Sunday, December 22, 2024
32 C
Colombo

ஆட்கடத்தல் தொடர்பான அறிக்கையிடலுக்கான வளங்கள்: செய்தி அறிக்கையிடலில் சிறந்த நடைமுறைகள்

புலனாய்வு ஊடகவியலாளர்கள், ஆட்களைக் கடத்துதல் தொடர்பான அறிக்கையிடலில் ஈடுபடும் போது பல்வேறு தரப்பட்ட திறன்களை பயன்படுத்துகின்றனர்.

இதன் போது பாதிக்கப்பட்டவர்களின் உணர்வுபூர்வமான நேர்காணல் மிக முக்கியமானதாக காணப்படுகின்றது; பாதிக்கப்படக்கூடிய கதை மாந்தர்களை நேர்காணல் செய்வதற்கு பல பயனுள்ள வழிகாட்டிகள் உள்ளன.

இவ்விடயத்தில், சர்ச்சைக்குரிய தரவுகளை பெற்றுக்கொள்வதென்பது சில சந்தர்ப்பங்களில் மிகவும் சவாலானது. ஆகவே தான், சில ஊடகவியலாளர்கள் தங்கள் செய்தியறிக்கையிடலுக்கு பின்னர் கூறுவது போல் ஒரு குறிப்பிட்ட செய்தியறிக்கையில் பல நாடுகளைச் சேர்ந்த ஊடகவியலாளர்களின் ஒத்துழைப்பானது மிகவும் அவசியமான ஒரு காரணி ஆகும்.

இது தொடர்பான பிற தலைப்புகள் கீழே விவாதிக்கப்பட்டுள்ளன.

சிறப்பு உதவி தளங்கள்

Ethical Journalism Network என்னும் நிறுவனத்தினால் உருவாக்கப்பட்ட, Media and Trafficking in Human Beings Guidelines  என்னும் கைநூல் இவ்வாறு ஆரம்பிக்கிறது:  “ஆட்கடத்தல் தொடர்பான அறிக்கையிடலென்பது, ஊடகவியலாளர்களுக்கும் பத்திரிகையாசிரியர்களுக்கும் மிகச்சவாலானதும், ஊடக நெறிமுறைகளை பரிசோதிக்கும்  வகையில் அமையும் ஒரு பணியாகும்.”

இந்த திட்டம் ஐரோப்பிய ஒன்றியத்தால் நிதியளிக்கப்பட்டதுடன் சர்வதேச இடம்பெயர்வு கொள்கை மேம்பாட்டு மையத்தின் – International Centre for Migration Policy Development (ICMPD) தலைமையில் ஒரு சர்வதேச கூட்டமைப்பால் செயல்படுத்தப்பட்டது.

2017 இல் வெளியிடப்பட்ட இந்த அறிக்கை, கடத்தலின் அடிப்படைகளை மட்டும் வரையறை செய்யாது, செய்தி அறை (News Room) நுணுக்கங்கள் மற்றும் பத்திரிகை நெறிமுறைகளைப் பற்றியும் விவாதிக்கிறது.  இதில் உள்ள  “தொடக்ககேள்விகள் -Starting Questions” என்னும் பிரிவானது,  பிழையான தகவல்கள், சமூக வலைப்பின்னல்களில் இருந்து வரும் பொய்யான செய்திகள் மற்றும் சொந்த நலன்களைக் கருத்தில் கொண்டு பிரச்சாரம் செய்தல் போன்ற  “பொறிகளைத் தவிர்க்கும் ” வகையில்  ஊடகவியலாளர்களை எச்சரிக்கிறது

Repórter Brasil என்னும் தளமானது பிரேசிலில் அடிமைத் தொழிலாளர்களைப் பாதுகாப்பதற்கான முக்கிய தகவலை வழங்கும் ” ஊடகவியலாளர் கைநூல்” ஒன்றினைக் கொண்டுள்ளது, ஆனால் அது பரந்த பொருந்தக்கூடிய தன்மையையும் கொண்டுள்ளது. பிரேசிலில் உள்ள மக்கள் மற்றும் தொழிலாளர்களின் அடிப்படை உரிமைகளின் மீறல், சமூக பிரதிபலிப்பு மற்றும் அவை சார் நடவடிக்கையை ஊக்குவிக்கும் நோக்கத்துடன் 2001 ஆம் ஆண்டில் பத்திரிகையாளர்கள், சமூக விஞ்ஞானிகள் மற்றும் கல்வியாளர்களால் Repórter Brasil நிறுவப்பட்டது.

University of North Carolina School of Media and Journalism என்ற அமெரிக்கப் பல்கலைக்கழகத்தின் The Irina Project என்பது மற்றுமொரு வளமாகும். இது தொடர்பான மேலதிக தகவல்கள் மற்றும்  ஊடகங்கள்,  ஆட்கடத்தல் சம்பந்தமான அறிக்கையிடல் பற்றிய மதிப்பீடு கீழ் உள்ள அத்தியாயத்தில் தரப்படுத்துள்ளது.

ஒரு குறுகிய, ஆனால் மிகவும் சவாலான வழிகாட்டியாக அமெரிக்க ராஜாங்க திணைக்களத்தால் (US State Department) 2017 இல் வெளியிடப்பட்ட “சிறந்த ஊடக நடைமுறைகள்” என்னும் கைநூல் விளங்குகிறது. இது இவ்வாறு தொடங்குகிறது:

ஆட்கடத்தல் தொடர்பாக ஊடகங்கள் எவ்வாறு அறிக்கையிடுகின்றன என்பது ஊடகங்களில் வெளியாகும் செய்தி அறிக்கைகைகளைப் போலவே மிகவும் முக்கியமானதாகும்.  மேலும், இவ்வாறான செய்தி அறிக்கையிடல்களின் தாக்கமானது, பொதுமக்கள், அரசியல்வாதிகள், சட்டம், ஒழுங்கு அதிகாரத்துறையினர் மற்றும் பிற ஊடகங்கள் கூட இந்த பிரச்சினையை புரிந்து கொள்ளும் விதத்தை பிரதிபலிக்கிறது. சமீபத்திய ஆண்டுகளில்,  ஆட்கடத்தல் பற்றிய பல செய்தியறிக்கைகள் தவறான தகவல், காலாவதியான புள்ளிவிவரங்கள், பாதிக்கப்பட்டவர்களை குற்றம்சாட்டுதல் அல்லது அறிக்கையிடலுக்காக அவர்களை தொடர்ந்து சுரண்டல் மற்றும் குழப்பமான சொற்களை உள்ளடக்கியதாக அமைந்தது.

இந்த பிரச்சனைக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படுவதற்கு மாறாக, இவ்வாறான செய்தியறிக்கைகள், ஏற்கனவே குறைவாகவே அறிக்கையிடப்படுவதும் மற்றும் பெரும்பாலான பொதுமக்களால் தவறாக புரிந்து கொள்ளப்படுகின்ற ஒரு குற்றத்திற்கு மேலும் குழப்பத்தை விளைவிப்பதாக அமைகின்றன. ஆட்கடத்தல் பிரச்சினையானது தொடர்ந்து பொதுமக்களின் கவனிப்பைப் பெற்றுவரும் போது, ஊடகங்களிலிருப்போர் முழுமையாகவும் பொறுப்புடனும் அறிக்கை செய்ய வேண்டியதும், பாதிக்கப்பட்டு சுரண்டப்படுவோரை பாதுகாக்கும் பொறுப்பும் உள்ளது.

