2011 ஆம் ஆண்டில், தி நியூயார்க் டைம்ஸ் பத்திரிகை (The New York Times) ட்ரோன் (Drone) ஊடகவியலின் வருகையை அறிவித்தது. செய்தி அறைகள் ட்ரோன்களைப் பயன்படுத்தத் தொடங்கி இருந்ததுடன் ஊடகவியலாளர்கள் கலந்துகொள்வதற்கு கடினமான நிகழ்வுகளான – ஆர்பார்ட்டங்கள் மற்றும் சுற்றுச்சூழல் பேரழிவுகள் பற்றிப் பாதுகாப்பாகப் அறிக்கையிட இது மிகவும் உதவியது. அப்போது ட்ரோன் பற்றிய நல்ல அபிப்பிராயம் இருந்ததுடன் அது பேசு பொருளாகவும் விளங்கியது.
தகவல்தொடர்பு ஊடகங்கள் தொடர்பான ஆய்வாளர்களான லிசா பார்க்ஸ் (Lisa Parks ) மற்றும் கேரன் கப்லான் ( Caren Kaplan )குறிப்பிடுவது போல், செய்தி ஊடகங்கள் ட்ரோன் தொடர்பில் கிட்டத்தட்ட தீராத பசியைக் கொண்டிருந்தன. இதே நேரம் ஆளில்லா விமானங்கள் எரிமலைகளுக்குள் பறக்கும் புதுமையைக் கொண்டாடும் அதேவேளை ட்ரோன்கள்உள்ளூர் இடங்களை ஆக்கிரமிப்பதைப் பற்றிய பீதியும் காணப்பட்டது.
செய்தி ஊடகங்கள் ட்ரோன்களைப் பயன்படுத்தி பொதுமக்களுக்கு சிறப்பாகத் தகவல்களை தெரிவிக்க முடியுமா? இதன் பாவனையானது புதிய தரவுகளை பெற்றுக்கொள்ளவா அல்லது சிறிய ஆளில்லா விமானம் மூலம் வேறொரு இடத்தில் உண்மைச் சரிபார்ப்பைச் மேற்கொள்ளவா? வன்முறைக்கு இலக்காகக்கூடிய ஊடகவியலாளர்களை ட்ரோன்கள் மூலம் பாதுகாக்க முடியுமா? இது தொடர்பில் அப்போது அளவுகடந்த உற்சாகம் காணப்பட்டது ஆனால் ஒரு தசாப்தத்திற்குப் பிறகு, அந்த உற்சாகம் குறிப்பிடத்தக்களவு குறைந்து போனது.
2011 ஆம் ஆண்டு முதல் நெப்ராஸ்கா-லிங்கன் பல்கலைக்கழகத்தில் (University of Nebraska-Lincoln) ட்ரோன் ஜர்னலிசம் ஆய்வகத்திற்கு (Drone Journalism Lab) தலைமை தாங்கிய ட்ரோன் ஊடகவியலின் “பீடாதிபதி” என்று கருதப்படும் மாட் வெயிட்டின் (Matt Waite, the “de facto dean” of drone journalism) கூற்றுப்படி, ட்ரோன் ஊடகவியல் தற்போது ஸ்தம்பித்துள்ளது.
“நாங்கள் பல ஆண்டுகளுக்கு முன்பு ட்ரோன்களைப் பற்றிப் பேசியபோது, புகைப்பட ஊடகவியலுக்கு சிறந்த தளம் எங்களிடம் உள்ளது என்பது தொடர்பில் நிறைய எதிர்பார்ப்புக்கள் இருந்தன ” என்று வெயிட் கூறினார்.”அது நடந்தது. COVID-19 கொள்ளைநோய் தொற்று தொடர்பில் எடுக்கப்பட்ட மிகவும் நெகிழ்வான படங்களில் ஒன்று, உணவு விநியோகம், பரிசோதனை வசதிகள் மற்றும் தடுப்பூசியேற்றல் நிலையங்களுக்காக காத்திருந்த நீண்ட கார் வரிசைகள். அவைகள் ட்ரோன் கமாராக்கள் மூலம் எடுக்கப்பட்டன. அடுத்த கட்டத்திற்கு [ட்ரோன்களுடன்] செல்வோமா இல்லையா என்பதை இனித்தான் நாம் பார்க்க வேண்டும்,”
அவர்களின் ட்ரோன்கள் பற்றிய விமர்சனங்கள், எரிச்சலூட்டும் சலசலப்புக்கள் மற்றும் ஆக்கிரமிப்பான போக்குகள், செய்தி ஊடகங்களின் பலவீனங்களான சர்ச்சைக்குரிய விடயங்களாக மாற்றுதல் மற்றும் ஊடுருவுதல் போன்றவற்றை பிரதிபலிக்கின்றன. இதற்கு உதாரணமாக சமீபத்தில் ஜப்பானிய டென்னிஸ் வீராங்கனை நவோமி ஒசாகா (Naomi Osaka) பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டியில் பத்திரிகையாளர்களுடன் பேச மறுத்ததை எடுத்துக்காட்டலாம். “பொதுமக்கள் பெரும்பாலும் ட்ரோன்களை நம்புவதில்லை” என்று வெயிட் கூறினார்.
ட்ரோன் கமெரா மூலம் எடுக்கக்கூடிய அகலக்காட்சிகள்(Panoramic Shots)
2021 ஆம் ஆண்டில், ட்ரோன்களின் மிகவும் பொதுவான பயன்பாடு காணப்படுவது புகைப்பட ஊடகவியலிலாகும். புகைப்பட ஊடகவியலாளரின் கேமரா பையில் காணப்படுகின்ற ரிமோட் கண்ட்ரோல் லென்ஸாக (remote controlled lense) ட்ரோன்கள் செயல்படுகின்றன.
