- நிலூஷா என்ற பெண் அமைச்சர் அலிசப்ரியின் தாயின் சகோதரியல்ல; தூரத்து உறவுக்காரர்.
- பெண்ணுக்கு கொரோனா என்று உறுதிப்படுத்தினால் என் பதவிகளை இராஜினாமா செய்வேன்-அமைச்சர் அலி சப்ரி.
- ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்த நிலுஷாவின் பீ.சி.ஆர் முடிவு நெகட்டிவ் என்று செவ்வாய்கிழமை அறிக்கை கிடைக்கப்பெற்றது.
- நிலூசாவிற்கு கொரோனா தொற்றியிருக்கவில்லை-சுகாதார, வைத்திய அதிகாரிகள்.
- பீ.சி.ஆர் சோதனையில் கொரோனா தொற்று உறுதியான பெண் அதே பகுதியைச் சேர்ந்த 69 வயதுடைய தமிழ்ப் பெண்மணி.
நீதி அமைச்சர் அலி சப்ரியின் சிறியதாய் கொரோனாதொற்றுக்குள்ளாகி இறந்தார். திருட்டுதனமாக இரண்டாவது பீ.சி.ஆர் செய்து நல்லடக்கம் செய்து விட்டார்கள். இலக்கம்: 32 வலகம்பா மாவத்தை போருபான வீதி, ரத்மலானை என்ற முகவரியை சேர்ந்த அஹமட் ஜுனைதீன் பாத்திமா நிலூஷா என்ற 83 வயது பெண் கடந்த நவம்பர் 15 ஆம் திகதி வீட்டில் மரணித்துள்ளார்.
சுகாதார பரிசேதகர்கள் வீட்டுக்கு வந்த போது அவர்களின் பணிக்கு குடும்பத்தார் இடையூறு ஏற்படுத்தியுள்ளனர். குடும்பத்தினரின் இடையூறுகளையும் தாண்டி சுகாதார பரிசோதகர்கள் சடலத்தை பீ.சி.ஆர் பரிசோதனைக்காக எடுத்து சென்றனர்.
இவரது பிரேத்த்தின் மீது மேற்கொள்ளப்பட்ட முதல் பீ.சி.ஆர் பரிசோதனையின் போது அவருக்கு கொரோனா பொசிட்டிவ் ஆனது மீண்டும் இரண்டாவது பீ.சி.ஆர் பரிசோதனையின் போது அரசியல் தலையிட்டால் அவரது பரிசோதனை முடிவு நெகட்டிவ் ஆக மாற்றப்பட்டது.
சிங்கள சமூக வலைத்தளங்களில் இவ்வாறு செய்திகள் பரவியிருந்தன. வலைத்தளங்களில் இந்த செய்தி தொடர்பில் ஆயிரத்துக்கு அதிகமான பின்னூட்டங்களும், நானுறுக்கும் அதிகமான பகிர்வுகளும் இடம் பெற்றுள்ளமை காண முடிந்ததன.
“அலி சப்ரியின் சிறிய தாய்க்கு எப்படி வயது 83 ஆக முடியும்”
“உயிரிழந்தவர் பற்றி டோரோன் கமரா பயன்படுத்தி தேடிப்பார்க்கவில்லையா?”
“வழக்கு தாக்கல் செய்தால் பிரேத்தத்தை தோண்டி எடுக்க முடியாதா” போன்ற பின்னூட்டங்கள் இந்த செய்திக்கு இடப்பட்டிருந்தன.
சிங்கள சமூக ஊடகங்களில் இந்த செய்தி எழுத்து வடிவத்தில் அமையப் பெற்றிருந்ததால் இந்த செய்தி பற்றி ஆய்வை மேற்கொள்ளும் போது நவீன உத்திகளை (tool) பயன்படுத்த முடியாத நிலை காணப்பட்டதால் பாரம்பரியமாக பின்பற்றப்படும் தகவலை உறுதிப்படுத்தும் வாக்குமூலம், ஆவணங்களை பயன்படுத்தியே இந்த செய்தியின் உண்மைத்தன்மை கண்டறியப்பட்டது.
நிலூஷா என்ற பெண் களுத்துறையை சேர்ந்தவர், குடும்ப பிரச்சினை ஒன்று காரணமாக அவரும் அவரது சகோதரியும் அநுராதபுரம் நேகமை என்ற கிராமத்தில் நீண்ட காலம் வசித்தாக குறித்த கிராமத்தில் அவர் வசித்த வீட்டின் அயல் வீட்டுக்காரர் தெரிவித்தார்.
இவர்கள் இருவரும் திருமணம் முடிக்காது வாழ்ந்தனர், சுயதொழிலாக தையலில் ஈடுபட்டு வந்ததுடன் அவர்களின் உறவுக்காரர்கள் சில வருடங்களுக்கு முன்னர் இங்கு வந்து அழைத்துச் சென்றனர். பின்னர் இரத்தலானை பகுதியில் அவர்கள்இருவரும் வாழ்ந்து வந்ததாக நேகமையில் அவர்கள் வசித்த வீட்டின் அயல் வீட்டுக்காரர் எமக்கு தெரிவித்தார்.
உயிரிழந்த பாத்திமா நிலூஷா என்ற பெண்ணின் சகோதரனின் மகனை(பெயர் குறிப்பிட விரும்பாத) தொடர்பு கொண்ட போது.
தனது அத்தை நோய்வாய்ப்பட்டுள்ளதாக நவம்பர் மாதம் 15 ஆம் திகதி மதியம் தனக்கு அறிவிக்கப்பட்டதாகவும் பின்னர் அவர் சென்று பார்த்த போது குறித்த பெண் கவலைக்கிடமாக இருந்துள்ளார்.
ஏற்கனவே நீரிழிவு, உயர்குருதி அழுத்தம் போன்ற தொற்றா நோய்கள் பலவற்றுக்கு உள்ளாகியிருந்த நிலையில் அன்றைய தினம் மாலை 4:00 மணியளவில் உயிரிழந்ததாக அவர் தெரிவித்தார்.
உயிரிழந்த பின்னர் நாங்கள் பிரதேச பள்ளிவாசலுக்கு அறிவித்தோம், பள்ளிவாசல் ஊடாக மரணப்பதிவாளரை தொடர்பு கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டோம்.
சுனந்தவதி டி சில்வா என்ற மரணப்பதிவாளரை சந்தித்த போது அவர் ஊடாக கல்கிஸ்ஸை பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டு அவர்களின் உதவியுடன் பிரதேச பள்ளிவாசலின் ஜனாஸா வாகனத்தில் பிரேதத்தை களுபோவில வைத்தியசாலைக்கு கொண்டு சென்றதாக அவர் மேலும் தெரிவித்தார்.
பிரதேச சுகாதார அதிகாரியோ, கிராம சேவகரோ உயிரிழந்த பெண்ணின்வீட்டுக்கு வரவில்லை, ஞாயிற்றுக்கிழமை என்பதால் பிரேதத்துக்கான பீ.சீ.ஆர் பரிசோதனை அடுத்த நாள் மதியம் எடுக்கப்பட்டு செவ்வாய் கிழமை அவருக்கு கொரோனா தொற்று இல்லை என அறிக்கை வந்தது பின்னர் செவ்வாய்கிழமை நவம்பர் 17 ஆம் திகதி சடலம் தம்மிடம் கையளிக்கப்பட்டதாக அவர் தெரிவித்தார்.
இந்த விடயம் தொடர்பில் போருபன பிரதேச சுகாதார பரிசோதகர் நுவன் ஜயரங்க இவ்வாறு தெரிவித்தார். “குறித்த முகவரியில் குறித்த திகதியில் ஒரு பெண் உயிரிழந்தாக குடும்பத்தாரின் தகவலுக்கு அமைய நாம் செயற்பட்டோம்.
இறுதி கிரிகைகளை செய்ய குடும்பத்தினர் அனுமதி கேட்ட போதும் கோவிட் 19 பரவல் காலம் என்பதால் நாம் பிரேதத்தின் மீதான பீ .சி.ஆர் பரிசோதனையை களுபோவில தெற்கு கொழும்பு போதனா வைத்திய சாலையில் மேற்கொண்டோம்.
அவர்களது குடும்ப உறுப்பினர்கள் இந்த விடயத்துக்கு பூரண ஒத்துழைப்பு வழங்கினர் இந்த விடயத்தில் எந்த அரசியல் தலையீடுகளும் இருக்கவில்லை என அவர் தெரிவித்தார்.”
இந்த தகவலை உறுதிப்படுத்த களுபோவில சட்ட வைத்திய அதிகாரி பிரசன்ன தசநாயக்கவை தொடர்பு கொண்டபோது கடந்த காலங்களில் களுபோவில வைத்திய சாலையில் பீ.சீ.ஆர் பரிசோதனை மேற்கொண்ட சடலங்களில் மூன்று சடலங்களிலேயே கொவிட் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளன.
அவர்களில் இருவர் தமிழ் பெண்கள், ஒருவர் ஆண் என தெரிவித்தார். இவரது கருத்தின் அடிப்படையில் பார்க்கும் போது நிலூஷா என்ற பெண்ணுக்கு கொவிட் தொற்று இல்லை என்பது உறுதியாகின்றது.
அதேவேளை நவம்பர் மாதம் 17 ஆம் திகதி தகவல் திணைக்களப் பணிப்பாளர் நாலக்க கழுவெவ வெளியிட்ட அறிக்கையிலும், 69வயதான
ரத்மலானையை சேர்ந்த பெண்னே உயிரிழந்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்நிலையில் இது தொடர்பில் வைத்தியசாலையை தொடர்பு கொண்டு கேட்டபோது இரத்மலானை 37 ஆம் தோட்டத்தை சேர்ந்த தமிழ் பெண் ஒருவரே அன்றைய தினம் மரணித்ததாக தெரிவித்தனர். இந்த அறிக்கையின் பிரகாரம் நிலூஷா என்ற பெண்ணின் பெயர் அல்லது அவர் சம்பந்தமான எந்த விடயமும் அறிக்கையில் குறிப்பிட்டிருக்கப்படவில்லை 69 வயதான பெண் தமிழ் பெண் என்பதும் உறுதியாகிறது.
நிலுஷாவின் மருமகனிடம் அமைச்சரின் உறவு முறை பற்றி கேட்ட போது.
அமைச்ச்சசர் அலிசப்ரி எமது உறவுக்காரர் என்ற போதிலும் நாம் அவரது பெயரை எந்த இடத்திலும் பயன்படுத்தவும் இல்லை பிரேதத்தை பெற்றுக் கொள்ள எந்த உதவியையும் அவரிடம் இருந்து பெறவும் இல்லை என்றார்.
“உயிரிழந்த அத்தை அமைச்சரின் தாயின் உடன் பிறந்த சகோதரி என்ற கூறுவதில் எந்த உண்மையும் இல்லை. நாங்கள் முதலியார் குடும்பத்தை சேர்ந்தவர்கள், அமைச்சரும் அதே குடும்பத்தை சேர்ந்தவர் எனவே உயிரிழந்த எங்கள் அத்தை அமைச்சருக்கு தூரத்து உறவக்கார்ரே என்றார்.” என்று தெரிவித்தார்.
இந்த விடயம் சம்பந்தமாக பாராளுமன்றத்தில் அமைச்சர் அலிசப்ரி பேசும் போது
“ சித்தி என கூறப்பட்ட பெண் கொரோனா தொற்றாளர் இல்லை என்றும் அவ்வாறு தொற்றோடு குறித்த பெண் அடக்கம் செய்யப்பட்டது உறுதி செய்யப்பட்டால் தனது பதவியை இராஜினாமா செய்வதாகவும் கூறியிருந்தார்”
அதேவேளை அந்த விடயம் சம்பந்தமாக அமைச்சர் அலி சப்ரியின் கருத்தை பெற்றுக் கொள்ள நாம் முயற்சித்த போதும் அவரை தொடர்பு கொள்ள முடியவில்லை.
இந்த விடயம் சம்பந்தமாக ஏற்கனவே சிங்கள இணையத்தளம் ஒன்றுக்கு அவர் வழங்கிய செவ்வியில் 76 வயதான எனது தாய்க்கு 83 வயதில் தங்கை ஒருவர் இருக்க முடியாது, தாயின் ஒரே தங்கை உயிருடன் இருக்கின்றார் என்று தெரிவித்துள்ளார்.
ரத்மலானையில் உயிரிழந்தவர் எனக்கு தூரத்து உறவுக்காரர் என்றும் அவரது இறுதிகிரிகையில் அமைச்சர் கலந்து கொள்ளவில்லை என்று தெரிவித்துள்ளதுடன், குறித்த பெண்ணின் PCR பரிசோதனையில் தான் எந்த வகையிலும் அழுத்தங்களை பிரயோகிக்க வில்லை என்றும் தெரிவித்துள்ளார்.
PCR பரிசோதனையின் பின்னர் குறித்த பெண்ணின் சடலம் குடும்பத்தாரிடம் ஒப்படைக்கப்பட்டதாக அவர் மேலும் தெரிவித்தார்.
PCR பரிசோதனைகளின் பின்னர் செவ்வாய்கிழமை ஜனாசாவை தானே பொறுப்பேற்று அவரது இறுதிக்கிரிகைகளை தமது வழக்கப்படி நல்லடக்கம் செய்ததாகவும் நிலூஷாவின் மருமகன் தெரிவித்தார்.
கொரோனாவால் உயிரிழக்கும் முஸ்லிம் சடலங்கள் எரிக்கப்படுவதால் நாட்டில் சில சர்ச்சைகள் ஏற்பட்டுள்ள நிலையில் அமைச்சர் அலிசப்ரி மீது அவதூறு ஏற்படுத்தும் நோக்கில் உருவாக்கப்பட்ட போலிச் செய்தி என்பது இந்த விடயங்களின் ஊடாக புரிந்து கொள்ளகூடியதாக உள்ளது.