Wednesday, January 22, 2025
25.7 C
Colombo

புலம்பெயர்வில் புதுத்திறன் வளர்த்து உள்நாட்டில் தொழில் வழங்கும் ஓவியன்

வத்தளை பிரதேசத்தில் நடுத்தரக் குடும்பம் ஒன்றில் பிறந்து அதிகமான முட்டுக்கட்டைகளை சந்தித்து தளராது இன்று புதிய துறையொன்றில் முன்னோக்கி நகர்ந்து கொண்டிருக்கும் SKR எக்கடமி நிறுவனத்தின் ஸ்தாபகரான சஞ்சய ஆகாஷ் என்ற இளம் ஓவியக் கலைஞர் தொடர்பான கதையே இது. 

சராசரி நடுத்தரக் குடும்ப இளைஞர்கள் போல் தானும் உழைத்து முன்னேர வேண்டும் என்று மத்திய கிழக்கு நாடொன்றுக்கு சென்று அங்கு வைத்தியசாலை ஒன்றில் நோயாளிகளின் உடல் கழிவுகளை சுத்தம் செய்யும் தொழிலை செய்வதற்காக பணிக்கப்பட்ட ஒருவரான இவர் பல முயற்சிகளின் பின்னர் முன்னேறி இன்று தனக்கென்று தனியான துறையொன்றை உருவாக்கி சாதித்து வருகின்றார்.

“நான் நாட்டில் கடன்பட்டு அதிக எதிர்பார்புகளோடு ஒரு முகவர் மூலமாக அங்கு சென்றது ஒரு சிறப்பங்காடியில் உதவி கணக்காளராக வேலை செய்வதற்காகவே. ஆனாலும் அங்கு எனக்கு கிடைத்த தொழிலோ நான் வாழ்க்கையில் செய்ய கனவிலும் நினைக்காத தொழிலாகும்.

சென்ற கடனை முடிப்பதா  வாழ உழைப்பதா என்று பல இரவுகள் தூக்கம் விழித்து சிந்தித்து சிந்தித்து கடன்பட்டு வந்த பாவத்துக்கு என்று இரண்டு ஆண்டுகள் அந்த நாட்டில் மனதுக்குப் பிடிக்காத தொழிலை செய்து கொண்டே  காலத்தை கடத்தினேன். 

எனக்கு இருந்த ஒரே ஆறுதல் கண்ணுக்குக் கவர்ச்சியான சம்பளம் மாத்திரமே. அதே வேளை அங்கு வரும் நோயாளிகளின் உறவினர்கள் சந்தோசமாக கொடுக்கும் சிறிய தொகைப் பணத்தையும் எனது சம்பளத்தையும் அப்படியே சேமித்து வந்தேன், நான் தொழில் செய்த இடத்திலேயே உணவு, தங்குமிடம் கொடுக்கப்பட்டதால் எனக்கென்று பெரிய செலவுகள் அங்கு இருக்கவில்லை.”

இன்று தான் வாழும் சமூகத்தில் தனக்கான அடையாளம் ஒன்றைப் பதிப்பது தான் கண்ட துன்பங்கள் மற்றும் கசப்பனுபவங்களை தன்னைத் தொடர்ந்துவருபவர்கள் அனுபவிக்கக் கூடாது என்பதற்காக் கடுமையாக உழைத்து பாடுபட்டு தனது இளமையின் அதிக அளவிலான காலங்களை இதற்காகவே செலவு செய்து இன்று இத்தாலியில் தனது அடையாளத்தை பதித்து சிறந்த முறையில் வர்த்தகத்தில் ஜொலிக்கும் சகோதரர் சஞ்சய தனது புலம்பெயர்வு வாழ்க்கையின் ஆரம்பம் தொடர்பாக கூறியவையே இது.

தாம்; வாழும் இடத்தில் அதற்கான வசதி வாய்ப்புகள் இல்லை எனும் போது தான் விரும்பியோ விரும்பாமலோ தனது குடும்பத்தைப்பிரிந்து தான் வாழும் மண்ணைத் துரந்து இடம்பெயர்ந்து சென்றாவது அல்லது புலம்பெயர்ந்தாவது தனது இலக்குகளை அடைந்து கொள்வதற்கு பெரும் பிரயதனங்களை மேற்கொள்கின்றார்கள்.