“மேலே இருந்து வான்வழியாக எடுக்கப்படும் காட்சி ஒரு எளிய நிகழ்வுக்கு சினிமாக் கண்ணோட்டத்தைக் கொண்டுவருகிறது” என்று இஸ்ரேலிய நாளிதழான ஹாரெட்ஸின் (Haaretz) புகைப்படக் கலைஞரான டோமர் அப்பெல்பாம் (Tomer Appelbaum) கூறினார்.
2020 ஆம் ஆண்டில் இஸ்ரேல் பிரதமர் நெத்தன்யாகுக்கு எதிராக டெல் அவிவில் (Tel Aviv) சமூக இடைவெளியுடன் கூடியதாக நடத்தப்பட்ட எதிர்ப்புப் போராட்டங்களின் வான்வழி படக்காட்சிக்காக அப்பெல்பாம் சியனா (Siena award) விருதை வென்றார்.
ஆனால், இஸ்ரேலின் மேற்குக் கரை இணைப்பிற்கு எதிரான ஆர்ப்பாட்டத்தை அறிக்கையிடுவதற்கெதிராக இஸ்ரேலிய போலீசார், அவருடன் வாக்குவாதப்பட்டு சிறிது நேரம் தடுத்து வைத்திருந்தபோதிலும், அப்பெல்பாமின் ட்ரோனை அவர்களால் நிறுத்த முடியவில்லை.
புகைப்பட ஊடகவியலுக்கு ட்ரோன்கள் பயன்படுத்தப்படுவதில் ஆச்சரியமில்லை; ஊடக நுகர்வு காட்சிகளை மையமாக நோக்கி சென்று கொண்டிருக்கின்றது என்று தொழில்நுட்பங்கள் மற்றும் சமூகங்கள் தொடர்பில் ஆராயும் மிச்சிகன் மாநில பல்கலைக்கழகத்தின் (Michigan State University) STEM ஆசிரியர் பேராசிரியர் மரிசா பிராண்ட் (Marisa Brandt) கூறினார்.
“படப்பிடிப்புக்கு தகுதியான மற்றும் குறிப்பிடத்தக்க படங்களை [ட்ரோன்கள் மூலம்] பெறுவது மிகவும் நல்லது,” என்று அவர் கூறினார். “இத்தொழில்நுட்பமானது, தாமாகவே சுயமான நிலையை விபரிக்கும் படக்காட்சிகளை உருவாக்க இடமளிக்கிறது. மேலும் இது விளக்கம் கோரும் விடயங்களை விட, அதிகமுறை பார்க்கப்படுவதாகவும் இருக்கின்றது,”
இங்கு வேறு சில கதைகளும் உள்ளன. தரவுகளைக்கொண்டு கட்டமைக்கப்பட்ட செய்திக்கதைகளை கூறுவதற்கு ட்ரோன்கள் ஊடகவியலாளர்களுக்கு உதவும். வெப்பநிலையை கண்காணிக்கும் மேப்பிங், 3-டி நிலப்பரப்பு மேப்பிங், உணர்வு மாசுபாடு அல்லது கட்டிடங்களின் 3-டி மாடல்களை உருவாக்க ட்ரோன்களைப் பயன்படுத்துவது போன்றவை ஊடகவியலாளர்களுக்கு சிறந்த சந்தர்ப்பமளிக்கும் விடயங்கள் என்று வெயிட் கூறினார்.
இதில் குறிப்பிட்ட சில பணிகள் நடந்துள்ளன. உதாரணமாக, ரேடியோலாப் மற்றும் WNYC இன் டேட்டா நியூஸ் டீம் (Radiolab and WNYC’s Data News Team) ஆகியவை பூமியில் இருந்து சிக்காடாக்கள் (cicadas) எப்போது வெளிவரும் என்பதை எதிர்வுகூறவும் நில அதிர்வுகளைக் கண்டுபிடிக்கவும் ஓர் சென்சார் திட்டத்தைத் தொடங்கியுள்ளன.
ஆயிரக்கணக்கான சதுர மைல்களுக்கு அப்பால் உள்ள பழங்கால புராதன இடங்களை ஆளில்லா விமானத்தால் உருவாக்கப்பட்ட லிடார் (lidar) வரைபடங்களுடன் கண்டறிய, லேசர்கள் பொருத்தப்பட்ட ட்ரோன் விமானங்களை அறிஞர்கள் மற்றும் ஊடகவியலாளர்கள் பயன்படுத்தி வருவது குறித்து நியூயார்க் டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
மேலும் வெயிட் கூறியது என்னவென்றால், அவர் எதிர்பார்த்ததை விட குறைவான முயற்சிகளே இதுவரை மேற்கொள்ளப்பட்டுள்ளன. சென்சார் பொருத்தப்பட்ட ட்ரோன்களைப் கையாள்வது தொடர்பில் கற்றுகொள்வதற்கு , சிறப்பு உபகரணங்கள் மற்றும் மேலதிக அறிவு தேவைப்படுகிறது. சில வேளைகளில் அத்தகைய ட்ரோன்கள் மிகவும் விலையுயர்ந்ததாக இருப்பதோடு, சில நேரங்களில் கொள்வனவு செய்ய முடியாத அளவுக்கு அவற்றின் விலைகள் அதிகரித்துள்ளன. “அத்தகைய பாரிய முதலீடென்பது பல செய்தி அறைகள் மற்றும் சுதந்திர ஊடகவியலாளர்களுக்கு சாத்தியப்படமுடியாததாக இருக்கலாம்” என்று வெயிட் கூறினார்.
