
க.பொ.த சாதாரணதரப் பரீட்சையில் எதிர்பார்த்த பெறுபேறு கிடைக்கவில்லை. அதன் பின்னர், நண்பர்களுடன் சிறிது காலம் சுற்றித் திரிந்து, தனக்கு 18 வயது வந்ததும் கடவுச்சீட்டைப் பெற்று மத்திய கிழக்கு நாட்டுக்கு சென்று, அங்கு ஏதோ ஒரு தொழில் செய்து சம்பாதிக்கலாம் என்ற எண்ணத்தில் பலர் வெளிநாடு செல்கிறார்கள். ஆனால், எந்த ஒரு வேலையிலும் முன்னனுபவம் இல்லாமலும் தொழில் ஒன்றை முறையாக கற்காமலும் சென்றதனால் மிகவும் கஷ்டமான பல வேலைகளில் சாதாரண தொழிலாளியாக சென்று பல இன்னல்களை அனுபவிக்க வேண்டிய நிலை ஏற்படும்.
இவ்வாறு எவ்வித திறனும் தொழிலில் முன்னனுபவமும் இல்லாது 2018ஆம் ஆண்டு கட்டாருக்குச் சென்ற திருகோணமலையின் புறநகர் பகுதியைச் சேர்ந்தவர் தான் 21 வயதுடைய இளைஞன் த.டிலக்சன்.
“எனது இள வயதிலே தந்தை இறந்துவிட்டார் என்பதனால் எனது சகோதரர்களை கற்பித்து ஆளாக்க வேண்டும். அதனால், அதிகமான சம்பளம் கிடைக்கக்கூடிய தொழில் ஒன்று தேவைப்பட்டது. வெளிநாடு சென்று அங்கு வேலை செய்து சம்பாதிப்பதே சிறந்த வழி என நினைத்து, கட்டாருக்கு சென்றேன்” என டிலக்சன் தெரிவித்தார்.
அவர் மேலும் தொடர்கையில்,
“இலங்கையில் உள்ள சப் ஏஜென்ட் மூலம் வெளிநாடு செல்வதற்கான முயற்சியில் இறங்கினேன்.
அவர், வைத்தியசாலை துப்புரவு பணி ஊழியராக வேலை வாங்கித் தருவதாகவும் ‘எவ்வித அசௌகரியமும் இல்லாமல் உரிய நேரத்தில் எல்லா விடயங்களையும் நிறைவேற்றித் தர ஏற்பாடு செய்துள்ளேன்’ என்றும் ஆசை வார்த்தைகளை கூற 300,000 (மூன்று இலட்சம்) பணம் செலுத்தி கட்டாருக்குச் சென்றேன்” என்றார்.
டிலக்சன் கட்டாரை அடைந்ததும், விமான நிலையத்தில் இருந்து அவரை கூட்டிச் செல்லக் கூட ஒருவரும் வரவில்லை. 24 மணித்தியாலங்கள் கடந்தாகிவிட்டது. மிகுந்த பசியுடன் இருந்ததாக மிகவும் கவலையுடன் தெரிவித்தார்.
அதன் பின், அவர் ஊழியராக பணியாற்றப்போகும் கம்பனியைச் சேர்ந்த நபர் ஒருவர் வந்து அழைத்துச் சென்றுள்ளார்.
அதன் பின், அவருக்கான பணியிடத்தை வழங்கி, சிறு தொகை முற்பணமும் கொடுத்துள்ளனர்.
“என்னை தனியாக ரயில் ஏற்றி அனுப்பிவிட்டார்கள். நான் வேலை செய்ய வேண்டிய தொழிற்சாலைக்கு எவ்வித முன்னனுபவமும் இல்லாமல், மொழி தெரியாமல் பயந்த நிலையில், என்ன நடக்குமோ என்ற அச்சத்திலேயே சென்றேன்” என்ற தனது கசப்பான அனுபவத்தை தடுமாறிய குரலில் கூறினார்.
ஆனால், அவர் பயந்தது போலவே அவர் எதிர்பார்த்துச் சென்ற தொழிலுக்கு எதிர்மாறான வேலையொன்று அவருக்காக காத்திருந்தது.
அது, பாலைவனத்தில் உள்ள ஒரு தொழிற்சாலை. அங்கு மிக சாதாரண தொழிலாளியாகவே சென்றார். அங்கு ஒவ்வொரு நாளும் வெவ்வேறு பிரிவுகளை சேர்ந்த நபர்களுடன் வேலை செய்யுமாறு மேற்பார்வையாளர் கூறியுள்ளார். அதற்கமைய ஒரு நாள் மேசனுக்கு உதவியாக, மறுநாள் துப்புரவுப் பணியாளராக, மற்றொரு நாள் பொருட்களை ஏற்றும் பணியாளராக என ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வேலையை செய்துள்ளார்.
