Monday, April 15, 2024
HomeResource Centerபுலனாய்வுக் கதைகளை உண்மைச் சரிபார்ப்பதற்கான வழிகாட்டி

புலனாய்வுக் கதைகளை உண்மைச் சரிபார்ப்பதற்கான வழிகாட்டி

உண்மையான தகவல்களை சரியாகப் பெறுவதை விட,  உங்கள் செய்திக்கதையில் பிழைகள் இல்லாது சரிபார்ப்பதற்கு அதிகம் நேரம் தேவைப்படுகிறது. அக்கதையின் தரத்தை உறுதி செய்வதற்கு தொடக்கத்திலிருந்தே ஒரு உன்னிப்பான அணுகுமுறை தேவைப்படுகிறது.

ஸ்வீடனில் உள்ள தேசிய பொது ஒளிபரப்பு நிறுவனமான SVT யின் புலனாய்வுத் தொலைக்காட்சி நிகழ்ச்சியான Uppdrag Granskning (Mission Investigate) இல் உள்ள எங்கள் செய்தி அறையால் 2004 முதல் உருவாக்கப்பட்ட மூன்று சோதனை பொறிமுறைகளைக் கொண்ட அமைப்பைக் கீழே காணலாம்.  கடந்த  ஆண்டுகளில்,  Mission Investigate நாடுகடந்த லஞ்சம் மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்கள் முதல் கத்தோலிக்க திருச்சபை மற்றும் ஐ.நா வரையிலான தலைப்புகளில் சர்வதேச அளவில் விருது பெற்ற கதைகளை உருவாக்கியுள்ளது.

இதன் வழியில், உண்மையான தகவல்களை தவறாகப் பெறுவதைத் தவிர்ப்பது எப்படி என்பதையும்  மற்றும் எங்கள் கதைகள் வெளியிடப்பட்ட பின்னர் சவாலுக்குட்படுத்தப்படுவதை தவிர்க்கும் முகமாக அதற்கு முன்பே தகவல்களை உறுதிப்படுத்துவது எப்படி என்பதையும் எங்கள் குழு கற்றுக்கொண்டது.

இது உங்களுக்கு மேலும்  உத்வேகத்தை அளிக்கும் என்று நம்புகிறேன்.

மூன்று சோதனைப் பொறிமுறைகள்

சோதனைப் பொறிமுறைகள் எதற்கு? இது தேவையற்ற அதிகாரவாதமாகத்  தோன்றலாம், ஆனால் முறையாக செயல்படுத்தாமல், வேலையின் தேவையான பகுதிகள் செய்யப்படாது விடுபடும் ஆபத்தும் இங்குள்ளது. சம்பந்தப்பட்ட விடயங்களைப் பொறுத்தவரை, முயற்சியானது மிகவும் நியாயப்படுத்தப்படலாம். இப்பொறிமுறைக்கு எடுக்கப்படும் மொத்த நேரம் – இரண்டு மணிநேர சந்திப்புகள் மற்றும் ஒரு நாள் வரையிலான உண்மைச் சரிபார்ப்பு அமர்வு – என்பன எந்த ஒரு சிறிய செய்தி அறையாயினும்  அல்லது, புலனாய்வு நிருபர்/ சுதந்திர ஊடகவியலாளரும்  மேற்கொள்ளவதை  ஊக்கப்படுத்த தவறுவதாக அமையக்கூடாது.

இப் பொறிமுறையினை கடைப்பிடிப்பதன் பரிசு செய்திக்கதை வெளியீடு நெருங்கும்போது இருக்கும் நிம்மதியாகும்.

சோதனைப் பொறிமுறை  எண். 1: ஆரம்பக் கூட்டம்(Start-up meeting)

ஊடகவியலாளர் ஒருவர் செய்திக்கதை யோசனை தொடர்பான முன் ஆய்வுகளுக்குப் பிறகு, அது தொடர்பில் சவால்களை எதிர்கொள்ள தயாராக இருக்க வேண்டும்: கதையின் மையக் கருதுகோள் – என்ன விசாரிக்கப்பட வேண்டும், ஏன் என்ற கோட்பாடு – நிலைத்து நிற்கிறதா? எடுக்கப்பட்ட கருதுகோளுக்கு எதிராக என்ன இருக்கின்றது ? ஸ்டார்ட்-அப் கூட்டத்தில் இதுவே மையக் கேள்வியாகும், இக்கதையினை தொடர்ந்து  மேற்கொள்வதற்கும் வளங்களை முதலிடுவதற்கும்  ஏற்ற  தகுதியான திட்டம்தானா என்பதும் இங்கேயே தீர்மானிக்கப்படுகிறது.

