Friday, October 11, 2024
HomeStorytellingGeneralபோலிச்செய்திகளால் வாக்களிப்பை தவிர்க்கும் மக்கள்

போலிச்செய்திகளால் வாக்களிப்பை தவிர்க்கும் மக்கள்

நாற்பது வயதுடைய டில்கான் பிரான்ஸிஸ் என்பவர்  சுறுசுறுப்பாக இலத்திரனியல் வர்த்தக நடவடிக்கையில் ஈடுபடும் இரு பிள்ளைகளின் தந்தை. அடிக்கடி பேஸ்புக் எனும் சமூகவலைத்தளத்திற்கு சென்று செய்திகள் தொடர்பான விடயங்களையும் விபத்து தொடர்பான சி.சி.ரி. வி. காணொளிகளையும் பதிவேற்றம் செய்பவர்.

ஆனால் கிழக்கு மாகாணம் தொடர்பான செய்தியொன்றை பார்த்ததும் அவர் தீடிரென யோசனையில் ஆழ்ந்திருந்தார்.

“அன்று காலை நான் வழமையாக பேஸ்புக்கை பார்க்கும் போது அதில் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களை வைத்து சில பேஸ்புக் போஸ்ட்கள் போடப்பட்டிருந்ததை அவதானித்தேன். அதில் கிழக்கு மாகாணத்தில் தேர்தலில் போட்டியிடும் சில வேட்பாளர்களைப் பற்றிய தகவல்கள் பகிரப்பட்டிருந்தன. அதில் குறிப்பாக கருணா அம்மானுக்கு எதிராக பேஸ்புக்கில் கருத்துக்கள் பகிரப்பட்டிருந்தன. அதன் பின்னர் நான் அவரது ஆதரவாளருடன் உரையாடும் போது தான் அது போலியான செய்தியென தெரிந்துகொண்டேன்.”

“குறித்த பேஸ்புக் தரவுகளை பார்த்தவுடன் ஏன் இவ்வாறான செயற்பாடுகளை செய்து மக்களை ஏமாற்றுகிறார்கள் என்று எண்ணி தேர்தலில் வாக்களிப்பது குறித்து தீர்மானம் எடுக்காது குழம்பியிருந்தேன்.” என அவர் வீரகேசரிக்கு தெரிவித்தார்.

இதற்கு இரண்டு நாட்களின் பின் இராஜ் என்ற பெரும்பான்மையின பாடகரினால் நடித்து தயாரிக்கப்பட்ட ஜே.வி.பி.யின் தலைவர் குறித்து சித்திரிக்கப்பட்ட ஒரு காணொளியை பாரத்ததும் டில்கான் இம்முறை தேர்தலில் வாக்களிக்காமல் இருக்க தீர்மானித்தார்.

இதேவேளை, பேலிச்செய்திகளால் வாக்காளர்களை குழப்புவது மாத்திரமின்றி வேட்பாளர்கள் தொடர்பில் போலியான செய்திகளை பரப்ப ஒரு கும்பல் முயற்சித்து வருவதும் கண்கூடாக தெரிகின்றது.

சமூக வலைத்தளங்களில் 260 கோடிப்பாவனையாளர்களுடன் முதலிடத்தில் இருப்பது பேஸ்புக். இலங்கையில் மாத்திரம் 60 இலட்சத்திற்கும் அதிகமானவர்கள் பேஸ்புக் கணக்கை வைத்துள்ளனர்.

பேஸ்புக், யூடியூப், டுவிட்டர், வட்ஸ்அப் மற்றும் இன்ஸ்டாகிராம் போன்ற சமூக ஊடகங்கள் இருந்தாலும் பேஸ்புக்கின் மூலமே அதிகளவான போலிச்செய்திகள் பரப்பப்பட்டு வருகின்றன. இந்நிலையில் வட்ஸ்அப் குழுக்கள் மூலம் பரப்பப்படும் போலிச்செய்திகள் மிகவும் இரகசியமான முறையில் பரப்பப்படுவதால் அவ்வாறு பரப்பப்படும் போலிச்செய்திகளை இலகுவில் அடையாளம் காணமுடியாது.

பேஸ்புக் நிறுவனம் போலிச் செய்திகள் மற்றும் வெறுப்புப் பேச்சுகள் தொடர்பாக போதிய நடவடிக்கை எடுக்கத்தவறிவிட்டதாக கொகாகோலா,  அடிடாஸ், யுனிலிபர் உட்பட 200 க்கும் மேற்பட்ட முன்னணி நிறுவனங்கள் பேஸ்புக்கில் விளம்பரங்களைக் கொடுப்பதில் இருந்து கடந்த சில வாரகாலப்பகுதிக்குள் விலகிக்கொண்ட போதும் அரசியல் விளம்பரங்களால் பேஸ்புக் பணத்தை அள்ளிக் குவித்து வருகின்றது என புதிதாக வெளியாகியிருக்கும் தகவல் புலப்படுத்துகின்றது.

இது இவ்வாறு இருக்க , பத்திரிகைகளின் முகப்பு பக்கங்களை பயன்படுத்தி பரப்பப்படும் போலிச்செய்திகள் என்பது தற்போது மிகவும் பேஸ்புக்கில் வைரலாகி வருகின்றது. இது பற்றி மக்கள் விழிப்பாக இருக்க வேண்டியது அவசியம். நாட்டிலுள்ள பத்திரிகைகளின் முகப்பு பக்கங்களில் உண்மையாகவே வெளியானது போன்று கணினியில் வடிவமைத்து போலிச்செய்திகள் தேர்தல் காலத்திலும் பரப்பப்படுகின்றன. கடந்த ஏப்ரல், மே மாத காலப்பகுதியில் குறிப்பாக கிழக்கு மாகாணத்தில் பேஸ்புக் மூலமாக பரப்பப்பட்ட போலிச்செய்திகள் மீண்டுமாக தற்போது பரப்பப்படுவதை அவதானிக்க முடிகின்றது .

சுயாதீன தேர்தல்கள் ஆணைக்குழுத் தலைவர் மஹிந்த தேசப்பிரிய, சமூக ஊடகங்களில் பரப்பப்பபடும் போலிச்செய்திகளுக்கு எதிராக கடுமையான தண்டனை நிறைவேற்றப்படும் என்று குறிப்பட்டபோதும், தொடர்ந்தும் போலிச்செய்திகள் பரப்ப்பபட்டே வருகின்றன.

பேஸ்புக்குடன் தேர்தல்கள் ஆணைக்குழு ஏற்படுத்திக்கொண்ட ஏற்பாடு நம்பிக்கையின் அடிப்படையிலானது. 2019 ஆம் ஆண்டு நவம்பர் மாதம்  நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலையொட்டியதாக இது ஆரம்பமானது.  தேர்தலை நெருங்கிய காலப்பகுதியில் வெறுக்கத்தக்க பேச்சு, போலிச்செய்தி என கருதிய 1200 பிரச்சினைக்குரிய பதிவுகளை தேர்தல்கள் ஆணைக்குழு பேஸ்புக்கிற்கு அனுப்பிய நிலையில் ஏறக்குறைய 800 பதிவுகள் நீக்கப்பட்டதாகவும் இவ்வாறு தாம் முறைப்படும் போலிச்செய்திகள் தொடர்பான முறைப்பாடுகளை இந்தியாவில் வைத்தே பேஸ்புக் நிறுவனம் தீர்மானிப்பதாகவும் இதனால் காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளதாகவும் தேர்தல் ஆணைக்குழுவின் உறுப்பினரான பேராசிரியர் ரட்ணஜீவன் ஹூல் தெரிவித்தார்.

ஆனால் பொதுமக்கள்,செய்திகளை பார்க்காதவர்கள், ஏதாவதொரு தேவைக்காக மாத்திரம் பேஸ்புக் செய்திகளை பார்ப்பவர்கள், ஏதாவது தேவைக்காக பேஸ்புக் போன்ற சமூக ஊடகங்களில் தரவேற்றுவோர், அரைகுறையாக ஒரு விடயத்தை தெரிந்துகொண்டு சமூக ஊடகங்களில் பரப்புவோரே இவ்வாறு போலிச்செய்திகளுக்கு இலக்காகின்றார்கள் என ஊடகவியலாளர் அருண் ஆரோக்கியநாதர் குறிப்பிட்டார்.

கடந்த ஜனாதிபதி தேர்தலைவிட பொதுத்தேர்தலில் அதிகமான போலிச்செய்திகள் பரப்பப்பட்டுள்ளதாகவும் ஜனாதிபதி தேர்தல் காலத்தைவிட தற்போது போலிச்செய்தி பரப்பப்படுவது 2 மடங்காக அதிகரித்துள்ளதாகவும் #Genaration இன் தமிழ் சமூக ஊடகங்களை கண்காணிக்கும் அதிகாரியான ஜோய் ஜெகார்த்தனன் தெரிவித்தார்.

தற்போது பரப்பப்படும் போலிச்செய்திகளை இலகுவில் இனங்காணமுடியாதுள்ளதாகவும் கடந்த ஒரு மாத காலப்பகுதியில் சுமார் 80 க்கும் மேற்பட்ட போலிச்செய்திகளை தாம் இனங்கண்டுள்ளதாகவும் குறிப்பிட்ட ஜோய் ஜெகார்த்தனன், பேஸ்புக்கில் பரப்பப்பட்ட 3 போலிச்செய்தி தொடர்பான காணொளிகள் குறித்து தாம் பேஸ்புக் நிறுவனத்திற்கு அறிவித்து அதனை உடனடியாக நீக்கியதாகவும் குறிப்பிட்டார்.

பொதுத் தேர்தல் நெருங்க நெருக்க இத்தகைய போலிச் செய்திகள் அதிகரிக்க வாய்ப்புக்கள் உள்ளன. அனைத்து விடயங்களையும் ஆராய்ந்து பார்த்து அவதானமாக இருக்க வேண்டியது எமது பொறுப்பு என்பதுடன் ஜனநாயக கடமையை சரியாக நிறைவேற்றுவதும் எமது தலையாய கடமையாகும்.

“ நாம் இலங்கையில் இடம்பெறவுள்ள தேர்தலின் நேர்மையினை பாதுகாக்கும் பொருட்டு வெறுப்புப்பேச்சு, போலிச்செய்தி மற்றும் ஆபத்தான தரவுகள் போன்றவற்றை அடையாளம் காண்பதற்கும் அவற்றின் வீச்சை கட்டுப்படுத்தவும் போலிச்செய்திகளை பரவாமல் தடுப்பதற்கும் திட்டமிட்டு பரப்பப்படும் செய்திகளை கட்டுப்படுத்தவும் உள்ளூர் மற்றும் சிவில் அமைப்புக்களுடன் இணைந்து நாங்கள் கடுமையான நடவடிக்கை எடுக்கின்றோம். இலங்கையர்கள் பேஸ்புக் தளத்தினை பாதுகாப்பாக பயன்படுத்துவதற்கும் சிவில் செயற்பாடுகளில் ஈடுபடுவதற்கும் உரிய தளமாக இருப்பதை உறுதிப்படுத்தும் முகமாக பேஸ்புக்கில் உள்ள செயற்பாடுகளை தொடர்ச்சியாக மீள்பரிசீலனை செய்து வருகின்றோம். நாங்கள் இச்செயற்பாட்டினை தேர்தல் தினத்தன்றும் அதற்கு பிற்பாடான காலப்பகுதி வரைக்கும் முன்னெடுத்துச்செல்லோம்” பேஸ்புக் நிறுவனத்தின் பேச்சாளர் ஒருவர் சண்டேடைம்ஸ் பத்திரிகைக்கு தெரிவித்துள்ளார்.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments