Saturday, December 21, 2024
29 C
Colombo

GIJN வழிகாட்டி: பெண் ஊடகவியலாளர்களுக்கான வளங்கள்

பெண்  ஊடகவியலாளர்கள் தங்கள் வேலைகளைச் செய்யும்போது தனித்துவமான சவால்களை எதிர்கொள்கின்றனர். உலகெங்கிலும் உள்ள நம் சக பெண் பத்திரிகையாளர்கள் தங்கள் பணியிடங்களில் எதிர்நோக்கும் பிரச்சனைகளுக்கு  உதவும் பொருட்டு, GIJN பல்வேறு வளங்களைத்  திரட்டியுள்ளது. இவ்வளங்கள் பெண் ஊடகவியலாளர்கள் வலையமைப்புகளை  கண்டடையவும், உசாத்துணை வளங்கள், இணையரீதியிலான  துன்புறுத்தல்கள், பணியிட பாகுபாடு மற்றும் பாலின அடிப்படையிலான வன்முறை போன்ற பிரச்சினைகளைக் கையாளும் வகையில்  கருவிகளை உள்ளடக்கியதாகும்.

இவ்வளங்கள்  நிருபர்களுக்கு எளிதாக வாய்ப்புகளைக் கண்டறியவும் மற்றும் பெண் ஊடகவியலாளர்களுக்காக பிரத்தியேகமாக வடிவமைக்கப்பட்ட வளங்களைக் கண்டறியவும் உதவும்.

வளங்களின்  தொகுப்பை நாங்கள் சேகரித்துள்ளோம். எங்கள் தலைப்புகள்:

நாம் ஏதாவது தவறவிட்டுள்ளோமா? எங்களுக்கு இங்கே ஒரு பரிந்துரையை அனுப்புங்கள், அவற்றைக்கொண்டு எங்கள் பட்டியலை மேலும் விரிவாக்குவோம்.

சர்வதேச வலையமைப்புக்கள்

தொழில்முறை சார்ந்த  வலையமைப்புகள், சகாக்களின் ஆதரவு, வழிகாட்டல், ஒத்துழைப்பு மற்றும் தொடர்புகளுக்கு சிறந்த வளங்களாக இருக்கலாம்.

ஆண் ஆதிக்கம் செலுத்தும் புலனாய்வு ஊடகவியல் துறையில், புரிந்துணர்வு மற்றும் ஆதரவுக்காக மற்ற பெண்களை அணுகுவது உதவியாக இருக்கும். அதனால்தான் பிராந்திய மற்றும் உலகளாவிய வலையமைப்புகளின் பட்டியலை குறிப்பாக உலகெங்கிலும் உள்ள பெண் பத்திரிகையாளர்களுக்காக நாங்கள் தொகுத்துள்ளோம்.

GIJN Women என்பது புலனாய்வு ஊடகவியலில் பெண்கள் எதிர்நோக்கும்  பிரச்சினைகள்  விவாதிக்க உலகளாவிய புலனாய்வு ஊடகவியல் வலையமைப்பு (GIJN) உருவாக்கிய இணையம் சார்ந்த   ஓர் குழுவாகும். 

2017 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்ட,‘பத்திரிகைத்துறையில் உள்ள   பெண் ஊடகவியலாளர்களுக்கான  கூட்டணி” –(  Coalition for Women in Journalism ) உலகெங்கிலும் உள்ள பெண் பத்திரிகையாளர்களிடையே நட்புறவை  வளர்ப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது. அனுபவம் வாய்ந்த பெண் பத்திரிகையாளர்களிடமிருந்து வளங்கள், நிகழ்வுகள், ஆலோசனை மற்றும் வழிகாட்டுதல் ஆகியவற்றை வழங்குகிறது. இக் கூட்டணி லத்தீன் அமெரிக்கா மற்றும் ஆசியா முழுவதும் தொடர்புகளை கொண்டுள்ளது.

அமெரிக்காவின் வாஷிங்டன் டிசியைத் தளமாகக் கொண்ட  சர்வதேச மகளிர் ஊடக அறக்கட்டளை –( International Women’s Media Foundation ) 1990 இல் நிறுவப்பட்டதிலிருந்து  இன்றுவரை  உதவித்தொகைகள் பயிற்சிகள் மற்றும் பல விருதுகளை வழங்குகிறது. மேலும் இதுவரை கவனம் செலுத்தப்படாத செய்தி ஆய்வுகளில் ஈடுபட உலகெங்கிலும் உள்ள பெண் ஊடகவியலாளர்களுக்கான பயண அறிக்கையிடல்  ஏற்பாடுகளையும் செய்கிறது.

IMWF  ஒரு அவசர நிதிக்கட்டமைப்பை  கொண்டுள்ள அதேவேளை பெண் ஊடகவியலாளர்களுக்கான பாதுகாப்பு பயிற்சிக்கும் அனுசரணை வழங்குகிறது. அவ்வாறான “பாதுகாப்பு”  சம்பந்தபட்ட  தகவல்களை கீழே காண முடியும்.

வானொலி மற்றும் தொலைக்காட்சியில் உள்ள பெண்களின் சர்வதேச சங்கம்-  International Association of Women in Radio & Television, ஒளிபரப்பு மற்றும் இலத்திரனியல் ஊடகங்களில் பணிபுரியும் பெண்களுக்கான உலகளாவிய வலையமைப்பாகும்.

இது ஆப்கானிஸ்தான், கேமரூன்,ஈராக்-குர்திஸ்தான், மால்டோவா, நோர்வே, தென்னாபிரிக்கா, உகண்டா, கம்போடியா, இந்தியா, கென்யா, நேபாளம், பிலிப்பைன்ஸ், தான்சானியா மற்றும் அமெரிக்கா போன்ற நாடுகளில் கிளைகளைக் கொண்டுள்ளது.

IAWRT பெண்கள் மற்றும் ஊடகங்களை மையமாகக் கொண்ட உலகளாவிய திட்டங்களை ஆதரிக்கின்றதோடு மட்டுமில்லாது , மாநாடுகளை ஏற்பாடு செய்தல்  மற்றும் தொழில்முறை திறன் பயிற்சி வாய்ப்புகளை வழங்குதல் போன்ற நடவடிக்கைகளிலும்  ஈடுபடுகிறது.

Women Photograph  என்பது 2017 இல் தொடங்கப்பட்ட ஒரு இலாப நோக்கமற்ற நிறுவனமாகும். இந்நிறுவனம் ‘புகைப்பட ஊடகவியல்துறையின் பிரதான கதைசொல்லிகள், அவர்கள் சொல்ல விரும்பும்  பல்சமூங்களைப்போல இத்துறையையும் பல்வகைமைப்படுத்தல்’ என்ற  குறிக்கோளுடன் இயங்கி வருகிறது. 

இந்த வலையமைப்பு உலகெங்கிலும் 1,000 சுயாதீன ஆவணப்பட புகைப்படக்காரர்களின் காப்பகத்தை இயக்குகிறது, அவை பெண் மற்றும் பைனரி (binary) அல்லாத காட்சி ஊடகவியலாளர்கள் என்று அடையாளம் காட்டுகின்றன, மேலும் பத்திரிகையாசிரியர்கள்  பெண்களால் எடுக்கப்பட  புகைப்படங்களை அதிகளவில் பிரசுரிக்க பல்வேறுபட்ட பிரயத்தனங்களை மேற்கொள்கிறது. 

அவர்கள் சேகரித்த 2020இல் வெளியான பத்திரிகைகளின் முதற்பக்கத்தில் வெளியான புகைப்படங்கள் தொடர்பான  தரவை இங்கே பார்க்கலாம்.

Media Moms என்பது 500 அங்கத்தவர்களைக் கொண்ட  ஒரு மூடிய பேஸ்புக் குழுவாகும், இதில் தாயாரான பத்திரிகையாளராக செய்தி பீடங்களில் பணிபுரிவோர், ஊடகக்கல்வி  மற்றும் ஊடகங்களின் வணிகப் பக்கங்களில் பணிபுரியும் பல் தாய்மார் உள்ளனர். அதன் குறிக்கோள் கூற்று: “வீட்டிலும் வேலைத்தளத்திலும்  காலக்கெடு மற்றும் வாழ்க்கையை சமநிலைப்படுத்துவதிலும்  தனித்துவமான சவால்களை நாங்கள் எதிர்கொள்கிறோம். கதைகள், சிக்கல்கள், தீர்வுகள் மற்றும் மெய்நிகர் வெளியில் அரவணைப்புகளைப் பகிர்ந்து கொள்ள இது ஒரு ஆதரவான இடம்.” என்று அமைகிறது.

ஆபிரிக்காவிலுள்ள வலையமைப்புகள்

WanaData என்பது, Code for Africa என்னும் நிறுவனத்தால் ஆரம்பிக்கப்பட்ட, ஆபிரிக்க பெண் பத்திரிகையாளர்கள், தரவு வல்லுநர்கள் மற்றும் தொழில்நுட்ப வல்லுநர்கள் தரவு சார்ந்த கதைகளை உருவாக்க ஒத்துழைக்கிறது.    

#Wanadata என்ற குறியீட்டை பயன்படுத்தி ட்விட்டரில் கதைகள் மற்றும் உரையாடல்களைக் கண்டறிய முடியும். குழுவில் சேர அல்லது ஒரு கதை தொடர்பில் மேலதிக தகவல்களை இங்கே பெற முடியும். இவ்வலையமைப்பானது  அதன் கூட்டாளர்களுடன் சேர்ந்து, நவீன ஊடகவியல் சார்ந்த பயிற்சித் திட்டத்தை வழங்குகிறது.

2016 இல் நிறுவப்பட்ட, ஆபிரிக்க ஊடகப் பெண்கள் –African Women in Media (AWiM) ஆண்டுதோறும் கலந்துரையாடலில் ஈடுபடுவதோடு , பேஸ்புக்கில் ஒரு குழுவையும்  நடத்தி  வாராந்த செய்திமடல் ஒன்றையும் வெளியிடுகிறது. இது தொழில்துறையில் ஆபிரிக்க பெண்களின் தொழில்முறை வளர்ச்சி மற்றும் ஊடகங்களில் பாலினப் பிரச்சினைகளின் பிரதிநிதித்துவம் ஆகியவற்றை மையமாகக் கொண்டுள்ளது. 2020 ஆம் ஆண்டில், ஃபோஜோ (Fojo) மீடியா நிறுவனத்துடன் இணைந்து , துணை-சஹாரா ஆப்பிரிக்காவில் பெண் பத்திரிகையாளர்களுக்கான நுழைவு தடைகளை வெளிப்படுத்தும் ஒரு ஆய்வை அவர்கள் வெளியிட்டனர். இதற்காக அவர்கள் 17 ஆபிரிக்க நாடுகளைச் சேர்ந்த 125 பெண் பத்திரிகையாளர்களை ஆய்வு செய்தனர்.

