புலம்பெயர் தொழிலாளர்களின் கண்ணீர் கதை
- ஒப்பந்தம் செய்து கொள்வது ஒன்று; வேலைக்கு அமர்த்துவது இன்னொன்றில்
- வீட்டுப் பணிப் பெண்களாக தொழில் புரிவதிலேயே பெண்கள் கூடுதல் நாட்டம்
- தொழிற் சந்தைக்கு ஏற்ப இலங்கை தொழிலாளர்களை அனுப்புவதில் பாரிய சவால்
- புலம்பெயர் தொழிலாளருக்கு தொழிற்பயிற்சி மட்டுமல்ல மொழிப் பயிற்சியும் அவசியம்
“சவுதி அரேபியாவுக்கு வேலைக்குச் செல்வதற்காக எனக்கு 12 நாட்கள் பயிற்சி வழங்கப்பட்டது. பயிற்சி முடிந்து இரண்டு நாட்களில் சவுதி அரேபியா செல்வதற்கான விமான டிக்கெட்டுகள் வழங்கப்பட்டன. மூன்று பேரை கொண்ட குடும்பத்தை பராமரித்துக் கொள்வதற்காகவே தொழிலுக்கு அழைக்கப்பட்டேன். அங்கு சென்றதும் வீட்டு உரிமையாளரின் தாயார் வீட்டிலும் பணி செய்வதற்கு நிர்பந்திக்கப்பட்டேன். அங்கு எனக்கு வழங்கப்பட்ட பயிற்சிகளை விடவும் அதிக பணியை செய்ய வேண்டி ஏற்பட்டது.” என சவுதி அரேபியாவுக்கு வீட்டுப் பணிப்பெண்ணாக சென்ற குமாரி என்ற பெண் குடும்பஸ்தர் தன்னுடைய அனுபவங்களை பகிர்ந்து கொண்டார். இலங்கையிலிருந்து மத்திய கிழக்கு நாடுகளுக்கு வீட்டுப் பணிப்பெண்களாக செல்லும் பெரும்பாலான இலங்கை பெண்கள் இவ்வாறான நெருக்கடிகளை எதிர்கொள்வது தொடர்கதையாகவே இருக்கின்றது.
இலங்கைக்கான அந்நிய செலவாணியை ஈட்டித்தரும் முக்கிய துறைகளில் வெளிநாட்டு வேலைவாய்ப்பும் ஒன்றாக இருந்தாலும் இத்துறையை சக்தி மிக்கதாக மாற்றியமைப்பதற்கு சர்வதேச ரீதியில் ஏற்றுக் கொள்ளப்பட்ட தொழில் தேர்ச்சி பெற்ற தொழிலாளர்களை உருவாக்குவது அவசியமாகும். குறிப்பாக மத்திய கிழக்கு நாடுகளுக்கான வீட்டு பராமரிப்பு உதவியாளர்கள் நியமனத்தில் அதிக கவனம் செலுத்த வேண்டியுள்ளது. இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு நிறுவனம் அல்லது அங்கீகரிக்கப்பட்ட முகவரமைப்புகள் ஊடாக பயிற்சிகள் பெற்று வெளிநாடுகளுக்கு செல்வோரும் எவ்வித பயிற்சிகளும் அற்ற நிலையில் முகவரமைப்புகளுக்கு ஊடாக வெளிநாடு செல்வோரும் தொடர்ச்சியாக தொழில் பாதுகாப்பற்ற நிலையினை எதிர்கொள்கின்றனர்.