நாம் இன்னும் அனைத்தையும் இழக்கவில்லை. விமர்சன ரீதியான தரவு சார் ஊடகவியலை முன்னோக்கி கொண்டு செல்வதற்கு, ஊடகவியலாளர்கள் மற்றும் செய்தி அறைகள் ட்ரோன்கள் அல்லது ட்ரோன் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தும் பொறிமுறைகளளுக்கான வழிகள் உள்ளன.
இருண்ட தோற்றம்: ட்ரோன்களின் சுருக்கமான வரலாறு
கடந்த கால் நூற்றாண்டு காலமாக ட்ரோன்கள் அவற்றின் கவர்ச்சிகரமான வடிவமைப்பு, மற்றும் கணணி விளையாட்டுக்களின் (Computer games) அழகியல் தன்மை காரணமாக, ரிமோட் கண்ட்ரோல் மூலம் இயக்கும் விமானப் பொழுதுபோக்காளர்கள் மத்தியில் வெகு பிரபலமாக இருந்தன.
கண்காணிப்பு, இராணுவ உளவு மற்றும் இலக்கு வைத்து படுகொலை செய்தல் போன்ற செயற்பாடுகளுக்காகவே முதலில் ட்ரோன்கள் உருவாக்கப்பட்டமை என்பதை ஊடகவியலாளர்கள் முதலில் நினைவில் கொள்ள வேண்டும்.
The Bureau of Investigative Journalism என்ற நிறுவனம் சேகரித்த தரவுகளின்படி, 2010-2020 வரையான காலப்பகுதியில் பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், சோமாலியா மற்றும் ஏமன் உள்ளிட்ட நாடுகளில் ஆயிரக்கணக்கான மக்களை கண்காணிக்க, காயப்படுத்த அல்லது கொன்று குவிக்க அமெரிக்கா ட்ரோன்களை பயன்படுத்தியுள்ளது தெரிய வந்துள்ளது.
இதற்கிடையில், NPR எனப்படும் National Public Radio வானொலி சேவை, முதல் முறையாக 2021 ஜூன் தொடக்கத்தில், லைபீரியாவில் இயக்குனர் ஒருவரின் மேற்பார்வையின்றி தானியங்கும் முறையில் செயற்படும் ட்ரோன் கருவி ஒன்று மனிதனைக் கண்டுபிடித்து கொன்றதாக கூறப்படும் குற்றச்சாட்டை ஐக்கிய நாடுகள் சபை விசாரித்து வருவதாக அறிவித்தது.
இது தொடர்பில் கண்காணிப்பு உள்கட்டமைப்பு விடயங்களில் நிபுணரும், சாண்டா பார்பராவின் கலிபோர்னியா பல்கலைக்கழகத்தின் (University of California, Santa Barbara) புகழ்பெற்ற பேராசிரியருமான பார்க்ஸ் (Parks) இவ்வாறு எழுதுகிறார். மில்லியன் கணக்கான மக்களுக்கு, ” அவர்களின் அன்றாட வாழ்க்கை என்பது வான்வழியான கண்காணிப்பு மற்றும் குண்டுவீச்சு போன்றவற்றால் அச்சுறுத்தலுக்கு உள்ளாக்கப்பதுவதாக இருந்தது”
கடந்த தசாப்த காலத்தில்தான் ட்ரோன்கள் வணிக மற்றும் தனியார் துறைகளில் குறிப்பிடத்தக்க சந்தைப் பங்கைப் பெற்றுள்ளன. கோல்ட்மேன் சாக்ஸ் (Goldman Sachs) அதன் மதிப்பு சுமார் $100 பில்லியன் அமெரிக்க டொலர் என்று கூறுகிறது.
உலகளவில், ஆளில்லா வான்வழி வாகனங்கள் (Unmanned Aerial Vehicles -UAV) அல்லது ஆளில்லா வான்வழி அமைப்புகளின் (Unmanned Aerial Systems UAS) மிகப்பெரிய நுகர்வோர் தளமானது இராணுவம் மற்றும் சட்ட அமலாக்க முகவரமைப்புகளிலும் அதனைத்தொடர்ந்து விவசாயம் மற்றும் கட்டுமானத்துறையில் உள்ளது.
அறிவியல் புனைகதைகளை விட கண்காணிப்புத்துறை மிகவும் சாதாரணமானதாகத் தோன்றினாலும், அதற்கு காரணம் 21 ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் கண்காணிப்புகூட அன்றாட வாழ்க்கையின் சாதாரண அம்சமாக இருப்பதேயாகும்.
இணையத்துடன் இணைக்கப்பட்டுள்ள குழந்தை கண்காணிப்பு கருவிகள் முதல் கையடக்க தொலைபேசி கண்காணிப்பு கோபுரங்கள் வரை, உள்நாட்டு சந்தைக்கு கொண்டு வரப்பட்ட போர் தொழில்நுட்பங்களில் ட்ரோன்களும் அடங்கும், ” இதுஅன்றாட வாழ்க்கையில் இராணுவமயமாக்கலை மிகவும் தீவிரப்படுத்துகிறது” என்று பார்க்ஸ் எழுதுகிறார்.
ட்ரோன் தரவுகள் மூலம் உங்கள் கதைகளை மேலும் மெருகேற்றுங்கள்
இந்த யதார்த்தத்தை ஊடகவியலாளர்கள் நேருக்கு நேர் எதிர்கொள்ள முடியும். சட்ட அமுலாக்கம், கட்டுமானம் அல்லது காப்பீட்டு நிறுவனங்கள் உள்ளிட்ட பிற துறைகளால் சேகரிக்கப்பட்ட உள்நாட்டு ட்ரோன் காட்சிக்கோப்புக்களை தேடுவதன் மூலம் இதனை தொடங்கலாம்.