ஊடகவியலாளர்கள் பிரச்சனைக்குரிய அம்சங்களைப் புறக்கணிக்க முனைவதால், மாற்றுக் கருத்துக்களை கருத்திலெடுக்க வேண்டிய அவசியம் உள்ளது.  இது ஒரு பத்திரிகை ஆசிரியராக இருக்கலாம் அல்லது சக ஊழியர்களுக்கு சவால் விடும் ஊடகவியலாளராகக் கூட  இருக்கலாம். ஆரம்பத்திலிருந்து  இருந்து இறுதி வரை செய்தியின் தரத்தினை உறுதி செய்யும் செயல்முறையின் முக்கிய பகுதியாக இருக்கும் இந்த நபர் நன்கு தயாராக இருக்க வேண்டும்.

இந்த வகையான விமர்சனரீதியிலான கேள்விகள் சில வேளை பதட்டமான தருணங்களுக்கு வழிவகுக்கும், ஆனால் இறுதியில், இது சிறந்த நோக்கத்துடன் செய்யப்படுகிறது என்பதை அனைவரும் புரிந்துகொள்கிறார்கள்.

சரிபார்க்கும் விடயங்களின் பட்டியலில் பொறுப்புக்கூறல் என்பது இன்றியமையாத  ஓர் அம்சமாகும். புலனாய்வில் சம்பந்தப்பட்ட முக்கிய நபரை எப்படி, எப்போது தொடர்பு கொள்ள வேண்டும் என்பதற்கான திட்டம் வரையப்பட்டுள்ளது.  எங்களைப் பொறுத்தவரை, இதனை மிக விரைவில் செய்து முடிக்க வேண்டும் என்பது ஒரு பொதுவான விதியாகும். இதற்கு மற்றொரு காரணம் என்னவெனில்  உங்களிடம் ஒரு செய்திக்கதை இருப்பதை உறுதிப்படுத்துவதுடன் நியாயத்தன்மையை பேணுதல் ஆகும்.

இதில் சில விதிவிலக்குகள் உள்ளன, உதாரணமாக அடக்குமுறை நாடுகளாக இருந்தால் வெளியீட்டிற்கு சற்று முன்பு வரை நீங்கள் காத்திருக்க வேண்டியிருக்கும்.

சோதனைப் பொறிமுறை  எண்.  2: நடுப்புள்ளிக் கூட்டம் (Midpoint Meeting)

குறைந்தபட்சம் முதல் வரைவு தயார் நிலையில் இருக்கும் போது , இந்த சந்திப்பின் நோக்கம் கதையின் தரம் தொடர்பில்  சிக்கல்களைப் பற்றி விவாதிப்பதாகும். குறிப்பிடத்தக்க மாற்றங்களுக்கு இன்னும் நேரம் உள்ளது.

பின்வருவனவற்றைக் கேளுங்கள்:

 • முடிவுகள்: கருதுகோள் நிரூபிக்கப்பட்டதா அல்லது சரிசெய்யப்பட வேண்டிய  தேவை உள்ளதா? புலனாய்வின் கண்டுபிடிப்புகள் எந்த வகையிலும் கேள்விக்குட்படுத்தப்படுமா அல்லது மறுக்கப்படுமா? மற்ற எல்லா விளக்கங்களையும் விலக்க முடியுமா?
 • பொறுப்புக்கூறல்: நம்மால் முடிந்த அளவு நியாயமானவர்களாக இருக்கின்றோமா? தணிக்கை செய்யவேண்டிய சூழ்நிலைகள் ஏதாவது உள்ளதா?
 • பெரிய படம்: ஏதாவது காணவில்லையா, அல்லது ஏதாவது பொருத்தமான இடத்தில் இல்லாமல் இருக்கிறதா? நாம் விஷயங்களை மிகவும் கருப்பு மற்றும் வெள்ளையாக சித்தரிக்கிறோமா?

நீங்கள் உண்மையைச் சொல்லாமல் உறுதிப்படுத்தப்பட்ட  உண்மைத் தகவல்களை அறிக்கையிடலாம். துரதிர்ஷ்டவசமாக, ஊடகவியலாளர்கள்  பெரும்பாலும் பக்கச்சார்பான வகையில் தமது கதையை உறுதிப்படுத்தும் வகையிலான தகவல்களை வெளிப்படுத்துவதோடு அவற்றிற்கு முரணான  உண்மைகளைப் புறக்கணிக்கும் வண்ணம்  செயற்படுகின்றனர்.  இதன் விளைவானது விமர்சன ரீதியாக பொருத்தமான உண்மைத்தரவுகள் இல்லாதவிடத்து அது மோசமான, பிழையாக வழி நடத்தும் புலனாய்வாக இருக்கலாம்.

