தப்பட்டிருக்கும் வேலையானது நம்பமுடியாத ஆபத்தினை கொண்டது. இதனை வெளியுலகிற்கு அம்பலபடுத்துவதற்காக, CNN ஊடகவியலாளர்கள் குழு உள்ளூரில்  முன்பு அடிமைப்படுத்தப்பட்ட குழந்தைகளை மீட்டு, அடைக்கலம் கொடுத்து, கல்வி கற்பித்து வரும் சட்டத்தரணி ஒருவருடன் பணிபுரிந்தனர்.  

பார்வையாளர்களை நெகிழ வைக்கும் வகையில் தயாரிக்கப்பட்ட, CNN அறிக்கையானது சிறுவர் தொழிலாளிகள்  வேலை செய்யும் போது அவர்களைப் பின்தொடர்ந்து, அவர்களது குடும்பத்தினர், கட்டாயமாக சிறைபிடிக்கப்பட்டவர்கள் மற்றும் இதிலிருந்து மீட்கப்பட்டவர்கள்ஆகியோரின்  பேட்டிகளை உள்ளடக்கியது. இதன் தொடர்ச்சி, Joy News நிறுவனத்திற்காக 2017 தயாரிக்கப்பட்ட Slaves of the Volta என்னும் முன்பு அடிமையாக்கப்பட்ட சிறுவர் தொழிலாளிகளின் கதைகளையும் அவர்களின் வாழ்க்கை இதனால் எவ்வாறு பாதிக்கப்பட்டது என்பதையும் கூரும் வகையில்  ஓர் ஆவணப்படமாக உருவாக்கம் பெற்றது.

Associated Press: அடிமைகளிடமிருந்து கடலுணவு

படம்:Screenshot

அசோசியேட்டட் பிரஸ் (Associated Press) ஊடகவியலாளர்கள்  18 மாதங்களாக நடத்திய புலனாய்வு விசாரணைகளின் பலனாக  கூண்டுகளில் அடைக்கப்பட்டிருந்த மனிதர்களைக் கண்டறிந்ததுடன் அம்மனிதர்களால் பிடிக்கப்பட்டு, பதப்படுத்திய கடலுணவு வகைகள் மற்றும் செல்லப்பிராணிகளுக்கான உணவுகள் அமெரிக்காவின் பல்வேறு பல்பொருள் அங்காடிகளுக்கு விநியோகிக்கபடுவதையும் கண்டுபிடித்தனர். இந்த அறிக்கையிடலுக்காக 2016 ஆம் ஆண்டு பொது சேவைக்கான புலிட்சர் பரிசு (2016 Pulitzer Prize for Public Service ) வழங்கப்பட்டதுடன் அது  முக்கியமாக, 2,000 க்கும் மேற்பட்ட அடிமைத் தொழிலாளிகளின் விடுதலைக்கும் வழிவகுத்தது. மேலும் இது தொடர்பில்  வழக்குகள், நிதி பறிமுதல்கள் நடைபெற்றதுடன்  தொழிலாளர் விநியோகச் சங்கிலிகளை மேம்படுத்துவதற்கான தொழில்துறை அளவிலான அர்ப்பணிப்பும் காணப்பட்டது. தாய்லாந்து கடலுணவுத்துறையில் புலம்பெயர்ந்த மீனவர்கள் அடிமைப்படுத்தப்படுவதை விவரிக்கும் கதைகளைச் சொல்லும் தொடர் கட்டுரைகளுக்குப் பிறகுதான்  விசாரணை மேற்கொள்ளப்பட்டது. ஆரம்பத்தில் அவர்களின் கதைகள் கவலையளிப்பதாக இருந்தாலும், அவை அவ்வளவு பெரிய தாக்கத்தை ஏற்படுத்தவில்லை.  AP புலனாய்வு அறிக்கையிடலானது, தற்போது அடிமைப்படுத்தப்பட்டவர்களை அடையாளம் கண்டதுடன், அடிமை எஜமானர்களையும், அவர்களுடன் வியாபாரம் செய்பவர்களையும் பொறுப்புக்கூற வைத்துள்ளது.  பொருளாதாரத் தடைகள் மற்றும் அதனுடன் தொடர்புடைய விசாரணைகளைத்  தூண்டும் வகையில், உலகெங்கிலும் உள்ள தொழிலாளர் துஷ்பிரயோகங்களை  அம்பலப்படுத்திய டசின் கணக்கான விநியோகச் சங்கிலி புலனாய்வு அறிக்கையிடல்களில் APயின் இவ்வறிக்கை முதன்மையானது.