இவ்வாறு புலம் பெயர்ந்து சென்றவர்களில் எத்தனை பேர் தமது இலக்குகளை அடைந்தார்கள், தாம் தேடிய அந்த அங்கீகாரத்தை பெற்றுக்கொண்டார்கள் என்று நோக்கினால் அதற்கான பதில்கள் அரிதாகவே ஆம் என்றதாக இருக்கும். ஏனையோரின் நிலமை கேள்விக்குறியாகவே நீளும். ஆனால் இங்கு சஞ்சய தனது வெற்றிகரமான பயணம் பற்றி கூறும் போது வெளிநாட்டு தொழிலாளர்களின் நிலமை தொடர்பில் இவ்வாறு தெரிவித்தார்.

“இன்று கூட்டத்தோடு கூட்டமாக இடம்பெயர்ந்து சென்று உழைத்து விட்டு வந்து மீண்டும் உழைக்கச் சென்று மீண்டும் வரும் ஒரு சக்கர முறையிலேயே வெளிநாட்டு தொழிலாளர்களின்  வாழ்க்கைச் சக்கரம் நகர்ந்து கொண்டிருக்கின்றது, இதனால் இவர்களின் வாழ்க்கையின் தரம் மாறப்போவதில்லை, நானும் ஆரம்பத்தில் அனைவரையும் போல் தான் வெளிநாடு சென்றேன். 

சென்றது உழைக்க வேண்டும் என்று. எனக்கு அங்கு என்ன செய்ய முடியும் என்ற எந்த அறிவும் போகும் போது எனக்கு இருக்கவில்லை. ஆனாலும் நான் போன கடமைக்காக அங்கு இருந்தேன். என்னைப் போலவே எதுவும் அறியாமல் என்னோடே சென்று அங்கு கிடைத்த வேலையை செய்து கொண்டு இன்னும் இருப்பவர்கள் அதிகமாக உள்ளார்கள்.”

“என்னோடே அங்கு சென்றவர்கள் பலதியாவில் (பாதை சுத்திகரிப்பு வேலை), வீட்டு சாரதிகளாக இன்னும் வேலை செய்கின்றார்கள். என்னோடு கூடவே அங்கு வந்த ஒரு சகோதரியான ஹிமாஷா வண்ணிநாயக்க  தொடர்பில் கட்டாயம் கூறவே வேண்டும். அங்கு என்னோடே வந்த அவருக்கு நகரில் உள்ள பிரபலமான அலங்கார நிலையத்தில் வேலை கிடைத்தது. 

6 மணித்தியாளங்கள் வேலை, சம்பளம் எனது சம்பளம் போல் 3 மடங்கு. வருடத்துக்கு 3 மாதங்கள் விடுமுறை. என்னோடு கூடவே சென்றவருக்கு எப்படி இது சாத்தியம் என்று ஒரு நாள் ஹிமாஷாவிடமே கேட்டேன். அவள் அங்கு சென்றதே அந்தத் தொழிலுக்குத் தான் என்றும் தான் செய்ய வந்த தொழில் தனக்கு கிடைத்தது என்றார், நானும் வந்தது கணக்காளராக வேலை செய்யவென்று, கிடைத்தது நோயாளிகளின் கழிவு அகற்றும் வேலை என்றதும் அவர் நான் இலங்கையில் பெடிகியூ (கால் நக அலங்காரம்) கற்று அனுபவ சான்றிதழ்களோடே இங்கு வந்தேன், உன்னைப் போல் எதுவும் அறியாது வரவில்லை என்றார்”