1983 இல் நிறுவப்பட்ட, கென்யாவில் உள்ள கென்ய ஊடகப் பெண்கள் சங்கம் ;- Association of Media Women in Kenya என்பது இலாப நோக்கமற்ற உறுப்பினர் அமைப்பாகும், இது தொழில்துறையிலும் சமூகத்திலும் ஊடகங்கள் மூலம் பெண்களுக்கு சமத்துவம் மற்றும் தெரிவுநிலையை மையமாகக் கொண்டுள்ளது. AMWIK ஆனது பெண் பத்திரிகையாளரின் இணைய பாதுகாப்பு தொடர்பான  கணக்கெடுப்பு உள்ளிட்ட வளங்களை வெளியிடுவது மட்டுமின்றி உதவித்தொகை நிதியையும்  வழங்குகிறது.

நைஜீரிய பெண் ஊடகவியலாளர் சங்கம் – Nigeria Association of Women Journalists  25 ஆண்டுகளுக்கு முன்பு நிறுவப்பட்டது மற்றும் ஊடகங்களில் பெண்களின் அணுகல் மற்றும் தலைமைத்துவத்தை அதிகரிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது. NAWOJ நைஜீரியாவில் பெண் பத்திரிகையாளர்களுக்கு ஆலோசனை மற்றும் பயிற்சியை வழங்குகிறது.

கெமரூன் ஊடகப் பெண்கள்- Cameroon Media Women ,#MeToo இயக்கத்திற்கு பதிலளிக்கும் விதமாக 2018 இல் ஒரு வாட்ஸ்அப் (WhatsApp) செயலியின் மூலம் குழுவாக மற்றும் ஒரு மூடப்பட்ட பேஸ்புக் பக்கமாக தொடங்கப்பட்டது. கேமரூனின் நாட்டின் இணைப்பு குறியீட்டெண்ணை குறிப்பிடும் வகையில் ;  #StopSexualHarassment237என்ற குறியீடு  மூலம், பெண் பத்திரிகையாளர்கள் ட்விட்டர் தளத்தில் கலந்துரையாடல் நடத்தினர் மற்றும் செய்தி அறைகளில் பெண்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் குறித்து விவாதித்து வீடியோக்களையும்  பகிர்ந்து கொண்டனர்.

செனகலை தளமாகக் கொண்ட பெண்கள், ஊடகம், பாலின சமத்துவம் மற்றும் மேம்பாட்டிற்கான ஆபிரிக்காவுக்குள்ளான வலையமைப்பு-  Inter-African Network for Women, Media, Gender Equity and Development 2001 இல் நிறுவப்பட்ட மற்றும் மேற்கு மற்றும் மத்திய ஆபிரிக்காவில் 22 நாடுகளில் இயங்கும் பெண்களுக்கான ஒரு ஊடக மற்றும் தகவல் தொடர்பு அமைப்பாகும். FAMEDEV ஆனது ஊடகம், பாலின சமத்துவம் மற்றும் ஆப்பிரிக்காவின் வளர்ச்சிக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. இது பெண் பத்திரிகையாளர்களுக்கு பயிற்சி அளிக்கும் அதேவேளை, ஆலோசனை , தகவல் மற்றும் பயிற்சிக்கு வளங்களுடன் கூடிய கருவிகளை உருவாக்கி  சமூக தொழில்முனைவை ஊக்குவிக்கிறது.

லத்தீன் அமெரிக்காவிலுள்ள வலையமைப்புகள்

2013 இல் தொடங்கப்பட்ட Chicas Poderosas  லத்தீன் அமெரிக்கா மற்றும் ஸ்பெயின் உட்பட்ட  13 நாடுகளில் கிளைகளைக்  கொண்டுள்ளது. இது புலனாய்வு பத்திரிகை பட்டறைகள் மற்றும் இணைய பாதுகாப்பு பயிற்சிகளை ஏற்பாடு செய்கிறது.

மேலும் இந்நிறுவனம் தலைமை தாங்குதல் , டிஜிட்டல் மற்றும் புதிய ஊடக திறன்களில் பெண்களுக்கு பயிற்சி அளித்தல், வழிகாட்டுதல் மற்றும் உதவித்தொகை வழங்கும் வசதிகளையும்  ஏற்படுத்தியுள்ளது.

2017 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்ட, பத்திரிகையில் பணியாற்றும்  பெண்களுக்கான கூட்டணி- Coalition for Women in Journalism  “உலகெங்கிலும் உள்ள பெண் பத்திரிகையாளர்களிடையே நட்புறவை” வளர்ப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது, அனுபவம் வாய்ந்த பெண் பத்திரிகையாளர்களிடமிருந்து வளங்கள், நிகழ்வுகள், ஆலோசனை மற்றும் வழிகாட்டுதல் ஆகியவற்றை வழங்குகிறது. இக்கூட்டணிக்கு மெக்ஸிகோவில் ஒரு கிளை உள்ளது.

மத்திய கிழக்கில் உள்ள வலையமைப்புகள்

1999 இல் நிறுவப்பட்ட, அரேபிய  பெண்கள் ஊடக மையம் (Arab Women Media Center) என்பது பெண்கள் மற்றும் இளைஞர்களுக்கான வேலை பயிற்சி, திறன் மேம்பாடு மற்றும் ஊடக கல்வியறிவு ஆகியவற்றை மையமாகக் கொண்ட அம்மானை தளமாகக்  கொண்ட ஓர்  அரசு சாரா அமைப்பாகும். பெண்கள் மற்றும் ஊடகங்களை மையமாகக் கொண்ட ஆவணப்படங்கள் மற்றும் வளங்களை AWMC உருவாக்குகிறது, மேலும் இப்பிராந்தியத்தில்  உள்ள பெண் பத்திரிகையாளர்களை இணைக்க இணையரீதியிலான வலையமைப்பையும் கொண்டுள்ளது. 

நெதர்லாந்தை அடிப்படையாகக் கொண்டு, சிரியாவில் பெண் பத்திரிக்கையாளர்களின் குரல்களைப் பெருக்கவும், தலைமைப் பதவிகளில் சேர உதவுவதற்காகவும் சிரிய பெண் பத்திரிக்கையாளர் வலையமைப்பு – Syrian Female Journalists Network (SFJN) 2012 இல் நிறுவப்பட்டது. ஆண் மற்றும் பெண் உறுப்பினர்களைக் கொண்ட SFJN, சிரியாவிலும், துருக்கி, லெபனான் மற்றும் ஜோர்தானிலும் உள்ள பெண் ஊடகவியலாளர்களுக்கு பாலினம் மற்றும் பெண்ணியம் தொடர்பான பயிற்சிகளை வழங்குகிறது. மேலும் இவ்வலையமைப்பு அதன் உறுப்பினர்களுடன் வளங்களையும் புதிய வாய்ப்புகளையும் பகிர்ந்து கொள்கிறது.

மேரி கொல்வின் பத்திரிகையாளர்களின் வலையமைப்பு (The Marie Colvin Journalists’ Networkஎன்பது பெண் ஊடகவியலாளர்களின் இணையத்தளம் சார்ந்த  சமூகமாகும், அதன் உறுப்பினர்கள் நடைமுறை ஆதரவையும் வழிகாட்டலையும் பெறுவதோடு  மற்றவர்களுடன் ஆலோசனையைப் பகிர்ந்து கொள்கிறார்கள். அரபு உலகில் பணிபுரியும் அரபு மொழி பேசும் பெண் பத்திரிகையாளர்களுக்கு இது இலவசமாக தனது சேவையினை வழங்குகிறது.

வட அமெரிக்காவிலுள்ள வலையமைப்புகள் 

1985 இல் தொடங்கப்பட்ட, ஊடக மகளிர்( Journalism & Women Symposium), அமெரிக்காவில் உள்ள பெண் பத்திரிகையாளர்களுக்கான ஒரு சமூகத்தை உருவாக்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. JAWS ஊடகங்களில் “வளங்கள், ஆதரவு, பயிற்சி மற்றும் பெண்களைப் பாதிக்கும் பிரச்சினைகள் பற்றிய தகவல்களை” வழங்குவதில் கவனம் செலுத்துகிறது. JAWS வருடாந்த மாநாட்டை நடத்துவதோடு தொடர்ந்து வழிகாட்டுதலையும் வழங்குகிறது.

அமெரிக்காவின் வாஷிங்டன், டிசியைத் தளமாகக்கொண்டு  சர்வதேச மகளிர் ஊடக அறக்கட்டளை –  International Women’s Media Foundation  1990 இல் நிறுவப்பட்டது.  இன்று உலகெங்கிலும் உள்ள பெண் ஊடகவியலாளர்களுக்கு மானியங்கள், பயிற்சி மற்றும் அறிக்கையிடல் பயணங்களை வழங்குவதோடு குறைவாக அறிக்கையிடப்பட்ட கதைகளில் கவனம் செலுத்துகிறது.

IWMF ஒரு அவசர நிதிக்கட்டமைப்பை கொண்டுள்ள அதேவேளை பெண் ஊடகவியலாளர்களுக்கான பாதுகாப்பு பயிற்சிக்கும் அனுசரணை வழங்குகிறது. அவ்வாறான  “பாதுகாப்பு”  சம்பந்தபட்ட  தகவல்களை கீழே காண முடியும்.

ஐக்கிய அமெரிக்காவினை மையமாகக்கொண்டு 1909 இல் தொடங்கப்பட்ட-  Association for Women in Communications  ஆனது  பெண்களுக்கான கற்றல் வாய்ப்புகள், வேலைவாய்ப்பு மற்றும் பெண் தலைவர்களின் வலையமைப்பு மூலம் தொடர்புகளில் பெண்களின் பங்கை உயர்த்த உதவுகிறது.

ஆசியாவில் உள்ள வலையமைப்புகள்

இந்தியாவில் பெண்கள் ஊடகவியலாளர்களின் வலையமைப்பு –Network of Women in Media, India (NWMI) என்பது இந்தியாவில் உள்ள பெண் ஊடகவியலாளர்களுக்கு “தகவல் மற்றும் வளங்களைப் பகிர்ந்து கொள்ளவும், கருத்துகளைப் பரிமாறவும், ஊடக விழிப்புணர்வு மற்றும் நெறிமுறைகளை ஊக்குவிக்கவும், பாலின சமத்துவம் மற்றும் நீதிக்காகவும் வேலைத்திட்டங்களை” மேற்கொள்ளுவதற்கும் ஒரு தளத்தை தொழில்த்துறைக்குள்ளும், சமூகத்திற்கும் வழங்குகிறது.. NWMI நாடு முழுவதும் 16 கிளைகளை கொண்டுள்ளது.

உழைக்கும் பெண் ஊடகவியலாளர்கள் அமைப்பானது- Working Women Journalists   நேபாளத்தில் உள்ள  ஒரு ஆலோசனை நிறுவனமாகும். இது ஊடகங்களில் பெண்களுக்கு அதிக பங்கேற்பு மற்றும் சம வாய்ப்புக்காக குரலெழுப்புவதுடன்  பயிற்சிகள்இ கருத்தரங்குகள் மற்றும் பட்டறைகளை வழங்குகிறது.

NuVoices வலையமைப்பு, ஊடகவியலாளர்கள் உட்பட சீனா தொடர்பில்  பணிபுரியும் பெண்களுக்கு ஆதரவு வழங்குவதோடு  ஒரு மூடிய பேஸ்புக் பக்கத்தைக் கொண்டுள்ளது. மேலும் சீனா, அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவில் கிளைகளை கொண்டிருப்பதோடு சீனா தொடர்பான பெண் நிபுணர்களின் தரவுத்தளமொன்றையும் கொண்டுள்ளது.