National Public Radio (NPR) இன் கீழ் சுயாதீனமாக இயங்கும் அமெரிக்காவின் கென்டக்கி (Kentucky) மாநிலத்தின் லூயிஸ்வில்லியில் (Louisville) உள்ள WFPL News செய்தி நிலையமானது, கென்டக்கி மாநில காவல்துறையால் எடுக்கப்பட்ட ட்ரோன்களில் இருந்து 11 மணிநேரத்திற்கும் அதிகமான வீடியோ கோப்புகளின் நகல்களைப் பெற்றது.
2020 வசந்த காலத்தில் அஹ்மத் ஆர்பெரி (Ahmaud Arbery), ஜார்ஜ் ஃபிலாய்ட் (George Floyd) மற்றும் ப்ரோனா டெய்லர் (Breonna Taylor) ஆகியோரின் மரணத்தைத் தொடர்ந்து, பாதுகாப்பு அதிகாரிகள் ஆர்ப்பாட்டங்களைக் கண்காணிக்க ட்ரோன்களை பறக்கவிட்டனர். ட்ரோன் காட்சிக்கோப்புக்களை அடிப்படையாக கொண்ட WFPL இன் புலனாய்வானது, ஆர்ப்பாட்டக்காரர்களின் முன் தூண்டுதலின்றி போலீஸ் தனது பலத்தை பிரயோகிப்பதை எடுத்துக் காட்டியது. விதிவிலக்காக ஒரு ஆர்பார்ட்டக்காரர் மேலே உள்ள ட்ரோனை நோக்கி ஒரு தண்ணீர் பாட்டிலை எறிந்த போது, போலீசார் அதை நோக்கி மிளகு ஸ்பிரே ரவைகளைக்கொண்டு சுட்டனர். “அது மிகவும் வேடிக்கையாக இருந்தது,” என்று ஒரு போலிஸ் அதிகாரி கூறும் குரலடங்கிய அரிய காட்சி கோப்பு ஒன்றும்கூட இதில் உள்ளடங்கியிருந்தது.
ஆளில்லா விமானங்களை மக்கள் குழுக்கள் மீது பறக்கவிடாமல் அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவில் உள்ள பெரும்பாலான செய்தியறைகள் தடுக்கப்பட்டுள்ளன. 2020 இன் பிற்பகுதியில், அமெரிக்காவில் உள்ள Federal Aviation Administration (FAA) வணிகரீதியாக பயன்படுத்தப்படும் ட்ரோன் கருவிகளை இரவில் பறக்க அனுமதிக்கும் புதிய வழிகாட்டுதல்களை வெளியிட்டது.
இருப்பினும், அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம் (European Union) மற்றும் ஐக்கிய இராச்சியத்தில் (United Kingdom) உள்ள தகவல் சுதந்திரச் சட்டங்களின் மூலம் தகவல் கோரிக்கைகளைப் (Information Requests) பயன்படுத்தி, சட்ட அமுலாக்கல் பிரிவு போன்ற மாநில கூட்டாட்சி அரச நிறுவனங்களினால் எடுக்கப்பட்ட ட்ரோன் காட்சிக்கோப்புக்களை ஊடகவியலாளர்கள் பெற்றுக்கொள்ள முடியும்.
மேலும், ஊடகவியலாளர்கள் ட்ரோன்களைப் பயன்படுத்துவதை விட செயற்கைக்கோள் படங்களைக் கோரலாம். 2015 ஆம் ஆண்டில், அசோசியேட்டட் பிரஸ் (Associated Press) செய்திச்செவையின் புலனாய்வு நிருபர்கள் டிஜிட்டல் குளோப்- DigitalGlobe (இப்போது Maxar) எனப்படும் செயற்கைக்கோள்களைப் பயன்படுத்தி, சரக்குக் கப்பல்கள் மியான்மரில் இருந்து அடிமைப்படுத்தப்பட்ட மனிதர்களை கடத்திச் சென்று அவர்களை மீன்பிடிக்க கட்டாயப்படுத்துகின்றன என்பதற்கான ஆதாரங்களை சேகரித்தனர். பின்னர் புலிட்சர் பரிசு பெற்ற “நீங்கள் வாங்கும் மீனை அடிமைகள் பிடிக்கிறார்களா?” (“Are Slaves Catching the Fish You Buy?”)என்ற தலைப்பிலான புலனாய்வு அறிக்கையிடலுக்கு இந்தத் தரவு பயன்படுத்தப்பட்டது. இவ்வறிக்கை வெளியீட்டிற்குப் பிறகு, 2,000 அடிமைகள் விடுவிக்கப்பட்டதுடன் இதுதொடர்பான விசாரணை அமெரிக்காவில் சீர்திருத்த முயற்சிகளை மேலும் ஊக்கப்படுத்துவதாக அமைந்தது.
பேரிடர் மற்றும் இயற்கை அனார்த்தங்கள் தொடர்பான அறிக்கைக்கான தரவுகளையும் செயற்கைக்கோள்கள் மூலம் பெற்றுக்கொள்ள முடியும். குவார்ட்ஸ் இதழின்(Quartz) டேவிட் யானோஃப்ஸ்கி (David Yanofsky ) கலிபோர்னியா வறட்சியின்போது செயற்கைக்கோள் படங்கள் மற்றும் தரவுகளைப் பயன்படுத்தி கிட்டத்தட்ட 100 வரைபடங்கள் மற்றும் அட்டவணைகளை உருவாக்கினார். ட்ரோன்கள் போல சிறியதாக இல்லாவிட்டாலும், செயற்கைக்கோள்கள் மூலம் குறைந்த முதலீட்டிற்கு உயர் மட்ட வளங்களை பெற்றுக்கொள்ள முடியும்.