வெளிநாட்டு தொழிலாளர்களின் வெளிநாட்டு வாழ்க்கை தொடர்பாக சஞ்சய தெரிவிக்கும் போது “வெளிநாட்டுக்கு போவது தப்பேயில்லை, எதுவும் அறியாமல் எல்லோரையும் போல் சென்று வீட்டு வேலை கூடதெரியாத பணிப்பெண்ணாக இருப்பதும், பலதியாவில் (பாதை சுத்திகரிப்பு வேலை),வேலை செய்வதும் என்று தொடர்ந்து இருந்தால் அது நமக்கு நாமே செய்துகொள்ளும் பெரிய அநியாயம், அங்கு சென்றால் தான் தெரியும் எவ்வளவு தொழில்கள் அதிக சம்பளத்தோடு உள்ளன என்று, எதுவும் அறியாமல் சென்றால் எதுவும் கிடைக்காது, இங்கு புதிய துறைகளை கற்று அங்கு சென்றால் நிச்சியமாக பெண்களுக்கும் தான் ஆண்களுக்கும் தான் தாராளமாக சிறப்பான கௌரவமான தொழில்கள் உள்ளன, அங்கு எதுவும் அறியாதவர்களை யாரும் மதிப்பதில்லை.” என்று நீண்ட நேரமாக அது தொடர்பில் கதைத்தார்.

இலங்கையின் சனத்தொகையில் சுமார் 1.5 மில்லியனுக்கும் அதிகமானவர்கள் புலம்பெயர்வுத் தொழிலாளர்களாக செயற்பட்டு வருவாதாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் தனது உத்தியோகபூர்வ இணையதளத்தில் அறிக்கை வெளியிட்டுள்ளது.

அதேவேளை கடந்த 2021ம் ஆண்டு மாத்திரம் புலம்பெயர் தொழிலாளர்கள் இலங்கைக்கு 6.9 பில்லியன் டொலர்கள் அனுப்பியுள்ளதாக இலங்கை மத்தியவங்கியின் அறிக்கை சுட்டிக்காட்டுகின்றது. இது 2022ம் ஆண்டாகும் போது நாட்டின் அரசியல் நெருக்கடி மற்றும் பொருளாதாரத ஸ்திரமின்மை காரணமாக வீழ்ச்சியுற்றுள்ளது. இதுவரை அந்த நிலமை சீரகவில்லை என்பது பரிதாபத்துக்குரிய விடயமாகும்.

“இலங்கையில் இருந்து வெளிநாடு சென்றுள்ள அதிகமானவர்கள் ஏனோ உழைப்பதற்காக சென்றோம் என்பதற்காக உழைத்து பணம் அனுப்பிக் கொண்டிருப்பவர்களே. அதைத் தாண்டி புதிதாக ஒன்றைக் கற்று அதன் மூலம் தான் உயர முனைந்தவர்களின் எண்ணிக்கை மிகவும் குறைவாகவே உள்ளது”. என்று அவர் மேலும் தெரிவித்தார்.

இவர் இத்தாலி சென்றது தொடர்பில் வினவிய போது

“மத்திய கிழக்கில் இருக்கும் போதே ஐரோப்பிய நாடு ஒன்றுக்கு செல்ல வேண்டும் என்ற ஆர்வம் எனக்கு வந்துவிட்டது. காரணம் எனது பிரதேசத்தை சேர்ந்த அதிகமானவர்கள் ஐரோப்பிய நாடுகளுக்கு சென்று நிறைய உழைத்து முன்னேரியிருப்பதே” என்று தெரிவித்தார்.

இரண்டு வருடங்கள் விஸா முடிந்ததும் இலங்கை திரும்பியவர் வந்த நாள் முதல் ஐரோப்பிய நாடொன்றுக்கு செல்வது தொடர்பிலேயே கவனம் செலுத்தினார்;. அது 2012,2013 காலப்பகுதி. இலங்கையில் அதிகமானவர்கள் சட்டவிரோதமாக படகு மூலமாக வெளிநாடுகளில் குடியேறிய காலம். படகில் அவுஸ்திரேலியா செல்வது குற்றம் என்று அடிக்கடி பத்திரிகைகளிலும் தொலைக்காட்சியிலும் கூறிக்கொண்டிருந்த காலம். இவர் ஐரோப்பிய நாடொன்றுக்கு செல்ல முயற்சித்துக் கொண்டிருப்பவர் என்ற விடயம் சட்டவிரோதமாக ஆள்கடத்திலில் ஈடுபடுகின்றவர்கள் அறிந்து இரவு நேரங்களில் அடிக்கடி வீட்டுக்கு வந்து தொந்தரவுகொடுத்தார்கள்.