ஊடகவியலார்களிற்கு  மட்டுமே உண்மைத்தரவுகளைத் தேர்ந்தெடுப்பதில் முழுமையான நுண்ணறிவு உள்ளது. பின்வரும் கேள்விகளுக்கு நேர்மையான பதில்கள் தேவையாக இருப்பதுடன் கதை சொல்லும் செயல்பாட்டின் போது அவை மீண்டும் மீண்டும்  அடிக்கடி கேட்கப்பட வேண்டும்:

 • மற்றைய உண்மைத்தரவுகள் கதை தொடர்பின் முழுமையான படத்தை மாற்றுமா?
 • எதை விட்டுவிட்டோம் என்று தெரிந்தால் பொதுமக்கள் ஏமாற்றம் அடைவார்களா?
 • நம்பகத்தன்மையை இழக்காமல் உண்மைத்தரவுகளின் தேர்வை நியாயப்படுத்த முடியுமா?

இறுதியாக, சரிபார்க்க இன்னும் இரண்டு விடயங்கள் உள்ளன:

 • ஆதாரங்கள்: அவர்கள் நம்பகமானவர்களா? அவர்களுடன் நாம் தொடர்புடைய முக்கியமான கேள்விகளை கேட்கிறோமா? அவர்கள் தொடர்பான தேவையான பின்னணி சோதனைகளை நாங்கள் செய்திருக்கிறோமா?
 • நிபுணர்கள்: அவர்கள் பிரதிநிதிகளா? நாம் நம்பியிருக்கும் நிபுணர் தற்போதையவர் மற்றும் நம்பகமானவர் என்பதை உறுதி செய்துள்ளோமா?

சோதனைப் பொறிமுறை  எண்.  3: உண்மைச் சரிபார்ப்பு

நாம் வரிக்கு வரி உண்மைச் சரிபார்ப்பைச் செய்வதற்கு முன், புலனாய்வின் கருப்பொருளாக இருக்கும் நபரிடமிருந்து வரும் குற்றச்சாட்டுகளுக்கான பதில்களைக் கொண்டிருக்க வேண்டும். இந்த நபருக்கு பொதுவாக மற்ற எவரையும் விட (ஊடகவியலாளர் உட்பட) நடைபெற்ற தவறான செயல் பற்றி அதிகம் தெரிந்திருக்கும்.

நீங்கள் மோசமான செய்திகளை வழங்கினாலும் கூட, உங்களுக்கும் புலனாய்வுக்கு  உட்பட்ட விஷயத்திற்கும் பொதுவான ஒரு விடயம் இருக்கலாம்: அவை வெளியிடப்பட வேண்டுமானால் உண்மைகள் சரியாக இருக்க வேண்டும். உங்கள் புலனாய்வில் தொடர்புபட்டுள்ள நபர்கள் உங்களுக்கு நேர்காணல் வழங்க மறுத்தாலும், நீங்கள் அவர்களைத் தொடர்பு கொள்ளும்போது, ​​ அது அவ்உண்மைகளுக்குப் பதிலளிக்க அவர்களுக்கு கிடைக்கும்  ஒரு நல்ல வாய்ப்பாக அமையும்.

குற்றச்சாட்டுகள் பற்றிய விரிவான தகவல்களை புலனாய்வின் பிரதான கருப்பொருளாக இருப்பவரிடம்  வழங்குவது மூலம்  உங்கள் தரப்பிலிருந்து வெளிப்படைத்தன்மையைக் கோருகிறது.  சில சந்தர்ப்பங்களில், கதையில் குறிப்பிடப்படும் சில வார்த்தைகளைப் பற்றி அவர்களுக்கு முன்னமே  தெரிவிக்க வேண்டியது அவசியம். ஆனால் ஆதாரங்களை அடையாளப்படுத்த வழிவகுக்கும் விவரங்களை ஒருபோதும் வெளிப்படுத்த வேண்டாம்.

உண்மையைச் சரிபார்க்கும் “உண்மையான நிபுணர்”  மற்றும் கதையின் பிரதான கருப்பொருள்  தவிர, ஏனைய பிற நன்மைகளும் உள்ளன: இதன்போது விளக்கங்களை ஆய்வு செய்ய உங்களுக்கு நேரம் கிடைப்பதுடன் கதையில் உள்ள ஓட்டைகளை நிரப்ப புதிய தகவல்களைப் பெறுவீர்கள். மேலும், வெளியீட்டிற்கு முன் கதை தொடர்பான எதிர்வினைகளை எதிர்கொள்வது, வெளியீட்டிற்கு பின்னர் பெறுவதை விட விரும்பத்தக்கது.