ட்ரோன்கள் மிகவும் விலை உயர்ந்தவையாக இருப்பதுடன் அதனை கற்றுக்கொள்வதற்கு நேரம் எடுக்கும்
சில பொழுதுபோக்கு மாதிரிகளான ட்ரோன்களை புதிதாக வாங்க சில நூறு யூரோக்கள் மட்டுமே செலவாகும் அதேவேளை, நீண்ட பேட்டரி ஆயுள் கொண்ட வணிகரீதியாக பயன்படுத்தக்கூடிய ஒரு ட்ரோனிற்கு € 10,000 பவுண்ஸ் ($11,700 USD-அமெரிக்க டொலர்) க்கும் அதிகமாக செலவாகும். இவற்றிற்கு மேலாக, இதர உபகரண செலவுகள், கற்றல் மற்றும் உரிமம் போன்றவற்றிற்கு மேலதிக நேரம் தேவைப்படும்.
“ட்ரோன்களைப் பயன்படுத்துவது ஒரு சிறப்புத் திறன் ஆகும்,” என்று சுதந்திர ட்ரோன் ஆபரேட்டரான ஜானி மில்லர் (Johnny Miller) கூறுகிறார். அவர் Unequal Scenes என்ற தலைப்பிலான ட்ரோன்களைப் பயன்படுத்தி உலகளாவிய சமத்துவமின்மையினை எடுத்துக்காட்டும் தத்ரூபமான படங்களை வெளியிட்டார். இந்த புகைப்படங்கள் அமெரிக்காவின் டைம் இதழ்TIME Magazine போன்ற வெளியீடுகளில் பிரசுரிக்கப்பட்டுள்ளன.
மில்லர் தென்னாப்பிரிக்காவின் கேப் டவுனில் africanDRONE நிறுவனத்தை இணை –நிறுவனராக நிறுவியதுடன் Code for Africa என்னும் நிறுவனத்தில் பயிற்றுனர்களில் ஒருவராக (fellow) பணிபுரிந்து வருகிறார்.
“நீங்கள் ஒன்றுடன் ஒன்று தொடர்புபட்ட பல்வேறு திறன்களை இதற்காக கொண்டிருக்க வேண்டும்” என்று மில்லர் கூறினார். “காட்சிக்கோப்புக்களை உருவாக்குவதலிருந்து, உங்கள் பாதுகாப்பை உறுதிப்படுத்திக்கொள்ளுதல், சூழ்நிலை விழிப்புணர்வு என்பவற்றுடன் சிக்கல்கள் நிறைந்த ட்ரோன் பயன்பாட்டின் விளைவுகள் உண்மையானவையும்கூட.”
சிலவேளைகளில் சூழ்நிலைகள் சீக்கிரமாக எதிர்மறையாக மாற ஆரம்பிக்கலாம். பொதுவாக, ஒரு ஆளில்லா விமானத்தை இயக்கும் இயக்குனர், ட்ரோன்களை எப்போதும் தங்கள் பார்வையில் வைத்து கொள்வதோடு பாதுகாப்பாக தரையிறக்க கூடியதாக இருத்தல் வேண்டும். ஆரம்பநிலை வணிக ட்ரோன்களின் பேட்டரி ஆயுள் இருபது நிமிடங்கள் அல்லது அதற்கும் குறைவாக இருக்கலாம். மற்றொரு பத்திரிகையாளரின் ட்ரோன் கருவி நடுவானத்தில் மின்கல சக்தியை இழந்து கீழே விழுந்தது ஒரு துர்ரதிஸ்டமான”கனவு” போல உணர்ந்ததை Appelbaum நினைவு கூர்ந்தார். அது கீழே விழுந்து நொறுங்கிய போதும் அதிர்ஷ்டவசமாக யாருக்கும் காயம் ஏற்படவில்லை.
“ட்ரோனின் செயல்களுக்கு அதை இயக்கும் இயக்குனரான விமானியே எப்போதும் பொறுப்பு” என்று மில்லர் கூறினார். “அது வானத்திலிருந்து கிழே விழுந்து ஒருவர் சாக நேரிடின் , நீங்கள் சிறைக்குச் செல்ல வேண்டி வரும்.”
இது தொடர்பில் தொழில்முறைரீதியான பயிற்சிகள் மற்றும் ஆய்வகங்கள் உள்ளன. 2017 ஆம் ஆண்டில், Poynter, தேசிய பத்திரிகை புகைப்படக் கலைஞர்கள் சங்கம் (National Press Photographers Association), நெப்ராஸ்கா பல்கலைக்கழகத்தில் (University of Nebraska ) உள்ள ட்ரோன் ஊடகவியல் ஆய்வகம் (Drone Journalism Lab) மற்றும் DJI (Da-Jiang Innovation எனப்படும் ஒரு பிரபலமான சீன ட்ரோன் உற்பத்தி நிறுவனம்) ஆகியவற்றுடன் இணைந்து அமெரிக்காவில் உள்ள 400க்கும் மேற்பட்ட பத்திரிகையாளர்களுக்கு ட்ரோன்களை பாவிப்பது தொடர்பில் சட்டப்பூர்வமாகவும் பாதுகாப்பாகவும் செயல்படுவதற்கான வழிகாட்டுதல்களை வழங்கியது.