ஏற்கனவே மத்திய கிழக்கு நாட்டின் தொழில் அனுபவத்தால் கடுமையான விரக்தியில் இருந்த இவர் எந்தக் காரணத்தைக் கொண்டும் சட்டவிரோத முகவர்களையோ, ஆள் கடத்தல்காரர்களையோ நம்புவதற்கு தயாராக இருக்கவில்லை. 2013ம் ஆண்டு ஐடுவுளு பரீட்சை எழுதி தரவாக சித்தியடைந்து முறையாக இவர் இத்தாலியை அடைந்தார். இத்தாலி வரும் போதும் வெறுமனே கிடைக்கும் தொழிலை செய்து காலத்தை கடத்தலாம் என்ற நம்பிக்கையிலேயே வந்த இவருக்கு இத்தாலியில் கிடைத்தது பல்கலைக்கழகம் ஒன்றில் சுத்திகரிப்புப் பணி. (சுத்திகரப்புப் பணி என்றால் இலங்கையில் போன்று என்று நினைக்க வேண்டாம் என்றார்.) 2014ம் ஆண்டு பின்னரைப் பகுதியில் இத்தாலியின் பிரபலமான பல்கலைக்கழகமான யார்லே பல்கலைக்கழகத்தின் ஆர்ட் கெலரி பகுதியிலேயே இவருக்கு வேலை கிடைத்தது.

“ஆர்ட் கெலரியின் தரையை சுத்தம் செய்வதோடு ஓவியங்களை காட்சிப்படுத்த ஓவியர்களுக்கு உதவுதல் போன்ற வேலைகளே எனக்கு வழங்கப்பட்டது. எனது கடந்த கால அனுபவங்களோடு ஒப்பிடும் போது இது எவ்வளவோ தேவலம் என்று எனது கடமையில் கவனமாக இருந்தேன். நோயாளிகளில் முனங்கல்களையும் வைத்தியசாலையின் ஆரவாரங்களையும் மாத்திரமே கேட்டு வந்த எனக்கு கலைத்துவமான சூழலின் ஓவியங்களும் ஆர்ட் கெலரியின் அமைதியும் பெரிய நிம்மதியைத் தந்தது. என்னோடு ரசனை ஒட்டிக் கொள்ளத் தொடங்கியது. எனது ஓய்வு நேரங்களில் ஓவியங்களை ரசிக்கலானேன். எனது வேலைகளை கண்ணும் கருத்துமாக செய்ததோடு எனது ஓய்வு நேரத்தையும் ஆர்ட் கெலரியிலேயே கழிக்கலானேன். அங்கு ஓவியங்கள் வரைய வரும் மாணவர்களுக்கு சிறிய சிறிய உதவிகளை செய்து கொடுப்பதோடு அவர்களோடே நேரத்தையும் கழித்தேன்.”

“இத்தாலி என்பது உலகில் அதிகமான அளவு ஓவியங்களுக்கு முக்கியம் கொடுத்து ஓவியர்களை ஆதர்சிக்ககும் நாடு என்று அங்கு வைத்துத் தான் அறிந்தேன். சிறிய மாணவர்கள் வரையும் ஓவியங்களை கூட கண்காட்சிகளில் அதிக விலை கொடுத்து வாங்குவது எனக்கு அதிசயமாக இருந்தது. இந்நிலையில் தான் அந்த பல்கலைக்கழகத்தில் கற்கும்  பைசல் ஷேய்க் என்ற துருக்கியை சேர்ந்த ஓவியத் துறை மாணவரின் தொடர்பு எனக்கு கிடைத்தது.” என்று தெரிவித்த அவர் அவரது இத்தாலி வாழ்க்கை மற்றும் திருப்புமுனை தொடர்பாகவும் கதைத்தார்.