“நான் ஒரு தொழிலைப் பழகிவிட்டு சென்றிருந்தால், எனக்கான ஒரு நிலையான வேலையை கௌரவமாக செய்திருந்திருப்பேன். வேறொருவருக்கு உதவியாளராகி, அவரிடம் திட்டு வாங்கியிருக்க மாட்டேன்” என கூறும் அவர், ஒப்பந்தத்தில் குறிப்பிட்டிருந்தபடி, முன்னதாக தீர்மானிக்கப்பட்ட வேலையை இரண்டு ஆண்டுகள் செய்திருந்தால் மாதம் 80 ஆயிரம் ரூபாய் சம்பளம் கிடைத்திருக்கும். அதனை வைத்து தனது குடும்பத் தேவைகள், சகோதரர்களின் கல்வி போன்ற விடயங்களை நிறைவேற்றியிருப்பார். ஆனால், அந்நாட்டில் இவர் செய்த வேலைகளும் அனுபவித்த இன்னல்களும் வார்த்தைகளில் அடக்க முடியாதவை.
இவ்வாறு நாட்டில் இருந்து அதிகளவானோர் தமது பொருளாதாரத்தை மேம்படுத்த மத்திய கிழக்கு நாடுகளுக்குச் செல்வதை பிரதான நோக்கமாக கொண்டுள்ளனர்.
இந்நிலையில் நாட்டின் பொருளாதார நிலையானது கீழ்நோக்கிச் சென்றிருக்கும் இன்றைய சூழலில் நாட்டுக்கான அந்நியச் செலாவணியை ஈட்டி நாட்டுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்களை வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்வதற்கான பணத்தை வழங்குபவர்களாக வெளிநாடுகளுக்கு தொழில் பெற்றுச் செல்பவர்கள் காணப்படுகின்றனர்.
2023 ஜனவரி தொடக்கம் ஆகஸ்ட் 30 வரை நாடு முழுவதும் 179,986 பேர் வெளிநாடுகளுக்கு தொழிலுக்காக சென்றவர்கள் ஆவர்.
நாட்டில் அத்தியாவசிய பொருட்களின் தட்டுப்பாடு, அதனால் ஏற்பட்ட விலையேற்றம் காரணமாக அன்றாட வாழ்வின் செலவுகளை சமாளிக்க அதிக வருமானம் ஈட்டித்தரும் தொழில் அவசியமாகிறது. அதற்காகவே மத்திய கிழக்கு நாடுகளுக்கு புலம்பெயர்ந்து சென்று, தொழில் செய்து சம்பாதிக்கின்றனர்.
திருகோணமலை மாவட்டத்தில் 2023 ஆகஸ்ட் வரையிலான கணக்கெடுப்பின்படி, அரச அங்கீகாரத்துடன் பயிற்சி பெற்று, வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் மூலம் வெளிநாடு சென்ற பணிப்பெண்கள் 1078 பேர் ஆவர்.
திருகோணமலை அலுவலகத்தில் வந்து பதிந்து செல்லாமல் நேரடியாக கொழும்பில் உள்ள அலுவலகத்தின் மூலம் பதிவு செய்யப்பட்டுச் செல்பவர்களும், அலுவலகப் பதிவின்றி சப் ஏஜென்ட் ஊடாக வெளிநாடுகளுக்குச் செல்பவர்களும் 30 வீதத்துக்கு அதிகமானோர் என பணியகத்தின் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
மேலும், இங்கே குறிப்பிடப்படும் த.டிலக்சன் போன்று மத்திய கிழக்கு நாடுகளுக்கு செல்லும் நபர்களில் 65 சதவீதமானவர்கள் தொழில் ஒன்றை முறையாக கற்காமலேயே தொழிலுக்காக புலம்பெயர்கின்றனர்.
அதே நேரத்தில் திறன்களை வளர்த்துக்கொண்ட தொழிலாளராக மத்திய கிழக்கு நாடுகளுக்கு அரச அங்கீகாரத்துடன் சென்று, அங்கு சம்பாதித்த பணத்தை தாய்நாட்டில் முதலீடு செய்து, இங்குள்ள பல இளைஞர்களுக்கு தொழில் வாய்ப்பை வழங்கிவரும் பலர் நம் மத்தியில் இருக்கின்றார்கள்.
இவ்வாறு திட்டமிட்டு பல தடைகளை தாண்டி முயற்சி செய்த பலரில் ஒருவர்தான் மு.நாகராஜன். அவர் தன்னைப் பற்றிக் குறிப்பிடுகையில்,
“என் மீதும் எனது குடும்பத்தின் மீதும் எனக்கு அதிகமான அக்கறையுள்ளது. உழைப்புக்கு அதிகமான சம்பளம் பெற வேண்டுமென்ற எதிர்பார்ப்பு எனக்குள் இருந்தது. ஆயினும் அப்படி ஒரு தொழிலை வெளிநாட்டில் மட்டுமே பெற முடியும் என சிந்தித்த நான், வெளிநாடு செல்வதற்கு முன்னரே, வெளிநாட்டில் என்ன தொழில் செய்வது என்பதை பற்றி சிந்தித்தேன். அப்போது எனக்கு கொஞ்சம் தெரிந்ததும் எனக்கு விருப்பமானதுமான சாரதி தொழிலை தெரிவு செய்தேன்” என்றார்.
அவ்வாறு நாகராஜன் வெளிநாட்டுக்குச் சென்று அங்கு சாரதியாக பணியாற்ற வேண்டும் என்றால் எவ்வாறான நடவடிக்கைகளை மேற்கொள்வது, சாரதி அனுமதிப்பத்திரத்தை தரமுடையதாக எப்படி மாற்றுவது போன்ற படிமுறைகளில் கவனம் செலுத்தினார்.
அவ்வாறே தனது தொழிலுக்கான தகைமையை வளர்த்துக்கொண்டு வெளிநாட்டு வேலை வாய்ப்பு பணியகத்தின் மூலம் அங்கீகரிக்கபட்ட ஏஜெனட் ஒன்றை நாடினார். அதன் பின்னர் முறையான ஒப்பந்தம் ஒன்றைச் செய்து கட்டாருக்கு சென்றுள்ளார்.
வெளிநாடு செல்வதற்கும், ஏஜென்டுக்கு வழங்குவதற்குமான அளவுக்கு பணம் அவருக்கு தேவைப்பட்டது. எனினும், அத்தனை பெருந்தொகைப் பணம் தன்னிடம் இல்லாத காரணத்தால் அப்போது தனது சித்தப்பாவிடம் ஒரு இலட்சம் ரூபாயை கடனாக பெற்றுச் சென்றுள்ளார்.
கட்டாரில் தனக்கு வழங்கப்பட்ட வேலையை அந்த நாட்டு சட்டங்களுக்கமைய செவ்வனே செய்து வந்தார். குடும்பத்தை விட்டுப் பிரிந்த ஒரு கவலையை மாத்திரம் சுமந்தவராக, தன் செலவுக்காக சிறிதளவு பணத்தை மாத்திரம் ஒதுக்கிக்கொண்டு, தனது சம்பளத்தில் ஒரு பகுதியை வீட்டுச் செலவுக்காக கொடுத்து, மிகுதியை இலங்கையில் திறக்கப்பட்ட தனது வங்கிக் கணக்குக்கு வைப்பலிட்டு சேமிக்க தொடங்கியுள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில்,
“சம்பளம் பெற்றால் வெள்ளிக்கிழமைகளில் நமது நாட்டைச் சேர்ந்தவர்கள் களியாட்ட நிகழ்வுகளில் கலந்து மகிழ்ச்சியடைவார்கள். அவ்வாறே பல நண்பர்கள் என்னையும் அழைப்பார்கள். ஆயினும், நான் எனது இலக்கை அடைய வேண்டும் என்பதற்காக எனது ஆசைகளை கட்டுப்படுத்திக்கொண்டு மிக எளிமையாக வாழ ஆரம்பித்தேன். செலவுகளை சுருக்கிக்கொண்டேன்” என்றார் நாகராஜன்.
அவ்வாறு அவர் தனது விசா முடிவடையும் காலம் வரை கட்டாரில் இருந்து சம்பாதித்தார்.
தனது நோக்கமெல்லாம் நமது நாட்டுக்கு வந்து தான் சம்பாதித்த பணத்தை முதலீடு செய்து வாகனம் ஒன்றை கொள்வனவு செய்து சுயதொழில் ஒன்றை ஆரம்பிக்க வேண்டும் என்பதேயாகும்.
அதேபோல தான் சம்பாதித்த பணத்தை கொண்டு குத்தகைக்கு வாகனம் ஒன்றை எடுத்து, சுற்றுலா பயணிகளுக்கான சேவையை ஆரம்பித்துள்ளார். அதற்காக அந்நாட்டு மொழித்திறனையும் விருத்தி செய்துகொண்டு, தொழிலை ஆரம்பித்துள்ளார்.
2015இல் தனது தொழிலை ஆர்வமாகவும் நம்பிக்கையுடனும் ஆரம்பித்தவர், இப்போது 3 வாகனங்களை வாங்கி தொழிலை விருத்தி செய்து வருகிறார்.
“பல சவால்களை எதிர்கொண்டபோதும் எனது விடாமுயற்சி காரணமாக யாருடைய அதிகாரத்தின் கீழும் வேலை செய்யாமல், நானே எனக்கு முதலாளியாகி, சுயதொழிலில் ஈடுபட்டு வருகிறேன். நாம் எமது தொழிற்திறனை வளர்த்துக்கொள்வதன் மூலமே வெளிநாட்டு வேலையை திறம்பட செய்து, தொழிலில் விருத்தி காண முடியும் என்கிற கருத்தையே வெளிநாடு செல்ல காத்திருக்கும் இளைஞர்களுக்கு நான் கூற விரும்புகின்றேன்” என மு.நாகராஜன் பெருமையோடு தெரிவித்தார்.
வடமலை ராஜ்குமார்
இந்தக் கட்டுரை முதலில் செப்டம்பர் 21, 2023 அன்று வீரகேசரி இணையதளம் இதழில் வெளியிடப்பட்டது.