சிறிய செய்தி அறைகள் மற்றும் சுதந்திரமான ஊடகவியலாளர்கள் தமது அறிக்கையிடல்களுக்காக ட்ரோனைப் பயன்படுத்திக்கொள்வதைத் தடுக்கும் வகையில் ட்ரோன் தொடர்பான ஒழுங்குமுறைகள், நேரம் மற்றும் செலவுகள் அமைந்திருக்கின்றன. பல பயிற்சி திட்டங்கள் கிடப்பில் போடப்பட்டு விட்டன என்பது மேலும் குறிப்பிடத்தக்க ஒன்றாகும்.
கோவிட்-19 கொள்ளைநோய் தொற்று நெப்ராஸ்கா பல்கலைக்கழகத்தில் ட்ரோன் தொடர்பான இதழியல் திட்டங்களை மேலும் பின்னுக்குத் தள்ளியது என்று வெயிட் கூறினார். “ஒத்திசைவற்ற கற்றல் சூழ்நிலையில் ட்ரோன்களைப் பற்றிய ஒழுங்கு நெறிமுறை தொடர்பில் உரையாடல்களைக் நிகழ்த்துவது கடினம்,” என்று அவர் கூறினார்.
ஓரு மாற்று வழிமுறையாக, செய்தியறைகள் அனுபவம் வாய்ந்த ட்ரோன் இயக்குனர்கள் மற்றும் திறந்தவெளி தரவுகளை அடிப்படையாக கொண்ட செயற்திட்டங்களில் கூட்டு சேரலாம். உதாரணமாக, ஆபிரிக்காவினை தளமாக கொண்ட africanDRONE என்ற நிறுவனமானது ட்ரோன் ஊடகவியல் உட்பட, “ஆளில்லா விமானங்களை நன்மையான விடயங்களில் பயன்படுத்துவதில் உறுதியாக உள்ளதுடன்” அவ்வாறான திட்டங்களைச் செயல்படுத்த சமூகப் பங்காளிகளை வரவேற்கிறது.
africanDRONE இன் இணை நிறுவனரான frederick Mbuyu, உலக வங்கி மற்றும் தான்சானிய அரசாங்கத்தால் நிதியளிக்கப்பட்ட செயற்திட்டமான சான்சிபார் மேப்பிங் முன்முயற்சிக்கு (Zanzibar Mapping Initiative -ZMI) வழிநடத்தினார். இச்செயற்திட்டம், ஏற்கனேவே செயற்கைக்கோள் படங்களில் தான்சானிய தாழ்நிலங்கள் மற்றும் சேரிகளை பிழையாக அல்லது முழுமையடையாமல் சித்தரிக்கப்பட்டதை சரி செய்யும் நோக்கில் திரும்ப நிலவரைபடங்களை வரைதலை குறிக்கோளாக கொண்டு செயற்பட்டது.
ரமணி ஹுரியா –Ramani Huria (கிஸ்வாஹிலி மொழியில் “எங்கள் வரைபடம்”) என்று அழைக்கப்படும் திட்டத்தில், ட்ரோன்கள், OpenStreetMap , மற்றும் திறந்தவெளி நிலவரைபடங்களை வரையும் மென்பொருளைப் பயன்படுத்தி, வெள்ளத்தால் மிகவும் பாதிக்கப்பட்ட பகுதிகளை அடையாளம் காணும் வகையில் வரைபடங்கள் உருவாக்கப்பட்டன. காலப்போக்கில், இவ்வரைபடங்கள் அதிக முக்கியத்துவத்தைப் பெற்றதோடு அங்கு வாழும் சமூகங்கள் தொடர்பில் மேலதிக விவரங்களை உள்ளடக்கியதாக மாறியது.
இவ்வாறான திட்டங்களில், ட்ரோன்களை பயன்பாடானது ஒரே தடவையில் முடிக்கக்கூடிய ஒரு வெறும் நிகழ்வாக மட்டும் இருக்காது. பெரும்பாலான ட்ரோன் திட்டங்களில், 80 சதவீதமானது திட்டமிடல் மற்றும் பகுப்பாய்வாக இருக்கையில் மிகுதி 20 வீதம் ட்ரோன் பறக்கும் பகுதியை குறிப்பதாக, Mbuyu உடன் சேர்ந்து பணியாற்றும் மில்லர் கூறினார். இவ்வாறான திட்டங்களை செயற்படுத்த பல மாதங்கள் ஆகும்.
“இதைச் செய்வதற்கு ஒரு குழு தேவை,” என்று மில்லர் கூறினார். “இந்த ஆளில்லா விமானங்களை பறக்க கற்றுக்கொள்வதற்கும், வரைபடங்களுக்கு தேவைப்படும் வடிவங்களில் பறக்க கற்றுக்கொள்வதற்கும், பின்னர் – முக்கியமாக – சமூகத்துடன் இது தொடர்பில் இணைந்து ஊடாட்டம் செய்வதற்கும் நீங்கள் அவர்களுக்கு பயிற்சி அளிக்க வேண்டும். முக்கியமாக சமூகத்தில் வரைபடம் செய்யக்கூடிய நபர்களை அடையாளம் காணவும். உங்களுக்கு சமூகத்தில் அடிமட்டத்திலிருந்து ஆட்கள் தேவை. தனியே ட்ரோன்கள் பாராசூட் போல பறந்து கதையைச் சொல்ல முடியாது. இங்கு கதைதான் முதலில் வருகிறது. ”
இவ்விடயத்தில் ஒத்துழைப்புடன் கூடிய கூட்டாண்மைகள் மிகவும் அர்த்தமுள்ளதாக இருக்கும்: வரைபடங்களை eBee ட்ரோன்கள் மூலம் உருவாக்குவதற்கு 10,000 இலிருந்து 20,000 பவுண்ஸ் (அமெரிக்க டொலர் $ 11,700 – 23,400) வரை செலவாகும்.