பைசல் ஓவியக் கலையில் முதுமாணி கற்கையை பூர்த்தி செய்யவே அங்கு வந்திருந்தார். அவர் சிறந்த முறையில் இயற்கை ஓவியங்களை வரைவதையும் தூரிகைகளை இலாவகமாக கையால்வதையும் கண்டு அவரிடம் இன்னும் நெருக்கமாகி கொஞ்சம் கொஞ்சமாக இயற்கை ஓவியங்கள் தொடர்பில் அறிவதில் ஆர்வாமாக இருந்தார்.

பைசல் தனது ஓய்வு நேரங்களில் பல்கலைக் கழகத்துக்கு வெளியேயும் வீதி ஓரங்களிலும் ஓவியங்களை வரைந்து விற்று பணம் ஈட்டுவதையும் அவதானித்தவருக்குஓவிய ஆசை வளரத் தொடங்கியது. பைசலிடம் ஓவியம் தொடர்பில் கற்று தனது அறையில் இலங்கையின் முக்கியமான வரலாற்று இடங்களை  ஓவியங்களாக வரைந்து அவற்றை அறையிலேயே அழகாக காட்சிப்படுத்தி வைத்திருந்தார்.

ஒரு முறை இவரோடுஇவரது அறைக்கு வந்த பைசல் இவர் வரைந்து வைத்திருந்த ஓவியங்களைக் கண்டு தன்னோடு சேர்ந்து ஓவியம் வரைய இவரையும் அழைத்தார்,இவர் வரைந்து வைத்திருந்த “காலி கோட்டை” ஓவியத்தை அவர் விலை கொடுத்து வாங்கினார். அதுவே இவரது ஓவியத்துறை வாழ்வின் பெரும் திருப்புமுனையாக அமைந்தது. அன்று முதல் இவர் எனது ஓய்வு நேரங்களை பைசல் ஷேய்க் உடனே கழிக்கலானார்;. பைசல் தான் வரையும் ஓவியங்களுக்கு வர்ணம் கொடுக்கும் வேலையையே முதலில் சஞ்சயவுக்கு வழங்கினார். ஆரம்பம் முதலே அவற்றை முறையாகவும் ஆர்வமாகவும் செய்து வந்ததால் பைசல் இவரோடு இன்னும் நெருக்கமானார். பல்கலைக்கழகத்துக்கு வெளியே வீதியோரத்தில் ஓவியங்களை காட்சிப்படுத்தி ஒரு மாத காலத்திலேயே ஓவியங்கள் விற்பனையாவது இவருக்கு பெரும் வியப்பாக இருந்தது. அங்கு ஓவியங்களுக்கு அந்த அளவு வரவேற்பு காணப்பட்டது என்று வியப்போட அவர் தெரிவித்தார்.

“நாம் வீதியோர ஓவியர்கள் என்பதால் நமது ஓவியங்கள் ஒப்பீட்டளவில் சிறிய தொகைக்கே விலை கொடுத்து வாங்கப்பட்டது.”(நான் சராசரி விலை கேட்டதும் சிரித்துக் கொண்டே 15,000 – 20,0000 இலங்கை ரூபாய்கள் இருக்கும் என்றார்)