உதவிக்குறிப்புகளும் கருவிகளும்

இந்த விடயம் தொடர்பில் மேலும் ஆராய விரும்பும் செய்தியாளர்களுக்கு:

  1. பாலியல் அல்லது உழைப்புச் சுரண்டலில் இருந்து தப்பியவர்களைப் பற்றி அறிக்கையிட  முன் அதிர்ச்சி தொடர்பில் நெகிழ்வுடன்  நேர்காணல் பற்றி அறிந்து கொள்க. இது தொடர்பில் Dart Center for Journalism and Trauma பல வளங்களைக் கொண்டுள்ளது போல் உலகளாவிய புலனாய்வுஊடகவியல் வலையமைப்பும் (Global Investigative Journalism Network)  சில வளங்களைக் கொண்டுள்ளது. செய்தி ஆதாரங்களை எவ்வாறு சிறந்த முறையில் கையாள்வது மற்றும் பாதுகாப்பது என்பது பற்றி அரசு-சாரா நிறுவனங்களிடம் (NGO) கேட்கலாம்.
  • வர்த்தகத் தரவுத் திரட்டிகளான Panjiva மற்றும் Importgenius இறக்குமதி-ஏற்றுமதி பதிவுகள் தொடர்பான தகவல்களை வழங்குகின்றன.  இது ஒரு பொருள் ஏற்றுமதி செய்யப்படும் தொழிற்சாலையில் இருந்து மற்றொரு நாட்டில் வாங்குபவர் வரை கண்காணிக்க பத்திரிகையாளர்களை அனுமதிக்கிறது. இதில்  ஒரு குறிப்பிட்ட தொழிற்சாலையில் தயாரிக்கப்பட்ட பொருட்களின் பிராண்டுகளையும் சேர்க்கலாம்.
  • OpenCorporates என்பது 130 சட்டவாட்சி எல்லைகளிருந்து சுமார் 190 மில்லியன் நிறுவனங்களைக் கொண்ட உலகின் மிகப்பெரிய திறந்தவெளி தரவுத்தளமாகும். இதற்கு நிறைய தகவல்களை தோண்டி எடுக்க வேண்டும், ஆனால் ஊடகவியலாளர்கள்  கார்ப்பரேட் நிறுவன அதிகாரிகள், வருடாந்திர அறிக்கைகள், அமைப்பு தொடர்பான கட்டுரைகள் மற்றும் பலவற்றை இதன் மூலம் கண்காணிக்க முடிவதுடன் ஒரு நிறுவனத்திலிருந்து அடுத்த நிறுவனத்திற்கிடையில் தொடர்புபட்ட நபர்களையும் பணக்கொடுக்கல் வாங்கல் தகவல்களையும் கண்டுபிடிக்க முடியும்.
  • GIJN போன்ற ஊடக வலையமைப்புக்களை பயன்படுத்துவதோடு  ஒரு தலைப்பில் புலனாய்வு செய்வதற்காக கூட்டுப்பணியாளர்களைக் கண்டறிய Journalism Fund சமீபத்தில் அறிவித்தது போன்ற தளங்களை பயன்படுத்திக்கொள்ளலாம். ஆட்கடத்தலை மறைப்பது என்பது நம்பமுடியாத அளவிற்கு கடினமானது, ஆனால் இவ்வாறான சம்பவங்கள் நடைபெறும் நாடுகளில் உள்ள பத்திரிகையாளர்களுடன் இணைந்து பணிபுரிவது இவ்வேலையை மேலும்  சாத்தியமாக்குகிறது.
  • சமூக நெறிமுறைகளை மறுபரிசீலனை செய்யுங்கள்: சில நேரங்களில் ஒரு பொதுவான நடைமுறை உண்மையில் நவீன அடிமைத்தனமாகக்கூட இருக்கலாம். எடுத்துக்காட்டாக, மத்திய கிழக்கில் உள்ள கஃபாலா(kafala) அல்லது ஸ்பான்சர்ஷிப் என்னும் நடைமுறையின் பிரகாரம் தற்காலிக வேலைகளுக்காக அங்கு அனுப்பப்படும் ஆசியத் தொழிலாளர்கள் நாளடைவில் கடன் காரணமாக கொத்தடிமைகளாக மாற்றப்படுகின்றனர்.   ஹைட்டியில் உள்ள ரெஸ்டாவேக் எனப்படும்  குழந்தைகள்(restavek children) வீட்டு வேலையாட்களாக வேலை செய்ய தமது பெற்றோரால் அனுப்பப்பட்டு அடிமைகளாக்கப்பட்டுள்ளனர்.  AP ஊடக குழாமின் புலனாய்வின் பிரகாரம், அமெரிக்காவின் ஹவாய் தீவுகளில் மீன்பிடித்துறையில் அமெரிக்க தொழிலாளர் சட்டங்களில் இருந்து எந்த பாதுகாப்பும் இல்லாமல் வெளிநாட்டு தொழிலாளர்கள் படகுகளில் வேலை செய்ய அனுமதிக்கின்ற ஒரு விசா திட்டம் அடையாளம் காணப்பட்டுள்ளது.

கவனமாக இருங்கள்

புலனாய்வுப் ஊடகவியலாளர்கள் குரலற்றவர்களுக்கு குரல் கொடுப்பதற்கும், அதிகாரத்தில் இருப்பவர்களை பொறுப்புக் கூற வைப்பதற்கும் அர்ப்பணிப்புடன் செயற்படுகிறார்கள். ஆட்கடத்தலை விசாரிப்பதும் அம்பலப்படுத்துவதும் இவ்விரண்டு பணியையும் நிறைவேற்றுகிறது. உண்மையில், ஒரு தனிநபரின் மோசமான நிலைமையில்  இதுபோன்ற உடனடியான, நேர்மறையான தாக்கங்களை கொண்டு வரக்கூடியதும், சுரண்டல் வணிக நடைமுறையில் நீண்டகால மாற்றங்களையும் கொண்டு வரக்கூடியதுமான  சில அம்சங்கள்  புலனாய்வு அறிக்கையிடலில் உள்ளன.

எனவே, கவனமாக இருங்கள், தொடர்ந்து விடாமுயற்சியுடன் இருங்கள். பாதிக்கப்பட்டவர்களின் பாதுகாப்பை எப்போதும் மனதில் இருத்திக்கொள்ளுங்கள். 2016இல், AP இல் உள்ள என்னுடைய சக ஊழியர்கள் ‘Seafood From Slaves’ புலனாய்வு அறிக்கையிடலின் விளைவாக விடுவிக்கப்பட்ட நபர்களை நேர்காணல் செய்தனர். அவர்களில் சிலர் அதிர்ச்சி மற்றும் இரவுகளில் பயங்கர அனுபவங்களைச் சந்தித்தனர், சிலர் அவமானத்துடன் போராடியதோடு மீண்டும் தவறான துஷ்பிரயோக  சூழ்நிலைகளுக்குத் திரும்பினர், ஆனால் மற்றவர்கள் சீரான ஓரு  வேலையைக் பெற்றுக்கொண்டு புதிய தொழில் முனைப்புக்களுடன் தம் குடும்ப வாழ்க்கையை  தொடங்குவதோடு மட்டுமின்றி தங்கள் கடத்தல்காரர்களை சிறைக்கும் அனுப்பினர். அவர்களில் பலர் காலப்போக்கில் தங்களின் வலிகள் குறைந்துவிட்டதாகவும், தங்களின் சுதந்திரத்திற்கு நன்றியுள்ளவர்களாக இருப்பதாகவும் கூறினர். “அவர்கள் தம் வீட்டில், சுதந்திர மனிதர்களாக வாழ்வதற்கு நன்றியுடையவர்களாக இருக்கிறார்கள்” என்று AP தெரிவித்துள்ளது. “அவர்கள் இனி அடிமைகள் அல்ல.”

மேலதிக வளங்கள்            

GIJN Video: Exposing Human Trafficking with Martha Mendoza

GIJN Resource Center: Human Trafficking, Best Practices for Reporters

How They Did It: Investigating the Trafficking of Girls from Nepal to the Gulf

மார்த்தா மெண்டோசா (Martha Mendoza) புலிட்சர் பரிசு பெற்ற அசோசியேட்டட் பிரஸ் (Associated Press) நிருபர் ஆவார். அவர் தற்போது கலிபோர்னியாவில் உள்ள சிலிக்கான் பள்ளத்தாக்கிலிருந்து முக்கிய செய்திகள், நிறுவன மற்றும் புலனாய்வுக் கதைகளை எழுதுகிறார். 2015 இல் தென்கிழக்கு ஆசியாவில் மீன்பிடித் தொழிலில் கட்டாய உழைப்பை அம்பலப்படுத்திய குழாமில் ஒர் உறுப்பினராக இருந்தார். இந்த புலனாய்வு அறிக்கையிடல் சுமார் 2,000 அடிமைத்தொழிலாளிகளை  விடுவிக்க உதவியது.

மூலம்

This story was originally published by the Global Investigative Journalism Network (GIJN)

Hot this week

CIR and SCOPE host workshop for women journalists on GBV

The Centre for Investigative Reporting (CIR) and Strengthening Social...

GBV and Women’s Political Participation – A Workshop for Women Journalists

‘Towards New and Inclusive Narratives,’ a workshop on GBV...

Panel discussion on ‘Election Disinformation, Online Hate & Women’s Political Representation’

The Center for Investigative reporting (CIR) will host a...

NPP sweeps the polls including the Tamil majority areas signalling a deep political shift in island politics

NPP receives a historic mandate countrywide including Tamil majority...

Topics

CIR and SCOPE host workshop for women journalists on GBV

The Centre for Investigative Reporting (CIR) and Strengthening Social...

GBV and Women’s Political Participation – A Workshop for Women Journalists

‘Towards New and Inclusive Narratives,’ a workshop on GBV...

Reporting on Non-Economic Loss and Damage from Environmental Disasters

𝐌𝐞𝐞𝐭 𝐭𝐡𝐞 𝐂𝐈𝐑 𝐅𝐞𝐥𝐥𝐨𝐰𝐬 Four Journalism Fellows under a special...

Women encounter a toxic internet that robs their voice- Shreen Saroor

Men and women experience the internet differently. Women experience...

Related Articles

Popular Categories