“வீட்டுப் பணிப்பெண்ணாக சென்ற வீட்டில் பணிச்சுமையால் அங்கிருந்து வெளியேறி சவுதியிலுள்ள இலங்கை தூதரகத்தில் தஞ்சமடைந்து, பின்னர் சவுதி முகாமில் ஒரு வருடங்களுக்கு சிறை வைக்கப்பட்டேன். அங்கு ஒரு அறையில் 10 – 12 இலங்கை பெண்கள் தங்க வைக்கப்பட்டனர். ஒரு வருடத்தின் பின்னரே என்னால் வெளி உலத்துக்கு வர முடிந்தது. ஒருவேளை நான் இலங்கை தூதரகத்தில் தஞ்சமடையாவிட்டால் நான் இன்று உயிருடன் இருப்பதற்கு வாய்ப்பில்லாமல் போயிருக்குமென” சவுதி அரேபியாவுக்கு வீட்டுப் பணிப்பெண்ணாக சென்று துன்புறுத்தலுக்கு உள்ளான மணி என்பவர் தன்னுடைய கண்ணீர் கதையை பகிர்ந்து கொண்டார். (பெயர் மாற்றப்பட்டுள்ளது)
இதனால் வெளிநாட்டு தொழிற் சந்தைக்கு ஏற்றளவில் இலங்கை தொழிலாளர்களை அனுப்புவதில் இன்றளவிலும் நாடு பாரிய சவாலை எதிர்கொண்டுள்ளது. நாட்டில் காணப்படும் கல்வி மற்றும் தொழிற்பயிற்சித் துறைகளின் வாய்ப்புகள், இலங்கையில் உருவாக்கப்படும் தொழிலாளர்கள் உள்நாட்டு மற்றும் சர்வதேச தேவைகளின் தகுதிகளை பூர்த்தி செய்யப்படுகின்றதா?, பல்வேறு தொழிற்கல்வி மற்றும் பயிற்சி நிறுவனங்களினூடாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள பாடநெறிகள் மற்றும் பின்பற்றப்படுகின்ற பயிற்சி முறைகள் அத்தேவைகளை நிறைவேற்றிக் கொள்வதற்கு போதுமானதா? போன்ற பல்வேறு கேள்விகளை எழுப்புகின்றது.
இலங்கையில் வெளிநாட்டு வேலைவாய்ப்புத்துறை
இலங்கையிலிருந்து வருடாந்தம் 2 இலட்சத்துக்கும் அதிகமானோர் வெளிநாட்டு வேலைவாய்ப்பை பெற்றுச் சென்றுள்ளதாக வெளிநாட்டு வேலை வாய்ப்பு பணியகத்தின் புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. 1986 ஆம் ஆண்டு 14,456 பேர் பதிவு செய்யப்பட்ட புலம்பெயர் தொழிலாளர்களாக இருந்த நிலையில் 2022 ஆம் ஆண்டு இத்தொகை 311,056 ஆக அதிகரித்துள்ளது. இவர்களில் 124,091 பேர் பெண்களாவர். 2000 ஆம் ஆண்டு முதல் 150,000 ஆக அதிகரித்து 2008 ஆம் ஆண்டளவில் 250,000 என்ற இலக்கு எட்டப்பட்டதை புள்ளிவிபரத் தகவல்கள் தெளிவாக எடுத்துக்காட்டுகின்றன.
இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் மற்றும் பதிவு செய்யப்பட்ட முகவரமைப்புக்களின் ஊடாக குறித்த எண்ணிக்கையிலான இலங்கையர்கள் வெளிநாட்டு வேலைவாய்ப்பை பெற்றுக்கொள்கின்றனர். இவற்றில் அதிகமாக கட்டார், குவைத், சவுதி அரேபியா, ஓமான், ஐக்கிய அரபு இராச்சியம் உள்ளிட்ட மத்திய கிழக்கு நாடுகளுக்கே அதிகமானோர் தொழில் வாய்ப்பு பெற்றுச் சென்றுள்ளனர்.
இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் பயிற்சி மற்றும் ஊடக பிரதிப் பொது முகாமையாளர் செனரத் யாப்பா
“இலங்கையிலிருந்து வெளிநாட்டு வேலைவாய்ப்பை பெற்றுச் செல்வோரில் 23 வீதமானோர் வீட்டுப் பணிப்பெண்களாக இருக்கும் நிலையில் சமீப காலங்களாக வீட்டுப் பணிப்பெண்களாக செல்லும் இலங்கை பெண்களின் எண்ணிக்கையிலும் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது. 2021 ஆம் ஆண்டு 35 வீதமான பெண்களும் 2022 இல் 40 வீதமான பெண்களும் 2023 ஆம் ஆண்டு ஜூலை வரையான காலப்பகுதியில் 43 வீதமான பெண்களும் இவ்வாறு வீட்டுப் பணிப்பெண்களாக சென்றுள்ளதாக” இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் பயிற்சி மற்றும் ஊடக பிரதிப் பொது முகாமையாளர் செனரத் யாப்பா தெரிவித்தார்.