இலங்கையில் அதிகம் திறமையானவர்கள் உள்ள போதிலும் அவர்கள் தமது திறமைகளை முறையாக இனங்கண்டு அவற்றை வளர்த்துக் கொள்வதோ பட்டை தீட்டிக் கொள்வதோ இல்லை. அதனால் சிறந்த வரவேற்புள்ள பல துறைகள் வெளிநாடுகளில் உள்ள போதிலும் குறிப்பிட்ட சில துறைகளுக்கு மாத்திரமே செல்வது என்பதே இன்று அடையாளம் தேடி புலம்பெயர் தொழிலாளர்களாக யாவும் துறந்து செல்கின்றவர்களின் நிலையாக காணப்படுகின்றது. அவ்வாறு சென்று புதியதொரு துறையிலாவது தன்னை வளர்த்துக் கொண்டு ஏதாவது சாதிக்க முனைகின்றார்களா என்று பார்த்தால் அது அரிதாகவே நிகழ்கின்றது என்பதே துரதிஷ்டமான தொடர்கதையாகும். இவர்களைப்போன்றே தானும் வெளிநாடு சென்று சென்றதற்காக கிடைத்த வேலையை செய்து கொண்டு மாத்திரம் இருக்காது தனது முயற்சியினால் தனக்கான இடத்தை எவ்வாறு இவர் அமைத்துக் கொண்டார் என்பதனை அவர் கூறியதிலிருந்தே பார்க்கலாம்.

“இவ்வாறு இருக்கும் போது நான் பைசலிடம் ஓவியம் வரைந்து கொண்டே பல்கலைக்கழகத்தில் இருந்துகொண்டு தொழில் ரீதியாக வீதியோரத்தில் ஓவியம் வரையும் வேறு மாணவர்களது ஓவியங்களிலும் வர்ணம் தீட்டும் வேலைகளில் ஈடுபடலானேன். இதன் மூலம் எனக்கு அங்கு மாணவர்கள் மத்தியில் சிறந்த அறிமுகமும் வரவேற்பும் காணப்பட்டது. எனக்கான பாதை இது தான் என்பதை அப்போது தான் நான் சரியாக உணர்ந்தேன்.”

இவ்வறு சுமுகமாக சென்று கொண்டிருந்த இவரது இத்தாலி வாழ்வின் பெரும் திருப்புமுனையாக அமைந்தது பைசல் தனது கற்கைகளை முடித்து விட்டு தனது தாயகமான துருக்கி சென்றதாகும். பைசல் தனது நாடு செல்லும் போது சஞ்சயவுக்கு அவர் சேமித்து வைத்திரந்த சிறந்த ஓவியங்களை கையளித்து விட்டே சென்றார். இவர் தனது புதிய நண்பர்களின் ஓவியங்களுக்கு உதவி செய்யும் இடத்திலேயே பைசல் இவருக்குக் கொடுத்த ஓவியங்களையும் காட்சிப்படுத்தினார்;. இவர் கனவில் கூட நினைக்காதவாறு குறுகியகாலத்துக்குள்ளேயே பைஸல் அவருக்கு வழங்கி இவர் காட்சிப்படுத்திய ஓவியங்கள் விற்பனையானதும் இவரே புதிய ஓவியங்களை வரையலானார்.

ஆரம்பத்தில் இலங்கை தொடர்பான இயற்கை ஓவியங்களை வரைந்த இவர் அவற்றுக்கு அங்கு நிலவும் மதிப்பு மற்றும் ரசிகர்கள் மத்தியில் காணப்பட்ட வரவேற்பு கண்டு தொடர்ந்தும் இலங்கை தொடர்பான ஓவியங்களையே வரையத் தொடங்கினார்;;.

இவரது கவனம் முழுவதும் ஓவியத் துறையின் பக்கமே செல்ல இவரது சுத்திகரிப்புத் தொழிலானது பரிபோகும் சூழ்நிலை உருவானது.

இந்நிலையில் பல்கலைக்கழகத்தின் சுத்திகரிப்புக்குப் பொறுப்பான நிர்வாகம் இவரைக் கண்டித்து இறுதி எச்சரிக்கையும் அனுப்பியது. அதுஇவரைப் பெரிதாக பாதிக்கவில்லை. அந்த நேரமாகும் போது இவர் தனது புதிய துறையான ஓவியத்துறையிலே நீண்ட தூரம் வந்திருந்தார்;. எனவே பல்கலைக்கழக சுத்திகரிப்புப் பிரிவில் இருந்து முறையாக விலகி  சுயாதினமாக இயங்குவதற்கு துணிந்து முன் வந்து சொந்தமாக ஓவியங்கள் வரைவதோடு ஏனையோரின் ஓவியங்களுக்கு வர்ணம் தீட்டுதல் மற்றும் கூலிக்கு ஓவியம் வரைதல் என்று தனக்கான புதிய பாதையைப் போட்டுக் கொண்டு பயணிக்கலானார்.