சமூக கூட்டாளர்களுடன் இணைந்து நீண்ட கால திட்டங்களை உருவாக்குங்கள்
செய்தி அறைகள் மற்றும் சுதந்திர ஊடகவியலாளர்கள், கதைசொல்லலுக்கு ட்ரோன்களைப் பயன்படுத்தும் சமூக கூட்டாண்மை திட்டங்களை உருவாக்க நிதியுதவிக்கு விண்ணப்பிக்கலாம்.
பிரிட்டனில் சென்ஸ்மேக்கர் திட்டத்தின் கீழ்- Sensemaker project எடுக்கப்பட்ட ஒரு முயற்சியே இதுவாகும். மத்திய லங்காஷயர் பல்கலைக்கழகத்தில் (University of Central Lancashire) உள்ள சிவிக் ட்ரோன் மையம் (Civic Drone Centre), மான்செஸ்டர் ஈவினிங் நியூஸ் (Manchester Evening News) மற்றும் கிரிங்கிள் புரூக் ஆரம்ப பாடசாலை (Cringle Brook Primary School) ஆகியவற்றுக்கு இடையேயான கூட்டு ஒத்துழைப்பான கூகுள் நியூஸ் முன்முயற்சியின் கீழ் (Google News Initiative ) நிதியளிக்கப்பட்ட இந்தத் திட்டம், ட்ரோன்கள் உட்பட ‘சென்ஸ்மேக்கிங்’ இயந்திரங்களை ஊடகவியலுக்காக பயன்படுத்த முயன்றது.
“மாசடைதல் பற்றிய கதைகள், விவரணக்காட்சிகளின் ஊடான கதைகள், நாம் இதுவரை கற்பனை செய்யாத விஷயங்களைப் பற்றிய கதைகளை ட்ரோன்களின் மூலம் அறிக்கையிட முடியும்” என்று மத்திய லங்காஷயர் பல்கலைக்கழகத்தின் (University of Central Lancashire) திட்டத் தலைவர் மற்றும் இணைப் பேராசிரியரான ஜான் மில்ஸ் (John Mills) கூறினார். “இவை ஊடகவியலுக்கு பங்களிக்கின்றன.”
மான்செஸ்டர் ஈவினிங் நியூஸின் (Manchester Evening News) வெளியீட்டாளரான பால் கல்லாகர் (Paul Gallagher) கூறியது என்னவென்றால், “இது ஒரு தனித்துவமான முயற்சியாகும், ஏனெனில் இங்கே கதை சொல்லல் முறையில் ஏற்கனவே உள்ள தரவுத்தொகுப்பிலிருந்து ஒரு கதையைக் கண்டறியும் முயற்சியாக தொடங்கப்படவில்லை. மாறாக, ஊடகவியலாளர்கள் மற்றும் சமூகப் பங்காளிகள் கேள்விகளைக் கேட்டு, தரவுகளைச் சேகரித்து ஒரு கதையைச் சொல்ல உதவுகின்றனர்.”
மான்செஸ்டரில் (Manchester) உள்ள கிரிங்கிள் புரூக் ஆரம்ப பாடசாலையின் (Cringle Brook Primary School) நிர்வாகம் வளி மாசடைதல் குறித்து மிகுந்த கவலை கொண்டுள்ளது என்று உதவித் தலைமை ஆசிரியர் லூயிஸ் டெய்லர் (Louise Taylor) கூறினார். அவர் நைட்ரஜன் டைஆக்சைடைக்(nitrogen dioxide) கண்டறிவதில் கவனம் செலுத்தும் சென்ஸ்மேக்கர் (Sensemaker) குழுவில் சேர்ந்த அதேநேரத்தில் மான்செஸ்டர் ஈவினிங் நியூஸ் (Manchester Evening News) அவர்களின் முயற்சிகளைப் பற்றி அறிக்கையிடல்களை வெளியிட்டது. இப்பொறிமுறையை கண்காணித்த பிறகு, கல்லாகர் (Gallagher) கூறுகையில், காலையிலும், இடை மதியத்திலும் மாசடைதல் அதிகரிப்பதைக் கண்டறிந்ததாக குறிப்பிட்டனர். இது அவர்கள் பள்ளியை விட்டு வீடு செல்லும் மற்றும் அழைத்துச் செல்லும் நேரங்களுடன் ஒத்துப்போகிறது. இந்த முயற்சி தொடர்பில்பாடசாலை நிர்வாகம், பெற்றோருக்கு ஒரு பொதுவான விளக்கத்தை அளித்தது, இது ஒரு நடத்தை மாற்றத்திற்கு வழிவகுத்தது. அது குறைவான கார்கள் மற்றும் குறைந்த மாசடைதல் என்பதாகும்.
பாடசாலையின் அதிபரான ஹெலன் சேஸ் (Helen Chase) கூறுகையில், “இது ஒன்றும் நாங்கள் கூகுளில் இருந்து எடுக்கப்பட்ட ஒரு விடயமல்ல. “இது இப்போது இங்கே நடந்து கொண்டிருக்கும் விடயங்களுடன் தொடர்புடைய ஒரு நேரடி புள்ளிவிவரம். அவர்கள் அதைப் பற்றி வாதிட முடியாது. அதுவே எங்களுக்கான பலத்தை அளிக்கிறது,”
ஒழுங்குமுறைகளில் கவனம் செலுத்துங்கள்
நாடுகளை பொறுத்தவரையில் ட்ரோன் பதிவுசான்றிதழ் தேவைகள் நாடுகளுக்கிடையே மாறுபடுவதுடன் அவை காலப்போக்கில் மாறத்திற்கு உள்ளாகும்.
