அநுரகுமார லண்டனில் ஆற்றிய உரையை முழுமையாக அவதானித்ததன் அடிப்படையில், அவரின் உரை தொடர்பில் தமிழில் வெளியிடப்பட்ட செய்தி தமிழ் மக்களை தவறாக வழிநடத்தக்கூடிய வகையில் திரிபுபடுத்தப்பட்டு எழுதப்பட்டிருக்கின்றமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இலங்கையில் ஜனாதிபதித் தேர்தலுக்கான காலம் நெருங்க ஆரம்பித்துள்ள நிலையில் அரசியல்கட்சிகள் மற்றும் தனிநபர்களுக்கு எதிராக ஊடகங்கள் மற்றும் சமூக வலைத்தளங்கள் ஊடாக சேறுபூசல்கள் மேற்கொள்ளப்படுவது தொட்ர்ச்சியாக அவதானிக்கப்படுகிறது.
அரசியல்வாதிகளின் கருத்துக்களை அல்லது அறிவிப்புக்களை மேற்கோள்காட்டி போலியான அல்லது திரிபுப்படுத்தப்பட்ட செய்திகளை தேசிய பத்திரிகைகள் கூட வெளியிடுவதை அவதானிக்க முடிகிறது.
அந்த வகையில் தேசிய மக்கள் சக்தியின் தலைவரும், கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான அநுரகுமார திஸாநாயக்க பிரித்தானியாவுக்கு சென்றிருந்த தருணத்தில் லண்டனில் கடந்த மாதம் 15ஆம் திகதி (15.06.2024) அன்று நடைபெற்ற மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றியபோது தெரிவித்த கருத்துக்களை பிராந்தியப் பத்திரிகையான ஈழநாடு பத்திரிகை அறிக்கையிட்டிருந்தது.
அந்த அறிக்கையிடலில், “அரசமைப்பில்பௌத்தத்துக்கு முதன்மை; தமிழ் தலைவர்கள் கைவைக்க முடியாது” என்று தலைப்பிடப்பட்டு செய்தி வெளியிடப்பட்டிருந்தது. எனினும் குறித்த அறிக்கையிடலில் முரண்பாடுகள் காணப்பட்டிருந்ததை அடுத்து அதுபற்றி ஆராயப்பட்டது.
இந்நிலையில், கடந்த ஜூன் மாதம் 15ஆம் திகதி லண்டனில் நடைபெற்றக் கூட்டத்தில் தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க கலந்துகொண்டு உரையாற்றியதை அக்கட்சியின் தமிழ் ஊடகப் பிரிவுக்குப் பொறுப்பான செல்வராஜ் சதீஸ் உறுதி செய்தார்.
இக்கூட்டத்தில் அநுரகுமார திஸாநாயக்க உரையாற்றியபோது தெரிவித்த கருத்தொன்றை அடிப்படையாக வைத்து ‘ஈழநாடு’ பத்திரிகை தமிழ் மக்களை தவறாக வழிநடத்தக்கூடிய வகையில் திரிபுபடுத்தப்பட்ட செய்தியை வெளியிட்டிருந்ததாகவும் செல்வராஜ் சதீஸ் கூறினார்.
அநுரகுமார திஸாநாயக்க லண்டனில் ஆற்றிய உரையை முழுமையாக அவதானித்ததன் அடிப்படையில், அவரின் லண்டன் உரை தொடர்பில் தமிழில் வெளியிடப்பட்ட செய்தி தமிழ் மக்களை தவறாக வழிநடத்தக்கூடிய வகையில் திரிபுபடுத்தப்பட்டு எழுதப்பட்டிருக்கின்றமை உறுதி செய்யப்பட்டுள்ளது.
அநுரகுமாரவின் உரையின் ஒரு பகுதி கீழே வழங்கப்பட்டுள்ளது.
“எங்களது ஆட்சியின்போது (தேசிய மக்கள் சக்தியின் ஆட்சியில் அல்லது அநுரகுமார திஸாநாயக்க ஜனாதிபதியானதன் பின்னர்) பௌத்த மதத்துக்கு வழங்கப்பட்டுள்ள முன்னுரிமை இரத்துச் செய்யப்படுமா? என்று எம்மிடம் கேட்கிறார்கள். இது தேவையில்லாத அச்சம். முற்றிலும் பொய். அரசியலமைப்பில் 9ஆவது சரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ள பௌத்தத்துக்கு முன்னுரிமை எங்களது ஆட்சியில் ஒருபோதும் இரத்துச் செய்யப்படாது.
2015 – 2019ஆம் ஆண்டு வரையில் புதிய அரசியலமைப்பு உருவாக்குவதற்கான கலந்துரையாடல்கள் இடம்பெற்றிருந்தன. அப்போது பிரதமராக இருந்த ரணில் விக்கிரமசிங்கவின் தலைமையில் இடம்பெற்ற இக்கலந்துரையாடல்களில் நானும் பிமல் ரத்நாயக்கவும் அதன் உறுப்பினர்களாகக் கலந்துகொண்டிருந்தோம். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை பிரதிநிதித்துவப்படுத்தி இரா.சம்பந்தன் மற்றும் எம்.ஏ.சுமந்திரன் கலந்துகொண்டிருந்தார்கள். ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் பிரதிநிதித்துவப்படுத்தி ரவூப் ஹக்கீம் மற்றும் தினேஷ் குணவர்தனவும் கலந்துகொண்டிருந்தார்கள்.
இந்த கலந்துரையாடல்களின்போது அரசியலமைப்பின் 9ஆவது சரத்தை நீக்குவது தொடர்பில் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் கலந்துரையாடப்படவில்லை. கலந்துகொண்டிருந்த அனைவரும் 9ஆவது சரத்தை ஏற்றுக்கொண்டிருந்தார்கள். அதில் (9ஆவது சரத்தில்) எவரும் கைவைக்க மாட்டார்கள். தமிழ் அரசியல் தலைவர்களுக்கு கூட அரசியலமைப்பின் 9ஆவது சரத்தில் கைவைக்கும் தேவை இல்லை என்பது எமக்கு தெரியும்.” என்றார்.
இதனடிப்படையில் ஈழநாடு பத்திரிகை வெளியிட்ட செய்தியின் தலைப்பு மற்றும் உள்ளடக்கங்களில் அநுரவின் உரை தமிழ் மக்களை தவறாக வழிநடத்தக்கூடிய வகையில் எழுதப்பட்டிருக்கிறது. செய்தியின் தலைப்பில் “அரசமைப்பில் பௌத்தத்துக்கு முதன்மை; தமிழ் தலைவர்கள் கைவைக்க முடியாது!” என்று அச்சுறுத்தும் தொனியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
செய்தியின் முதலாவது பந்தியிலும், “பௌத்த மத அடிப்படையில் வாழ்வது தேசிய மக்கள் சக்தி மாத்திரமே. அரசமைப்பின் 9ஆவது சரத்தில் கைவைக்கும் உரிமை தமிழ் அரசியல் தலைவர்களுக்கு இல்லை என அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார்.” என்று எழுதப்பட்டிருக்கிறது.
ஈழநாடு பத்திரிகையின் செய்தியில் அநுரகுமார திஸாநாயக்க கூறிய விடயங்கள் உள்ளடக்கப்பட்டிருந்தாலும் தலைப்பு மற்றும் செய்தியின் முதலாவது பந்தியில் உள்ள விடயங்கள் தமிழ் மக்களை தவறாக வழிநடத்தக்கூடிய வகையில் உள்ளது என்கிற முடிவுக்கு வரலாம்.
மேற்குறித்த பத்திரிகை செய்தியில், “பௌத்த மத அடிப்படையில் வாழ்வது தேசிய மக்கள் சக்தி மாத்திரமே. அரசமைப்பின் 9ஆவது சரத்தில் கைவைக்கும் உரிமை தமிழ் அரசியல் தலைவர்களுக்கு இல்லை.” என குறிப்பிடப்பட்டிருந்தாலும், அநுரகுமாரவின் உரையில் அவ்வாறு கூறப்படவில்லை என்பதை நாம் உறுதி செய்துகொண்டோம்.
மாறாக தனது உரையில், “அரசியலமைப்பின் 9ஆவது சரத்தில் கைவைக்கும் தேவை தமிழ் அரசியல் தலைவர்களுக்கு இல்லை என்றே” அநுர குறிப்பிடுகிறார்.
Bullet Points:
- அரசியலமைப்பின் 9ஆவது சரத்தை நீக்குவது தொடர்பில் தேசிய மக்கள் சக்திக்குள் கலந்துரையாடப்படவில்லை.
- புதிய அரசியலமைப்புக்கான கலந்துரையாடலில் அனைவரும் 9ஆவது சரத்தை ஏற்றுக்கொண்டிருந்தார்கள்.
- தமிழ் அரசியல் தலைவர்களுக்கு கூட அரசியலமைப்பின் 9ஆவது சரத்தில் கைவைக்கும் தேவை இல்லை என்பது எமக்கு தெரியும்.