“2022 ஆம் ஆண்டு நாட்டின் 25 மாவட்டங்களைச் சேர்ந்த 74,007 பெண்கள் 27 நாடுகளுக்கு வீட்டுப்பணிப்பெண் தொழிலுக்குச் சென்றுள்ளதுடன் அதிகமாக குருநாகல், கொழும்பு, கம்பஹா, களுத்துறை ஆகிய மாவட்டங்களிலிருந்து 23,717 பெண்கள் சென்றுள்ளதாக பிரதிப் பொது முகாமையாளர் செனரத் யாப்பா மேலும் தெரிவித்தார்.
பெண்களின் தொழில் தகைமை
வெளிநாட்டு வேலைவாய்ப்பினை பெற்றுக்கொள்ளும் பெண்களில் அரை திறமை மற்றும் வீட்டுப் பணிப்பெண்களுக்கான துறையினையே அதிகமானோர் தெரிவு செய்துள்ளனர். 2018 – 2022 ஆம் ஆண்டு காலப்பகுதியில் 244,841 பேர் வீட்டுப் பணிப்பெண்களாக (அரை திறமை) வெளிநாடுகளுக்கு சென்றுள்ளனர். குறைந்த திறமையுடன் 66,576 பேரும் அதிக திறமையுடன் 21,223 பேரும் நிபுணத்துவ அளவில் 3867 பேரும் நடுத்தர நிலையுடன் 3943 பேரும் வெளிநாட்டு வேலைவாய்ப்பை பெற்றுக்கொண்டுள்ளதாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.
“வீட்டுப்பணிப்பெண் தொழிலுக்காக 12 நாட்கள் பயிற்சியுடன் சவுதி அரேபியாவின் பாதுகாப்பு படையில் கடமையாற்றும் உயரதிகாரியின் வீட்டில் பணிக்கு அமர்த்தப்பட்டேன். எனினும் அங்கு மனநலம் பாதிக்கப்பட்ட வயோதிப் பெண்ணொருவரை பராமரிப்பதற்கு நிர்பந்திக்கப்பட்டேன். இதனால் இரண்டு மாடிகளை கொண்ட வீட்டையும் பராமரித்து மனநலம் பாதிக்கப்பட்ட வயோதிபப் பெண்ணையும் பராமரிக்கும் பணிச்சுமைக்கு உள்ளானேன்” என வீட்டுப்பணிக்கு அழைக்கப்பட்டு அனுபவமற்ற தொழிலுக்கு அமர்த்தப்பட்ட மணி மேலும் தெரிவித்தார்.
இதேவேளை, வீசா இன்றி சட்டவிரோதமாக குவைத்தில் தங்கியிருந்த 62 இலங்கை வீட்டுப் பணியாளர்களை அந்நாட்டில் உள்ள இலங்கை தூதரகம் தற்காலிக கடவுச்சீட்டுகளை தயாரித்து 28.07.2023 ஆம் திகதி இலங்கைக்கு நாடு கடத்தியது. அவர்களில் 59 பேர் வீட்டுப் பணிப்பெண்கள் என்பது வேலை வாய்ப்பு பணியகத்தின் உத்தியோகபூர்வ தகவலாக இருக்கிறது. இவர்கள் ஒப்பந்தம் செய்யப்பட்ட வீடுகளிலிருந்து சட்டவிரோதமாக வெளியேறியுள்ளதுடன் குவைத்திலுள்ள தற்காலிக விடுதிகளில் தங்கி மாதாந்தம் 250 குவைத் தினார் ஊதியத்தில் பல்வேறு இடங்களில் பணிபுரிந்துள்ளதாக குடிவரவு மற்றும் குடியகல்வு தகவல்கள் தெரிவிக்கின்றன.
“குறைந்த கல்வித்தகைமை மற்றும் குறைந்த பயிற்சிகளுடன் விரைவில் தொழிலுக்கு செல்லும் வாய்ப்பு, மொழியறிவு மற்றும் தொழில்நுட்ப அறிவு என்பன தேவையற்றதாக காணப்படுவதால் அதிக பெண்கள் வீட்டுப்பணிப்பெண் தொழில் துறையை அதிகம் நாடிச் செல்வதாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் பயிற்சி மற்றும் ஊடக பிரதிப் பொது முகாமையாளர் செனரத் யாப்பா தெரிவித்துள்ளார்.” அத்துடன் மத்திய கிழக்கு நாடுகளுக்குச் செல்லும் பெண்களுக்கு முற்பணமாக முகவரமைப்புகளினால் 200,000 ரூபா வழங்கப்படுவதும் அவர்கள் இத்துறையை அதிகம் விரும்புவதற்கு ஊக்குவிக்கின்றது.
மத்திய கிழக்கு நாடுகளுக்கு வீட்டு பராமரிப்பு உதவியாளர் தொழிலுக்கு செல்பவர்கள் சவுதி அரேபியாவுக்கு 25 – 55 வயதுக்குட்பட்டவர்களாகவும் ஏனைய மத்திய கிழக்கு நாடுகளுக்கு 23 – 55 வயதுக்குட்பட்டவர்களாகவும் ஏனைய நாடுகளுக்கு 21 – 55 வயதுக்குட்பட்டவர்களாகவும் இருக்க வேண்டும் என அரசாங்கம் நிர்ணயம் செய்துள்ளது.
வெளிநாட்டு தொழிலுக்கு புலம்பெயர்வதற்கு முன்னர் பராமரிப்பு தொடர்பான பயிற்சிகள், மத்திய கிழக்கு நாடுகளுக்கு செல்லும் வீட்டுப்பெண்களுக்கான பயிற்சிகள், முதற்தடவையாக பணிக்கு செல்லும் அனைவருக்குமான விழிப்புணர்வு நிகழ்வுகள் மற்றும் மத்திய கிழக்கு நாடுகளுக்கான எழுத்தறிவு பயிற்சி போன்றனவும் இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தினால் வழங்கப்படுகின்றது.
பணியிடங்களில் பெண்கள் எதிர்கொள்ளும் சவால்கள்
“நான் அங்கு சென்று இரண்டு மணித்தியாலம் ஓய்வு வழங்கப்பட்ட பின்னர் எனக்கான பணி ஆரம்பமானது. அங்கு என்னக்கான பணிகள் தொடர்பில் விளக்கமளிக்கப்பட்டது. மூன்று பேர் கொண்ட குடும்பத்தில் பணியாற்ற அழைக்கப்பட்டு, வீட்டு உரிமையாளரின் தாயாரின் மூன்று மாடி கட்டிடத்திலும் பணிக்கு அமர்த்தப்பட்டேன். அங்கு 10 அறைகள், 10 மலசலக்கூடங்கள், சமையலறை என்பவற்றை சுத்தம் செய்வதுடன் சமையலும் செய்ய வேண்டும். அதிகாலை 4 மணிக்கு உறங்க சென்றாலும் காலை 7.30 மணிக்கு மீண்டும் பணிகளை ஆரம்பிக்க வேண்டும். 3 மாதங்களின் பின்னர் அங்கு எனக்கு பணியாற்ற முடியவில்லை. இலங்கைக்கு செல்வதாக அறிவித்த பின்னர் உடல் ரீதியான சித்திரவதைகளுக்கு முகங்கொடுத்தேன். அதன் பின்னர் என்னை தூதரகத்தில் ஒப்படைத்தனர். அங்கு என்னை போலவே பல பெண்கள் சித்திரவதைக்கு முகங்கொடுத்து தஞ்சமடைந்திருந்தனர்” என சவுதி அரேபியாவில் வீட்டுப் பணிப்பெண்ணாக பணியாற்றிய அனுபவத்தை பகிர்ந்தார் குமாரி.
இரண்டு வருடங்களுக்கு பணி ஒப்பந்தம் செய்யப்பட்டாலும் அவர் மூன்று வருடங்கள் பணிபுரிய வேண்டியிருந்தது. மத்திய கிழக்கு நாடுகளுக்கு பணிப்பெண்களாக செல்லும் பல பெண்கள் இவ்வாறு சித்திரவதைகளுக்கு முகங்கொடுத்து நாடு திரும்பியதை பல செய்திகள் எமக்கு வெளிப்படுத்தியிருக்கின்றன. இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் தகவல்களின்படி, 2022 ஆம் ஆண்டு புலம்பெயர் தொழிலாளர்களிடம் இருந்து 4500 முறைப்பாடுகள் இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்துக்கு கிடைக்கப்பெற்றுள்ளது. இவற்றில் 3669 முறைப்பாடுகள் பெண்களிடமிருந்தே பெறப்பட்டுள்ளன. இதில் 2793 முறைப்பாடுகள் வீட்டுப் பணிப்பெண்களுடன் தொடர்புடையவையாகும்.
“எவ்வித அனுபவமும் மொழியறிவும் இல்லாத நிலையில், 12 நாட்கள் பயிற்சியுடன் பணிக்கு அமர்த்தப்பட்டதால் என்னால் அங்கு பணியாற்ற முடியாத நிலை ஏற்பட்டது. மனநலம் பாதிக்கப்பட்ட பெண் மிகவும் கோபம் கொண்டவராக இருந்தார். சிலவேளை அவரின் தாக்குதலுக்கும் இலக்கானேன். இதனால் நான் அங்கிருந்து வெளியேறி சவுதியிலுள்ள இலங்கை தூதரகத்தில் தஞ்சமடைந்தேன். அங்கு விசாரணைகளின் பின்னர் சுமார் ஒரு வருடங்களாக சவுதி முகாமொன்றில் அடைக்கப்பட்டு நாட்டுக்கு திருப்பியனுப்பப்பட்டேன்” என மணி மேலும் தன்னுடைய அனுபவங்களை பகிர்ந்தார்.
வெளிநாட்டு வேலைவாய்ப்பு என்ற போர்வையில் பல பெண்கள் ஓமானுக்கு கடத்தப்பட்ட சம்பவங்களும் நாட்டில் பதிவாகியுள்ளன. இதில் பாதிக்கப்பட்ட நாடு திரும்பிய பெண்ணொருவர் கருத்து தெரிவிக்கையில், “கடந்த வருடம் அக்டோபர் மாதம் துபாய் ஊடாக ஓமானுக்கு தொழிலுக்காக சென்றேன். அங்கு நான் கடுமையான பிரச்சினைகளை எதிர் கொண்டேன். எனக்கான சம்பளம் வழங்கப்படவில்லை. இது தொடர்பில் தூதர அதிகாரிகளுக்கு முறையிட்ட போதும் அவர்கள் பாலியல் இலஞ்சம் கோரியதாக” தெரிவித்துள்ளார்.
2021 ஆம் ஆண்டு பல்வேறு துன்புறுத்தல்களை எதிர்கொண்ட 70 பெண்கள் நாட்டுக்கு திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர். இவர்களில் 66 பேர் வீட்டுப் பணிப்பெண் உதவியாளர்கள் என குடிவரவு குடியகல்வு திணைக்களம் கூறுகிறது.
தொழிற்பயிற்சியின் அவசியம்
மத்திய கிழக்கு நாடுகளுக்கு தொழிலுக்கு செல்பவர்களின் தொழிற்பயிற்சி தொடர்பில் அதிகம் கவனம் செலுத்த வேண்டியுள்ளது. தொழிற்பயிற்சியுடன் வேறு நாடுகளுக்கு செல்லும் தொழிலாளர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை விடவும் அதிகமான பிரச்சினைகளை மத்திய கிழக்கு நாடுகளுக்கு பணிப்பெண்களாக செல்லும் நபர்கள் எதிர்கொள்கின்றனர். அத்துடன் தொழில் பயிற்சி மற்றும் அதிக ஊதியத்துடனான வேலைவாய்ப்பு இலங்கைக்கு கிடைக்கின்ற போதும் அதற்கேற்றவாறு பயிற்சிபெற்ற தொழிலாளர்களை அனுப்புவதில் இலங்கை அரசாங்கம் நெருக்கடியினை எதிர்கொண்டுள்ளது. இதனால் பல வாய்ப்புகளை அரசாங்கம் இழக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. வெளிநாடுகளில் 1162 வகையான தொழில் வாய்ப்புகளுக்கு இலங்கையர்கள் செல்வதற்கான வாய்ப்பு காணப்படுகின்றது.
இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் தகவல்களின்படி, 2018 – 2022 ஆம் ஆண்டு காலப்பகுதியில், நிபுணத்துவ மட்டத்தில் 19,523 வேலைவாய்ப்புகள் கிடைக்கப்பெற்ற போதும் 1460 பேர் மாத்திரமே தொழிலுக்காக அனுப்பப்பட்டுள்ளனர். பயிற்சி பெற்ற தொழிலாளர்களுக்கான 818,608 வேலைவாய்ப்புகள் கிடைக்கப்பெற்ற போதும் 63,430 பேர் மாத்திரமே பணிக்காக அமர்த்தப்பட்டுள்ளனர்.
இதன் மூலம், இலங்கைக்கு போதியளவு தகைமையுடைய வெளிநாட்டு தொழிலுக்கான வாய்ப்புகள் கிடைக்கப்பெறும் நிலையிலும் இலங்கையரில் தொழில் தகைமையினை பூர்த்தி செய்தோரின் எண்ணிக்கை குறைவாக இருப்பதும் குறித்த தேவையினை பூர்த்தி செய்வதில் சிக்கலை ஏற்படுத்துகின்றது. இதனால் குறைந்த தகைமையினை எதிர்பார்க்கும் வீட்டு பராமரிப்பு உதவியாளர் பணிகளை அதிகமான பெண்கள் தெரிவு செய்கின்றனர்.
அமைச்சர் மனுஷ நாணயக்கார
“வெளிநாட்டு வேலை வாய்ப்புக்காக 41 நாடுகளில் இருந்து அனுமதிகள் கிடைத்துள்ளன. இந்த நாடுகளில் இருந்து 12 லட்சத்து 73 ஆயிரத்து 428 பேருக்கான அனுமதி கிடைத்துள்ளன. அந்த வகையில் 3 இலட்சம் பேரை இந்த வருடத்தில் வெளிநாட்டு வேலை வாய்ப்புக்காக அனுப்புவதற்கான இலக்கையே நாம் கொண்டுள்ளோம்” என பாராளுமன்றத்தில் உரையாற்றிய தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்தார்.
“அனைத்து நாடுகளுக்கும் வேலை வாய்ப்புக்காக செல்லும் போது அந்தந்த நாடுகளில் புழக்கத்தில் உள்ள மொழிகளை தெரிந்திருப்பது சிறந்ததாகும். ஜப்பானுக்கு செல்வோருக்கு ஜப்பான் மொழியும் கொரியாவுக்கு செல்வோருக்கு கொரிய மொழியும் தெரிந்திருப்பது அவசியமாகும். மத்திய கிழக்கு மற்றும் அரபு நாடுகளில் அரபு மொழி தெரிந்திருத்தல் அல்லது பொதுவாக ஆங்கில மொழி தெரிந்திருத்தல் அவசியமாகும்” என்றும் அமைச்சர் சுட்டிக்காட்டினார் .
ஆனால்,வீட்டு பராமரிப்பு உதவியாளர் பணிகளுக்கு செல்லும் பெண்களுக்கு இவ்வாறான தகுதிகள் தொடர்பில் கவனத்தில் கொள்ளப்படாமை பாரிய பிரச்சினையாக இருக்கின்றது. ஆங்கிலம் மற்றும் ஏனைய மொழிகள் தொடர்பில் இலங்கையர் பெரும்பாலானோர் பயிற்சியற்றவர்களாக இருப்பதற்கு இலங்கையின் கல்வித்திட்டமும் முக்கிய காரணமாகும். அத்துடன் வெளிநாட்டு மொழிகளை பயிற்றுவிப்பதற்கு தேவையான பயிற்றுவிப்பாளர்களின் பற்றாக்குறையும் தொழில் பயிற்சியில் சரிவு நிலையை ஏற்படுத்தியுள்ளது.
அரசாங்கத்தின் நடவடிக்கை
மத்தியகிழக்கு நாடுகள் உள்ளிட்ட வெளிநாட்டு வேலைவாய்ப்பினை பெற்றுக்கொள்ளும் நபர்களுக்கான தொழிற்பயிற்சிகளை வழங்குவதற்கு அரசாங்கம் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டுள்ளது. தொழிற்பயிற்சி அதிகார சபையுடன் இணைந்து சர்வதேச அங்கீகாரம் பெற்ற தொழிற்பயிற்சிகளை வழங்குவதற்கான ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்பட்டுள்ளன. எனினும் பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் அதிக கட்டணங்களை செலுத்தி பயிற்சிகளை பெற்றுக்கொள்வது சவாலான விடயமாக மாறியிருக்கின்றது. அதனால் பயிற்சிகளை பெற்றுக்கொள்ள அரசாங்கம் வழங்கியுள்ள சலுகைகள் தொடர்பிலும் விழிப்புணர்வு ஏற்படுத்துவது அவசியமாகும்.
“ஜப்பானின் ஐ.ஆர்.ஓ மற்றும் இலங்கையின் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் ஆகியவற்றுக்கு இடையே இலங்கை இளைஞர்களை ஜப்பானில் உள்ளக தொழில்நுட்ப பயிற்சியாளர்களாக பணிபுரிய வழிநடத்தும் புரிந்துணர்வு ஒப்பந்தம் 2021 டிசம்பரில், கைச்சாத்திடப்பட்டுள்ளது. ஜப்பானில் தொழில்நுட்ப உள்ளக பயிற்சியாளர்களாக, இலங்கை இளைஞர் – யுவதிகளை கூடுதலாக இணைத்துக் கொள்வதற்கு நடவடிக்கை மேற்கொள்ளுமாறு தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார ஜப்பானின் ஐ.ஆர்.ஓ.நிறுவனத்திடம் கோரிக்கை விடுத்துள்ளார்.” இதன்மூலம் பயிற்சி பெற்ற தொழிலாளர்கள் வெளிநாடு செல்லும் வாய்ப்பு உருவாக்கப்பட்டுள்ளது.
“மத்திய கிழக்கு மற்றும் ஏனைய நாடுகளுக்கு வீட்டுப் உதவிப் பணிப் பெண்களுக்காக முதல் தடவையாக பணிக்குச் செல்லும் பெண்களுக்கு 28 நாட்கள் கட்டாய தங்குமிட (NVQ 3 மட்ட) பயிற்சிநெறி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியக பன்னிப்பிட்டிய, தங்காலை, தம்புள்ள, கண்டி, இரத்தினபுரி, பதுளை, மத்துகம மற்றும் குருநாகல் போன்ற இடங்களில் பயிற்சி நெறியைத் தொடரலாம். அத்துடன் வீட்டுப் பராமரிப்பாளர் (Caregiver) பணிக்கான (NVQ 3 மட்ட) 45 நாட்கள் தங்குமிட பயிற்சி நெறியை தொடர்வதற்கான வாய்ப்பும் வழங்கப்பட்டுள்ளதாகவும் இதற்கு 22,042 ரூபா கட்டணமாக அறவிடப்படுவதாகவும் இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.” எனினும் இவை கட்டணம் செலுத்தி பெற்றுக் கொள்ள வேண்டிய பயிற்சியாக காணப்படுவதால் அவற்றை பெரும்பாலும் அக்கறையுடன் பின்பற்றுவதில்லை.
இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தின் விசேட புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகள் ஜூலை 8 ஆம் திகதி மேற்கொண்ட சுற்றிவளைப்பின்போது குருநாகல் பகுதியில் அமைந்தள்ள போலி வெளிநாட்டு வேலைவாய்ப்பு நிறுவனமொன்றை அடையாளம் கண்டுள்ளனர். குறித்த முகவரமைப்பு மூலம் குவைத், துபாய், மாலைதீவு, ருமேனியா, கத்தார், செர்பியா, ரஷ்யா போன்ற நாடுகளுக்கு வேலைக்கு அனுப்புவதாக விண்ணப்பங்கள் ஏற்கப்பட்டிருந்தமையும் கண்டுபிடிக்கப்பட்டிருந்தது.
சட்டவிரோத முகவர்களின் நடமாட்டம், சுற்றுலா விசாவில் சென்று தொழில் வாய்ப்புகளை பெற்றுக்கொள்ள முயற்சித்தல் மற்றும் சுயமாக செல்லுதல் என்பன எதிர்கால தொழில் பாதுகாப்பினை அபாயத்துக்கு உள்ளாக்குகின்றது. பெண்களின் ஏழ்மை நிலை, குடும்பச்சூழல் என்பவற்றை பயன்படுத்திக்கொள்ளும் சட்டவிரோத முகவர்கள் மற்றும் முகவரமைப்புகள் அரச ஒழுங்குவிதிகள், சட்ட நடைமுறைகளை மீறி பாதுகாப்பற்ற தொழில்துறைக்கு அமர்த்துவதும் பெண்கள் பணியிடங்களில் அதிக ஆபத்துக்களை எதிர்நோக்குவதற்கு காரணமாக அமைகின்றது.
மேற்கூறிய விடயங்களின் மூலம் மத்திய கிழக்கு நாடுகளுக்கான தொழில்வாய்ப்பில் பெண்கள் அதிகம் கவனம் செலுத்துவதை அவதானிக்க முடிகின்றது. குறிப்பாக வீட்டு பராமரிப்பு உதவியாளர்கள் என்ற குறைந்த தொழில் தகைமை மற்றும் பயிற்சிகளுடன் கூடிய தொழில்களை விரும்பி தேர்வு செய்வதை அவதானிக்க முடிகின்றது. இதனால் பெண்களுக்கான தொழில் பயிற்சிகளை அதிகரித்து அவர்களை துறைசார் பணிகளில் ஈடுபடுத்துவதற்கான வாய்ப்புகளை பயன்படுத்துவதற்கு முயற்சிக்க வேண்டிய தேவை எழுந்துள்ளது. இலங்கை கல்வி முறையினை எதிர்கால தொழில்களுக்கு ஏற்றவகையில் மாற்றியமைப்பதற்கான தொடர் கோரிக்கைகள் முன்வைக்கப்பட்ட போதும் அவற்றை நடைமுறைப்படுத்துவதற்கான திட்டங்கள் அங்கீகரிக்கப்படவில்லை. தற்போது இலங்கையிலுள்ள தொழிற்பயிற்சி நிலையங்களில் பயிற்சிகளை நிறைவு செய்பவர்களும் அத்துறையில் வேலை வாய்ப்பை பெற்றுக் கொள்வதும் குறைந்த வீதத்திலேயே உள்ளது.
தற்போது மத்திய கிழக்கு நாடுகளுக்கு வீட்டுப் பணிப்பெண்களாக செல்லும் பெண்கள் மாதாந்தம் 100,000 ரூபா வருமானம் பெறும் நிலையில் பயிற்சி பெற்ற பராமரிப்பாளர்களாக மேற்கு ஆசியா மற்றும் ஐரோப்பிய நாடுகளுக்கு செல்பவர்கள் மாதாந்தம் 500,000 ரூபா வரை பெற்றுக் கொள்ளும் வாய்ப்பு காணப்படுகின்றது. இதனால் பயிற்சி பெற்ற தொழிலாளர்கள் மூலம் பாதுகாப்பான தொழில் மற்றும் அதிக அந்நிய செலாவணியை பெற்றுக்கொள்வதற்கான வாய்ப்புகள் உருவாகும்.
பயிற்றப்பட்ட தொழிலாளர்களுக்கு சந்தையில் காணப்படும் கேள்வி மற்றும் நிரம்பல் ஆகியவற்றுக்கிடையில் காணப்படும் வித்தியாசங்களின் மூலம் பயிற்றப்பட்ட தொழிலாளர்களின் அவசியத்தை அறிந்து கொள்ள முடியும். பயிற்றப்பட்ட தொழிலாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்படும் பட்சத்தில் நாட்டின் முன்னேற்றத்துக்காக வீட்டுப் பணிப்பெண் என்ற கருத்தாக்கத்தை மாற்றியமைப்பதற்கான வாய்ப்பு ஏற்படும்.
க. பிரசன்னா
இந்தக் கட்டுரை முதலில் ஆகஸ்ட் 20, 2023 அன்று தினக்குரல் வார இதழில் வெளியிடப்பட்டது.