ட்ரோன் ஒழுங்குமுறை தொடர்பில் ஐரோப்பிய ஒன்றிய ஏவியேஷன் சேஃப்டி ஏஜென்சி (European Union Aviation Safety Agency -EUASA), ஆபத்து அடிப்படையிலான அணுகுமுறையை கைக்கொள்கிறது. ட்ரோன் சாதனங்களின் பயன்பாடு பொழுதுபோக்கு அல்லது வணிக நோக்கங்களின் அடிப்படையில் வேறுபடுத்தப்படவில்லை. மாறாக, ட்ரோன்கள் அவற்றின் நிறை மற்றும் செயல்பாட்டின் அடிப்படையில் ஒழுங்குபடுத்தப்பட்டுள்ளன. இந்த எளிமையான விளக்களிக்கும் ஆவணத்தில் EU ட்ரோன் இயக்குனர்களுக்கான ஒழுங்குமுறை வகைகள் மற்றும் உரிமம் பற்றிய தகவல்கள் உள்ளடக்கப்பட்டுள்ளன.
பிரட்டனில் இனிமேல் ஐரோப்பிய யூனியன் சட்டங்கள் செல்லுபடியாகாது என்ற காரணத்தினால், அனைத்து ட்ரோன் இயக்குனர்களும் நோக்கம் அல்லது அளவைப் பொருட்படுத்தாமல் தங்கள் ட்ரோன்களை பரிசோதனைக்குட்படுத்தி பதிவு செய்ய வேண்டும்.
ஐக்கிய அமெரிக்காவில் ட்ரோன் பதிவு சான்றிதழ் தேவைகள், வணிக மற்றும் பொழுதுபோக்கு ட்ரோன் செயல்பாடுகளுக்கு ஏற்ற வகையில் வேறுபட்டவை. பெடரல் ஏவியேஷன் அத்தாரிட்டியின் சிறிய யுஏஎஸ் விதியின் (பகுதி 107) வணிக பயன்பாட்டிற்காக-Federal Aviation Authority’s Small UAS Rule (Part 107) for commercial use, ட்ரோன் இயக்குனர்கள் பாதுகாப்பு நடைமுறைகள், செயல்பாடுகள் மற்றும் விதிமுறைகள் பற்றிய புரிதலை நிரூபிக்க ரிமோட் பைலட் அனுமதிப்பத்திரத்தை (Remote Pilot Certificate) பெற வேண்டும். அனுமதிப்பத்திரத்தினை பெற பரீட்சை ஒன்றுக்கு தோற்ற வேண்டும் அத்தோடு இரண்டு வருடங்களுக்கு ஒருமுறை அனுமதிப்பத்திரம் புதுப்பிக்கப்பட வேண்டும்.
ட்ரோன் தொடர்பான விதிமுறைகள் மற்றும் அவற்றின் சமச்சீரற்ற தாக்கங்கள் பற்றிய அறிக்கையிடல் கூட பொதுமக்களுக்கு பயனுள்ளதாக அமையும்.
“ட்ரோன் என்பது ஒரு சட்டகம்,” என்று மில்லர் கூறினார். “மேலிருந்து அனைவரையும் பார்க்க கூடியதாக இருப்பதென்பது வரலாற்று ரீதியாக பணக்காரர்களுக்கும் அரசாங்கங்களுக்கும்உரியதாக கருதப்பட்டது. பின்னர், திடீரென்று, சாதாரண ஓர் சாமானியர் கூட தன்னைச் சுற்றியுள்ள நிலத்தை ஆய்வு செய்ய [ட்ரோன்களைப் பயன்படுத்த முடியும்]. [அது] ஜனநாயகப்படுத்தும் தொழில்நுட்பமாக இருக்கலாம், ஆனால் அது ஒரு அதிசயமான தீர்வு அல்ல. இது ஒரு மனநிலை மாற்றமே ஆகும்.”
இந்த கட்டுரை மோனிகா செங்குல்-ஜோன்ஸ் (Monika Sengul-Jones) என்பவரால் எழுதப்பட்டு முதலில்DataJournalism.com தளத்தில் வெளியிடப்பட்டது. இது அனுமதியுடன் இங்கு மறுபிரசுரம் செய்யப்படுகிறது.
மேலதிக வளங்கள்
Drones in Media Bring New Perspectives, Ethical Issues
What Journalists Can Learn from Navalny’s Investigative Team in Russia
மோனிகா செங்குல்-ஜோன்ஸ் PhD (Monika Sengul-Jones), ஒரு சுதந்திர ஆய்வாளர், எழுத்தாளர் மற்றும் டிஜிட்டல் கலாச்சாரங்கள் மற்றும் ஊடகத் தொழிற்துறைகளில் நிபுணர் ஆவார். அவர் 2018-19 இல் OCLC Wikipedian-in-Residence சிறப்பு அதிதியாக தேர்வு செய்யப்பட்டிருந்தார். அவர் விக்கிக்ரெட்(WikiCred) மூலம் நிதியளிக்கப்பட்ட Reading Together: Reliable Sources and Multilingual Communities என்னும் நம்பகமான ஆதாரங்கள் மற்றும் விளிம்புநிலை சமூகங்கள் பற்றிய கலை+பெண்ணியவாதத் திட்டத்தை தலைமை தாங்குபவர்களில்ஒருவராவர்.
This story was originally published by the Global Investigative Journalism Network (GIJN)