Friday, October 11, 2024
HomeStorytellingGeneralதண்ணீரில் எழுதப்படும் தேர்தல் வாக்குறுதிகள்; கண்ணீரில் வாடும் மலையகம்

தண்ணீரில் எழுதப்படும் தேர்தல் வாக்குறுதிகள்; கண்ணீரில் வாடும் மலையகம்

மஸ்கெலியா பிரவுன்ஸ்விக் தோட்டத்தில் கடந்த ஐந்து வருடத்தில் தன்னிடம் வரும் நோயாளர்கள்  பெரும்பாலும் அசுத்தமான கழிவறைகளைப் பயன்படுத்துவதால் ஏற்படும் பூச்சிக்கடி, வயிற்றோட்டம், மற்றும் தோள் நோய் பிரச்சினைகளுடனே வைத்தியசாலைக்கு வருவதாக மஸ்கெலியா பிரவுன்ஸ்விக் தோட்ட வைத்தியர் அருள்செல்வன் தெரிவித்தார். 

வைத்தியர் அருள்செல்வனின் கருத்துப்படி கழிவறைகள் அற்ற, ஒரே கழிவறைகளை தொடர்ச்சியாகப் பயன்படுத்தும் வறிய மக்களே இவ்வாறான நோய்களுக்கு உட்படுகின்றனர், என அவர் மேலும் தெரிவித்தார்.

“என் கிட்ட வருவாங்க.  ஆனா இப்போ இருக்குற  காலகட்டத்துக்கு கொறஞ்சது 5 பேருக்கு ஒரு டொய்லட்ட பாவிக்கிறது ரொம்ப நல்லது. ஏன்னா நாம குறிப்பிட்ட சில தொற்று நோய்கள்ள இருந்து விடுபடலாம்” என வைத்தியர் அருள்செல்வன் வீரகேசரிக்கு தெரிவித்தார்.

தற்போது மலையகத்தில் காணப்படும் முக்கியப் பிரச்சினைகளில் ஒன்றுதான் இந்த கழிவறைப் பிரச்சினை. இதற்கு இன்றளவும் ஒரு தீர்வின்றி வாடுகின்றனர். மஸ்கெலியா பிரவுன்ஸ்விக் ரைட்அக்கரை தோட்ட மக்கள் போலவே பல்லாயிரக்கணக்கான தோட்ட மக்களும் இதே பிரச்சினைக்கு முகங்கொடுத்துள்ளனர்.

மஸ்கெலியா நகரை பொறுத்த மட்டில், அடிப்படை வசதிகள் இன்றி வாழும் மக்களே அதிகம். ஒழுகும் தகரக் கூரை லயன் வீடுகள், பாறைகள் நிறைந்த பாதைகள், சீரமைக்கப்படாத கழிவறைகள் என மனிதனுக்குத் தேவையான அத்தியாவசிய தேவைகள் ஏதுவுமின்றி அரசியல்வாதிகளின் வாய்வார்த்தைகளை மாத்திரம் நம்பி வாழும் ஒரு மக்கள் கூட்டம்.

ஒவ்வொரு தேர்தலிலும் மலையக அரசியல் கட்சிகள் அனைத்தும் கழிவறைகள் கட்டித்தருவதைத் தேர்தல் விஞ்ஞாபனத்தில் குறிப்பிடாத ஒரு தேர்தல் வாக்குறுதியாக 1990களில் இருந்து தொடர்ச்சியாக வழங்கிவருவதாக குறித்த பாதிக்கப்பட்ட மக்கள் தெரிவிக்கின்றனர்.

இவ்வாறு பல இன்னல்களுக்கு மத்தியில் வாழும் இந்த மக்களுக்கு மிகப்பெரிய பிரச்சினையாக உள்ளது இந்த கழிவறைகள் தான். அதிலும் மஸ்கெலியா ரைட்அக்கரை தோட்ட மக்கள் இந்த கழிவறைகள் இன்றி மிகவும் துன்புற்று வருகின்றனர்.

ஒரு லயன் குடியிருப்பில் 20 வீடுகள் காணப்படுமாயின் அவர்களுக்கு 6 தொடக்கம் 8 கழிவறைகளே காணப்படுகின்றன. அவற்றையே அந்த லயன் தொகுதியில் வசிக்கும் அனைவரும் பயன்படுத்த வேண்டும். இதன் காரணமாகப் பலர் நோய்வாய்ப்படுகின்றனர். இந்த கழிவறைகள் தற்போது பாவனைக்கு உதவாத போதும் அவர்கள் அதனையே  பயன்படுத்தி  வரும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

இம்முறை தேர்தலிலும் வாக்கு கேட்டுவந்த அரசியல்வாதிகளிடம், தமக்குக் கழிவறைகளை அமைத்து தரும் கோரிக்கையை முன்வைத்துள்ளதாக பாதிக்கப்பட்ட மக்கள் குறிப்பிட்டுள்ளனர்.

இதேவேளை இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் இம்முறை தனிவீடு காட்டித்தருவதாக  தமது  தேர்தல் விஞ்ஞாபனத்தில் குறிப்பிட்டுள்ளது.

