2019ஆம் ஆண்டும் ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் கருத்துக்கணிப்புக்களை இந்தியாவின் புலனாய்வு அமைப்பான ‘றோ’ மேற்கொண்டதாகவும் இதன்படி அப்போதைய ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாஸவே வெற்றிபெறுவார் எனவும் போலியான தகவல்கள் பரப்பப்பட்டிருந்தன.
2024 ஆண்டு ஒன்பதாவது ஜனாதிபதித் தேர்தலுக்கு நாடு தயாராகிக் கொண்டிருக்கும் நேரத்தில், அதனை இலக்கு வைத்து அதிகளவான போலியான அல்லது மக்களை தவறாக வழிநடத்தக்கூடிய வகையிலான திரிபுபடுத்தப்பட்ட செய்திகள் பகிரப்பட்டு வருவது அவதானிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக உள்நாட்டுப் புலனாய்வு அமைப்பு அல்லது ‘றோ’ போன்ற வெளிநாட்டு புலனாய்வு அமைப்பு ஜனாதிபதித் தேர்தல் தொடர்பான கருத்துக்கணிப்புக்களை மேற்கொண்டதாகத் தெரிவித்து தேர்தல் காலங்களில் மக்களை தவறாக வழிநடத்தக்கூடிய தகவல்கள் பகிரப்பபடும் செயற்பாடு தொடர்ச்சியாக இடம்பெற்று வருகின்றமையும் அவதானிக்கப்பட்டுள்ளது.
“கோட்டாபய ராஜபக்ஷவைவிட இரண்டு இலட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் சஜித் பிரேமதாஸ வெற்றிபெறுவாரென ‘றோ’ மேற்கொண்ட கருத்துக்கணிப்பில் தெரியவந்துள்ளது” என்று குறிப்பிட்டு கடந்த 2019ஆம் ஆண்டு நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலின்போதும் செய்திகள் வெளியிடப்பட்டிருந்தன.
மேலும், ‘றோ’ அமைப்பு திரட்டிய தகவல்கள் எமக்கு கிடைத்துள்ளதாகக் கூறி ஆவணம் ஒன்றும் 2019ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலின்போது பகிரப்பட்டிருந்தது.
2019ஆம் ஆண்டு ‘றோ’வின் கருத்து கணிப்பின்படி, அப்போது ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிட்ட சஜித் பிரேமதாஸ வெற்றிபெறுவார் என்று தகவல்கள் வெளிப்படுத்தப்பட்டாலும் கோட்டாபய ராஜபக்ஷவே ஜனாதிபதித் தேர்தலில் வெற்றிபெற்றிருந்தார்.
இந்நிலையில் 2024ஆம் ஆண்டு செம்டெம்பர் 21ஆம் திகதி நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் ‘றோ’ மேற்கொண்ட கருத்துக்கணிப்பில் ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் சஜித் பிரேமதாஸ முன்னிலையில் இருப்பதாக அக்கட்சியின் குருநாகல் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அசோக அபேசிங்க அண்மையில் தெரிவித்திருந்தார்.
அசோக அபேசிங்கவின் கருத்தை சுட்டிக்காட்டி தமிழ் சிங்கள ஊடகங்கள் செய்திகளை வெளியிட்டிருந்ததோடு, முகநூலிலும் (Facebook) இது தொடர்பான பதிவுகள் அதிகளவில் பகிரப்பட்டிருந்தன.
பாராளுமன்ற உறுப்பினர் அசோக அபேசிங்க தெரிவித்த கருத்துக்கள் வருமாறு,
“ஜனாதிபதித் தேர்தலில் நிச்சியமாக சஜித் பிரேமதாஸ போட்டியிடுவார். அனைத்து கருத்துக் கணிப்புகளிலும் அவரே முன்னிலையில் இருக்கிறார். நான் நினைக்கிறேன், இந்திய உளவு பிரிவான ‘றோ’ அமைப்பு செய்த கருத்துக்கணிப்பிலும் சஜித் பிரேமதாஸவே முன்னிலையில் இருக்கிறார் எனக் கூறப்பட்டுள்ளது. தற்போதைய ஜனாதிபதி மூன்றாவது இடத்திலேயே இருக்கிறார். அதனாலேயே தேர்தலை காலந்தாழ்த்த சதி செய்கிறார்….” எனக் கூறியிருந்தார்.
Keyword Search ஊடாக இது தொடர்பான தகவல்களை தேடியபோது, ஹிரு செய்திகள் வெளியிட்டிருந்த மேற்குறித்த செய்தியை SJB News என்கிற முகநூல் (Facebook) பக்கத்திலும் பதிவேற்றப்பட்டிருந்தது.
“ஜனாதிபதி தேர்தலில் சஜித் பிரேமதாசவே வெற்றிபெறுவாரென இந்திய உளவு பிரிவான ‘றோ’ அமைப்புக்கூட தெரிவித்துள்ளது என தகவல் கிடைத்துள்ளது.” எனக் குறிப்பிட்டு Malayaga Kuruvi என்கிற செய்தி இணையத்தளத்திலும் செய்தி வெளியிடப்பட்டிருந்தது.
”சஜித் வெற்றிபெறுவார் – ‘றோ’ தெரிவித்தது என்கிறார் அசோக அபேசிங்க!” என்று tamilnews.lk இணையத்தளமும் செய்தி வெளியிட்டிருந்தது.
அதுபோல, Upul Devapriya, A5 News Sri Lanka என்கிற முகநூல் (Facebook) பக்கங்களிலும் மேற்குறித்த செய்தி பகிரப்பட்டிருந்ததை நாம் அவதானித்தோம்.
எவ்வாறாயினும், ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் அசோக அபேசிங்கவிடம் இது பற்றி நாம் வினவியபோது, ”ஹிருனிக்காவை சிறைச்சாலையில் பார்த்துவிட்டு வெளியில் வரும்போது ஊடகங்களுக்கு நான் தெரிவித்த கருத்துக்களே பரப்பப்பட்டு வருகிறது.
இந்தியாவின் புலனாய்வு அமைப்பு ஒன்று மேற்கொண்ட கருத்துக் கணிப்பிலேயே சஜித் பிரேமதாஸ வெற்றிபெறுவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. றோ கருத்து கணிப்புகளை மேற்கொண்டமைக்கான எந்த ஆவணங்களும் என்னிடம் இல்லை. எனது நெருங்கிய நண்பர் கூறிய கருத்தையே நான் ஊடகங்களுக்குக் கூறியிருந்தேன்.” என்றார்.
இது தொடர்பில் “இந்திய உயர்ஸ்தானிகராலயத்தை நாம் தொடர்புகொண்டபோது, ”அவ்விடயம் தொடர்பில் எந்தவிதமான கருத்துக்களை தெரிவிக்க முடியாது. அது தொடர்பில் தாம் அறிந்திருக்கவில்லை.“ உயர்ஸ்தானிகராலயத்தின் பேச்சாளர் நவிய சிங்லா எமக்கு தெரிவித்தார்.
‘றோ’ என்று அறியப்பட்ட மற்றும் அழைக்கப்படுகின்ற இந்தியாவின் வெளிநாட்டுப் புலனாய்வு அமைப்பான ‘ஆராய்ச்சி மற்றும் பகுப்பாய்வு அமைப்பு (Research and Analysis Wing)’ அந்நாட்டு நலனைக் கருத்திற்கொண்டு வெளிநாடுகளில் இந்தியாவின் நலனுக்கு அல்லது பாதுகாப்புக்கு எதிராக நடக்கும் சதிச் செயல்களை கண்காணிப்பதற்கும் அது தொடர்பான நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்குமான புலனாய்வுப் பணிகளில் ஈடுபட்டுள்ள அமைப்பாக இருக்கிறது.
‘றோ’வின் கருத்துக்கணிப்புக்களோ அந்த அமைப்பு மேற்கொள்ளும் புலனாய்வு நடவடிக்கைகள் தொடர்பிலோ பொதுவெளியில் எந்தவொரு தகவல்களும் பகிரப்படுவதில்லை, அந்த அமைப்பின் செயற்பாடுகள் மிகுந்த இரகசியத்தன்மை கொண்டதாகவே இருக்கும்
எனினும், 2019ஆம் ஆண்டும் அதாவது, கடந்த ஜனாதிபதித் தேர்தலின்போதும் சஜித் பிரேமதாஸ வெற்றிபெறுவார் என ‘றோ’ கருத்துக்கணிப்பை மேற்கொண்டதாக எவ்வாறு போலியான தகவல்கள் பரப்பப்பட்டனவோ அதேபோல இம்முறையும் ஜனாதிபதித் தேர்தலின்போது போலியான தகவல்கள் பரப்பப்படுகின்றனவா? என்கிற சந்தேகம் எழுகிறது.
ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் அரச புலனாய்வு பிரிவு (SIS) கருத்துக்கணிப்புகளை மேற்கொண்டிருந்ததாக போலியான தகவல் பகிரப்பட்டிருந்ததை சுயாதீன உண்மை சரிபார்ப்பு தளமொன்று உறுதி செய்திருந்தது.
அதுபோல ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் தாம் எந்தவிதமான கருத்துக்கணிப்புகளையும் மேற்கொள்ளவில்லை என ஐரோப்பிய ஒன்றியமும் தனது ‘எக்ஸ்’ தளத்தில் பதிவிட்டிருந்ததையும் அவதானிக்க முடிந்தது.
அவ்விதமான நிலையில், ‘றோ’ ஜனாதிபதித் தேர்தல் குறித்து கருத்துக்கணிப்பு செய்மைக்கான எந்தவொரு மூல ஆதாரங்களும் இல்லை.
Bullet Points :
- ”இது தொடர்பில் எந்தவிதமான கருத்துக்களை தெரிவிக்க முடியாது. இது தொடர்பில் தாம் அறிந்திருக்கவில்லை.“ என்று இந்திய உயர்ஸ்தானிகராலயத்தின் பேச்சாளர் நவிய சிங்லா தெரிவித்தார்.
- “றோ’ கருத்து கணிப்புக்களை மேற்கொண்டமைக்கான எந்த ஆவணங்களும் என்னிடம் இல்லை. எனது நெருங்கிய நண்பர் கூறிய கருத்தையே நான் ஊடகங்களுக்குக் கூறியிருந்தேன்.”
- 2019ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் ‘றோ’ கருத்து கணிப்புக்களை மேற்கொண்டதாகவும் அப்போது ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிட்ட சஜித் பிரேமதாஸ வெற்றிபெறுவார் என்று தெரிவிக்கப்பட்டிருந்தாலும் கோட்டாபய ராஜபக்ஷவே ஜனாதிபதி தேர்தலில் வெற்றிபெற்றிருந்தார்.