அகதிகள், புகலிடக் கோரிக்கையாளர்கள் மற்றும் குடியேறியவர்கள் பற்றிய அறிக்கையானது – Reporting on Refugees, Asylum Seekers and Immigrants, 90 Days 90 Voices  என்னும் இயக்கத்தால் ” ஊடக நெறிமுறைகளுக்கேற்ப குடியேற்றம் தொடர்பான அறிக்கையிடலுக்கான வழிகாட்டுதல்களை” வழங்கும் நோக்குடன் உருவாக்கப்பட்டது. அமெரிக்காவினை தளமாகக் கொண்ட இந்நிறுவனம், “தற்போதைய பல்வேறு குடியேற்ற நெருக்கடிகள் மத்தியில் அமெரிக்காவில் ஒரு புது வாழ்க்கையைத் தேடுவோரின் சொந்தக்கதைகள், ஒலிப்பேழை, புகைப்படம், காமிக்ஸ் மற்றும் நேரடியாக ஒளிபரப்புச் செய்யப்படும் ஊடக நிகழ்ச்சிகள் போன்றவற்றின் மூலம் அவர்களின் நிலைமையினை” எடுத்துக் காட்டுகின்றன. வழிகாட்டியின் ஓரு பகுதி இவ்வாறு கூறுகிறது:

“எல்லாவற்றிற்கும் மேலாக, சிந்தனையற்ற, தவறான மற்றும் கவனக்குறைவான அறிக்கையிடலினால் பாதிக்கப்படக்கூடிய புலம்பெயர்ந்தோர் மீது இழைக்கப்படும்  “இரண்டாவது காயத்தை” தவிர்க்குமாறு எங்களையும் மற்ற பத்திரிகையாளர்களையும் நாம் கேட்டுக்கொள்கிறோம். இவ்வாறான செயற்பாடுகள், உள்நாட்டுப் போர், நாட்டின் நிச்சயமற்ற தன்மை மற்றும் பெருந்துயரங்களிலிருந்து தப்ப முயலும் அகதிகளை மேலும் நெருக்கடியில் தள்ளுவதாக அமையும்.

இந்தோனேசியாவிலுள்ள டெம்போ நியூஸ் ரூமின்-Tempo Newsroom (நிர்வாக ஆசிரியர் வஹ்யு தியாத்மிகா-WahyuDhyatmika ஆசியாவில் நவீன அடிமைத் தனத்தை வெளிப்படுத்துதல்- Exposing Modern Slavery in Asia. என்ற தலைப்பில் IJAsia18 மாநாட்டில் நடைபெற்ற உரையாடலில் இது தொடர்பான ஓர் ஊடக புலனாய்வின் தோற்றத்தை விவரித்தார்.

GIJC17 மாநாட்டில், ஆட்கடத்தல் வளங்கள் பற்றிய உதவிக் குறிப்புகளை Transparentem என்னும் இலாப நோக்கற்ற புலனாய்வு  ஊடகவியல் நிறுவனத்தின் இணை-முதன்மை மற்றும் புலனாய்வு இயக்குனரான டிம் சாண்ட்லர் (Tim Sandler) வழங்கினார். இந்நிறுவனமானது, புலனாய்வு ஊடகவியல் மற்றும் தடயவியல் நுட்பங்களை பயன்படுத்தி ஆட்கடத்தலுக்கான  வலையமைப்பு, மனிதாபிமான மற்றும் சுற்றுச்சூழல் மீது நிகழ்த்தப்படும் துஸ்பிரயோகங்களை வெளிச்சத்திற்கு கொண்டுவர உதவு புரிகிறது.

அடிமைத்தனம் பற்றிய அறிக்கை: நிபுணர்களிடமிருந்து  சில குறிப்புக்கள் என்பது, GIJC17 மாநாட்டில் AP செய்திச்சேவையின் நிருபர் மார்த்தா மெண்டோசா Martha Mendoza) , சுதந்திர ஊடகவியலாளர் மாலியா பொலிட்ஸர் (Malia Politzer) மற்றும் International Center for Development Reporting  என்னும் நிறுவனத்தின் எம்மானுவேல் மாயா (Emmanuel Mayah) ஆகியோரால் வழங்கப்பட்ட விளக்கங்களை கொண்டவையாகும்.

How They Did It: Investigating Trafficked Guatemalan Teens in the US என்னும் தலைப்பிலான இவ் விவரணம், அமெரிக்காவில் ஆட்கடத்தலுக்கு உள்ளாக்கப்பட்டோர் – (“Trafficked in America”) தொடர்பான ஆவணக் காணொளி எவ்வாறு உருவாக்கப்பட்டது என்பதை விளக்குகிறது.

வரைவிலக்கணங்கள்

இவ்விடயத்தில் வரைவிலக்கணங்கள் தொடர்பான விளக்கங்களைக் கொண்டிருப்பது மிகமுக்கியமானது.

இதில் பல பிரிவுகள்உள்ளடங்குகின்றன: கடன் கொத்தடிமை, ஒப்பந்த அடிமைத்தனம், பாலியல் கடத்தல், கட்டாய அல்லது அடிமை திருமணம், வீட்டு வேலை, சிறுவர் தொழிலாளர் மற்றும் சிறுவர் போராளிகள் என்பனவாகும். இவற்றில் குறிப்பிடத்தக்க வேறுபாடுகள் மற்றும்  அவை தொடர்பான வாதங்களும் தொடர்ந்து இருக்கத்தான் செய்கின்றன. உதாரணமாக,  ஆட்கடத்தலில் (ஒப்பந்த சேவை) இருந்து மனிதர்களை கடத்துவதும் (துஷ்பிரயோகம்), பாலியல் கடத்தலில் இருந்து விபச்சாரத்தையும் வேறுபடுத்துவது பற்றி குறிப்பிடலாம்.

இது தொடர்பாக மேலும் அறிய, Free the Slaves  என்னும் இணையதளத்தில்  அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் பக்கத்தைப் பார்வையிடவும். Liberty Asia என்னும் அமைப்பினால் தயாரிக்கப்பட்ட “பாதிக்கப்பட்டோரை அடையாளங் காணும் கருவிகள் “எனும் தொடுப்பானது சர்வதேச ஒப்பந்தங்களில் வரையறைகளின் பின்னணியை வழங்குகிறது.

The Irina Project இன் வரையறைகள் தொடர்பான பக்கத்தை பார்க்கும் போது,  அதில் “குழந்தை விபச்சாரிகள்” போன்ற வார்த்தைகளை பயன்படுத்தப்படக்கூடாது போன்ற பரிந்துரைகள் அடங்கியிருப்பதை காணலாம்.

லிபியாவிலிருந்து ஐரோப்பாவிற்கு புலம்பெயர்வோரின் ஆட்கடத்தல் மற்றும் மனித கடத்தல்கள்:  ஊடகங்கள் என்ன சொல்கின்றன? (Migrant smuggling and human trafficking from Libya to Europe: What does the media say? )-  Enact  என்னும் நிறுவனத்தினால்  வெளியிடப்பட்ட  இந்த 2019 அறிக்கை Ciara Aucoin மற்றும்  Gihane Ben Yahia ஆகியோரால்  எழுதப்பட்டது.  “இந்த ஆய்வு, ஆங்கில செய்தி ஊடகங்களில் லிபியாவிலிருந்து புலம்பெயர்வோரின் கடத்தல் மற்றும்  ஆட்கடத்தல் சம்பவங்கள் தொடர்பில் எவ்வாறு அறிக்கையிடப்பட்டது  என்பதை  ஆராய்வதோடு,   அதிகமாக பிரயோகிக்கப்பட்ட வார்த்தைகளான அடிமை,  துஷ்பிரயோகம் மற்றும் பணப்பரிமாறல்” தொடர்பாகவும் கவனம் செலுத்தியிருந்தது.

தனியாள் கதை சித்தரிப்புகளை சிறந்த முறையில் அறிக்கையிடல்


இவ்விடயத்தில் ஆட்கடத்தல்களினால் பாதிக்கப்பட்டவர்களை சிறந்த முறையில் நேர்காணல் செய்வதென்பது மிக முக்கியமான விடயமாக இருப்பதோடு,  இது வேறு  சில விசேட சவால்களையும் அளிக்கிறது.

“பாதிக்கப்பட்டவருக்கான எந்தவொரு அணுகுமுறையும் படிப்படியானதோடு மற்றும்  அச்சுறுத்தல் இல்லாத  ஒரு செயல் முறையாக இருக்க வேண்டும்” இவ்வாறு சட்ட அமலாக்கத்துக்கான அமெரிக்க நீதித்துறை (US Justice Department ) வழிகாட்டி தொடங்குகிறது, இது செய்தியாளர்களுக்கும் பொருந்தும்.

இவ்வழிகாட்டியின் கூற்றுப்படி, ஆட்கடத்தல் நடவடிக்கைகளால் பாதிக்கப்பட்டிருக்கூடியவர்கள் என்று கருதுவோர்களை ஒரு புலனாய்வு நேர்காணலுக்கு தயார் செய்து நடாத்தும் போது, பாதிக்கப்பட்டவரின் உண்மை நிலையே உங்களின் யதார்த்தம் என்பதை நினைவில் கொள்வது மிகவும் அவசியமாகும்.  இது தொடர்பான மேலதிக வளங்களுக்கான இணைப்புகளும் வழிகாட்டியில் தரப்பட்டுள்ளன.