இவ்வாறு பாதிக்கப்பட்ட மக்கள் வாழும் லயன்களுக்குள் நுழையும் போதே முதலில் தென்படுவது இந்த கழிவறைகள் தான். அவற்றில் சில கழிவறைகளுக்குக் கதவுகளே இல்லை என்பதை காணக்கூடியதாக இருந்தது.

வெறும் ரப்பர் ஷீட்களை இட்டே மறைக்கப்பட்டுள்ளன. அதுவும் முழுமையாக இல்லை. இவற்றுக்கு வெளியில் ஒரு பெரிய நீர்தாங்கிகளில் தண்ணீர் நிரப்பி வைக்கப்பட்டுள்ளது. அதனோடு சில பெய்ன்ட் கேன்களும், இவற்றைக் கொண்டே அவர்கள் தங்களது காலைக் கடனை முடிக்க வேண்டும். முதலில் செல்பவர் நீரை அதிகம் பயன்படுத்தினால் அடுத்து வருவோருக்கு நீர் இருக்காது. இதனிலும் துன்பம் என்னவென்றால் இந்த கழிவறைகளுக்கு அருகிலேயே சிலரது சமையலறைகளும் உள்ளன. அந்த துர்நாற்றத்துடனே இவர்கள் தங்களது மூன்று நேர உணவையும் உண்டு வாழ்கின்றனர்.

“நான் இந்த தோட்டத்துக்கு வந்து 40 வருசமாச்சி. நா இங்க வந்ததுல இருந்து இந்த டொய்லட் தா இறுக்கு.  அப்போ கொஞ்சம் நல்லா இருந்துச்சி  ஆனா இப்போ சரியான மோசமா இறுக்கு  கிட்ட போக முடியல வாந்தி வார மாறி இறுக்கு, எனக்கு இது நாலயே நோய் வருது.  மாசத்துல பாதிநாள் ஆஸ்பத்திரியிலேயே தா இருக்கே. என 67 வயதான சி.காமாச்சி வீரகேசரிக்குத் தெரிவித்தார்.

“இந்த டொய்லெட்ட நல்லா கட்டி தாரேனு எத்தனையோ அரசியல்வாதிங்க வந்து சொல்லிட்டு பொய்ட்டாங்க ஆனா இது வரைக்கும் கட்டுனபாடு இல்ல. ஒவ்வொரு முறையும் ஓட்டு கேட்டு வாரப்போ  கால்ல விழாத கொரையா  ஓட்டு கேக்குராங்க. அனா அதுக்கு பெறகு ஆளையும்  கானோ பேரையு கானோ. எங்க வாழ்க்க இதுக்குள்ளயே முடிஞ்சி போகுது.” என மனமுருகுகின்றார்.

இதேவேளை அதே பகுதியில் வாழும் 28 வயதான ரிசாந்தி என்ற இளம் தாய் குறிப்பிடுகையில்,

“ கடந்த முறை தேர்தலில் அனைத்து அரசியல்வாதிகளும் வந்து பார்த்து விட்டு உங்களுக்குத் தனியான கழிவறைகளை கட்டித்தருகிறோம் எனக் கூறிவிட்டுச் சென்றனர். ஆனால் இன்றளவும் செய்தபாடில்லை. ஓட்டு கேட்பதற்கு மாத்திரமே இங்கு வருகின்றனர்.” என்றவாறு தனது ஆதங்கத்தைக் கொட்டித் தீர்த்தார்.

தனது சீவநோயாத்துக்காக சிறு பலசரக்கு கடையொன்றைத் தனது நடத்திவரும் 28 வயதான ரா. தினேஷ்குமார் குறிப்பிடுகையில்,

“மழை வந்தா டொய்லட் எல்லா நெரிஞ்சி ரோட்டுக்கு தா வருது. இது நாலயே எங்களுக்கு நெரய நோய் வருது. இந்த அரசியல்வாதிகள நம்பி எங்க ஆளுங்க செத்ததுதா மிச்சம்” என தனது மனவருத்தத்தைத் தெரிவித்தார்.

இந்த கழிவறைகள் சுமார் ஐம்பது வருடங்களுக்கு முன்னர் கட்டப்படவையாக காணப்படுகின்றன. இவற்றில் சில உடைந்து விழும் அபாயத்தில் உள்ளன. இவ்வாறு அவதியுற்று வாழும் மக்களுக்குத் தனி வீடு, சீரான பாதை. சிறந்த சுகாதார வசதி, கல்வி எனப் பல தேவைகள் உள்ளன இவ்வாறு அவதியுறும் மக்களிடம் தேர்தல் காலங்களில் மாத்திரம் வரும் அரசியல்வாதிகள் அவர்களின் அத்தியாவசிய தேவைகளைப் பூர்த்தி செய்து தருவதாக்கப் பொய் வாக்குறுதிகளைக் கூறி தேர்தல் பிரச்சாரங்களில் ஈடுபடுகின்றனர்.

