Wednesday, January 15, 2025
30 C
Colombo

வெறுப்பு பிரச்சாரத்தின் மூலம் அம்பாறையில் இழக்கப்பட்ட தமிழ் பிரதிநிதித்துவம்

  • தமிழர்களின் உரிமைகளை பறித்துவிட்டு முஸ்லிம்களினால் வாழ முடியாது – கருணா
  • உப பிரதேச செயலகத்தினை தரமுயர்த்த தமிழர்களுக்கு கைகொடுப்பேன் – ஞானசார தேரர்
  • இத்தேர்தல் மண்ணின் உரிமை போராட்டத்திற்கான தேர்தல் – ஹரீஸ்
  • கருணாவின் பிரச்சாரங்கள் மிதக்கும் வாக்களர்களை கவர்ந்திருந்தது – ஹேஷ்டெக் தலைமுறை அமைப்பு
  • “இந்த தேர்தலில் 66%ஆன வெறுப்பு பிரச்சாரங்கள் முஸ்லிம் சமூகத்தினை இலக்கு வைப்பட்டிருந்தது”

பொதுபலசேனா அமைப்பின் ஞானசார தேரரின் வருகை,  கல்முனை பௌத்த விகாராதிபதியின் தமிழருக்கு ஆதரவான உண்ணாவிரதம், முன்னாள் போராளியான கருணா அம்மானின் முஸ்லிம்களுக்கு எதிரான வெறுப்பு பேச்சு மற்றும் முஸ்லிம் அரசியல்வாதிகளின் தமிழருக்கு எதிரான வெறுப்பு பேச்சு…. கடந்த பாராளுமன்ற தேர்தலில் அம்பாறை மாவட்டம் கண்ட அசாதாரன தேர்தல் பிரச்சாரங்களாகும்.

“முஸ்லிம் அரசியல்வாதிகளின் திமிரினை அடக்கவே இந்த தேர்தலில் போட்டியிடுகின்றேன்,” என முன்னாள் அமைச்சரான கருணா அம்மான் என்று அழைக்கப்படும் விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்தார்.

“அம்பாறை மாவட்டத்திலுள்ள தமிழ் மக்களின் நிலங்களை பாதுகாத்து அவர்களின் இருப்பை பாதூகாப்பது எனது கடமையாகும்,” எனவும் விடுதலை புலிகளின் கிழக்கு மாகாண முன்னாள் கட்டளை தளபதியாக செயற்பட்ட அவர் குறிப்பிட்டார்.

“தமிழ் மக்களின் உரிமைகளை பறித்துவிட்டு முஸ்லிம் மக்களினால் ஒருபோதும் சந்தோசமாக வாழ முடியாது,” எனவும் முன்னாள் அமைச்சர் முரளிதரன், பாண்டிருப்பு பிரதேசத்தில் கடந்த ஜுலை 22ஆம் திகதி இடம்பெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் தெரிவித்தார்.

இது போன்ற வெறுப்பு பிரச்சாரங்கள் கடந்த பாராளுமன்ற தேர்தலில் நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்டிருந்தன. “இந்த தேர்தலில் 66%ஆன வெறுப்பு பிரச்சாரங்கள் முஸ்லிம் சமூகத்தினை இலக்கு வைப்பட்டிருந்தது,” என ‘இலங்கை: சமூக ஊடகங்களும், தேர்தல் ஒருமைப்பாடும்’ எனும் ஹேஷ்டெக் தலைமுறை அமைப்பின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

“இந்த அறிக்கைகளை ஒத்த வகையில், அம்பாறை மாவட்டத்திலுள்ள தமிழ் மற்றும் சிங்கள இனத்தவர்களினால் முஸ்லிம் சமூகம் வெறுப்பு பிரச்சாரத்தின் ஊடாக இலக்கு வைக்கப்பட்டது,” என மனித உரிமை ஆர்வாளரும், அம்பாறை மாவட்ட தேர்தல் கண்காணிப்பாளருமான டி.ராஜேந்திரன் தெரிவித்தார்.

“அம்பாறை மாவட்டத்தில் களமிறங்கிய வேட்பாளர்களில் பெரும்பாலானோர் தங்களின் எதிர்கால கொள்கைத் திட்டங்களை மக்களுக்கு தெளிவுபடுத்தாது வெறுப்பூட்டும் இனவாத பிரச்சாரங்களை மேற்கொண்டனர்,” என அவர் குற்றஞ்சாட்டினார்.

இதற்காக அவர்கள் பிரதானமாக பயன்படுத்தியது கல்முனை உப பிரதேச செயலகத்தினை தரமுயர்த்தல் எனும் விடயமாகும்.  கல்முனை பிரதேசத்தில் வாழும் தமிழ் மக்களுக்காக 1989ஆம் ஆண்டு விடுதலைப் புலிகளினால் பலவந்தமாக உருவாக்கப்பட்ட கல்முனை உப பிரதேச செயலகம் தற்போது வரை இயங்கி வருகின்றது.

இருபத்தொன்பது கிராம சேவகர் பிரிவுகளைக் கொண்ட இந்த உப பிரதேச செயலக எல்லைக்குள் 35,526 மக்கள் வாழ்கின்றனர் என 2018 ஆம் ஆண்டின் கணக்கெடுப்புகள் தெரிவிக்கின்றன.

இந்த உப பிரதேச செயலகத்தின் காணி மற்றும் நிதி அதிகாரங்கள், கல்முனை பிரதேச செயலகத்தின் கீழ் காணப்படுகின்றன. இதனால் குறித்த விடயங்களுக்கான அனுமதியினை கல்முனை பிரதேச செயலகத்திலிருந்தே பெற வேண்டியுள்ளது.

இதன்போது கால தாமதம் ஏற்படுவதாக அப்பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர். குறித்த உப பிரதேச செயலகத்தினை தரமுயர்துவதன் ஊடாக குறித்த இரு அதிகாரங்களும் வழங்கப்படும்.

சஹ்ரான் ஹாசீம் தலைமையிலான குழுவினரால் முன்னெடுக்கப்பட்ட ஈஸ்டர் தற்கொலை தாக்குதலுக்கு பின்னரான சூழ்நிலையில் முஸ்லிம் எதிர்ப்பு அலையினை நாடளாவிய ரீதியில் உருவாக்க முயற்சித்த கடும்போக்காளர்கள், அதனை பாராளுமன்ற தேர்தல் வரை பயன்படுத்தினர்.

இவ்வாறான நிலையில், தீவிரவாத போக்கினை கொண்ட தேரர்கள், கல்முனை உப பிரதேச செயலக தரமுயர்த்தல் விடயத்தினை கையில் எடுத்தனர். இந்த தரமுயர்த்தலுக்கு ஆதரவாக கல்முனை பௌத்த விகாராதிபதி ரன்முத்துகல சங்கரத்ன தேரர் தலைமையில் கடந்த 2019ஆம் ஆண்டு ஜுன் மாதம் கல்முனை உப பிரதேச செயலகத்திற்கு முன்பாக உண்ணாவிரத போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டிருந்தது.

இதற்கு ஆதரவு தெரிவித்து பொதுபலசேனா அமைப்பின் செயலாளர் ஞானசார தேரர் கல்முனைக்கு விஜயமொன்றை மேற்கொண்டதுடன், அடுத்த ஒரு மாத காலத்திற்குள் கல்முனை தமிழர் பிரதேச செயலகத்தினை பெற்றுத் தருவேன் என அவர் உறுதியளித்திருந்தார்.

குறித்த உறுதிமொழி வழங்கப்பட்டு 18 மாதங்களுக்கு மேல்  கழிந்துள்ள நிலையில் இதுவரை எந்த முன்னெடுப்புக்களும் இடம்பெறவில்லை. இவ்வாறான நிலையில் கடந்த பாராளுமன்ற தேர்தல் இடம்பெற்ற காலப் பகுதியில் கல்முனை வாழ் தமிழர்களுக்கு ஆதரவாக ஞானசார தேரர் மீண்டும் குரல் எழுப்பியமை குறிப்பிடத்தக்கது.

“பாராளுமன்ற தேர்தல் முடிந்தவுடன் கல்முனைக்கே எனது முதல் படையெடுப்பினை மேற்கொண்டு கல்முனை உப பிரதேச செயலகத்தினை தரமுயர்த்த தமிழர்களுக்கு நான் கைகொடுப்பேன்,” என ஞானசார தேரர் அறிவித்திருந்தார்.

பாராளுமன்ற தேர்தலுக்கு இரு வாரங்கள் இருக்க நிலையில், கடந்த ஜுலை 19ஆம் திகதி வெளியான ஞாயிறு வீரகேசரிக்கு வழங்கிய நேர்காணலின் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டிருந்தார்.

எனினும், சுமார் ஐந்து மாதங்கள் கழிந்துள்ள நிலையில் இந்த தரமுயர்த்தல் விடயம் தொடர்பில் ஞானசார தேரர் இதுவரை எந்த நடவடிக்கையும் முன்னெடுத்தாக அறியமுடியவில்லை. இது தொடர்பில் ஞானசார தேரரின் கருத்தினை பெறுவதற்காக பலமுறை முயற்சித்தும் அது பயனளிக்கவில்லை.

இது இவ்வாறிருக்க, ஞானசார தேரரின் இந்த அறிவிப்பினை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் வேட்பாளர்கள் போஸ்டராக அச்சடித்து அம்பாறை மாவட்டத்தில் முஸ்லிம்கள் செறிந்து வாழும் பகுதிகளில் ஒட்டி, இன வெறுப்பு பிரச்சாரத்தினை துண்டும் விதமாக நடந்துகொண்டனர்.

‘கல்முனையினை பறிகொடுப்பதா?’ எனும் தலைப்பிலான இந்த போஸ்டரில், “எம் மக்களே, இளைஞர்களே, பொங்கி எழுவோம்.  ஞானசார – கருணா இருவரிடமிருந்தும் கல்முனையையும், அம்பாறையினையும் காப்பாற்ற ஹரீஸை பலப்படுத்துவோம்! நமது மண் நமக்கு வேண்டும். மீட்க வாக்களிப்போம்,” எனக் குறிப்பிடப்பட்டிருந்தது.

இதேவேளை, “கல்முனை நகரினை முஸ்லிம்களிடமிருந்து பாதுகாப்பதென்றால்” தனக்கு வாக்களிக்குமாறு கருணா அம்மான் தனது தேர்தல் பிரச்சார கூட்டங்களில் கோரிக்கை விடுத்திருந்தார்.

மேற்குறிப்பிட்ட இரு நபர்களினதும் அறிக்கையினால் அம்பாறை மாவட்ட முஸ்லிம் பிரதேசங்களில் பாரிய அச்ச நிலையொன்று ஏற்பட்டதுடன் தேர்தல் பிரச்சார நடவடிக்கைகளில் பாரிய திருப்புமுனையினையும் ஏற்படுத்தியது.  

இதற்கு பதிலடி வழங்கும் வகையில், “கல்முனை நகரினை கருணாவிடமிருந்தும் ஞானசாரவிடமிருந்தும் பாதுகாப்பதென்றால் தொலைபேசி சின்னத்திற்கு வாக்களித்து” தன்னை எம்.பியாக்குமாறு முன்னாள் இராஜாங்க அமைச்சர் எச்.எம்.எம்.ஹரீஸ், தனது தேர்தல் பிரச்சார கூட்டங்களில் முஸ்லிம் மக்களை கோரியிருந்தார்.

“இத்தேர்தல் கல்முனை தொகுதிக்கான பாராளுமன்ற உறுப்பினரை தெரிவுசெய்வதற்கான தேர்தல் அல்ல. மாறாக மண்னின் உரிமை  போராட்டத்திற்கான தேர்தல்,” என அவர் குறிப்பிட்டார்.

கல்முனை பிரதேசத்தில் கடந்த ஜுலை 20ஆம் திகதி இடம்பெற்ற பிரச்சாரக் கூட்டமொன்றிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். முதலில் கல்முனை தொகுதி மக்களிடம் முன்வைக்கப்பட்ட இந்த கோரிக்கை பின்னர் அம்பாறை மாவட்ட முஸ்லிம் மக்களிடம் முன்வைக்கப்பட்டது.

இதுபோன்று, இந்த மாவட்டத்தில் களமிறங்கிய அனைத்து இன வேட்பாளர்களும், தங்களின் வெற்றிக்காக வெறுப்பூட்டும் இனவாத பிரச்சாரங்களையே முன்னெடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

இதற்காக இவர்கள் பயன்படுத்திய ஊடகம் பேஸ்புக் மற்றும் வட்ஸ்அப் போன்ற சமூக ஊடகங்களாகும். மேற்குறிப்பிட்ட உரைகள் இடம்பெற்ற தேர்தல் பிரச்சார கூட்டங்கள், பிரதேசத்தில் பிரபல்யமான பேஸ்புக் பக்கங்களிற்கு கட்டணம் செலுத்தி நேரடியாக ஒளிபரப்பப்பட்டன.

அது மாத்திரமல்லாது, வெறுப்பூட்டும் இனவாத பிரச்சார வீடியோ உரைகளை பகுதி பகுதிகளாக பிரித்தும் பேஸ்புகில் பதிவேற்றியிருந்ததை அவதானிக்க முடிந்தது. இவ்வாறான வீடியோக்களை வேட்பாளர்களின் ஆதரவளார்கள் மற்றும் அவர்களின் போலி பேஸ்புக் பக்கங்களின் ஊடாக அதிகமதிகம் பகிரப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.

குறிப்பாக கல்முனை பிரதேசத்தில் கடந்த ஜுலை 20 ஆம் திகதி இடம்பெற்ற ஹரீஸின் தேர்தல் பிரச்சார கூட்டத்தினை 13,000 பேர் பேஸ்புக் ஊடாக பார்வையிட்டிருந்ததுடன், 800 பேர் கருத்துக்களையும் பதிவிட்டிருந்தனர். இதற்கு மேலதிகமாக சுமார் 100க்கு மேற்பட்டேரின் பேஸ்புக் பக்கங்களில் பகிரப்பட்டுள்ளது.

இதேவேளை, “இன்றுள்ள அரசியல்வாதிகள் இனவாதம் பேசி இரு சமூகத்திற்கு மத்தியில் குரோதத்தினை தோற்றுவித்துள்ளனர். இதன் காரணமாக அம்பாறை மாவட்டத்தில் தமிழ் மற்றும் முஸ்லிம்கள் பகைமையுணர்வுடன் வாழ்கின்றனர்” என தென் கிழக்கு பல்கலைக்கழகத்தின் அரசியல் துறை பிரிவின் தலைவரான கலாநிதி பாசீல் கூறினார்.  

பாராளுமன்ற தேர்தல் காலப் பகுதியில் அம்பாறை மாவட்டத்திலேயே அதிக வெறுப்பு பிரச்சாரம் இடம்பெற்றதாக தேர்தல் கண்காணிப்பு மையமான ‘கபே’ தெரிவித்தது. இரு சமூகங்களைச் சேர்ந்த அரசியல்வாதிகளும் தங்களின்  வெற்றிக்காக மக்கள் மத்தியில் வெறுப்பெண்ணெங்களை தூண்டும் வகையில் திட்டமிட்டு செயற்பட்டதாக அந்த அமைப்பு மேலும் குறிப்பிட்டது.

சமூக வலைத்தளங்களில் வெறுப்புப் பேச்சு

“குறிப்பாக கருணா அம்மானினால் முஸ்லிம்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட வெறுப்பூட்டும் பிரச்சாரங்களே தேர்தல் காலத்தில் அதிகமாக சமூக ஊடகங்களில் பகிரப்பட்டிருந்து” என  ஹேஷ்டெக் தலைமுறை அமைப்பின் ஸ்தாபகரான செனல் வன்னியாராச்சி தெரிவித்தார்.

“இந்தோனேஷியா போன்று இலங்கையினை முஸ்லிம் நாடாக மாற்ற முஸ்லிம்கள் முயற்சிக்கின்றனர்”, “முஸ்லிம்கள் நாட்டை துண்டா முயற்சிக்கின்றனர்”, “கல்முனை நகரினை முஸ்லிம்களிடமிருந்து பாதுகாப்பதென்றால் எனக்கு வாக்களியுங்கள்” போன்ற பல்வேறு வீடியோக்களே கருணாவின் ஆதரவாளர்களினால் அதிகம் பகிரப்பட்டதாக அவர் குறிப்பிட்டார்.

“எவ்வாறாயினும் முஸ்லிம் சமூகத்தினைச் சேர்ந்த ஒரு சில தனிநபர்களே  சமூக ஊடகங்கள் வாயிலாக வெறுப்பு பிரச்சாரத்தினை முன்னெடுத்திருந்தனர். கருணாவின் பிரச்சாரத்தினை போன்று முஸ்லிம்களின் பிரச்சாரம் சமூக ஊடகங்களில் வைரலாக்கப்படவில்லை,” என செனல் வன்னியாராச்சி மேலும் கூறினார்.

அரசியல்வாதிகளினால் மேற்கொள்ளப்பட்ட இந்த வெறுப்பு பிரச்சாரம், அவர்களின் தேர்தல் முடிவுகளில் பாரிய மாற்றத்தினை கொண்டுவந்திருந்தது. அம்பாறை மாவட்டத்தில் முதற் தடவையாக களமிறங்கிய கருணா அம்மான், 29,379 வாக்குகளை பெற்றமை குறிப்பிடத்தக்கதாகும்.

“கருணாவின் பிரச்சாரங்கள் 18 – 25 வயதுக்குட்பட்ட மிதக்கும் வாக்களர்களை கவர்ந்திருந்தமையே இதற்கான பிரதான காரணமாகும்” என ஹேஷ்டெக் தலைமுறை அமைப்பு தெரிவித்தது.

இந்த தேர்தலில் கருணா களமிறங்கியதன் காரணமாக அம்பாறை மாவட்டத்தில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் வாக்கு வங்கி 20,000 இனால் வீழ்ச்சியடைந்தன. அத்துடன் தமிழ் வாக்குகள் இரண்டு, மூன்றாக பிரிந்தமையினால் கடந்த 26 வருடங்களாக அம்பாறை மாவட்டத்தில் பாதுகாக்கப்பட்டு வந்த தமிழ் பாராளுமன்ற உறுப்பினர் பிரதிநிதித்துவம் இம்முறை இழக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

“இளைஞர்கள் மத்தியில் விதைக்கப்பட்ட இனவாத வெறுப்பு பிரச்சாரங்களே தமிழ் பாராளுமன்ற பிரதிநிதித்துவ இழப்பிற்கான காரணமாகும்,” என தேசியப்பட்டியல் பாராளுமன்ற உறுப்பினரான தவராசா கலையரசன் தெரிவித்தார்.

இதேவேளை, கல்முனையினை பாதுகாக்க வேண்டும் என்றால் தொலைபேசி சினத்திற்கு வாக்களிமாறு கோரிய ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் கல்முனைத் தொகுதி வாக்கு வீதத்திலும் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது.

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் நேரடி போட்டியாளராக களமிறங்கிய அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கடந்த தேர்தலை விட 10,000 வாக்குகளை இந்த தேர்தலில் அதிகம் பெற்று ஒரு ஆசனத்தினை கைப்பற்றியது.  

முஸ்லிம்களுக்கு எதிரான இனவாத பிரச்சாரத்தினை முன்னெடுதிருந்த ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் வாக்குகள் அம்பாறை தொகுதியில் கடந்த தேர்தலை விட இந்த தேர்தலில் 30,000 இனால் அதிகரித்துள்ளதை தேர்தல் முடிகவுகள் காண்பிக்கின்றன.

“வாக்குகளை கவர்வதற்கு இன ரீதியிலான வெறுப்புப் பிரசாரம் இங்கு சாதகமாக பயன்படுத்தப்பட்டிருக்கிறது என்பதை இந்த தேர்தல் முடிவுகள் தெளிவுபடுத்துக்கிறன” என அரசியல் செயற்பாட்டாளரான சிராஜ் மசூர் தெரிவித்தார்.

“பல்லின சமூகத்தவர்கள் வாழும் இந்த மாவட்டத்தில், இந்த யுக்தியை அரசியல்வாதிகள் தொடர்ந்தும் கையாள்வதற்கு, இது வழிவகுத்து விடும் என்ற அச்சம் எழுகிறது” என அவர் குறிப்பிட்டார்

“இது ஆரோக்கியமான அரசியலுக்கு பங்கம் விளைவிப்பதுடன், சகவாழ்வுக்கும் நல்லிணக்கத்திற்கும் பாதிப்பை ஏற்படுத்தும் என்பதில் மாற்றுக் கருத்தில்லை” என   சிராஜ் மசூர் மேலும் கூறினார்.

Hot this week

ගංවතුරේ පාවෙන ජා-ඇල ජීවිත

2024 වසරේ මාස හයක් තුළ ගංවතුර අවස්ථා තුනක්... ඔක්තෝබර් ගංවතුරෙන්...

CIR and SCOPE host workshop for women journalists on GBV

The Centre for Investigative Reporting (CIR) and Strengthening Social...

GBV and Women’s Political Participation – A Workshop for Women Journalists

‘Towards New and Inclusive Narratives,’ a workshop on GBV...

Panel discussion on ‘Election Disinformation, Online Hate & Women’s Political Representation’

The Center for Investigative reporting (CIR) will host a...

Topics

ගංවතුරේ පාවෙන ජා-ඇල ජීවිත

2024 වසරේ මාස හයක් තුළ ගංවතුර අවස්ථා තුනක්... ඔක්තෝබර් ගංවතුරෙන්...

CIR and SCOPE host workshop for women journalists on GBV

The Centre for Investigative Reporting (CIR) and Strengthening Social...

GBV and Women’s Political Participation – A Workshop for Women Journalists

‘Towards New and Inclusive Narratives,’ a workshop on GBV...

Related Articles

Popular Categories