அரச சார்பற்ற நிறுவனமான Project Reach, தனது வழிகாட்டியில் “நீங்கள் இது தொடர்பில் என்ன மாதிரியான விடயங்களை பார்க்க முடியும்” போன்ற சில குறிப்புகளை விவரிக்கிறது:  “ஞாபகங்களில் ஏற்படும் மாற்றங்கள், பொய்யை அல்லது கதை சொல்லலைக் குறிக்காது என்பது தொடர்பில் அவதானமாக இருக்க வேண்டும், ஆனால் அவை ஒரு அதிர்ச்சிகரமான சம்பவமொன்றின் பிரதிபலிப்பிற்கு சான்றாக இருக்கலாம்.”

ஊடகவியலாளர்களுக்கான  சில பரிந்துரைகள் என்பது, கலிபோர்னியாவைச் சேர்ந்த ஆட்கடத்தல் சம்பவங்கள் தொடர்பான ஆலோசகரான மின் டாங் (Minh Dang) அவர்களால் தயாரிக்கப்பட்டது. அவர் ஐந்து முக்கிய வழிகாட்டும்  கொள்கைகளை பட்டியலிடுகிறார்:

  • நீங்கள் நேர்காணல் செய்யும் நபர் விதிகளை உருவாக்குகிறார்.
  • ஒரு ஊடகவியலாளராக  வெளிப்படையாக, திடமாக இருங்கள்.
  • நேர்காணல் செய்யப்படும் நபர் ஒரு தனிநபர், பாதிக்கப்பட்டோரின் பிரதிநிதி அல்ல என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
  • உங்கள் நோக்கம் உண்மையைத் தேடுவதும் அதை பொதுமக்களிடம் தெரிவிப்பதும் ஆகும்.
  • எல்லாவற்றிற்கும் மேலாக, எந்தத்  தீங்கும் செய்யாதீர்கள்.

அமெரிக்காவில் சிறுவர் துஷ்பிரயோகம், வல்லுறவு  மற்றும்  உள்நாட்டு  பாலியல் கடத்தலில் இருந்து தப்பித்த டாங் (Dang), 2013 ஆம் ஆண்டு வெளியான “Survivors of Slavery: Modern-Day Slave Narratives,” என்னும் அறிக்கையின் அறிமுகத்தை எழுதினார். அதில் அவர், ஆட்கடத்தல் எதிர்ப்பு  இயக்கத்திற்கான வழிகாட்டும்  கொள்கைகளை முன்வைக்கும் போது, ” தப்பிப்பிழைத்தவர்களை மீண்டும் மனிதாபிமானப்படுத்தல் ”  என்பதிலிருந்து தொடங்குவதாக குறிப்பிடுகிறார்.

சிறுவர் பாலியல் கடத்தலில் இருந்து தப்பிப்பிழைத்த ஒருவர் ஹோலி ஸ்மித் (Holly Smith).  அவர் நல்லுறவு மற்றும் நம்பிக்கையை வளர்ப்பதன் முக்கியத்துவம் பற்றி  எழுதியதோடு பாதிக்கப்பட்டவர்களுடனான உறவை புதுப்பிக்க நேரமும் பொறுமையும் தேவைப்படும் என்பதை வலியுறுத்துகிறார். அவர் மேற்கோள் காட்டும் மற்றொரு பாதிக்கப்பட்டவர் கூறியது போல, “முதல் சில கூட்டங்களில் நீங்கள் அவர்களின் நம்பிக்கையைப் பெற்று நல்லுறவை வளர்த்துக் கொள்கிறீர்கள்.”

லூசியானா மாநில பல்கலைக்கழகத்தின் (Louisiana State University’s Manship School of Mass Communication) வளாகத்தில் கற்பித்த ஸ்டீவ் பட்ரி  (Steve Buttry) தயாரித்த  உதவிக் குறிப்புகளில், “நீங்கள் எப்படி உணருகிறீர்கள் என்பதை  நான் புரிந்து கொள்கிறேன்” என்று சொல்வதற்கு பதிலாக “நான் உங்களின் கதையை சொல்ல விரும்புகிறேன்”  என்று கூறுவது மிகப்பொருத்தமாக அமையும் என்பதுகூட இந்த குறிப்புகளில் அடங்கியுள்ளது. பாய்ன்டர் (Poynter) எனப்படும் நிறுவனத்தினால் “Journalism and Trauma” என்னும் இணையவழி கற்கைநெறி இலவசமாக   வழங்கப்படுகிறது.

பெண்கள் மற்றும் குழந்தைகளை நேர்காணல் செய்வதற்கான குறிப்பித்தக்க   ஆலோசனைகள் ஐக்கிய நாடுகளின் போதைப்பொருள் மற்றும் குற்றவியல் அலுவலகத்திநாள் வெளியிடப்பட்ட The Toolkit to Combat Trafficking in Persons என்ற இணைப்பில் உள்ளடக்கப்பட்டுள்ளது. நேர்காணல் மற்றும் பிற தலைப்புகளில் UNDOC இனால் வெளியடப்பட்ட Anti-Human Trafficking Manual for Criminal Justice Practitioners.” எனும் வழிகாட்டி பயனுள்ளதாக  இருக்கும்.  உலக சுகாதார நிறுவனத்தின் பங்களிப்புடன் “நெறிமுறைகளுடன் கூடிய பாதுகாப்பான நேர்காணல்களை நடத்துதல்”  எனும் வழிகாட்டியும் காணப்படுகிறது.

தாய்லாந்து கடற்றொழில்துறையில் அடிமைத் தொழிலாளர்களின் பயன்பாட்டை முதலில் உலகிற்கு வெளிப்படுத்திய அசோசியேட்டட் பிரஸ்  (Associated Press-AP) செய்திச்செவை அணியின் உறுப்பினராக இருந்த நிருபர் மார்த்தா மெண்டோசா (Martha Mendoza), WHO மற்றும் UNODC வழிகாட்டிகளை ஏழு பாடங்களாக வடிவமைத்துள்ளார்:

ஒருபோதும் எவ்வித தீங்கும் செய்யாதே. ஒவ்வொரு பெண்ணையும், அப்போது நிலவும் சூழ்நிலையையும் கருத்தில் கொண்டு  எதிர்மறையான ஆதாரங்கள் இருக்கும் வரை தீங்கு விளைவிக்கும் சாத்தியம் தீவிரமானது என கருதுங்கள். குறுகிய கால அல்லது நீண்ட காலத்திற்கு ஒரு பெண்ணின் நிலைமையை மோசமாக்கும் என நீங்கள் கருதினால் எந்த நேர்காணலையும் மேற்கொள்ள வேண்டாம்.

மொழிபெயர்ப்பாளர்களையும்  சக பணியாளர்களையும்  போதுமான அளவு தேர்ந்தெடுத்து தயார் செய்யுங்கள். பாதிக்கப்பட்டவரை எப்படி அணுகுவது,  அவர்களின் அடையாளம் காட்டப்படுமா என்பது பற்றி புகைப்படக்காரர்கள்,  ஒளிப்பதிவாளர்கள் மற்றும் மொழிபெயர்ப்பாளர்களை முன்கூட்டியே தயார் செய்யவும். ஆட்கடத்தலினால் பாதிக்கப்பட்ட குழந்தைகளின் படங்களை ஒருபோதும் பிரசுரிக்க வேண்டாம்.

அநாமதேயத்தையும்  இரகசியத்தையும் மதிக்கவும். முழுமையான அறிக்கையிடல் செயல்முறையின் போது, ஒரு செய்தி மூலத்தின் அடையாளம் மற்றும் இரகசியத்தன்மையைப் பாதுகாக்கவும். கைகளின் படங்கள், நிழற்படங்கள் அல்லது அடையாளம் காணப்படாத பிற படங்கள் என்பவை போதுமானவை.

அவர்களின் வழியைப் பின்பற்றுங்கள். ஒவ்வொரு பெண்ணின் நிலைமையையும் அவளுடைய பாதுகாப்பிற்கான ஆபத்தையும் மதிப்பீடு செய்வதைக் கேட்டு மதிக்கவும். ஒவ்வொரு பெண்ணுக்கும் வெவ்வேறு கவலைகள் இருக்கும் என்பதையும், அவளுடைய கவலைகளை அவள் பார்க்கும் விதமும் நீங்கள் எப்படி மதிப்பிடுவீர்கள் என்பதிலிருந்து வேறுபட்டிருக்கலாம் என்பதையும் அங்கீகரிக்கவும்.

ஒரு பெண்ணை மீளவும் காயப்படுத்தாதீர்கள்.  உணர்ச்சிவசப்பட்ட பதிலைத் தூண்டும் வகையில், குறிப்பாக வீடியோ ஒளிப்பதிவுக்காக கேள்விகளைக் கேட்காதீர்கள். நேர்காணலில் இடைநிறுத்துவதன் மூலமும், ஓய்வு எடுத்துக்கொள்வதன் மூலமும், ஒரு சமூக சேவகர் அல்லது குடும்ப உறுப்பினரைக் கொண்டுவருவதன் மூலமும் ஒரு பாதிக்கப்பட்ட பெண்ணின் துயரத்திற்கு பதிலளிக்க தயாராக இருங்கள்.

அவசரநிலை  தலையீட்டிற்கு தயாராக  இருங்கள். ஒரு பெண் உடனடி ஆபத்தில் இருப்பதாக சொன்னால் அதற்கு பதிலளிக்க தயாராக இருங்கள். இதன் பொருள் உதவிக்கு என்ன ஆதாரங்கள் உள்ளன என்பதை அறிந்து,  அவற்றைப் பற்றி அவளுக்குத் தெரியும் என்பதை உறுதிப்படுத்துவதாகும்.

அவளுடைய கதையை நன்றாகப்  உபயோகப்படுத்துங்கள். யாராவது தங்கள் கதையைப் உங்களுடன்பகிர்ந்து கொள்ள தாராளமாக இருந்தால், அதை விரிவான துல்லியத்துடன், ஈடுபாட்டுடன் மற்றும் முழுமையான முறையில் அறிக்கையிடவும். இது ஒரு பிரச்சனைக்கு தீர்வை நோக்கி ஒரு படி நகரும்  வகையில், பொது மக்களின் கவனத்திற்குள் கொண்டுவருவதற்கான ஒரு வழியாகும்.

சர்வதேச இடம்பெயர்வு, மனித உரிமைகள் மற்றும் புலனாய்வு அறிக்கைகளில் நிபுணத்துவம் மற்றும் விருது பெற்ற விரிவான, ஆழமான கட்டுரை பாணியை கைக்கொள்ளும் ஊடகவியலாளர் மலியா பொலிட்சரால் (Malia Politzer) மற்றொரு தொகுதி பரிந்துரைகள் தொகுக்கப்பட்டன.

நினைவில் கொள்ள வேண்டிய விஷயங்கள்:                      

  • அதிர்ச்சியில் இருந்து  தப்பியவர்கள் தங்களுக்கு என்ன நடந்தது என்பதை மிகத் துல்லியமாக சொல்ல முடியாது.
  • தப்பிப்பிழைத்தவர்கள் வெவ்வேறு நேரங்களில் விஷயங்களை வித்தியாசமாக நினைவில் வைத்திருக்கலாம்.
  • அவர்கள் ஏன் சில நேரங்களில் அதிர்ச்சியை குணப்படுத்தும் சில வழிகளில் எதிர்வினை புரிந்தார்கள் என்பது அவர்களுக்கே புரியாமல் போகலாம்.
  • அவமான உணர்வு/குழப்ப நிலை போன்றன அவர்கள் சில விவரங்களை தவிர்ப்பதற்கு காரணமாக அமையலாம்.

அதிர்ச்சியில் பாதிக்கப்பட்டவர்களை நேர்காணல் செய்யும் போது:

  • அறிக்கையிடல் செயல்முறை முழுவதும் அவர்களது ஒப்புதல் கேட்கவும்.
  • அவர்கள் பின்னர் ஒப்புதலைத் திரும்பப் பெற்றால், நேர்காணலைப் பயன்படுத்த வேண்டாம்  (முதலில் அவர்கள் கொடுத்திருந்தாலும் கூட).
  • நீங்கள் அவர்களை எங்கே பேட்டி எடுக்க வேண்டும் என்பதை அவர்கள் முடிவு செய்கிறார்கள்.
  • அவர்கள் எந்த நேரத்திலும் நிறுத்தலாம்.
  • நீங்கள் வீடியோ/புகைப்படங்களை பதிவு செய்ய முடியுமா என்று அவர்களிடம் கேளுங்கள்; அனுமானிக்க வேண்டாம் (நீங்கள் வீடியோக்கள் அல்லது புகைப்படங்கள் எடுக்க வேண்டுமாயின் நேர்காணலுக்கு முன்கூட்டியே அவர்களுக்குத் தெரியப்படுத்தவும்,  அவற்றை நேர்காணலின்போது நீங்கள் எடுக்கும் போது மீண்டும் ஒருமுறை கேட்கவும்).
  • உங்கள் செயல்முறையை விளக்குங்கள், நீங்கள் ஏன் செய்கிறீர்கள் மற்றும் உங்கள் அறிக்கையின் சாத்தியமான விளைவுகள் என்ன என்பது பற்றியும் அவர்களுக்கு கூறுங்கள்.
  • நேர்காணல் செய்யப்படுபவர் எந்த சொற்களின் ஊடாக தன்னை அடையாளப்படுத்திக் கொள்ள விரும்புகிறார் என்று கேளுங்கள் (பாதிக்கப்பட்டவர்/உயிர் பிழைத்தவர்/உள்நாட்டு கடத்தல், CSEC – வணிக ரீதியாக பாலியல் சுரண்டப்பட்ட குழந்தை – தொழிலாளர் கடத்தல் போன்றவை- CSEC – commercially sexual exploited child – labor trafficking, etc.) மற்றும் அந்த வார்த்தையை கதையில் பயன்படுத்தவும்.
  • அவர்களை சிரம மான நிலைக்குத்தள்ள வேண்டாம்.
  • சாத்தியமானால், பாதிக்கப்பட்டவர்களின் அனுபவங்களை நேரடியாக சவால் விடுவதைத்  தவிர்க்கவும்  (மீண்டும் அவர்களை அதிர்ச்சியில் தள்ளும் வகையிலான  ஆபத்து),  ஆனால் பாதிக்கப்பட்டவர் வழங்கிய தகவலை வெளிப்புற ஆதாரங்களுடன் சரிபார்க்கவும்.

சிறுவர் துஷ்பிரயோகத்தில் இருந்து தப்பிப்பிழைத்தவர்களுடன் பணிபுரியும்  ஊடகவியலாளர்களுக்கு  ஆலோசனை-Advice for Reporters Working with Survivors of Child Abuse,  இது ஜெர்மனியின் ஹாம்பர்க் நகரத்தில்  2019 GIJN மாநாட்டில் நடைபெற்ற ஒரு குழுக்கலந்துரையாடலின்  சுருக்கமான கட்டுரையின் தலைப்பு. மூன்று முக்கிய புள்ளிகள்:

  • பாதிக்கப்பட்டவர்களிடம் நம்பிக்கையை வளர்த்துக் கொள்ளுங்கள்.
  • உங்கள் செய்தி மூலங்களின்  நல்வாழ்வைக் கவனித்துக் கொள்ளுங்கள்.
  • தப்பிப்பிழைத்த சமூகங்கள் உங்களுக்கு உதவலாம் மற்றும் தங்களுக்குள் ஒருவருக்கொருவர் உதவலாம்.

2016 இல் வெளியான ஒரு  கட்டுரையில், சுதந்திர ஊடகவியலாளர் ஷெர்ரி ரிச்சியார்டி (Sherry Ricchiardi) கூறியது என்னவென்றால் , “என் வாழ்க்கையில், அதிர்ச்சியால் சிதைந்த டஜன் கணக்கான மக்களை நான் நேர்காணல் செய்தேன். ஒவ்வொரு முறையும், எனது அறிக்கை அவர்களின் துன்பத்தில் ஏற்படுத்திய தாக்கத்தை நினைத்து நான் வேதனைப்பட்டேன்,”

போர் மற்றும் வீரர்களின் விவகாரங்களை உள்ளடக்கிய அமெரிக்காவினைத் தளமாகக் கொண்ட War Horse இன் பரிந்துரைகளும் இத்தலைப்புக்கு  பொருத்தமானவை.

இவ்வழிகாட்டியில்  “கதவைத் திறந்து வைத்திருத்தல்” என்ற அத்தியாயமும் உள்ளடங்கியிருக்கிறது.  அது இவ்வாறு தொடர்கிறது, “இந்த விடயத்தில் உங்களுக்கு எவ்வளவு அறிவு இருக்கிறது என்பது முக்கியமல்ல, ஒரு குறிப்பிட்ட தனிநபரின் வாழ்க்கையில் நடந்த நிகழ்வுகளை அவர் எப்படி அனுபவித்தார் என்பதை உங்களால் ஒருபோதும் கணிக்க முடியாது.”

துன்பகரமான நிகழ்வுகளின் அறிக்கையிடல்: உணர்ச்சிபூர்வமான அறிக்கையிடுவதற்கான ஒரு ஊடகவியலாளர் வழிகாட்டி, 2019 இல் வெளியான ஜோ ஹீலியின் (Jo Healey) இந்த  புத்தகம் ஆசிரியரின் இந்த கட்டுரையில் விவரிக்கப்பட்டுள்ளது.

ஆட்கடத்தல் தொடர்பான  தரவுகளில் சர்ச்சைகள் உள்ளன

அடிமைத்தனம் மற்றும் ஆட் கடத்தல் தொடர்பில்  அதிகாரப்பூர்வமான தரவுகளை பயன்படுத்தும் போது மிக அவதானமாக இருத்தல் வேண்டும்.

சர்வதேச தொழிலாளர் அமைப்பு (ILO), வாக் ஃப்ரீ ஃபவுண்டேஷன் (Walk Free Foundation) மற்றும் சர்வதேச இடம்பெயர்வு அமைப்பு (IOM) ஆகியன 2017 செப்டம்பரில், இது தொடர்பில் முக்கிய தரவு எண்ணை வெளியிட்டன.

இந்த மூன்று நிறுவனங்களும்  ஒரு புதிய, ஒப்பீட்டளவில் உயர்ந்த, மதிப்பீட்டை ஏற்றுக்கொண்டனர் – அதாவது 2016 இல் மேற்கொள்ளப்பட்ட  ஆய்வான  “நவீன அடிமைத்தனத்தின் உலகளாவிய மதிப்பீடுகளில் – (The Global Estimates of Modern Slavery)  சுமார் 40.3 மில்லியன் மக்கள் அடிமைகளாக சிக்கியுள்ளனர் என்பதாகும். இதன் படி சுமார் 25 மில்லியன் பேர் கட்டாய உழைப்பிலும், 15 மில்லியன் பேர் கட்டாய திருமணத்திலும் இருந்தனர். இதற்கு முன், ஒவ்வொரு நிறுவனமும்  வெவ்வேறு தரவு, வரையறைகள் மற்றும் முறைகளைப் பயன்படுத்தி மிகவும் மாறுபட்ட அதேநேரம் கணிசமான குறைந்த  எண்ணிக்கையை காட்டும் புள்ளிவிவரங்களை வெளியிட்டிருந்தனர். இது தொடர்பில் ராய்ட்டர்ஸ் செய்திச் சேவை வெளியிட்ட மாற்றங்களின் சுருக்கத்தையும், அமெரிக்க காங்கிரஸ் ஆராய்ச்சி சேவையினால் வெளியிடப்பட்ட(US Congressional Research Service.) மற்றொரு  ஆய்வையும் பார்க்கவும்.

எண்களின் வரையறைகள்

இம்மூன்று நிறுவனங்களுக்கிடையில்புதிய ஒருமித்த கருத்து தொடர்பில் இணக்கப்பாடு இருந்தபோதிலும், ILO ஆசிரியர்கள் ஒரு விடயத்தில் எச்சரித்தனர், “பிராந்திய ரீதியிலான புள்ளிவிவரங்கள் மிக முக்கியமானவை  ஆனால் தரவின் முக்கியமான வெற்றிடங்களையும், வரையறைகளையும் கருத்தில் கொண்டு கவனத்துடன் அவைவிளக்கப்பட  வேண்டும்.”  மேலும், யுத்தம்  நடைபெறும் பிரதேசங்களிலிருந்து நம்பகமான தரவு எதுவும் கிடைக்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது ஆகும்.

ஆம்ஸ்டர்டாம்  பல்கலைக்கழகத்தின் (University of Amsterdam)  அரசியல் எண்கணிதப் பேராசிரியர் (professor of Political Arithmetic ) டேனியல் மேக் (Daniel Mügge) உட்பட பல விமர்சகர்கள் இது தொடர்பாக தமது ஆழ்ந்த கரிசனையை வெளியிட்டுள்ளனர். குறிப்பாக அவர் எச்சரித்த விடயம் என்னவென்றால், “பொதுவாக புள்ளிவிவர அறிக்கையிடுதலில், தரவின்  தரத்தைப் பற்றிய மறுப்பு மற்றும் அவை தொடர்பான எச்சரிக்கைகள் அத்தரவுகளை பயன்படுத்துபவர்களிடையே மிக விரைவில் தொலைந்து போகும்.”  என்பதாகும்.

ஆட்கடத்தலின் அளவை மதிப்பிடுவது மிகச்சிக்கலான ஒரு விடயமாக உள்ளது. இது தொடர்பாக அறியப்பட்ட, பாதிக்கப்பட்டவர்களைக் கணக்கிடுவது மற்றும் குற்றவியல் நீதித் தரவைப் பயன்படுத்துவது ஆட்கடத்தல் சம்பவங்களின் தீவிரத்தன்மையின் போக்கை அளவிட போதுமானதாக இருக்காது.

ஆட்கடத்தலில் 66,520  உறுதிசெய்யப்பட்ட பாதிக்கப்பட்டவர்களை உலகெங்கிலும் உள்ள அரசாங்கங்கள் அடையாளம் கண்டுள்ளதாக 2017 ஆம் ஆண்டில் அமெரிக்க வெளியுறவுத் துறையால் (US State Department ) வெளியடப்பட்ட  குறித்த ஆண்டு  அறிக்கையில் கூறியுள்ளது. லிபர்ட்டி ஆசியாவினால் (Liberty Asia) வெளிடப்பட்ட அறிக்கையின்படி,  உலகளவில் மதிப்பிடப்பட்ட பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை மற்றும் அடையாளம் காணப்பட்ட உண்மையான எண்ணிக்கை ஆகியவற்றுக்கு இடையேயான இந்த மிகப்பெரிய ஏற்றத்தாழ்வானது, சர்வதேச மற்றும் தேசிய அளவில் கடத்தல் தடுப்பு இயக்கத்திற்கு முன்னால் இருக்கும் மகத்தான பணியின் அளவை எடுத்துக்காட்டுகின்றது.

2016 இல் வெளியான  ஐ.நா.வின் போதைப்பொருள் மற்றும் குற்ற அறிக்கை கூறுவது போல் (UN Office of Drugs and Crime report) சட்ட அமைப்பு தரவானது, தகவல் மூலங்கள் மற்றும் சம்பந்தப்பட்ட  நாடுகள் பற்றிய தகவல்களை பெற்றுக்கொள்ள முடியும். அவ்வறிக்கை உதாரணமாக இவ்வாறு குறிப்பிடுகின்றது, “பாதிக்கப்பட்டவர்களில் பெரும்பாலானவர்கள் பெண்களாக இருந்தாலும், குழந்தைகள் மற்றும் ஆண்களின் கூட்டெண்ணிக்கையானது, மொத்தமாக  பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையில் மிகப்பெரிய இடத்தை வகிப்பதுடன்  ஒரு தசாப்தத்திற்கு முன்பு இருந்ததை விட  தற்போது அதிக எண்ணிக்கையாக  உள்ளது ,”

செப்டம்பர் 2017 இல்,  ஆட்கடத்தல் பற்றிய தரவுகளின் உலகளாவிய களஞ்சியமான, கடத்தல் தடுப்பு தரவு கூட்டுறவை உருவாக்குவது பற்றி ஒரு அறிவிப்பு வெளியிடப்பட்டது. இந்த கூட்டு முயற்சிக்கு IOM, ஐ.நா. இடம்பெயர்வு முகாமை (the UN Migration Agency) மற்றும் போலரிஸ் (Polaris) எனப்படும் நவீன அடிமைத்தனத்தை எதிர்த்துப் போராடும் ஒரு சுயாதீன அமைப்பு என்பன தமது ஆதரவை நல்கின.

அளவீடானது, செயற்பாட்டு முறை மற்றும் வரையறைகளால் பாதிக்கப்படலாம். ஆட்கடத்தல்களை எண்ணும் விவாதமும்  தொடர்கிறது. இது மனித கடத்தல் ஜர்னலின் சிறப்பு -2017 இதழின் (Journal of Human Trafficking) தலைப்பாகவும்  இருந்தது. “வழக்கறிஞர்கள் குறிப்பிட்ட சில தரவை மட்டும் எடுத்தல், சந்தேகத்திற்குரிய முறையின் தரவை முன்னெடுக்கவோ அல்லது தமதுகொள்கை நிகழ்ச்சி நிரலுக்கு ஏற்றவாறு தரவை திரித்தல் போன்ற துரதிருஷ்டவசமான போக்குகளும் காணப்படுகின்றன,” என்று அறிக்கை கூறுகின்றது.

முக்கிய விளையாட்டு நிகழ்வுகள் அதிக எண்ணிக்கையிலான கடத்தப்பட்ட பாலியல் தொழிலாளர்களை ஈர்க்கும் என்ற அனுமானத்தின் அடிப்படையில் பல ஆண்டுகளாக பல செய்தி விவரணங்கள் எழுதப்பட்டுள்ளன. ஆனால் வாஷிங்டன், DC இல் உள்ள ஜார்ஜ் வாஷிங்டன் பல்கலைக்கழகத்தின் (professor at George Washington University in Washington, DC) சமூகவியல் பேராசிரியரான ரொனால்ட் வெயிட்சரின் (Ronald Weitzer) கட்டுரையின் படி, மூல ஆதாரம் தொடர்பில் வேறுவிதமாகக் கூறப்பட்டுள்ளது .

தேசிய மற்றும் உள்ளூர் தரவு குறிப்பாக மிகப் பலவீனமாக உள்ளது, வல்லுநர்கள் சிலர் பத்திரிகையாளர்களுக்கான தலைப்பாகக்கூட இதை பரிந்துரைக்கின்றனர். மிக அண்மையில் மேற்கொள்ளப்பட்ட தாய்லாந்தில் மீன்பிடித் தொழிற்துறை  பற்றிய சமீபத்திய ஆய்வு போன்ற சில சிறப்பு, தொழில் நிதியளிக்கப்பட்ட ஆய்வுகளையும் நாம்  காணலாம்.

தொடரும் வரையறை விவாதங்கள்
“நவீன அடிமைகளாகக் கருதப்படும் சில பேர் தங்களை அப்படிப் பார்ப்பது விசித்திரமாக இல்லையா?” என்பது DFID நிதியு99 தவியின் இயங்கும் வறுமை ஆராய்ச்சி கூட்டமைப்பிலிருந்து (Poverty Research Consortium) ஆய்வு இயக்குனர் பிரியா தேசிங்கரின் (Priya Deshingkar) இவ்வாறான  அனுமானம் தொடர்பில் சவால் விடுக்கும் ஓரு கட்டுரையின் தலைப்பாகும்.

ஐரோப்பிய பல்கலைக்கழக நிறுவனத்தின் (European University Institute) நீல் ஹோவர்டின் (Neil Howard) 2014 கார்டியன் கட்டுரையின் படி, தரைமட்ட ஆராய்ச்சி அதிகாரப்பூர்வ பொதுமைப்படுத்தல்களுக்கு முரணாக இருக்கலாம். ஆபிரிக்காவின் பெனினில் வீட்டு வேலை செய்து சுரங்கங்களில் பணிபுரியும் குழந்தைகள், வேலைக்காக இடம்பெயர சுயாதீனமாக முடிவு செய்துள்ளதாக அவர் தனது ஆராய்ச்சியில் மேற்கோள் காட்டியுள்ளார்.

கட்டாய பாலியல் கடத்தல் மற்றும் ஒருமித்த சம்மதத்துடனான பாலியல் வேலை ஆகியவற்றுக்கு இடையேயான வித்தியாசம் என்ன என்பது பற்றியும் தொடர்ந்து விவாதிக்கப்படுகிறது.

“ஒரு நாட்டில் கூட எத்தனை பேர் அடிமைகளாக இருக்கிறார்கள் என்பது யாருக்கும் தெரியாது என்பதே இதன் முக்கிய அம்சமாகும்” என்று வெயிட்சர் (Weitzer) கூறினார். “பெரிய எண்கள் ஊடக கவனத்தை ஈர்க்கின்றன, அரசாங்கத்தின் கவனத்தை ஈர்க்கின்றன மற்றும் சிக்கலை எதிர்த்துப் போராடுவதற்கான அதிக வளங்களை அர்ப்பணிப்பதாகவும் கூறுகின்றனர். ஆனால் உறுதியான ஆதாரங்கள் எதுவும் அவர்களிடத்தில் இல்லை.”

இன்னும் என்ன தேவை என்பது தொடர்பில் அவர் கூறியது என்னவென்றால் , , “உள்ளூர் அளவில் கவனமாக நடத்தப்பட்ட ஆய்வுகள்.” என்பதாகும்.

கூட்டு அறிக்கையிடல்

ஆட்கடத்தலின் புவியியல் அமைவிடங்கள் மற்றும் சிக்கலான தன்மை காரணமாக, ஒரு செய்திக்கதையைப் பெற குழுவாகப் பணியாற்றும் முறை பெரும்பாலும் பயன்படுத்தப்படுகிறது. அவ்வாறான சில உதாரணங்கள் பின்வருமாறு:

ஆஸ்திரேலியாவின் உள்ள பழத்தோட்டங்களில் சட்டவிரோத தொழிலாளர்கள் மற்றும் மனித உழைப்புச் சுரண்டல் போன்ற சட்ட விரோத நடவடிக்கைகளை நடாத்திய பாதாள உலகத்தை வெளிக்கொணர, இந்தோனேசிய நிருபர் சைபுல் ஹசம் (Saiful Hasam) ஒரு தொழிலாளியாக போஸ் கொடுத்தார்.

அவரின் இப்புதிய பாத்திரம், நிக் மெக்கன்சி (Nick McKenzie) மற்றும் ரிச்சர்ட் பேக்கர் (Richard Baker) போன்ற  இணை எழுத்தாளர்களால் ஊக்கமளிக்கப்பட்டது. இந்தக் கட்டுரை உடுசன் மலேசியா, மெல்போர்னை தளமாகக் கொண்ட தி ஏஜ் (The Age) பத்திரிக்கை மற்றும் ஆஸ்திரேலியா பிராட்காஸ்டிங் கார்ப்பரேஷன் (Australia Broadcasting Corporation)  ஆகிய மூன்று நிறுவனங்களின்  எல்லை தாண்டிய  ஊடக ஒத்துழைப்பின் விளைவாகும்.

சைஃபுலின் (Saiful) செய்தியறிக்கை, வேலைத்தளத்தில் உள்ள ஒரு  தலைவரை அவரது கையடக்கத்தொலைபெசியில் ரகசியமாக வீடியோ பதிவு செய்யப்பட்டிருப்பதையும் உள்ளடக்குகிறது. “சைபுல் கடைசியாக மாறுவேடத்தில் அறிக்கையிடலுக்காக செய்த இரகசியச் செயல் அவருடைய உடமைகள் மற்றும் அவரது நான்கு நாள் வேலைக்காக அவருக்கு தரவேண்டிய பணத்தை சேகரிப்பதாகும்” என்று அவர் எழுதினார். எனினும் அவருக்குத் தரவேண்டிய பணத்திலும் குறைவாகவே கொடுக்கப்பட்டது என்பதை அவர் சுட்டிக்காட்டினார்.

புலனாய்வு அறிக்கையிடலுக்கான2016 கனேடிய தேசிய பத்திரிகை விருதை வென்ற விர்ஜில் கிராண்ட்ஃபீல்ட் (Virgil Grandfield), ” கூண்டு” என்ற தனது கட்டுரையை இந்தோனேஷியாவில் உள்ள தனது உதவியாளரை சுட்டும் வண்ணம் இவ்வாறு தொடங்கினார், , “அரை சாக்கு உருளைக்கிழங்கு அளவுள்ள துணிச்சலான, புத்திசாலி தொடக்கப் பள்ளி ஆசிரியர் அவர் . ”

தொழிலாளர் கடத்தல் தொடர்பான ஊழலை ஆராய்ச்சி செய்வதில் தொடங்கிய அவர்களின் கூட்டு  ஒத்துழைப்பு, ஒரு முக்கியமான, எதிர்காலத்தில்  சாத்தியமான ஒரு மூலமாக மாறக்கூடியவரின் சந்திப்பு அவர்களை ஒரு ஆபத்தான இடத்திற்கு  இட்டுச் சென்றது. அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.


ஈவா இந்தோனேசியாவின் வடக்கு சுமத்ராவின் தலைநகரான மேடானில் உள்ள எனது ஹோட்டலில் காலை உணவிற்காக 2015 கோடையில் என்னைச் சந்தித்தார். நாங்கள் அமர்வதற்கு முன்பே, “நீங்கள் இன்று இறக்கத் தயாரா?” “ஆம்,”  என்று நான் சொன்னேன். “நானும் அப்படி தான் நினைக்கிறேன்.”  “நான் இறப்பதற்கு பயப்படவில்லை” என்று அவள் சொன்னாள்.

“மத்திய தரைக்கடலின்  கடற்கொள்ளையர்கள் – Pirates of the Mediterranean Sea” என்ற ஓர் புலனாய்வு அறிக்கையை எழுத, ஆறு நாடுகளைச் சேர்ந்த எட்டு ஊடகவியலாளர்கள் மற்றும் ஆட்கடத்தல் விவகாரங்களில்  நிபுணத்துவம் மிக்க ஒருவர் என ஒரு குழுவாக களத்தில் இறங்கினர். அவர்களின் நோக்கம் மத்தியதரைக் கடலைக் கடந்து ஐரோப்பாவை அடைய விரும்பும் புலம்பெயர்வோர் மற்றும் அகதிகளுக்கு அடிக்கடி அபாயகரமான பயணங்களை விற்பதன் மூலம் லாபம் ஈட்டும் மக்களையும் நிறுவனங்களையும் அடையாளம் கண்டுகொள்வதே ஆகும்.

இந்த குழு, இவ்வாறான வழக்குகளை விசாரிக்கும் வழக்கறிஞர்களை சந்தித்திருக்கிறது, வர்த்தகம் மற்றும் நிறுவன பதிவேடுகளை ஆராய்ந்து, பல்வேறு கப்பல் தரவுத் தளங்களில் காணப்படும் தகவல்களுடன் குறுக்கு சோதனை செய்து, புலம்பெயர்ந்தவர்களைக் கொண்டு செல்ல பயன்படுத்தப்பட்ட அல்லது அவர்களின் சட்டவிரோத நடவடிக்கைகளின் காரணமாக கறுப்புப் பட்டியலில் சேர்க்கப்பட்ட சந்தேகத்திற்கிடமான கப்பல்களின் பட்டியலைக் உருவாக்கியது, ” என்று அக்கட்டுரை கூறுகிறது.

நூலிழையில் இழுத்தல்          

தி கார்டியனுக்காக (The Guardian) ஐக்கிய இராச்சியத்தில் (United Kingdom) அடிமையாக இருக்கும்  புலம்பெயர்ந்த தொழிலாளர்களைப் பற்றி எழுதிய  ஃபெலிசிட்டி லாரன்ஸ் (Felicity Lawrence),  தனது செயல்முறையை இவ்வாறு விவரித்தார்:

 “விரிவான நேர்காணல் மூலம் முடிந்தவரை அதிகமான மக்களின் கருத்துக்களை கேட்பது எனது ஊடக அணுகுமுறை. அந்த நேர்காணல்களிலிருந்து, மாற்றத்தின் முக்கிய போக்குகளைப் புரிந்துகொள்ள முயற்சி செய்கிறேன், மேலும் சம்பந்தப்பட்ட விடயம் தொடர்பாக முழுமையான பார்வையை கருத்தில் கொண்டு, அது மற்ற ஆராய்ச்சி மற்றும் புள்ளிவிவரங்களால் உறுதிப்படுத்தப்பட்டதா என்பதைப் ஆராய்வேன். அங்கிருந்து, என்ன நடக்கிறது என்பதை விளக்குவதற்கு சிறந்த அடிமட்டத்திலிருக்கும் உதாரணங்களைக் கண்டுபிடிக்க நான் மீண்டும் கீழே செல்கிறேன். அதனால் நான் மிகவும் பெருமைப்படுகின்றபடி ஒரு துண்டு மட்டும் என்னிடம் இல்லை:  ஒன்று மற்றொன்றுக்கு வழிவகுக்கும். நீங்கள் ஒரு நூலை இழுக்கிறீர்கள், அது பல ஆண்டுகளாக வெவ்வேறு துண்டுகளாக அவிழ்க்கிறது,”

உதவிக்காக கண்களின் அலறல்

“தெற்கு ஆப்கானிஸ்தானின் அடிப்படை வசதிகள் கூட இல்லாதிருக்கும் மூலையில் ஒரு பொலிஸ் தளபதியால் பாலியல் அடிமையாக வைக்கப்பட்ட ஒரு பதின்ம பருவ பையனின் கண்கள் உதவிக்காக அலறின” என்று ஏஜென்ஸ் ஃபிரான்ஸ் பிரஸ் (Agence France Press-AFP) செய்தி நிறுவனத்தின்  அனுஜ் சோப்ரா (Anuj Chopra) தனது மிகப் பிரபலமான செய்தியறிக்கையிடல் தொடர்பாக விபரிக்கும் போது எழுதினார்.

ஆப்கானிஸ்தான் சிறுவர் பாலியல் அடிமை முறையான “பச்சா பாஸி-“bacha bazi.” பற்றி ஆராய்ச்சி செய்யத் தொடங்கிய போது சோப்ரா எதிர்பார்த்ததை விட மிக அதிக மான விடயங்களை கண்டடைந்தார். AFP க்கான அவரது இறுதி செய்தி அறிக்கை “தெற்கு உருஸ்கன் மாகாணத்தில் காவல்துறையினரால் குழந்தை பாலியல் அடிமைகளை வைத்திருக்கும் ஒரு பரவலான நடைமுறையையும், தாலிபான்கள் அவர்களை துஷ்பிரயோகம் செய்பவர்களைக் கொல்ல ட்ரோஜன் குதிரைகளாக எப்படிப் பயன்படுத்துகிறார்கள்” என்று அவர் தனது அறிக்கையின் மிக விரிவாக எழுதினார்.

“உருஸ்கானில் உள்ள ஒரு நம்பிக்கைக்குரிய மூலத்தின் மூலம் நான் முதலில் இது பற்றி கேள்விப்பட்டபோது, நான் அதை நம்பவில்லை,” என்று அவர் நினைவு கூர்ந்தார், “ஆனால் நான் அது பற்றி மேலும் தோண்ட ஆரம்பித்தபோது, பல ஆதாரங்கள் அக்கதையை மேலும் உறுதிப்படுத்தத் தொடங்கின.”

இந்த செய்தி அறிக்கையிடலுக்கு இரகசியம் தேவைப்பட்டது. இது தொடர்பில் சோப்ரா இவ்வாறு எழுதினார்:

அதிகாரமும் தடித்தனமும் கொண்ட  போலீஸ்காரர்களால் பச்சா பாஸி –bacha bazi பெரும்பாலும் தண்டனையின்றி நடைமுறைப்படுத்தப்படுவதால்,  இவ்வாறான மிகவும்  உணர்வுபூரமான விடயம் தொடர்பில் புகாரளிப்பது பாதுகாப்பு அபாயங்கள் நிறைந்ததாக இருந்தது. அவர்கள் என் விசாரணை தொடர்பில் அறிந்துவிடக் கூடாது என்பதில் கவனமாக இருந்த நான் அமைதியாக ஊருஸ்கனில் இருந்து மற்ற கதைகளை ஆராய்ச்சி செய்யும் போர்வையில் இரண்டு மாதங்கள் அமைதியாக இருந்தேன். இக்காலகட்டத்தில் இவ்விடயம் தொடர்பான மூலங்களை நேர்காணல் செய்வதும் மேலதிக தகவல்களை திரட்டுவதுமாக தொடர்ந்தது.