அதிலும் சில பகுதிகளுக்கு அரசியல் தலைவர்கள் செல்லாது குறித்த அரசியல் கட்சிகளின் தொண்டர்கள் மாத்திரமே சென்று குறித்த வாக்குறுதிகளை வழங்குகின்றனர். இந்த மக்களின் பிரச்சினைகளை சில அரசியல்வாதிகள் பகடைக்காய்களாகப் பயன்படுத்தி அரசியல் நடத்தி வருகின்றனர். பெரும்பாலான தோட்டப்புற மக்கள் அரசியல் தலைவர்களைக் கண்டதுமில்லை. கதைத்ததுமில்லை. இவ்வாறு இருக்க இவர்களது வாக்குறுதிகளை மாத்திரம் எப்படி நம்புவது என்பதே பாதிக்கப்பட்ட மக்களின் கேள்வியாகும்.

இது பற்றி முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் நுவரலியா மாவட்ட வேட்பாளருமான பழனி திகாம்பரம் இது குறித்து கருத்து தெரிவிக்கையில்,

“நான் அமைச்சராகி குறித்த கழிவறைகள் தொடர்பில் ஒரு ஆய்வை நடத்தியதில்  மலையகத்தில்  நாற்பதாயிரம் குடும்பங்களுக்குக் கழிவறைகள் இல்லை என்று தெரியவந்ததாகக் குறிப்பிட்டார்.

“அதன் பிறகு இந்த கழிவறை பிரச்சினை தொடர்பில் உலக வங்கியுடன் கதைத்து ஒரு கழிவறைக்கு ஒரு இலட்சத்து ஐம்பதாயிரம் செலவில் கட்டுவதற்கு  தீர்மானித்தோம்.  ஆனால்  அதன்  பிறகு எங்களது  அமைச்சு இல்லாமல் போய்விட்டது.” என அவர் குறிப்பிட்டார்

இந்த நிலையில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தலைவர்களைத் தொடர்பு கொண்ட போது எவரும் பதில்லக்கவில்லை

அதேவேளை இது குறித்து மலையக ஆய்வாளரும் சட்டத்தரணியுமான இரா.சடகோபன் வீரகேசரிக்குத் தெரிவிக்கையில்,

நாட்டில் இரண்டாம் தரப் பிரஜைகளுக்கான சின்னமாகவே இந்த லயன்கள் பார்க்கப்படுகின்றது. ஆனால் நாட்டில் ஏனைய பிரஜைகள் தனி வீடுகளில் வாழ்கின்றார்கள். இந்த தனி வீட்டுக்குரிய ஒரு அம்சமே இந்த கழிவறைகள்.

ஆனால் லயன்கள் கட்டப்படும் போது கழிவறை என்ற ஒன்றை அவர்கள் யோசித்த பார்க்கவில்லை. லயன்களுக்கு பொருந்தாத ஒரு விடயமாகவே இந்த கழிவறை இருந்துள்ளது. அதன் பிறகு லயன்களுக்கு அப்பால் இந்த கழிவறைகள் கட்டப்பட்டன.

எனவே தனிவீடு கிடைத்த பிறகே கழிவறைக்கு ஒரு தீர்வு கிடைக்கும். நாங்கள் ஒரு தனியார் நிறுவனத்தின் உதவியுடன் சில கழிவறைகளைக் கட்டிக் கொடுத்தோம். பின் அவற்றைச் சென்று பார்க்கும் பொழுது அவற்றில் விறகு அடுக்கப்பட்டிருந்தது.

இந்த மக்களுக்கு இந்த கழிவறைகள் குறித்த அவசியம் தெரியவில்லை. அவர்களுக்கு அதைவிய அத்தியாவசிய தேவைகள் இருக்கின்றன. எனவே அந்த அத்தியாவசிய தேவைகள் தீர்க்கப்படும் போது இந்த கழிவறை பிரச்சினை தானாகவே தீரும்.

மலையக மக்கள் இருபது பெர்ச் காணியில் தனிவீடு கேட்டனர். ஆனால் அவற்றை வழங்கினால் தேயிலைத் தோட்டங்கள் பாதிக்கப்படும் என்பதற்காகத் தோட்ட தொழட்சங்கங்கள் அவற்றை வழங்க மறுத்தன. கடைசியாக ஏழரை காணி தருவதாக ஒத்துக்கொண்டனர். ஆனால் அவர்கள் கட்டிக்கொடுத்த வீடுகள் மூன்று தொடக்கம் நான்கு பெர்ச் காணியிலேயே கட்டிக்கொடுக்கப்பட்டன. ஆனால் இதைத் தட்டிக் கேட்பதற்குப் பொருளாதார ரீதியில் வழுவற்றவர்களாக மலையக மக்கள் உள்ளனர். இந்த போதும் மலையக தொழிற்சங்கங்கள் அனைத்தும் ஒன்று சேர்ந்து ஒரு நிலைப்பாட்டிலிருந்தார்களேயானால் மலையக மக்களின் அனைத்து பிரச்சினைகளுக்கும் தீர்வு கிடைக்கும் என்றார்.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments