மத்திய கிழக்கு நாடுகளான கட்டாரிலும், டுபாயிலும் கடந்த 22 வருடங்களாக பணியாற்றி சிறுகச் சிறுகச் சேமித்த பணத்தில் 22 மில்லியன் ரூபாவை முதலீடு செய்து தனது இலட்சியக்கனவான ஆணித் தொழிற்சாலையை சுழிபுரம் மத்தியில் கடந்த மே மாதம் 7ஆம் திகதி ஆரம்பித்துள்ளார், 43 வயதான சண்முகரத்தினம் தயாபரன்.
இவர் கடந்து வந்த பாதையானது, இந்த ஆண்டின் ஆகஸ்ட் 31ஆம் திகதி வரையிலான காலத்தில் நாடாளவிய ரீதியில் இருந்து வெளிநாடுகளுக்கு வேலைவாய்ப்புக்களைப் பெற்றுச்சென்றுள்ள 1,79,759பேருக்கும் முன்னுதாரணமாகிறது.
விசேடமாக, யாழ். மாவட்டத்திலிருந்து கடந்த ஆண்டு 4,649 பேர் தொழில் வாய்ப்புக்காகச் சென்றிருக்கும் நிலையில் இந்த ஆண்டில் இதுவரையில் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் ஊடாக 2,916பேரும், அங்கீகரிக்கப்பட்ட முகவர் நிலையங்கள் ஊடாகச் 1,104 பேரும் சென்றுள்ளமையால் இவர்கள் அனைவரும் தமது எதிர்காலத்தை வடிவமைத்துக்கொள்வதற்கான நம்பிக்கையை ஏற்படுத்துவதாகவும் உள்ளது.
ஒரு தொழில் முயற்சியாளராக சண்முகரத்தினம் தயாபரனின் கனவு தற்போது நனவாகியிருந்தாலும், அதற்காக அவர் கடந்து வந்த பாதை மிகவும் கடினமானது. அதேநேரம், எதிர்காலத்தில் பயணிக்கவுள்ள பாதையும் சவால்கள் நிறைந்தவை என்பதையும் அவர் உணர்ந்திருக்கிறார்.
“அறுவர் கொண்ட எமது குடும்பத்தில் நான் தலைப்பிள்ளை. சுழிபுரம் விக்டோரியா கல்லூரியில் எனது பாடசாலைக் கல்வியைப் பூர்த்தி செய்தபோதும் பல்கலைக்கழகம் செல்வதற்கு முடிந்திருக்கவில்லை. அந்தச் சமயத்தில் தொழில்நுட்பக் கல்லூரியில் இலத்திரனியல் சார்ந்த கற்கையை ஆரம்பித்தேன். அதுமட்டுமன்றி, எனது சகோதரனுடன் இணைந்து வீடுகளில் மின்சார வலையமைப்புக்களை செய்யும் பணியையும் ஒருங்கே முன்னெடுத்து வந்தேன்” என்று தனது குடும்ப பின்னணியை குறிப்பிடுகிறார் அவர்.
அவருடைய பாடசாலைக் காலத்துக்குப் பின்னரான நாட்கள் மேற்கண்ட பணிகளுடன் நகர்ந்துகொண்டு இருக்கையில் யாழ்ப்பாணம் கலட்டிச்சந்தியில் நடைபெற்ற சம்பவமொன்று அவருடையை வாழ்க்கையில் திருப்புமுனையாக அமைந்தது.
“அன்றொரு நாள் கலட்டிச்சந்தியில் பேருந்தொன்று தீக்கிரையாக்கப்பட்டது. எனது நண்பர்கள் வட்டத்தில் ஒருவர் மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டது. இதனால் எமது பகுதியெங்கும் பதற்றமான நிலைமை காணப்பட்டது. எனது பெற்றோர் வெகுவாக அச்சமடைந்து உயிரை பாதுகாப்பதற்காக 2003ஆம் ஆண்டு பெரும் சிரமத்துக்கு மத்தியில் கொழும்புக்கு அனுப்பி வைத்தனர்” என்று தெரிவிக்கின்றார்.
கொழும்புக்குச் சென்ற சண்முகரத்தினம் தயாபரனுக்கு ஏலவே இலத்திரனியல் துறையில் ஓரளவு அனுபவம் உள்ளமையால் கட்டார் நாட்டில் அத்துறை சார்ந்த வேலைவாய்ப்பொன்று இருப்பதை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் ஊடாக அறிந்துகொண்டவர் அதற்கான பரீட்சைக்கு முகங்கொடுத்து தகைமையடைந்து 2003ஆம் ஆண்டு செப்டெம்பர் 7ஆம் திகதி கட்டாரில் காலடி எடுத்து வைத்தார்.
“கட்டாருக்குச் சென்றதும் குறித்த நிறுவனத்தில் வெறுமனே ‘நிறுவன பணியாளர்’ பதவிக்கே அமர்த்தப்பட்டேன். அந்த நிறுவனம் கட்டுமான துறை சார்ந்த பல்வேறு உற்பத்திகளை கொண்டது. பணிகள் கடினமானதாக இருந்தாலும், எனது மேற்பார்வையாளரின் துணையுடன் ஒவ்வொரு பணிகளையும் படிப்படியாக கற்றுக்கொண்டேன். இது நாளடைவில் எனது பதவி நிலை உயர்வதற்கு வழிவகுத்தது” என்று கட்டாரில் தனது பணி அனுபவத்தை பகிர்ந்துகொண்டார் அவர்.
அதேநேரம், அவரது அனுபவக்கல்வியும், வளர்ச்சியும் இலகுவாக நடைபெற்றிருக்கவில்லை. மொழி ரீதியாக காணப்பட்ட பின்னடைவு, நவீன உபகரணங்களை பயன்படுத்துவதில் போதிய அனுபவமின்மை என்பன அவருக்கு கடினமான சவால்களாக இருந்ததாக குறிப்பிடுகிறார்.
மேற்படி சவாலான நிலைமையானது, சண்முகரத்தினம் தயாபரனுக்கு மட்டுமானது அல்ல, இந்த ஆண்டின் ஆரம்பித்திலிருந்து தற்போது வரையில் வெளிநாடுகளில் பணிக்காக குறைந்த திறன்களுடன் புலம்பெயர்ந்துள்ள 61,399 பேருக்கும் பொருத்தமானது. எனினும் பணியாளர் ஒருவர் தன்னை வளர்த்துக்கொள்வதற்கு தன்னம்பிக்கையும் அர்ப்பணிப்பும் முக்கியமான விடயங்களாக உள்ளன என்று சுட்டிக்காட்டுகிறார் தயாபரன்.
இந்நிலையில், “சொற்ப காலத்தில் மலையாளம், ஹிந்தி, ஆங்கிலம், அரபு ஆகிய மொழிகளை புரிந்துகொள்வதற்கும், அம்மொழிகளிலேயே பதிலளிக்கக்கூடிய வகையில் என்னை வளர்க்க முடிந்தது. இதனால் அந்நிறுவனத்தில் மேற்பார்வையாளர் பதவியை பெற்றுக்கொண்ட நான், பின்னர் டுபாயில் கொரிய நிறுவனமொன்றில் அதனையொத்த பணிக்காக சிபாரிசு செய்யப்பட்டு அங்கும் பணியாற்ற ஆரம்பித்தேன்.
அக்காலப்பகுதியில் தான் தற்போது நான் ஆரம்பித்திருக்கும் தொழிற்சாலைக்கான சிந்தனை தோற்றம் பெற்றது” என்று குறிப்பிட்டார்.
அத்தோடு, “கொரிய நிறுவனங்களைப் பொறுத்தவரையில் அவை எந்த நாட்டில் முதலீடுகளைச் செய்தாலும் தமது உற்பத்திகளையே பயன்படுத்துவதை வழக்கமாகக் கொண்டிருக்கின்றன என்பதை நான் உணர்ந்துகொண்டேன். அங்கு நிர்மாணங்களைச் செய்வதற்கான ஆணிகளைக் கூட அந்த நிறுவனம் தனது நாட்டில் உற்பத்தி செய்தே கொண்டு வந்திருந்தது. அப்போது தான் எனது சொந்த மண்ணில் ஒரு தொழிற்சாலையை உருவாக்க வேண்டும் என்ற சிந்தனை எனக்குத் தோன்றியது” என்கிறார் அவர்.
முதலில் தான் பெறும் வருமானத்தை தந்தையாருக்கு அனுப்பி அதனைச் சிறுகச்சிறுகச் சேமித்ததாகக் கூறும் அவர், 2020ஆம் ஆண்டில் டுபாயில் இருந்தவாறே தனது நண்பர்களின் உதவியுடன் இந்தியாவில் ஆணிகளை உற்பத்தி செய்யும் தொழிற்சாலைக்கான இயந்திரங்களை கொள்வனவு செய்யும் நடவடிக்கைகளை ஆரம்பித்தார்.
அதன் பிரகாரம், கொள்வனவு செய்யப்பட்ட இயந்திரத் தொகுதிகள் 2022ஆம் ஆண்டு கொழும்பு துறைமுகத்தினை வந்தடைந்தன. இருப்பினும் அக்காலத்தில் கொரோனா தொற்று நோய்ப்பரவல் காரணமாக துறைமுகச் செயற்பாடுகளும் முடங்கியமையால் இயந்திரங்களை வெளிக்கொணரும் செயற்பாடுகள் மிகக் கடினமாக இருந்ததோடு, நிதியிழப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
“எனக்கு இறக்குமதி செய்யப்பட்ட இயந்திரங்களை கொழும்பு துறைமுகத்திலிருந்து எவ்வாறு விடுவிப்பது என்பது சம்பந்தமாக போதுமான தெளிவு இருந்திருக்கவில்லை. அத்துடன் கொரோனா காலம் வேறு. மூன்று மாதகால போராட்டத்துக்கு பின்னர் இயந்திரத் தொகுதியை மீட்டு எனது வீட்டுக்கு கொண்டுவந்து சேர்த்தேன்.
ஆனால், 14 இலட்சம் ரூபா வரையில் அதற்காக விரையமாக்கப்பட்டுவிட்டது. ஆனாலும், பொருட்கள் பத்திரமாக மீட்கப்பட்டுவிட்டதில் மகிழ்ச்சி” என்று அவர் தனது திருப்தியை வெளியிடுகிறார்.
பின்னர், தனது சொந்த நிலத்தில் ஒரேயொரு புதல்வரான அபிஜனின் பெயரில் ஆணித் தொழிற்சாலைக்கான நிறுவனப் பதிவுகளை மேற்கொண்டு கடந்த மே மாதம் 7ஆம் திகதி உத்தியோகபூர்வமாக தனது தொழிற்சாலையினை இயக்கத்துக்கு கொண்டு வந்திருக்கிறார் சண்முகரத்தினம் தயாபரன்.
“நாளொன்றுக்கு ஒரு தொன் ஆணிகளை உற்பத்தி செய்யும் வலுவை இயந்திரங்கள் கொண்டிருக்கின்றன.
எனினும், கேள்விக்கு ஏற்ற வகையில் தான் அன்றாட உற்பத்திகள் மேற்கொள்ளப்படுகின்றன. அத்தோடு, தொகையான கோரிக்கைகளுக்கான உற்பத்திகள் நடைபெறுகின்றபோது மேலதிகமாக இருவருக்கு தொழில் வாய்ப்புக்கள் வழங்கப்படுகின்றன” என்று குறிப்பிடுகிறார்.
இந்த ஆண்டில் கடந்த மாத இறுதி வரையில் நாடளாவிய ரீதியிலிருந்து, திறன் மற்றும் குறைந்த திறன்களுடன் குவைத்துக்கு 27,582 பேரும், சவுதிக்கு 29,239 பேரும், டுபாய்க்கு 8,787 பேரும் புலம்பெயர்ந்துள்ளதோடு, மொத்தமாக 1,52,541 பேர் மத்திய கிழக்கு நாடுகளுக்குச் சென்றுள்ளனர்.
இந்நிலையில், வலி. மேற்கைச் சேர்ந்த 46 வயதான பஞ்சலிங்கம் மோகனதேவன் என்பவர் கடந்த 19ஆண்டுகளாக மத்திய கிழக்குக்கு வேலைவாய்ப்பினைப் பெற்று தொடர்ச்சியாக பணியாற்றி வருகிறார்.
ஆரம்பத்தில் குறைந்த திறன்களுடன் தொழில்வாய்ப்பைப் பெற்றவர் தற்போது, துறை சார்ந்த ரீதியாக அனுபவத் திறன்களைக் கொண்டிருக்கின்றார். இருப்பினும், வெளிநாட்டில் பணிபுரியும் தொழிலாளராகவே நீடிக்கின்றாரே தவிர, அவரால் மேம்பட்ட நிலைமையை அடைய முடிந்திருக்கவில்லை.
“நான் ஆரம்பத்தில் சிறிய அனுபவத்துடன் தொழில்வாய்ப்பினை பெற்றுச் சென்றேன். பின்னர் மொழியறிவு, தொழில்நுட்ப அறிவு ஆகியவற்றின் போதாமையினால் பல்வேறு சவால்களை சந்திக்கவேண்டிய நிலை ஏற்பட்டது.
தற்போது அந்த விடயங்களில் முன்னேற்றங்களை கண்டுள்ளபோதும், பதவிநிலை முன்னேற்றங்களைக் காணமுடியவில்லை” என்று பஞ்சலிங்கம் மோகனதேவன் குறிப்பிடுகிறார்.
அத்துடன், “தொடர்ச்சியாக ஒரே விதமான பணியையே முன்னெடுப்பதற்கான சூழலே எனக்கு கிடைத்துள்ளது.
ஆகவே, எனது குடும்பத்தின் வாழ்வாதாரத்துக்கு போதுமான வருமானத்தை மட்டுமே பெற்றுக்கொள்ள முடிந்துள்ளது. அதற்கு மேலாக முதலீடுகளைச் செய்யக்கூடிய நிலைமைகளும் இல்லை. அவ்வாறு முயற்சிகளை எடுத்தால் கூட நாட்டின் தற்போதைய சூழல் அதற்கு பொருத்தமானது அல்ல” என்றும் அவர் குறிப்பிடுகிறார்.
இவர் போன்ற பலர், வெளிநாட்டு தொழில்வாய்ப்புக்களுக்காக தொடர்ச்சியாக செல்லும் நிலையில் இருக்கின்றார்கள். அவர்கள் தொழில் புரிந்து வருமானம் பெறுவது இலகுவானதாக கருதுவதோடு உள்நாட்டில் தொழில் முயற்சியை ஆரம்பித்து நடத்துவதற்கான சாவல்களை முகங்கொடுப்பதற்கு தயாரற்றவர்களாகவே காணப்படுகின்றனர்.
அவ்வாறான நிலையில், மத்திய கிழக்கு நாடுகளில் பணியாற்றினாலும் கூட இறுதி வரையில் தொழிலாளர்களாகவே தொடராது, தொழில் முனைபவர்களாக மாறுவதற்கு சண்முகரத்தினம் தயாபரன் பாரிய நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளார்.
எனினும், அவர் “என்னைப் போன்ற உள்ளூர் உற்பத்தியாளர்கள் நிலைத்து நிற்க வேண்டுமாயின், மூலப்பொருட்களுக்கும் உற்பத்திப் பொருட்களுக்கும் நிர்ணய விலை ஆகக்குறைந்தது மாகாண, மாவட்ட ரீதியிலாவது உறுதி செய்யப்பட வேண்டும். மூலப்பொருட்களுக்கான விலைகள் தளம்பலடையாது காணப்பட வேண்டும்” என்ற கோரிக்கையை முன்வைத்துள்ளார்.
ஆர்.ராம்
இந்தக் கட்டுரை முதலில் செப்டம்பர் 10, 2023 அன்று வீரகேசரி வார இதழில் வெளியிடப்பட்டது.