ஒரு திறந்த இரகசியம் தொடர்பில் ஆராய்தல்

நியூயார்க் டைம்ஸ் (New York Times) நாளிதழின் நிருபர் இயன் உர்பினா (Ian Urbina) இவ்வாறு எழுதினார், “சில நேரங்களில் திறந்த இரகசியங்கள் கூட ஆராயத் தகுந்தவை தான்,”

அவர் கேள்விப்பட்ட திறந்த ரகசியம் என்னவெனில் வெளிநாட்டுக் கப்பல்களில் வேலைவாய்ப்பு  என்று கூறி ஆட்களை வேலைக்கு எடுக்கும் ஏஜென்சிகள் அவர்களை வேறு கப்பல்களில், குறிப்பாக மீன்பிடிக்கப்பல்களில் வேலைக்கு அமர்த்துவதுதான்.

ஊடகவியாலாளரின் குறிப்புகளின்படி-Reporter’s Notebook, மோசடியான ஆட்சேர்ப்பு மற்றும் சந்தேகத்திற்கிடமான பிலிப்பைன்ஸ் நாட்டு பிரஜையான  “எரில் ஆண்ட்ரேட் (Eril Andrade)” என்பவரின் மரணத்தைப் பற்றி கேள்விப்பட்டு நான் எனது புலனாய்வை  தொடங்கினேன். “ஆனால் எனது நோக்கம் மிக விரைவாக விரிவடைந்தது.”

“நான் பிலிப்பைன்ஸில் உள்ள சிறிய கிராமங்களைச் சுற்றிப் பயணித்தபோது, காவல் ஆய்வாளர்கள், மாகாண வழக்கறிஞர்கள், கடற்படை வழக்கறிஞர்கள் மற்றும் முன்னாள் கப்பல் ஊழியர்கள்  ஆகியோர் கடத்தல் மற்றும் அதனுடன்தொடர்புடைய துஷ்பிரயோகத்தின் பரவலான முறைகள் பற்றி என்னிடம் சொன்னார்கள்” என்று அர்பினா கூறினார். பின்னர் கார்ப்பரேட் மற்றும் அரசு அதிகாரிகளுடன் பேசவும் (அல்லது பேச முயற்சி செய்தமை) மற்றும் அதிகாரப்பூர்வ பதிவுகளையும் ஆராய முடிந்தது.

ஒரு காத்திருப்பு அறையில் இருந்து

தாம்சன் ராய்ட்டர்ஸ் அறக்கட்டளையின் (Thomson Reuters Foundation) ரோலி ஸ்ரீவாஸ்தவா (Roli Srivastava) இவ்வாறு நினைவு  கூர்ந்தார், “ஒரு மூத்த காவல் அதிகாரிக்காக  இரண்டு மணி நேரத்திற்கு மேல் காத்திருந்தபோது எனது அறிக்கையிடலின் மிக முக்கிய திருப்பத்தை சந்திக்க கூடியதாக இருந்தது,”

அப்போது தான் அவர் அரேபிய வளைகுடா நாடுகளுக்கு இந்திய இளம் பெண்களைக் கடத்திச்செல்லப்படுவது தொடர்பான விசாரணையை ஆரம்பித்திருந்தார். அவர் காவல் நிலையத்தில் உட்கார்ந்திருந்தபோது, காவல்த்துறை அதிகாரிகளுடன் சேர்ந்தியங்கும் திருமண முகவரான  ஒரு நபருடன் சுமார்ஒரு மணி நேரம் பேசினார்.

அதன் பிறகு, ஸ்ரீவஸ்தவா தொடர்ந்து தனது தேடுதலைத் தொடர்ந்த போது, பாதிக்கப்பட்டவர்களுக்கும் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவியவர்களுக்கும் பேட்டி அளித்தார். “இவ்விடயம் தொடர்பாக பேசியவர்களிடமிருந்து நான் ஒரு மூத்த காதி நீதிபதி  (அவர் முஸ்லிம் திருமணங்களை நடத்துபவர்) ஒருவரைப்பற்றியும் நேர்காணல்களின் போது மேலதிகத கவல்களை எடுத்துக் கொண்டேன்,”

“நான் ஒரு தசாப்தத்திற்கும் மேலாக இக்கதையை பற்றி அறிந்திருந்தேன்,”  என்று அவர் GIJN இடம் கூறினார். உண்மையில், ஹைதராபாத்தின் இந்த திருமண சந்தையில் இளம் பெண்களின் வர்த்தகம் குறித்து 1980 களில் ஒரு ஹிந்தி படம் வெளியாகி இருந்தது. இந்த முறை நான் புதிதாக கண்டுபிடித்தது என்னவென்றால் இந்த மோசடியின் அளவு, பாரிய வலையமைப்பு மற்றும் இதில் சம்பந்தப்பட்ட பணம் என்பனவாகும். மேலும் பொறுமை எப்போதுமே நல்ல – மேலதிக தகவலை அளிக்கிறது என்பதையும் நான் கற்றுக்கொண்டேன்.

மேலதிக வளங்கள்

ஐக்கிய அரபு எமிரேட்ஸில் புலம்பெயர்ந்த தொழிலாளர் உரிமைகள் தொடர்பில் அறிக்கையிட்ட  ஐரிஷ் பத்திரிகையாளர் சீன் ஓ டிரிஸ்கோல் (Sean O’Driscoll) மற்றும் நைஜீரியாவின் கடத்தல் வட்டாரங்களில் அறிக்கையிட இரகசியமாகச் சென்ற நைஜீரிய பத்திரிகையாளர் டோபோர் மிட் ஓவூரி (Tobore Mit Ovuorie) ஆகியோரின் புலனாய்வு அறிக்கையிடல் அனுபவங்களைப் பற்றி கேளுங்கள்.

மார்த்தா மெண்டோசா (Martha Mendosa) மற்றும் எஸ்தர் ஹ்டூசன்( Esther Htusan) ஆகியோர் புலிட்சர் பரிசு வென்ற Associated Press – AP செய்தி நிறுவனத்தின்“அடிமைகளிருந்து கடல் உணவு-Seafood From Slaves எவ்வாறு ஆராயப்பட்டது என்பதை பகுப்பாய்வு செய்யுங்கள்:

நாம் வேறு வளங்களை இப்பக்கத்தில் சேர்க்க தவறியிருந்தால்.  எங்களுக்குத் தெரியப்படுத்துங்கள். இந்த வளப் பக்கத்திற்கான மேலதிக பங்களிப்புகளை GIJN வரவேற்கிறது.

புகைப்படம்: அமெரிக்க வெளியுறவுத்துறைக்காக கே செர்னுஷ் (Kay Chernush)

இந்த வழிகாட்டியை GIJN இன் வள மையத்தின் இயக்குனர் டோபி மெக்கின்டோஷ் (Toby McIntosh) உருவாக்கியுள்ளார். அவர் வாஷிங்டனில் ப்ளூம்பெர்க் பிஎன்ஏவுடன் (Bloomberg BNA) 39 ஆண்டுகள் இருந்தார். அவர் FreedomInfo.org (2010-2017) இன் முன்னாள் ஆசிரியரும் ஆவார், அங்கு அவர் உலகளாவிய FOI கொள்கைகளைப் பற்றி எழுதினார். மேலும் FOIக்காக குரல்கொடுக்கும் சர்வதேச வலையமைப்புக்கான FOIANetஇன் வழிநடத்தல் குழுவிலும் அவர் பணியாற்றுகிறார்.

மூலம்

This story was originally published by the Global Investigative Journalism Network (GIJN)

Hot this week

CIR and SCOPE host workshop for women journalists on GBV

The Centre for Investigative Reporting (CIR) and Strengthening Social...

GBV and Women’s Political Participation – A Workshop for Women Journalists

‘Towards New and Inclusive Narratives,’ a workshop on GBV...

Panel discussion on ‘Election Disinformation, Online Hate & Women’s Political Representation’

The Center for Investigative reporting (CIR) will host a...

NPP sweeps the polls including the Tamil majority areas signalling a deep political shift in island politics

NPP receives a historic mandate countrywide including Tamil majority...

Topics

CIR and SCOPE host workshop for women journalists on GBV

The Centre for Investigative Reporting (CIR) and Strengthening Social...

GBV and Women’s Political Participation – A Workshop for Women Journalists

‘Towards New and Inclusive Narratives,’ a workshop on GBV...

Reporting on Non-Economic Loss and Damage from Environmental Disasters

𝐌𝐞𝐞𝐭 𝐭𝐡𝐞 𝐂𝐈𝐑 𝐅𝐞𝐥𝐥𝐨𝐰𝐬 Four Journalism Fellows under a special...

Women encounter a toxic internet that robs their voice- Shreen Saroor

Men and women experience the internet differently. Women experience...

Related Articles

Popular Categories