தனது புதிய முயற்சியான கூலிக்கு ஓவியம் வரைவதானது மிகவும் வெற்றிகரமாக செல்லவே தெருவோர ஓவியராக இருந்த இவர்  தனக்கென்று  ஒரு ஓவியக்கூடம் அமைத்து அதற்கு ளுமுசு எக்கடமி என்று பெயர் சூடும் அளவுக்கு 2019ம் ஆண்டாகும் போது வளர்ந்திருந்தார்.இவருக்குக் கீழே இரண்டு இந்திய மாணவர்கள்  பகுதி நேரமாக எக்கடமியில் வேலை கூட பார்த்துள்ளார்கள்.

நிலமை இவ்வாறு சுமுகமாக நகரும் போது தான் உலகையே ஆட்டிப்படைத்த கொரோனா தொற்று  இத்தலியிலும் பரவத் தொடங்கியது. இவர் நாடு முடக்கப்பட முன்னரே இலங்கைக்கு வந்து விட்டார். இலங்கையில் சிறிது நாட்கள் ஓய்வாக இருந்துவிட்டு மீண்டும் 3 மாதத்தில் இத்தாலிக்கு சென்றார்;. மீண்டும் இத்தாலி செல்லும் போது தனது ளுமுசு எக்கடமியின் கிளை ஒன்றை வத்தலையில் உள்ள தனது புதிய வீட்டில் ஆரம்பித்து விட்டு கொழும்பு விகாரமகா தேவி பூங்காவின் பின்னால் உள்ள கிரீன்பாத் பகுதியில் உள்ள இளம் ஓவியர்கள் சிலரை தெரிவு செய்து அவர்களுக்கு தொழில் வாய்ப்பு ஒன்றை ஏற்படுத்திக் கொடுத்து விட்டே சென்றார்.

கொரோனா காலத்தில் யாருக்கும் வெளியே நடமாட முடியாது என்று இருந்த நிலையில்; தனது பிரதேசத்தை அண்டிய பகுதிகளில் இருந்த அந்த இளம் கலைஞர்களின் ஓவியங்களை இத்தாலிய ஓவியப் பிரியர்களின் ஆர்வம் மற்றும் ரசனைக்கு ஏற்றாற் போல் தெரிவு செய்து அவற்றின் பெறுமதிக்கு தகுந்த விலையையும் செலுத்தியே தன்னோடு கொண்டு சென்றார்;.(எவ்வளவு விலை என்பதை அவர் கூறவதை தவிர்த்தார்)   அங்கு  தனது எக்கடமியில் அவற்றை வைத்து இத்தாலியில் இருந்து கொண்டே மீண்டும் தனது வேலையை ஆரம்பிக்கலானார்.

2022ம் ஆண்டு அரசியல் நெருக்கடி மற்றும் பொருளாதார நெருக்கடிகளின் போது மீண்டும் நாட்டுக்கு வந்த இவர் வரும் போது தனது எக்கடமியின் வத்தலை கிளை தொடர்பான தெளிவான திட்டமிடலோடே வந்தார். எக்கடமியில் புதிய ஓவியங்களை வரைய பத்திரிகையில் தொழில் வாய்ப்பு பிரசாரம் செய்தி ஓவியர்களை தெரிவு செய்தார்.

ஓவித்துறையில் திறமையான இளம் ஓவியர்கள் 10 பேருக்கு உடனடியாக வேலைவாய்ப்பு வழங்கிஅவர்களது வேலையை நேரடியாக கண்காணித்ததோடு அவர்களுக்கு ஒரு ஓவியத்துக்கு  சதுர அடிக்கு ஒரு தொகை என்று ஊதியமும் வழங்கினார்.