2017 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டஊடகத்திலுள்ள “பெண் ஊடகவியலாளர்களுக்கான  கூட்டணி – Coalition for Women in Journalism  ” உலகெங்கிலும் உள்ள பெண் பத்திரிகையாளர்களிடையே நட்புறவை” வளர்ப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது. அனுபவம் வாய்ந்த பெண் பத்திரிகையாளர்களிடமிருந்து வளங்கள், நிகழ்வுகள், ஆலோசனை மற்றும் வழிகாட்டுதல் ஆகியவற்றை வழங்குகிறது. இக் கூட்டணி லத்தீன் அமெரிக்கா,பாகிஸ்தான், சீனா மற்றும் இந்தியாவில் கிளைகளை  கொண்டுள்ளது.

Women in Media Network Japan ஆனது 2018 இல் 86 பெண் பத்திரிகையாளர்களால் உருவாக்கப்பட்டதோடு  பாலியல் துன்புறுத்தலுக்கு எதிரான #WithYou movement இயக்கத்தில் இருந்து வளர்ந்தது.

ஐரோப்பாவில் உள்ள வலையமைப்புகள்

ஐக்கிய இராச்சியத்தின் (UK) பெண் பத்திரிக்கையாளர்களின் குழு 2017 ஆம் ஆண்டில் இரண்டாவது மாற்று மூலம்- The Second Source எனப்படும் பெண்களுக்கான மாற்று தொழில்முறை வலையமைப்பாக உருவாக்கியது. அத்துடன் இவ்வமைப்பு  ஊடகங்களிருந்து வரும் தொந்தரவுகளை கையாளவும், விழிப்புணர்வை ஊக்குவிப்பதையும், பெண்களின் உரிமைகளைத் தெரிவிப்பதையும், தொழிலில் மாற்றத்தை உருவாக்குவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது. மேலும் இந்நிறுவனமானது  “முழு நேர தொழில்முறை ஊடகவியலாளர்களாகத் தொடங்கும் பெண்களை இலக்காகக் கொண்ட, தொழில்துறையிலிருந்து வெளியேறுவது தொடர்பில் ஆலோசிப்பவர்கள் அல்லது அவர்களுக்கு வழிகாட்டல் தேவை என்று சிந்திப்போருக்குமாக  ஒரு வழிகாட்டல் திட்டத்தை அறிமுகப்படுத்தியது.” இது தொழில் ஆலோசனை மட்டுமல்ல, வேலை தொடர்பான சவால்களைச் சமாளிக்கும் ஆலோசனையையும் வழங்கும் நோக்கம் கொண்டது.

லண்டனை தளமாகக் கொண்ட ஊடகத்துறையில் பெண்கள்- Women in Journalism  என்பது இங்கிலாந்தில் உள்ள ஊடகங்களில் பெண்களின் தொழில்முறை வலையமைப்பு ஆகும். WIJ கருத்தரங்குகள், குழு விவாதங்கள், ஆய்வுகள், மற்றும் வலையமைப்பு நிகழ்வுகளை நடத்துவதோடு மேலும் வளர்ந்துவரும் இளம் மற்றும் மற்றும் நடுத்தரவயது பெண் பத்திரிகையாளர்களுக்கான வழிகாட்டுதல் திட்டத்தை கொண்டுள்ளது.

பிரான்சில் – Prenons la une என்பது ஊடகங்களில் பெண்களின் நியாயமான பிரதிநிதித்துவம் மற்றும் செய்தி அறைகளில் தொழில்முறை சமத்துவம் ஆகியவற்றை ஆதரிக்கும் பெண் பத்திரிகையாளர்களின் சங்கமாகும். இவ்வலையமைப்பு சில மாதங்களுக்கு ஒருமுறை சந்தித்து பாகுபாடு மற்றும் தொந்தரவுகளை எதிர்கொள்ளும் பெண்களுக்கு ஆதரவை வழங்குகிறது.

ஜெர்மனியில், Journalistinnenbund என்பது நாடு முழுவதும், பத்திரிகை துறையில் பணிபுரியும் 400 க்கும் மேற்பட்ட பெண்களின் தலைமுறைகளுக்கிடையேயான  வலையமைப்பு ஆகும். 1987 இல் நிறுவப்பட்ட இந்த அமைப்பு, நாடு முழுவதும் பிராந்தியக் குழுக்களையும், வளர்ந்து வரும் பத்திரிகையாளர்களுக்கான வழிகாட்டுதல் திட்டத்தையும் கொண்டுள்ளது.

Chicas Poderosas Spain என்பது 2018 இல் 155 பேர் கலந்து கொண்ட மாநாட்டில் தொடங்கப்பட்டது. இது ஒரு லத்தீன் அமெரிக்கக் குழுவில் ஒரு அங்கமாகும். இதன் ட்விட்டர் தள முகவரி @PoderosasES.

பாதுகாப்பு வளங்கள்

பாதுகாப்பு என்பது அனைத்து பத்திரிகையாளர்களும் கவலைப்பட வேண்டிய விஷயம், ஆனால் பெண்களைப் பொறுத்தவரையில்   பாலின அடிப்படையிலான வன்முறை, துன்புறுத்தல்,  செய்தியறையில்  பாகுபாடு காட்டல்  மற்றும் இணைய வெளியில்  தாக்குதல் போன்றனவற்றால் கூடுதல் அச்சுறுத்தல்களை எதிர்கொள்கின்றனர். இத்துறையில் பெண்களின் பாதுகாப்பை மேம்படுத்த சில வளங்கள் கீழே தரப்பட்டுள்ளன.

வானொலி மற்றும் தொலைக்காட்சியில் உள்ள பெண்களின் சர்வதேச ( International Association of Women in Radio & Television) பெண் பத்திரிகையாளர்களுக்கான பாதுகாப்பு கையேட்டை வெளியிட்டது. இது மோதல் நடைபெறும் பிராந்தியங்களில் பணியாற்றும் பெண் நிருபர்களை இலக்காகக் கொண்ட 95 பக்க வழிகாட்டியாகும், மேலும் இது  இடர் மதிப்பீடு, இணையரீதியிலான துன்புறுத்தல் மற்றும் பயணப் பாதுகாப்பு ஆகிய பிரிவுகளை உள்ளடக்கியது

உடல்ரீதியான  பாதுகாப்பு: தனியாள்  அறிக்கையிடல்  மற்றும் உடல் பாதுகாப்பு: பாலியல் வன்முறையைத் தணிப்பது (Physical Safety: Solo Reporting and Physical Safety: Mitigating Sexual Violence ) என்பது 2019 இல் ஊடகவியலாளர்களை பாதுகாக்கும் குழுவால் (Committee to Protect Journalists-CPJ)   உருவாக்கப்பட்ட வளங்களாகும். இந்த வலைப்பதிவில் விவரிக்கப்பட்டுள்ளபடி  அமெரிக்கா மற்றும் கனடாவில் பெண் பத்திரிகையாளர்கள் எதிர்கொள்ளும் பாதுகாப்பு பிரச்சினைகள் குறித்து CPJ  ஒரு கணக்கெடுப்பை நடத்தியது. புதிய பிரிவுகள் CPJ   பாதுகாப்பு குறிப்புகள் என்ற பக்கத்தில் சேர்க்கப்பட்டுள்ளன, மேலும் பத்திரிகையாளர் பாதுகாப்பு வழிகாட்டியினை இந்த தொடுப்பில் காண முடியும்.

சர்வதேச மகளிர் ஊடக அறக்கட்டளை – International Women’s Media Foundation பெண் பத்திரிக்கையாளர்களுக்கு சட்ட, மருத்துவ செலவுகள்  மற்றும் இடமாற்ற செலவுகளுக்கு உதவ ஓர்  அவசர நிதியை அமைத்துள்ளது.

ஆபத்தில் இருக்கும் ஊடகவியலாளர்களுக்கு உதவி வழங்கும் பாதுகாப்பு வழிகாட்டிகள் மற்றும் உதவி வழங்கும் அமைப்புகளின் தகவல்களைக்கொண்ட வளங்கள் பக்கத்தை GIJN தொகுத்துள்ளது. மருத்துவம் மற்றும் சட்ட உதவி முதல் பாதுகாப்பு அச்சுறுத்தலுக்குள்ளாயிருக்கும் பத்திரிகையாளரை நாட்டை விட்டு வெளியேற்றுவது வரை உதவிகள் உள்ளடக்கப்பட்டுள்ளன.

பத்திரிகை மற்றும் ஊடக சுதந்திரத்திற்கான ஐரோப்பிய மையம் –(  European Center for Press & Media Freedom ) ஒரு எச்சரிக்கை மையத்தைத் தொடங்கியுள்ளது, அங்கு பெண் ஊடகவியலாளர்கள் மறைகுறியாக்கப்பட்ட செய்திபரிமாற்றம்  மூலம் தாக்குதல் சம்பந்தமாக புகாரளிக்கலாம் மற்றும் உதவி பெறலாம். ECPMF பெண் ஊழியர்களால் மட்டுமே செய்திகள் திறக்கப்படுவதோடு, அறிக்கைகள் மிகவும் ரகசியமாக வைத்திருக்கப்படும் .

சர்வதேச ஊடகவியலாளர் கூட்டமைப்பு (International Federation of Journalists ) சர்வதேச தொழிலாளர் அமைப்புடன் (International Labor Organization)  இணைந்து பெண் ஊடகவியலாளர்களுக்கு எதிரான வன்முறைகளைத் தடுக்கும் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளது. வளங்களில் கருவிகள், வெளியீடுகள் மற்றும் தொடர்புடைய கொள்கைகளுக்கான இணையத் தொடுப்புகளும் உள்ளடக்கப்பட்டுள்ளன. IFJ  பிரச்சனைகளை நேரடியாக நிவர்த்தி செய்ய மற்றும் அர்த்தமுள்ள மாற்றத்திற்கு உள்ளூர் அரசாங்கங்களுக்கு அழுத்தம் கொடுக்க ஆதரவு மற்றும் வளங்களை வழங்குகிறது. நவம்பர் 2019 இல், பெண் பத்திரிகையாளர்களை இணையத்தில் trolling என்பபடும் திட்டமிட்ட  துன்புறுத்தல்களுக்கு  எதிராக கூட்டாக போராட IFJ வழிகாட்டுதல்களை அறிமுகப்படுத்தியது.

பாதுகாப்பு மற்றும் நல்வாழ்வுக்கு பாதுகாப்பு நடவடிக்கைகள் போலவே சுய பாதுகாப்பும் முக்கியம் என்பதை நாங்கள் இப்போது அறிவோம். எரிச்சலைக் குறைக்கவும், அதிர்ச்சியைத் தணிக்கவும் மற்றும் உங்கள் கவனத்தை அதிகரிக்கவும், காலை மற்றும் மாலை பயிற்சிக்காக IWMF இலிருந்து இந்த யோகாசன   வீடியோக்களைப் பாருங்கள். இது குறிப்பாக பெண் பத்திரிகையாளர்களுக்காகவென வடிவமைக்கப்பட்டுள்ளது.

Troll-Busters.com என்பது உலகளாவிய பிரச்சாரமாகும், இது “ஊடகவியலாளர்களுக்கான இணைய வழி பாதுகாப்பை உறுதி செய்வதினூடாக” பெண்களை மையமாகக் கொண்ட அடையாளம் காணல், பாதிப்பைக்குறைத்தல், இணையத்தினூடாக விடுக்கப்படும் அச்சுறுத்தல்கள் மற்றும் துன்புறுத்தல்கள் தொடர்பில் புகாரளிப்பதில் நிபுணத்துவம் பெற்றது. அவர்களிடம் பெண் ஊடகவியலாளர்களுக்கான குறிப்பிட்ட வளங்களும் பயிற்சிகளும் உள்ளன.

PEN America சமீபத்தில் இணையவழி வெறுப்பு மற்றும் துன்புறுத்தலுக்கு எதிராகப் பாதுகாப்பதற்கான நடைமுறை கருவிகள் மற்றும் தந்திரோபாயங்களுடன் ‘இணையவழி துன்புறுத்தல் தொடர்பான கள கையேட்டை’ வெளியிட்டது. PEN கையேட்டை “இணையத்தில் பின்தொடர்வது, குறுஞ்செய்தி அனுப்புதல், வெறுக்கத்தக்க வெறுப்புப்பேச்சு மற்றும் டிஜிட்டல் துன்புறுத்தலின் பிற வடிவங்களில் ஆலோசனை, வழிகாட்டுதல் மற்றும் பல்வேறு வளங்களை கொண்ட ஒரு கடை” என்று விவரிக்கிறது. “என்ன செய்வது” என்பது குறித்த உலகளாவிய ஆலோசனையைத் தவிர, வளத்தில் தொடர்புடைய அமெரிக்க மாநிலச் சட்டங்கள் பற்றிய தகவல்களும் உள்ளடக்கப்படுள்ளன.

இணைய ரீதியிலான கொடுமைப்படுத்துதல் மற்றும் பெண் ஊடகவியலாளர்கள் மீதான ஆன்லைன் துன்புறுத்தல்களை நிறுத்த  சர்வதேச பத்திரிகையாளர்கள் கூட்டாளர் அமைப்பு மற்றும் ஆசிய பசிபிக் பிராந்தியத்தில் உள்ள அமைப்புக்கள் இணைந்து பைட் பேக் (Byte Back) என்ற  பிரச்சாரத்தினை  2016 இல் தொடங்கின.

இணையத்தில் நடைபெறும் துன்புறுத்தல்கள்  மற்றும் தொந்தரவுகளை எதிர்ப்பதற்கு தேவையான வளங்கள், மற்றும் தந்திரோபாயங்களை இது வழங்குகின்றது.

Access Now’s Digital Security Helpline  எனப்படும் இலவச இணைய பாதுகாப்பு சேவை உலகெங்கிலும் உள்ள தனிநபர்கள் மற்றும் நிறுவனங்களுடன் இலவசமாக வேலை செய்கிறது. அவர்கள் டிஜிட்டல் பாதுகாப்பு நடைமுறைகளை மேம்படுத்த உதவுவதுடன்  ஆங்கிலம், ஸ்பானிஷ், பிரஞ்சு, ஜெர்மன், போர்த்துகீசியம், ரஷ்யன், ஆஸ்ட்ரோனேசிய மொழி டாகலாக், அரபு மற்றும் இத்தாலிய மொழிகளில் இரண்டு மணி நேரத்திற்குள் விரைவான பதில் அவசர உதவியை அவர்களால் வழங்க முடியும்.

A DIY Guide to Feminist Cybersecurity  என அழைக்கப்படும் வழிகாட்டி இணையத்தில் தொடரும் தனிநபர் கண்காணிப்பு, அநாமதேய கருவிகளின் பிரயோகம், தகவல் திருட்டு, பாதுகாப்பற்ற  உள்நுழையும்  நடைமுறைகள், சமூக ஊடகங்களில் தனிநபரின்  உரிமை  மீறல் ஆகியவற்றிலிருந்து பாதுகாக்கும் கருவிகளை உள்ளடக்கியது. மேலும் இது பாதுகாப்பான தொடர்பாடல் முறைக்கு குறியாக்கம் (ஸ்பானிஷ் பதிப்பு) தொடர்பான வளங்களையும் கொண்டுள்ளது.

Speak Up & Stay Safe (r): A Guide to Protecting Yourself From Online Harassment எனப்படும் உரத்துப் பேசுவதுடன் பாதுகாப்பாக இரு: இணைய வழி தொந்தரவுகளிலிருந்து உங்களை பாதுகாப்பதற்கான ஒரு வழிகாட்டி Feminist Frequency எனும் அமைப்பால் உருவாக்கப்பட்டது.

இது இணையத்தில் தனிநபர் மீதான தாக்குதல்கள், சமூக ஊடகங்கள் மற்றும் இணைய விளையாட்டு தளங்களில் தனி நபர் உரிமை, தனியொருவரின் இணையதளப் பாதுகாப்பு, மின்னஞ்சல் பாதுகாப்பு போன்ற விடயங்களில் உள்ள தந்திரோபாயங்களையும் எடுத்துக் கூறுகிறது.

அலெர்டா மச்சிட்ரோல்- (Alerta Machitroll )என்பது கொலம்பியாவை தளமாகக் கொண்ட ஸ்பானிஷ் மொழி பிரச்சாரமாகும், இது டிஜிட்டல் சூழலில் பெண்களுக்கு எதிரான வன்முறையை எதிர்த்து 2015 இல் Fundación Karisma i இனால் தொடங்கப்பட்டது. இணையத்தில் நடைபெறும் துன்புறுத்தலை நகைச்சுவையுடன் எதிர்த்துப் போராட இக்குழு எச்சரிக்கை உருவாக்கி-  Alert Generator  மற்றும் சுய உதவி உத்திகளை வழங்குகிறது.

Crash Override Network எனப்படும் வலையமைப்பின் வளங்களின்  மையம் இணையவழி  துஷ்பிரயோகம், தனியாள் தகவல் திருட்டு  மற்றும் உடன்படாத நெருக்கமான படங்களின்  வெளியீடு மற்றும் தனிப்பட்ட தரவு, கடவுச்சொற்கள் மற்றும் சாதனங்கள் ஆகியவற்றைப் பாதுகாக்கும் கருவிகள், வழிகாட்டிகள் மற்றும் சேவைகளை பட்டியலிடுகிறது.

Online SOS என்பது ஒரு இலாப நோக்கமற்ற அமைப்பாகும், இது எந்தவிதமான ஆன்லைன் துன்புறுத்தல்களையும் எதிர்நோக்கும் அமெரிக்க ஊடகவியலாளர்கள் மீது கவனம் செலுத்துகிறது, மேலும் சட்ட அமலாக்கம், சட்ட தீர்வுகள், வேலைவாய்ப்பு தொடர்பான விருப்பங்கள், வழக்கு மேலாண்மை, தளங்களுக்கு விரிவாக்கம், நிபுணர் பரிந்துரை மற்றும் நெருக்கடி, பயிற்சி பற்றிய இலவச ஆதரவை வழங்குகிறது.

Take Back the Tech என்பது பெண்களுக்கு எதிரான வன்முறையை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான தொழில்நுட்பத்தைக் கையகப்படுத்தும்  நோக்கில் உலகளாவிய ஒத்துழைப்பு பிரச்சாரமாகும். தொழில்நுட்பம் தொடர்பான துன்புறுத்தல், சாதனங்களுக்கான டிஜிட்டல் பாதுகாப்பு கருவித்தொகுப்புகள் மற்றும் உரிமைகள்இ சுய பாதுகாப்பு மற்றும் உயிர்வாழும் உத்திகளுக்கான வளங்களை அவர்கள் வழங்குகிறார்கள். உள்ளூர் பிரச்சாரங்களைத் தொடங்கவும் மேலும் கொண்டுசெல்லவும் அவர்கள் உதவுகிறார்கள்.

2019 ஆம் ஆண்டில் தனியாள் பெண் பயணத்திற்கான மோசமான மற்றும் பாதுகாப்பற்ற  நாடுகள் என்பது (The Worst (& Safest) Countries for Solo Female Travel in 2019) பயண ஊடகவியலாளர்கள் ஆஷர் பெர்குசன் மற்றும் லிரிக் பென்சன் ஆகியோரின் 50 நாடுகளின் ஆய்வு ஆகும். மேலும் தனியாக பயணம் செய்யும் போது பெண்கள் எப்படி பாதுகாப்பாக இருக்க முடியும் என்பதற்கான 42 குறிப்புகளையும் அவர்கள் விவரித்துள்ளனர்.

200 பக்க வள வழிகாட்டியான “இணைய வெளியில்  பெண் பத்திரிக்கையாளர்களின் பாதுகாப்பு” ஊடக சுதந்திரத்திற்கான (Representative on Freedom of the Media -RFoM) OSCEபிரதிநிதியின் அலுவலகத்தால் உருவாக்கப்பட்டது.

பாகுபாடு மற்றும் துன்புறுத்தல் பற்றிய வளங்கள் 

பணியிடத்தில் பாகுபாடு மற்றும் துன்புறுத்தல் ஆகியவை ஊடகத்துறை உட்பட பல தொழில்களைப் பாதிக்கும் பொதுவான பிரச்சினைகளாகும். வெளிநாட்டு உறவுகள் கவுன்சிலின் சமீபத்திய அறிக்கையின்படி, 18 நாடுகளில் இன்னும் பெண்கள் வேலை செய்ய கணவரின் அனுமதி வேண்டும், 59 பணியிடங்களில் பாலியல் துன்புறுத்தல்களுக்கு எதிராக சட்டபூர்வமான பாதுகாப்பு எதுவும் இல்லை, மேலும் 104 நாடுகளில்  பெண்கள் வகிக்கும் வேலைகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. ஊதியப் பாகுபாடு உலகளாவியது. பணியிடத்தில் பாலின பாகுபாடு மற்றும் பாலியல் துன்புறுத்தல்களை நிவர்த்தி செய்ய தற்போது சில வளங்கள் கைவசம்  உள்ளன.

முதலாளிகள் மற்றும் பணியாளர்கள் தங்கள் ஊடக நிறுவனங்களில் பாலியல் துன்புறுத்தல்களை சமாளிக்க (மற்றும் தடுக்க) ஒரு கருவித்தொகுப்பை Women in News என்னும் அமைப்பினர் உருவாக்கியுள்ளனர். இக்கருவித்தொகுப்பில் ஒரு நடைமுறை வழிகாட்டி, விழிப்புணர்வு சுவரொட்டிகள்,மாதிரி கொள்கைகள், ஆய்வுகள் மற்றும் தொடர்பு வார்ப்புருக்கள் உள்ளன. பெண்களுக்கு சிறந்த பணிச்சூழலை உருவாக்க மேலாளர்களுக்கு உதவ WIN பல்வேறு வளங்களைக் கொண்டுள்ளது. இந்த அமைப்பு துணை-சஹாரா ஆபிரிக்கா, மத்திய கிழக்கு மற்றும் தென்கிழக்கு ஆசியாவில் வேலை செய்கிறது. அவர்களின் ஒலிப்பேழையான , தி பேக்ஸ்டோரி (The Backstory), செய்தி அறைகளில் பெண் தலைமைத்துவத்தின் பிரச்சினைகளை ஆராய்கிறது.

யுனெஸ்கோ மற்றும் பத்திரிகையாளர்களுக்கான சர்வதேச மையம் (ICFJ) இணைந்து பெண் பத்திரிகையாளர்களுக்கு எதிரான இணைய வெளியில் வன்முறை குறித்த ஒரு ஆய்வை  வெளியிட்டன. “இணைய  வன்முறையின் கருப்பொருளில் இதுவரை மேற்கொள்ளப்பட்ட மிக விரிவான மற்றும் புவியியல் ரீதியாக மாறுபட்ட கணக்கெடுப்பு,” 113 நாடுகளிலிருந்து  714 பெண் பத்திரிகையாளர்களிடமிருந்து பதில்களைப் பெற்றுக்கொண்டது .

சர்வதேச ஊடகவியலாளர் கூட்டமைப்பு-( International Federation of Journalists) , சர்வதேச தொழிலாளர் அமைப்புடன் ( International Labor Organization ) இணைந்து பெண் ஊடகவியலாளர்களுக்கு எதிரான வன்முறைகளைத் தடுக்கும் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளது. வளங்களில் கருவித்தொகுப்புகள்இ வெளியீடுகள் மற்றும் பாலின ஊதிய இடைவெளி உட்பட தொடர்புடைய கொள்கைகளுக்கான இணைப்புகள் அடங்கும். IFJ ஆனது நேரடியாக தொந்தரவுகள்  உட்பட – பிரச்சினைகளை நிவர்த்தி செய்வதற்கான ஆதரவையும் வளங்களையும் வழங்குவது  மட்டுமில்லாது  அர்த்தமுள்ள மாற்றத்திற்கு உள்ளூர் அரசாங்கங்களுக்கு அழுத்தம் கொடுக்கும்.

அமெரிக்காவில் TIME’S UP சட்டப் பாதுகாப்பு நிதி- TIME’S UP Legal Defense Fund பணியிடங்களில் பாலியல் துன்புறுத்தல் மற்றும் பழிவாங்கும் அனுபவமுள்ள பெண்களை வழக்கறிஞர்கள் மற்றும் ஊடக நிபுணர்களுடன் இணைக்கிறது.

வாஷிங்டனை தளமாகக் கொண்ட Press Forward, பணியிடத்தில் பெண் ஊடகவியலாளர்கள் பாலியல் துன்புறுத்தலுக்கு உட்படுத்தப்படுவதை தடுப்பது தொடர்பான வழிகாட்டி மற்றும் வளங்களைக் கொண்டுள்ளது. இவை அமெரிக்க சட்டங்கள் மற்றும் கொள்கைகளை மனதில் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளன,ஆனால் வேறு இடங்களில் உதவியாக இருக்கும்.

பிரான்சில்;>  Prenons la une   என்பது ஊடகங்களில் பெண்களின் நியாயமான பிரதிநிதித்துவம் மற்றும் செய்தி அறைகளில் தொழில்முறை சமத்துவம் ஆகியவற்றை ஆதரிக்கும் பெண் பத்திரிகையாளர்களின் சங்கமாகும். இந்த வலையமைப்பு பாகுபாடு மற்றும் தொல்லைகளை  எதிர்கொள்ளும் பெண்களுக்கு ஆதரவை வழங்குகிறது.

பிரேசிலிய புலனாய்வு இதழியல் சங்கம் (அப்ராஜி) Brazilian Association of Investigative Journalism (Abraji) தொழில்துறையில் பெண்கள் எதிர்கொள்ளும் சவால்கள் குறித்து ஆராய்ச்சி நடத்தியது. கண்டுபிடிப்புகளின் அடிப்படையில்,  Mulheres No Jornalismo Brasileiro பாலின அடிப்படையிலான துன்புறுத்தல், பாகுபாடு மற்றும் வன்முறையை நிவர்த்தி செய்ய பிரேசிலின் ஊடகங்களுக்கான பரிந்துரைகளை பட்டியலிடுகிறார். 2018 ஆம் ஆண்டில், 50 பிரேசிலிய பெண் பத்திரிகையாளர்கள் பாலியல் துன்புறுத்தல் மற்றும் பாகுபாட்டிற்கு எதிரான வீடியோ அறிக்கையை ஃபேஸ்புக் மற்றும் ட்விட்டரில் #DeixaElaTrabalhar  என்ற ஹேஷ்டேக்கைப் பயன்படுத்தி வெளியிட்டனர். ஹேஷ்டேக் சொற்றொடர் “அவள் வேலை செய்யட்டும்” என்று மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.

மீ டூ (MeToo) இயக்கத்திற்கு பதிலளிக்கும் விதமாக 2018 இல் ஒரு வாட்ஸ்அப் குழுவாக மற்றும் ஒரு மூடப்பட்ட பேஸ்புக் பக்கமாக கேமரூன் ஊடகப் பெண்கள் மையம் தொடங்கப்பட்டது. கேமரூனின் நாட்டின் குறியீட்டைப் பற்றி குறிப்பிடும் #StopSexualHarassment237 ஹேஷ்டேக் மூலம்இ பெண் பத்திரிகையாளர்கள் ட்விட்டர் கலந்துரையாடல் நடத்தி, செய்தி அறைகளில் பெண்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகள் குறித்து விவாதிக்கும் வீடியோக்களைப் பகிர்ந்து கொண்டனர்.

#MeToo இயக்கமானது ஆசியாவில் தனது  முத்திரையை  பதித்துள்ளது. சீனா மற்றும் ஜப்பானில் பாலியல் துன்புறுத்தல் மற்றும் அவை தொடர்பான தாக்குதல்லை விசாரிப்பது மற்றும் மறைப்பது பற்றிய கதைகள் மற்றும் உதவிக்குறிப்புகளை பெண் பத்திரிகையாளர்கள் குழுவொன்று 2018 -ல் நடைபெற்ற GIJN panel at Uncovering Asia 2018 மாநாட்டில் பகிர்ந்து கொண்டனர். மேலும், GIJN  இன் ஹாங்காங் பணியகத்திலிருந்து  சீனாவில் #MeToo   இயக்கத்தை உள்ளடக்கிய புலனாய்வு பத்திரிகையாளர்களின் பங்கு பற்றிய தொடர்பான பதிவுகளை  இங்கே காணலாம்.

இங்கிலாந்தில் The Second Source   என  அழைக்கப்படும் அமைப்பானது, ஊடகத்துறையில் இடம்பெறும் அச்சுறுத்தல்களை சமாளிக்கும் முகமாக  அமைக்கப்பட்டது. இந்த அமைப்பு விழிப்புணர்வை ஊக்குவிப்பதையும், பெண்களின் உரிமைகள்  தொடர்பான பிரச்சாரங்களை  முன்னெடுப்பதையும் ,  மற்றும் ஊடக தொழில்துறையில் மாற்றத்தை உருவாக்குவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.

Women in News என்னும் நிறுவனம்,  சமீபத்திய நடாத்திய ஆய்வான Glass Ceilings: Women in South African Media Houses” ஊடக நிறுவனங்களில் தொடர்பான பொதுவான பிரச்சினைகளை அடையாளம் கண்டு, அவற்றை நிவர்த்தி செய்வதற்கான பரிந்துரைகளை வழங்குகிறது.

Women in News என்னும் நிறுவனம், சமீபத்தில்  Glass Ceilings: Women in South African Media Houses” என்ற தலைப்பில் ஆய்வொன்றை நடாத்தி, ஊடக நிறுவனங்களில் காணப்படும்” பால் நிலை  தொடர்பான பொதுவான பிரச்சினைகளை அடையாளம் கண்டுஇ அவற்றை நிவர்த்தி செய்வதற்கான பரிந்துரைகளை வழங்குகிறது.

Digital Women Leaders  என்னும் அமைப்பானது, பெண் பத்திரிகையாளர்கள் எதிர்நோக்கும் பிரச்சனைகளான பணியிட பாகுபாடு, துன்புறுத்தல் மற்றும் சம்பள இடைவெளி போன்ற பிரச்சினைகள் தொடர்பான 30 நிமிட நேரடி  வழிகாட்டுதல் பயிற்சிகளையும் வழங்குகின்றனர்.

சர்வதேச பெண்கள் ஊடக அறக்கட்டளை- – International Women Media Foundation (IWMF) மற்றும் The Totem Project இணைந்து பல்வேறு மொழிகளில் துன்புறுத்தல் குறித்து பல இணையவெளி கற்கைநெறிகளை உருவாக்கியுள்ளது.

படம்: Shutterstock

நீண்டகால அனுபவம் மற்றும் துறைசார் அறிவுடன் உள்ள வழிகாட்டிகள் உங்களுக்கு பல்வேறு வகைகளில் உதவுவர். குறிப்பாக உங்கள் திட்டத்துடன் முன்னோக்கி செல்வது, நியாயமான சம்பளத்தை பெறுவதற்காக  பேச்சுவார்த்தை நடத்துவது அல்லது ஆரோக்கியமற்ற பணிச்சூழலில் இருத்தல் அல்லது சக ஊழியருடன் கடினமான உறவு உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகளுக்கு அவர்களால் உங்களுக்கு  உதவ முடியும். சரியான பொருத்தமான ஒரு வழிகாட்டியைக் கண்டுபிடிக்க நேரம் எடுக்கலாம், ஆனால் பல வளங்கள் குறிப்பாக பெண் பத்திரிகையாளர்களுக்கு கிடைக்கின்றன.

Digital Women Leaders அமைப்பானது, பெண் ஊடகவியலாளர்களுக்கு 30 நிமிடங்களுக்குள் ஒரு  நேரடியான   வழிகாட்டல்  பயிற்சியினை இலவசமாக அளிக்கினறது. இதில் பட்டியலிடப்பட்ட பெரும்பாலான பயிற்சியாளர்கள் அமெரிக்க ஊடகங்களில் பணிபுரிந்தாலும், உலகத்தின் பல்வேறு பகுதிகளில் பணிபுரியும் ஊடகவியலாளர்களும் உள்ளடக்கப்பட்டுள்ளனர்.  இருந்த போதும் சில பிரச்சினைகள் – பணியிட பாகுபாடு மற்றும் சம்பள இடைவெளி போன்றவை – உலகளாவியவை ஆகும்.

அமெரிக்காவை தளமாகக் கொண்ட ஊடகவியல் மற்றும் பெண்கள் கருத்தரங்கில்- Journalism & Women Symposium  அதன் உறுப்பினர்களுக்கு ஆண்டு முழுவதும் வழிகாட்டுதல் திட்டம் நடைமுறையில் உள்ளது. தேவைகள் மற்றும் இருப்பிடத்தின் அடிப்படையில் ஊடகவியலாளர்கள் தமக்கேற்ப வழிகாட்டிகளுடன் நேரசூசி மற்றும் தொடர்புகொள்ளும் முறையை இணைந்து ஏற்படுத்திக் கொண்டுள்ளனர்.  இந்த திட்டமானது  தொழில் பயிற்சி, சுய விபரக்கோவையை சரிசெய்தல் , தொழில்துறை  நேர்காணல்கள், மேலாண்மை மற்றும் தலைமைபண்பு , எழுத்துப்பயிற்சி, சம்பள உயர்வு கேட்டல் போன்று பலவற்றை உள்ளடக்கியது.

மெக்சிகோவில் உள்ள ஊடகத்துறையில் பெண்களுக்கான கூட்டணி – Coalition for Women in Journalism , லத்தீன் அமெரிக்கா மற்றும் ஆசியாவில் அனுபவம் வாய்ந்த பெண் பத்திரிகையாளர்களிடமிருந்து வழிகாட்டுதல்களை வழங்குகிறது.

Chicas Poderosas  எனும் அமைப்பானது 16 நாடுகளில் கிளைகளை கொண்டுள்ளது மற்றும் புலனாய்வு இதழியல் பட்டறைகள் மற்றும் ஹேக்கத்தான்களை ஏற்பாடு செய்கிறது; தலைமைப்பண்பு, டிஜிட்டல் மற்றும் புதிய ஊடக திறன்களில் பெண்களுக்கு பயிற்சி அளிப்பதோடு,  வழிகாட்டுதல் மற்றும் உதவித்தொகை வசதிகளையும்  வழங்குகிறது.

லண்டனை தளமாகக் கொண்ட Women in Journalism என்பது இங்கிலாந்தில் உள்ள ஊடகங்களில் பெண்களின் தொழில்முறை வலையமைப்பு ஆகும். WIJ ஆனது வளர்ந்து வரும் ஊடகவியலாளர்கள் மற்றும் தங்கள் துறைசார் உயர் பதவிகளை அடைய விரும்பும் மூத்த பத்திரிகையாளர்களுக்கான வழிகாட்டுதல் திட்டத்தை கொண்டுள்ளது.

துணை சஹாரா, ஆபிரிக்கா நாடுகள், மத்திய கிழக்கு மற்றும் தென்கிழக்கு ஆசியாவில் உள்ள பெண் பத்திரிகையாளர்களுக்கு குழு வழிகாட்டல் மற்றும் பயிற்சியை Women in News வழங்குகிறது.

Journalistinnenbund ஜெர்மனியில் வளர்ந்து வரும் பெண் பத்திரிகையாளர்களுக்கான வழிகாட்டுதல் திட்டத்தை கொண்டுள்ளது.

லத்தீன் பெண்கள் மற்றும் பைனரி அல்லாத செய்திகளில் பணிபுரியும்  லத்தீன் ஊடகவியலாளர்கள்  மற்றும் தொழில்துறையில் சக லத்தீனியர்களிடமிருந்து வழிகாட்டுதலைத் தேடுவதற்காக அமெரிக்காவினைத் தளமாகக்கொண்ட திட்டம்  Latinas in Journalism Mentorship Program ஆகும்.

புலமைப்பரிசில்களும் உதவித்தொகை திட்டங்களும்

பெண்கள் அல்லது பெண்களாக தங்களை அடையாளப்படுத்திக்கொள்வோருக்கென வடிவமைக்கப்பட்ட புலமைப்பரிசில்கள்   மற்றும் உதவித்தொகைகளின் பட்டியல் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

பொதுவான ஆண்கள் மற்றும் பெண்கள் இருபாலாருக்கும் கிடைக்கும் புலமைப்பரிசில்கள் மற்றும் உதவித்தொகைகள் தொடர்பான பட்டியலுக்கு, GIJN வளங்கள் பக்கத்தைப் பார்வையிடவும்

சர்வதேச மகளிர் ஊடக அறக்கட்டளை– International Women’s Media Foundation உலகெங்கிலும் உள்ள பெண் பத்திரிகையாளர்களுக்கான பல உதவித்தொகை திட்டங்களை வருடம் முழுவதும் மாறுபட்ட   காலக்கெடுவுடன் கொண்டுள்ளது. மகளிர் சமத்துவ மையத்துடன்(Women’s Equality Center) இணைந்து, அமெரிக்காவில் இனப்பெருக்க ஆரோக்கியம், உரிமைகள் மற்றும் நீதி பற்றிய மகளிர் சுகாதார அறிக்கையிடல்  ஆகியவையும் இதில் அடங்கும்.

மேலும் Secular Society என்னும் நிறுவனத்தின் அனுசரணையுடன் வழங்கப்படும் குறைவாக அறிக்கையிடப்பட்டுள்ள  தலைப்புகளின் பாலின-உணர்திறன் தொடர்பில் அறிக்கையிடுவதற்கான உதவித்தொகை, துணைக் கலாச்சாரங்கள் தொடர்பில் ஊடகவியலாளர்  Wall குடும்பத்தின் அனுசரணையில் நிறுவப்பட்ட Kim Wall Memorial Fund போன்ற திட்டங்களும் உள்ளன. IWMF ஆனது   Howard G. Buffett Fund for Women Journalists எனப்படும் பெண் பத்திரிகையாளர்களுக்காவெண் உருவாக்கப்பட்ட நிதியையும் நடத்துகிறது. இது கல்வி வாய்ப்புகள், புலனாய்வு அறிக்கையிடல்  மற்றும் ஊடக மேம்பாட்டு முயற்சிகள் உள்ளிட்ட திட்டங்களை ஆதரிக்கிறது.

WanaData என்பது பெண் ஆபிரிக்க பத்திரிகையாளர்கள், தரவு விஞ்ஞானிகள் மற்றும் தொழில்நுட்ப வல்லுநர்களின் ஒரு வலையமைப்பு ஆகும், இது தரவு சார்ந்த கதைகளை உருவாக்க ஒத்துழைக்கிறது. சமீபத்தில் இவ்வலையமைப்பு, அதன் பங்காளிகலுடன் இணைந்து  உகாண்டா பெண் பத்திரிகையாளர்களுக்கு டிஜிட்டல் ஜர்னலிசம் தொடர்பான பயிற்சித் திட்டத்தை வழங்கினர்.

நைஜீரியாவின் லாகோஸை (Lagos) தலைமையிடமாகக் கொண்டியங்கும் Wole Soyinka Center for Investigative Journalism,   Free Press Unlimited ஆதரவுடன் பெண் பத்திரிகையாளர்களுக்கான தலைமைத்துவ உதவித்திட்டங்களை   வழங்குகிறது. இந்த திட்டம் குறைந்தபட்சம் மூன்று வருட அனுபவம் கொண்ட நைஜீரிய பெண் ஊடகவியலாளர்களுக்கு, திறன் மேம்பாடு, ஆதரவு மற்றும் கருவிகள் மூலம் தாம் சார்ந்த நிறுவனங்களில் தலைமைப் பதவிகளை வகிக்க தேவையான உதவிகளையும்  பெண் ஊடகவியலாளர்களின் வலையமைப்பு ஒன்றை திரட்டுவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.

அமெரிக்காவை தளமாகக் கொண்ட Online News Association , டிஜிட்டல் புதுமையை முன்னெடுக்கும் பெண்களின் தலைமை மற்றும் மேலாண்மை திறன்களை ஊக்குவிக்கும்முகமாக  ஒரு வருட கால திட்டமான Women’s Leadership Accelerator இனை வழங்குகிறது. மாறுபட்ட பின்னணி மற்றும் நிபுணத்துவத்துடன் கூடிய ஆங்கிலம் பேசும் இப்பங்கேற்பாளர்களின் கூட்டு, உலகெங்கிலும் உள்ள பல்வேறு செய்தி அறைகளிலிருந்து ஆண்டுதோறும் தேர்ந்தெடுக்கப்படுகிறது.  இந்திட்டத்தின்கீழ், ஒரு வார கால தீவிர பயிற்சி அமெரிக்காவில் வழங்கப்படுகிறது. ONA சில பயிற்சி சார்ந்த சில வளங்களை பொதுமக்களுக்கு கிடைக்கும்வண்ணம் அதன் இணையத்தளத்தில்  கிடைக்கச் செய்கிறது.

Poynter Leadership Academy for Women in Media  என்பது மக்களை நேரடியாக நிர்வகிக்கும், அதேவேளை முதல் ஐந்து வருடங்களிற்குள்ளான முறையான தலைமை அனுபவத்தில் இருக்கும் பெண்களுக்காக வடிவமைக்கப்பட்ட ஒரு திட்டமாகும். “டிஜிட்டல் மீடியா மற்றும் ஊடகத்தில் பெண்கள் புதிய பாதை படைக்கிறார்கள் ” என்ற Poynter இன் செய்திமடலான The Cohort இல் நீங்களும் இணைந்து கொள்ள முடியும்.

Women in News ஆண்டுதோறும் துணை-சஹாரா ஆபிரிக்காவைச் சேர்ந்த 50 பெண்களையும், மத்திய கிழக்கு மற்றும் வட ஆபிரிக்காவைச் சேர்ந்த 30 பெண்களையும் தேர்வு செய்கிறது. அனுபவம் வாய்ந்த மூத்த ஊடகவியலாளர்களையும் , ஆசிரியர்களையும் கொண்ட இந்த குழுவிற்கு செய்தி அறை மேலாண்மை, தலைமைத்துவம்   மற்றும் ஆசிரியர்பீட கையாளுகைத் திறன்களை மேம்படுத்துவது தொடர்பில் பயிற்சிகளை வழங்குவது இதன் நோக்கமாகும்.  இந்த திட்டம் ஆன்லைன் மூலம் நடாத்தப்படும்  தலைமைத்துவ  மற்றும் ஊடக மேலாண்மை, நேரடி வழிகாட்டுதல், மற்றும் தேசிய மற்றும் பிராந்திய வலையமைப்பாக செயற்படுதல் தொடர்பில் பயிற்சிகளை  வழங்குகிறது.

Chicas Poderosas லத்தீன் அமெரிக்கா மற்றும் ஸ்பெயின் உட்பட்ட 13 நாடுகளில் கிளைகளை கொண்டுள்ளது, மேலும் அமெரிக்க செய்தி அறைகளில் புலமைப்பரிசில்களை பெற்றுக்கொள்வதை எளிதாக்கியுள்ளது. இவ்வமைப்பின் New Ventures Lab, பெண்கள் தலைமையிலான சுயாதீன ஊடக முயற்சிகளுக்கு வழிகாட்டுதலையும் நிதியையும் வழங்குகிறது.

Foreign Policy Interrupted வெளியுறவுக் கொள்கை தொடர்பில் அறிக்கையிடும் பெண்களுக்காக ஒரு புலமைப்பரிசில் திட்டத்தை வழங்குகிறது. இந்த திட்டம் இணையம் மூலமான கல்வி மற்றும் ஆசிரியர்பீட  கையாளுகைகள்  மூலம் ஊடகங்கள் மற்றும் புதிய ஊடக முயற்சிகளை வளர்ப்பதில் கவனம் செலுத்துகிறது. இந்த திட்டம் உலகளாவிய அளவில் பெண்கள் பங்கேற்ககூடியதாக உள்ளது.

 The Doria Feminist Fund (MENA பிராந்தியம்), இப்பிராந்தியத்தில் புதிதாக நிறுவப்பட்ட மற்றும் ஏற்கனவே கட்டியெழுப்பட்ட பெண்ணியவாதக் குழுக்களுக்கு தங்கள் பணிகளைத் தொடர உதவித்தொகைகளை வழங்குகிறது.

பெண் ஊடகவியலாளருக்கான விருதுகள்

விருதுகளானது, உங்களுக்கான அங்கீகாரத்தை பெறவும் உங்கள் செய்தி அறிக்கையிடல்களுக்கான கவனத்தைப் பெற்றுக்கொள்ளவும் ஒரு சிறந்த வழியாகும். சர்வதேச விருதுகளுக்கு விண்ணப்பிக்க கூடியதான, திறந்த- உலகளாவிய மற்றும் பிராந்திய விருதுகள் பற்றிய பொதுவான கோப்பகத்திற்கு, GIJN இன் வளங்கள்  பக்கத்தைப் பார்க்கவும். இதில் டசின் கணக்கான வாய்ப்புக்கள் பட்டியலிடப்படுள்ளன. கீழே காணப்படும் விருதுகள் பெண்களுக்கு, அல்லது பெண்களாக தம்மை அடையாளம் காணும் நபர்கள் மட்டுமே விண்ணப்பிக்க கூடியதாக உள்ளது.

சர்வதேச மகளிர் ஊடக அறக்கட்டளை(International Women’s Media Foundation-IWMF), Courage in Journalism Awards என்னும் விருதுகளுக்கு நிதி உதவி செய்கிறது. இவ்விருதானது ஆபத்தை எதிர்கொள்ளும் பெண் பத்திரிகையாளர்களை கௌரவிக்கும் முகமாக, உண்மையை வெளிக்கொணரவும், அச்சுறுத்தல் அல்லது வற்புறுத்தலின் கீழ் செய்தியறிக்கையிடுவதற்கான தரத்தை  உயர்த்தவும் செய்கிறது. உலகெங்கிலும் உள்ள பெண் பத்திரிகையாளர்கள்விண்ணப்பிக்க கூடியதாக இருக்கும் இவ்விருதுகளுக்கு, தனியாள் பரிந்துரைகளையும் பரிசீலிக்கிறார்கள்.

IWMF இன் வாழ்நாள் சாதனையாளர் விருதானது அசாத்திய துணிச்சலும், ஊடக சுதந்திரம் மற்றும் உலகெங்கிலும் உள்ள பெண்களின் குரல்களை முன்னேற்றுவதற்கான அர்ப்பணிப்பு ஆகியவற்றை வெளிப்படுத்திய பெண் தலைவர்களை கௌரவிக்கும் பொருட்டு வழங்கப்படுகிறது. இவ்விருதிற்கு ஓய்வு பெற்ற முன்னாள் பத்திரிகையாளர்களும் கருத்தில் கொள்ளப்படலாம்.

துணை-சஹாரா ஆபிரிக்காவில் ஒரு பெண் பத்திரிகையாசிரியருக்கும், மத்திய கிழக்கு மற்றும் வட ஆபிரிக்காவில் ஒரு பெண் ஆசிரியருக்கும் Women in News – Editorial Leadership Award விருது வழங்கப்படுகிறது. இந்த விருதானது, செய்தி அறைகளில் முன்மாதிரியாக திகழ்ந்த பெண்களின்  பங்களிப்பை அங்கீகரிக்கும் முகமாகவும், அவர்களின் தலைமையின் கீழ், சமூகத்திற்கு அவர்கள், தாம் சார்ந்த   ஊடகங்களின் மூலமான வழங்கிய பங்களிப்பை அங்கீகரிக்கும் வகையிலும் வழங்கப்படுகிறது.

வானொலி மற்றும் தொலைக்காட்சியில் உள்ள பெண்களின் சர்வதேச சங்கம் (The International Association of Women in Radio & Television ) ஒலிபரப்பு மற்றும் இலத்திரனியல்  ஊடகங்களில் பணிபுரியும் பெண்களுக்கான உலகளாவிய வலையமைப்பாகும், இதற்கு ஆபிரிக்கா, ஆசியா, ஐரோப்பா மற்றும் வட அமெரிக்காவில் கிளைகள்  உள்ளன. IAWRT ஆவணப்பட விருதுகள் சமூக பாதிப்பு, புதுமை மற்றும் வளர்ந்து வரும் திறமை உட்பட மூன்று வெவ்வேறு பிரிவுகளில் ஒவ்வொரு இரண்டு வருடங்களுக்கும் அமெரிக்க டொலர் $ 1,000 பெறுமதியான பரிசுகளை வழங்குகின்றன. உலகெங்கும் உள்ள வானொலி, தொலைக்காட்சி மற்றும் டிஜிட்டல் மீடியாவுடன் பணிபுரியும் பெண் தயாரிப்பாளர்கள், இயக்குநர்கள் மற்றும் ஊடகவியலாளர்கள் விண்ணப்பிக்க முடியும்.

வருடம்தோறும் வழங்கப்படும் Caroline Jones Women in Media Young Journalists Award  விருது கிராமப்புற மற்றும் பிராந்திய ஆஸ்திரேலியா முழுவதும் பணிபுரியும் இளம் பெண்களை அங்கீகரிக்கும் முகமாக வழங்கபடுகிறது. வெற்றியாளர்களுக்கு கான்பெர்ராவில் (Canberra)  நகரத்தில் பத்திரிகை, அரசியல் மற்றும் அரசாங்கத்துடன் தொடர்பான  அனுபவத்தைப் பெற தனிப்பட்ட கற்றல் நிதி, வழிகாட்டுதல் மற்றும் பயண ஏற்பாடுகளை கொண்ட அடிப்படை பயிற்சிகளை வழங்கப்படுவது அவசியமாகும்.

பெண் நிபுணர்களைக் கண்டறிதல்

உலகெங்கிலும் உள்ள ஊடகங்களில் பெண் நிபுணர்கள் குறிப்பிடத்தக்க அளவு பிரதிநிதித்துவம் செய்யப்படவில்லை என்பதை பல ஆய்வுகள் எடுத்துக்காட்டுகின்றன. ஆண் மற்றும் பெண் நிபுணர்களின் சமநிலையை பேணுவதற்கு எடுக்கப்படும் நடவடிக்கைகள் தற்போதைய நிலைமையை  மாற்ற உதவும்.

பிபிசி (BBC) 50:50 திட்டம் 2018 இல் தொடங்கப்பட்டது, இது பிபிசி வானொலி, தொலைக்காட்சி  மற்றும் அதன் இணையத்தள  உள்ளடக்கங்களில்  பெண்களின் பங்களிப்பின் விகிதத்தைக் காண்பிப்பதை உறுதி உறுதி செய்யும் நோக்கத்துடன் தொடர்புபட்டது. குளோபல் மீடியா கண்காணிப்பு திட்டமானது  (The Global Media Monitoring Project) உலக ஊடகங்களில் பாலினம் குறித்து மேற்கொள்ளப்பட்ட மிகப்பெரிய மற்றும் நீண்ட  ஓர் ஆய்வு ஆகும்.

நிபுணர்களைத் தேடும் ஊடகவியலாளர்களால் பயன்படுத்தப்படும்    நம்பகமான மற்றும் செயற்பாட்டு தரவுத்தளங்களைக் கொண்ட வளங்களுக்கான வழிகாட்டியை GIJN தொகுத்துள்ளது. பெண்கள் சார்ந்த மூலங்களை தேடக்கூடிய வேறு சில இடங்கள் இங்கே தரப்பட்டுள்ளன:

Request a Woman Scientist என்பது 500 பெண் விஞ்ஞானிகளின் அனுசரணையுடன் உருவாக்கப்பட்ட ஓர் தளமாகும். இது ஊடகவியலாளர்களுக்கு,  அறிவியல் நிபுணத்துவம் வாய்ந்த பெண்கள் மற்றும் பல்துறைசார் நிபுணத்துவம் வாய்ந்த பெண் நிபுணர்களுடன் தொடர்புகளை ஏற்படுத்திக்கொள்ளவும் உதவுகிறது. இது  துறைசார் பெண் நிபுணர்களுடன், தம் துறை சார்ந்த குறிப்பிட்ட விடயங்கள்,  செயற்பட்டுத்திட்டங்கள். மாநாடுகள் மற்றும் குழு விவாதங்கள் போன்றவற்றில் பங்கேற்றல் போன்ற விடயங்களை ஒருங்கமைத்தலுக்கு உதவியாக அமையும்.

பெண்கள் ஊடக நிலையத்தின் (Women’s Media Center), SheSourceஎனப்படுவது 1,100 -க்கும் மேற்பட்ட பல்துறைசார் பெண் நிபுணர்களின் தரவுத்தளமாகும். இதில் பல்வேறு தலைப்புகள், பெயர், முக்கிய தேடல் சொற்கள் மற்றும் தம் துறைசார் நிபுணத்துவத்தின் அடிப்படையில் விடயங்களைத் தேடக்கூடிய வகையில் அமைந்துள்ளது. நிபுணர்களின் சுயவிபரக்கோவை  தொடர்பான மூலாதாரங்கள்  மற்றும் அவர்களின் புகைப்படங்களை பெற்றுக்கொள்வதோடு,  இவ்இணையதளத்தில் ஒரு படிவம் ஒன்றினை நிரப்புவதன் மூலம் அவர்களை நேரடியாக தொடர்பு கொள்ளலாம்.

Women Plus என்பது 750 க்கும் மேற்பட்ட சுயமாக-பரிந்துரைக்கப்பட்ட “தொழில்நுட்ப வல்லுநர்களின்” ஓர் வகைப்படுத்தப்பட்ட பட்டியலாகும்.

The Women’s Room  /மகளிர் அறை என்பது அங்கீகரிக்கப்பட்ட ஊடகவியலாளர்களினால் பயன்பாட்டிற்காக   வடிவமைக்கப்பட்ட பெண் நிபுணர்களின் தரவுகளைக்கொண்ட ஓர் உலகளாவிய தரவுத்தளமாகும். நீங்கள் நிபுணத்துவம், முக்கிய தேடல் சொற்கள்  மற்றும் புவியியல் அமைவிடம் தொடர்பில் தேடலாம். தொடர்புடைய முக்கிய  தலைப்புகளில் கலந்துரையாடல் மன்றமும் குறுஞ்செய்தி உரையாடலை மேற்கொள்ளும் வசதியும் இங்கு உள்ளது.

வெளியுறவுக் கொள்கையில் பெண்களின் குரல்களை முன்னிலைப்படுத்தவும் அதிகரிக்கவும்  தொடங்கப்பட்ட Foreign Policy Interrupted (FPI) என்னும் தளமானது , உலகெங்கிலும் உள்ள பெண் வெளியுறவுக் கொள்கை நிபுணர்களின் பட்டியலைக் கொண்டுள்ளதோடு தற்போது செய்திகளில் அவர்களின் ஆர்வ -விடயப்பரப்புகளின்  அடிப்படையில் வரிசைப்படுத்தப்பட்டுள்ளது. பெண் நிபுணர்களுக்கான கருவிகளையும் பயிற்சியையும் FPI வழங்குகிறது.

Quote This Woman+ என்பது தென்னாபிரிக்காவின் உள்ள ஓர் இலாப நோக்கமற்ற அமைப்பாகும், இது விவசாயம் முதல் இனவெறி போன்ற தலைப்புகளில் நிபுணத்துவம் வாய்ந்த 200 க்கும் மேற்பட்ட பெண் நிபுணர்களின் தரவுத்தளத்தைக் கொண்டுள்ளது.

 நீங்கள் போதுமான நேரத்தை முன்னமே  வழங்கினால், உங்களுக்காக ஒரு குறிப்பிட்ட நிபுணரைக் கண்டுபிடிக்க இக்குழு உதவும். பாலின மூல இடைவெளியை மூடுவதற்கு இந்த அமைப்பு வலியுறுத்தும் அதேவேளை, ஆண் மற்றும் பெண் வல்லுநர்களின் சமநிலையை சமீபத்தைய அறிக்கையிடல்களை  கண்காணித்து பெண் நிபுணர்களுக்கு ஊடக பயிற்சியை வழங்குகிறது. அண்மைய செய்திப் போக்குகள் தொடர்பான உங்களுக்கு அனுப்பப்படும் நிபுணர் பட்டியல்களைப் பெற இச்செய்திமடலுக்கு  பதிவு செய்யவும்.

Voces expertas என்பது ஊடகவியலாளர்கள் கலந்துரையாடி ஆலோசிக்க கூடிய வகையில் லத்தீன் அமெரிக்காவில் உள்ள பெண் நிபுணர்களின் இணையதள கோப்பகமாகும். (ஸ்பானிஷ் மொழியில்)

இந்த திறந்த கோப்பகம் ஜப்பான் மற்றும் கொரியாவில் உள்ள  257 பெண் நிபுணர்களை பட்டியலிடும் அதேவேளை  ஹாங்காங், மக்காவ், சீனா மற்றும் தைவான் ஆகிய நாடுகளில் உள்ள 495 பெண் நிபுணர்களையும்  மற்றொரு பட்டியலிடுகிறது.

செய்திகளை உருவாக்கும் பெண்கள் – தாய்லாந்து (Women Make the News – Thailand)  என்பது பத்திரிகையாளர்களுக்காக வடிவமைக்கப்பட்ட தாய்லாந்து பெண் நிபுணர்களின் தரவுத்தளமாகும். நீங்கள் குறிப்பிட்ட துறை, நிபுணத்துவம், கருப்பொருள், இடம் மற்றும் முக்கிய தேடல் சொற்கள் மூலம் தேடலாம்.

அமெரிக்காவின் வாஷிங்டன், டிசியைத் தளமாகக்கொண்ட The Brookings Institution  என்னும் சிந்தனைக் குழாமானது, தொழில்நுட்பக் கொள்கை தொடர்பில்  அமெரிக்காவினை சேர்ந்த  பெண்கள் மற்றும் மிகக்குறைவாக பிரதிநிதித்துவப்பட்டிருக்கும்  பாலினத்தவர்களை உள்ளடக்கிய சுமார்  600-க்கும் மேற்பட்ட நிபுணர்களின் மகளிர் + மூலாதாரங்களின்  பட்டியலைத் தொகுத்துள்ளது. இவ்வளமானது, ஊடகவியலாளர்கள் நிபுணர்களின் தொகுப்பை அவர்களது பின்னணி அல்லது விசேட சிறப்புத்தன்மை தொடர்பில் தேட அனுமதிக்கிறது.

Women Also Know Stuff    என்னும் தளமானது அரசியல் விஞ்ஞானம் மற்றும் உலகெங்கிலும் உள்ள பல விடயங்களில் நிபுணத்துவம் பெற்ற பெண் நிபுணர்களைப் பற்றிய 50 பிற தளங்களின் பட்டியலையும் கொண்டுள்ளது.

Women for Media என்பது அவுஸ்திரேலியாவில் 200 க்கும் மேற்பட்ட சிறந்த பெண் நிபுணர்கள் மற்றும் தலைவர்களின் தரவுத்தளமாகும், இது பெயர் அல்லது முக்கிய தேடல் சொற்களால் தேடப்படக்கூடியதாக உள்ளது.

ExpertWomen என்பது கனடாவில் உள்ள பெண் நிபுணர்களின் தரவுத்தளமாகும். இதில்  குறி சொற்கள் மற்றும்  தொடர்பு பொத்தான் மூலம்  நிபுணர்களை தொடர்புகொள்ள முடியும்.

புலனாய்வு இதழியல் தொடர்பில்  பெண்கள் மீதான கவனம்

ஜெர்மனியின் ஹாம்பர்க் நகரத்தில் நடந்த 11 வது உலகளாவிய புலனாய்வு இதழியல் மாநாட்டில் (#GIJC19), பத்து பெண் புலனாய்வு பத்திரிகையாளர்கள் தங்கள் தனிப்பட்ட அனுபவங்களைப் பகிர்ந்துகொண்டு, பத்திரிகை நிலை மற்றும் பெண்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தொடர்பில் விளக்கினர். இவ் விவாதத்தின் வீடியோவை நீங்கள் இங்கே காணலாம்:


GIJN இன் 10 வது உலகளாவிய புலனாய்வு இதழியல் மாநாட்டில் பாரம்பரியமாக ஆண்கள் ஆதிக்கம் செலுத்தும் துறையில் வெற்றிபெற எட்டு உதவிக்குறிப்புகளை அனுபவம் வாய்ந்த பெண் ஊடகவியலாளர்கள் பகிர்ந்து கொண்டனர்.
இந்தியாவில், பெண் பத்திரிகையாளர்கள் கிராமப்புற, பெண்களை மையமாகக் கொண்ட ஓர் செய்தித்தாளைத் தொடங்கினர். அது இப்போது ஓர் தேசிய முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வாக மாறி உள்ளது.
மெக்சிகோவில், புலிட்சர் பரிசு (Pulitzer Prize) வென்றவர்கள் மற்றும் ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தின் Nieman ஊடக புலமைப்பரிசில்களை பெற்ற  -Harvard Nieman Fellows) பெண் ஊடகவியலாளர்கள் புலனாய்வு இதழியல் துறையில் முன்னணியில் உள்ளனர்.
பிரேசிலில், பெண் பத்திரிக்கையாளர்கள் அந்நாட்டின் வடகிழக்கில் உள்ள மாநிலமான பெர்னாம்புகோவில் (Pernambuco) கொலை செய்யப்பட்ட பெண்களின் கதைகளைச் சொல்ல  #OneByOne என்ற திட்டத்தை தொடங்கினர்.
அமெரிக்காவில், பெண்கள் புலனாய்வு இதழின் பொற்காலத்தை வழிநடத்துகிறார்கள் – 2018இல் நடைபெற்ற  #WomenWhoDare என்ற தலைப்பிலான கலந்துரையாடல் தொடரின் விவாதம்.
இரண்டு அமெரிக்க பேராசிரியர்களால் எழுதப்பட்ட, “Data Feminism” என்ற புத்தகமானது  “தரவு அறிவியல் மற்றும் தகவல் தொடர்புத் துறையில் எப்படி பெண்ணிய சிந்தனைகள்” பயன்படுத்தப்படலாம் என்பதைப் பார்க்கிறது. இக்கையெழுத்துப் பிரதி, தற்போது சக மதிப்பாய்வு மற்றும் கருத்துகளுக்காக முன்வைக்கப்பட்டிருக்கும் அதேவேளை, தரவு இதழியலின் பல எடுத்துக்காட்டுகளையும்  கொண்டுள்ளது.  மேலும் இது “பல்வேறு வகையான கட்டமைப்பு ஏற்றத்தாழ்வுகள் மற்றும் அதிகார ஏற்றத்தாழ்வுகளை சவால்விடுக்கும் வண்ணம் ” தரவுகளைப் பயன்படுத்துகிறது.
உலகெங்கிலும் பாலினம், பாலியல் மற்றும் சமூக நீதியை உள்ளடக்கிய OpenDemocracy நிறுவனத்தின் சுதந்திர ஊடகங்களுக்கான 50.50 திட்டத்திலிருந்து ஆசிரியர்களால் நிர்வகிக்கப்படும் “நமக்கு ஏன் பெண்ணிய புலனாய்வு இதழ் தேவை” என்ற குழுவின் வீடியோவினை  இங்கே காணலாம். சமீபத்தில் 50.50 இயக்கம் பாலியல் மற்றும் இனப்பெருக்க உரிமைகளுக்கு எதிராக பழமைவாத மற்றும் அடிப்படைவாதக்கருத்துக்களை கொண்டிருக்கும்  குழுக்களின் வலையமைப்புகளை  தோண்டியெடுக்கும் ஒரு கண்காணிப்பு திட்டமான Tracking the Backlash என்ற திட்டத்தை அறிமுகப்படுத்தியது.
Refuge Woman என்பது இங்கிலாந்தின்The Bureau of Investigative Journalism in the UK,  என்ற நிறுவனத்தின் ஒரு தனித்துவமான திட்டமாகும், இது வீட்டு வன்முறை பற்றிய ஒரு புலனாய்வுச்செய்தி அறிக்கையிடலை பேசுபொருளாக முன் கொண்டு வந்தது.
இந்த வளங்களின் தொகுப்பை ஒருங்கிணைத்த GIJN பங்களிப்பு ஆசிரியர் கிரா ஜலானுக்கு (Kira Zalan) நன்றி. பெண் பத்திரிகையாளர்களுக்கான வேறு ஏதாவது வளங்களை நாம் சேர்க்க தவறியுள்ளோமா?  தயவுசெய்து உங்கள் பரிந்துரைகளை எங்களுக்கு மின்னஞ்சல் மூலம்  அனுப்புங்கள், நாங்கள் இப்பட்டியலை மேலும் விரிவாக்குவோம்.
மேலதிக வாசிப்பு வளங்கள்
·        Investigating Femicide: A GIJN Guide
·        Freelancing: Safety and Security
·        Fundraising: Essential Reading
மூலம்
This story was originally published by the Global Investigative Journalism Network (GIJN)

Hot this week

CIR and SCOPE host workshop for women journalists on GBV

The Centre for Investigative Reporting (CIR) and Strengthening Social...

GBV and Women’s Political Participation – A Workshop for Women Journalists

‘Towards New and Inclusive Narratives,’ a workshop on GBV...

Panel discussion on ‘Election Disinformation, Online Hate & Women’s Political Representation’

The Center for Investigative reporting (CIR) will host a...

NPP sweeps the polls including the Tamil majority areas signalling a deep political shift in island politics

NPP receives a historic mandate countrywide including Tamil majority...

Topics

CIR and SCOPE host workshop for women journalists on GBV

The Centre for Investigative Reporting (CIR) and Strengthening Social...

GBV and Women’s Political Participation – A Workshop for Women Journalists

‘Towards New and Inclusive Narratives,’ a workshop on GBV...

Reporting on Non-Economic Loss and Damage from Environmental Disasters

𝐌𝐞𝐞𝐭 𝐭𝐡𝐞 𝐂𝐈𝐑 𝐅𝐞𝐥𝐥𝐨𝐰𝐬 Four Journalism Fellows under a special...

Women encounter a toxic internet that robs their voice- Shreen Saroor

Men and women experience the internet differently. Women experience...

Related Articles

Popular Categories