இந்த வருடம் பெப்ரவரியில் மீண்டும் இத்தாலி சென்ற இவர் தனது எக்கடமியின் ஓவியங்கள் இத்தாலிக்கு கூரியர் மூலமாக வருவதற்கான சகல ஏற்பாடுகளையும் செய்து வத்தலை எக்கடமிக்கு பிரபாத் சமரசிங்க என்ற இளம் ஓவியரை பொறுப்பாக நியமித்தார்.

தற்போது சஞ்சய ஒரு வளர்ந்து வரும் தொழிலதிபராக மிளிர்வதோடு தன் போன்று சாதிக்கத் துடிக்கும் திறமையானவல்களுக்கு வழிகாட்டியாக சிறந்து உதாரண புருசராக வாழ்ந்து வருகின்றார்.

அவரிடம் நமது இளைய தலைமுறைக்கான செய்தி ஒன்று கேட்ட போது…

” அதிஷ்டம் தானே வந்து வீட்டைத் தட்டாது. கிடைக்கும் தொழிலை செய்வது தவறில்லை. அதிலிருந்து புதிதாக ஒன்றை கற்காது தொழிலை செய்வதே தவறு. அத்தோடு பொறுமையாக சந்தர்ப்பம் பார்த்து தனது நேரம் வரும் போது கடுமையாக முயற்சி செய்து இயங்க வேண்டும். அந்த சந்தர்ப்பத்தில் அதிஷ்டமும் வீட்டைத் தட்டும்.. “

இது இன்று ஒரு புதிய துறையில் பயணிக்கும் சஞ்சய ஆகாஷின் கதை.

இன்று நமக்கான சந்தர்ப்பங்கள் பரவலாக காணப்படுகின்ற போதும் காலம் காலமாக நமது முன்னோர்கள் சென்ற அதே பாதையிலேயே வெளிநாடு சென்று அதிகமானவர்கள் தொழில் இன்றியும் மிகவும் குறைந்த அளவிலான ஊதியங்களுக்கு தொழில் செய்தும் வருகின்ற நிலமை நீடித்துக் கொண்டு தான் இருக்கின்றது. புதிய துறைகளில் நம்மைத் தரப்படுத்திக் கொண்டு வெளிநாடு சென்று உழைப்பது ஒரு பக்கம் இருக்க: தான் சென்ற நாட்டில் புதிய துறையொன்றை கற்று அது தொடர்பில் ஆராய்ந்து தன்னை முன்னேற்றிக் கொண்டு சிறந்த முன்னுதாரணமாக இருக்கும் சந்தர்ப்பங்கள் சஞ்சயவைப் போன்று அனைவருக்கும் உள்ளது என்பதே இங்கு குறிப்பிட்டுக் கூறப்பட வேண்டியதாகும்.

M. M. M. Farik

இந்தக் கட்டுரை முதலில் செப்டம்பர் 29, 2023 அன்று வீரகேசரி இணையதளம் இதழில் வெளியிடப்பட்டது.

Hot this week

ගංවතුරේ පාවෙන ජා-ඇල ජීවිත

2024 වසරේ මාස හයක් තුළ ගංවතුර අවස්ථා තුනක්... ඔක්තෝබර් ගංවතුරෙන්...

CIR and SCOPE host workshop for women journalists on GBV

The Centre for Investigative Reporting (CIR) and Strengthening Social...

GBV and Women’s Political Participation – A Workshop for Women Journalists

‘Towards New and Inclusive Narratives,’ a workshop on GBV...

Panel discussion on ‘Election Disinformation, Online Hate & Women’s Political Representation’

The Center for Investigative reporting (CIR) will host a...

Topics

ගංවතුරේ පාවෙන ජා-ඇල ජීවිත

2024 වසරේ මාස හයක් තුළ ගංවතුර අවස්ථා තුනක්... ඔක්තෝබර් ගංවතුරෙන්...

CIR and SCOPE host workshop for women journalists on GBV

The Centre for Investigative Reporting (CIR) and Strengthening Social...

GBV and Women’s Political Participation – A Workshop for Women Journalists

‘Towards New and Inclusive Narratives,’ a workshop on GBV...

Related Articles

Popular Categories