நிச்சயமாக, இந்த மாதிரியான வெளிப்படையான முறையை நீங்கள் பயன்படுத்த முடியாத பல புலனாய்வுகள் உள்ளன. வன்முறைக் குழுக்கள் அல்லது சர்வாதிகார அரசாங்கங்களைக் கையாள்வது தொடர்பில்  மற்றொரு அணுகுமுறையைக் கோருகின்றதை GIJN தளத்தில் வெளியான Tips for the No Surprises Letter என்ற தலைப்பிலான கட்டுரையில் விவரிக்கப்பட்டுள்ளது.  இருப்பினும், ஆபத்தான நபர்களைக் கையாள்வது, உண்மைத்தரவுகள் துல்லியமாகவும் நியாயமாகவும் இருப்பதற்கான தேவையைக் குறைக்காது. மாறாக, அது இன்னும்  மக முக்கியமானதாக இருக்கலாம்.

இப்போது வரிக்கு வரி செயல்முறைக்கு.

இந்த கொள்கை எளிமையானது. கதையில் உள்ள ஒவ்வொரு சரிபார்க்கக்கூடிய தகவலும் ஒரு மூலத்தைக் கொண்டிருக்க வேண்டும். இந்த உண்மைச் சரிபார்ப்பு மாற்றுக் கருத்தை மையப் பாத்திரத்தில் வைத்திருக்கும் வண்ணம் கதை வெளியிடுவதற்கு முன் போதுமான நேரகாலத்துடன் செய்யப்பட வேண்டும்.

இச்செயல்முறை பயனுள்ளதாக இருக்க, ஆய்வுக்குரிய ஆவணங்கள் உடனடியாக கிடைக்க வேண்டும். கதை வரைபின்  ஒவ்வொரு பக்கம் அல்லது பிரிவின் முடிவிலும் உள்ள இணைப்புகளைக் கொண்ட அடிக்குறிப்புகள் ஆவணங்களைக் கண்காணிப்பதை எளிதாக்குகின்றன.

உண்மைச் சரிபார்ப்புக்கு முழுக கவனமும் தேவை, ஆனால் நீண்ட வேலை நாளொன்றில் மிகக்கவனமாக  இருப்பது கடினமாக இருக்கும். எனவே, கதையின் மைய மற்றும் மிகவும் சிக்கலான  பிரச்சனைகளுடன்  தொடங்குவது புத்திசாலித்தனமாக இருக்கும். கதையில் எப்பொழுதும் கேள்விக்குட்படுத்தக்கூடிய எதோ ஒன்று இருக்கிறது. எனவே, விவரங்களைக் கண்டு பிழையாக வழிநடத்தப்பட முன், நீங்கள் அத்தியாவசிய விஷயங்களில் கூடிய கவனம் செலுத்த வேண்டும்.

இதனைக் கேட்க மறக்காதீர்கள்: எல்லா முடிவுகளும் சிறந்த அடிப்படையைக் கொண்டுள்ளதா? அவை மேலும் கூர்மைப்படுத்தப்படலாம் அல்லது மென்மையாக்கப்பட வேண்டும்.

கதை சிக்கலானதாக இருந்தால், உண்மைச் சரிபார்ப்பு தொடங்கும் முன், கதை தொடர்பான முடிவு எவ்வாறு எட்டப்பட்டது என்பதற்கான விளக்கத்துடன் ஆய்வு சார் ஆவணங்களை ஊடகவியலாளர்  ஒப்படைக்க வேண்டும்.  சில நேரங்களில், இது  செய்வதை விட சொல்வது எளிதாகச் இருக்கலாம். எடுத்துக்காட்டாக, பெரிய தரவுத்தொகுப்புகள் அல்லது நிதி அறிக்கைகளின் புள்ளிவிவரங்கள் போன்ற சிக்கலான ஆராய்ச்சி ஆவணங்களின் அடிப்படையில் கண்டுபிடிப்புகள் இருக்கலாம்.

அத்தகைய சந்தர்ப்பங்களில், அழைக்கப்பட்ட நிபுணருடன் பூர்வாங்க, வரிக்கு வரி சரி பார்க்கும் அமர்வு தேவைப்படலாம். தேவைப்பட்டால், உண்மைகளை இருமுறை சரிபார்க்க அல்லது ஆய்வு  முறையை மதிப்பாய்வு செய்ய மூன்றாம் தரப்பு உதவியைப் பெற முடியும்.

படம்: Unsplash

பதிலளிக்க வேண்டிய கூடுதல் கேள்விகள்:

 • கதை நியாயமானதுடன் அது எதிர் வாதங்களுக்கு தீர்வு காணுமா?
 • அனைத்து குற்றச்சாட்டுகளுக்கும் மிகவும் பொருத்தமான பதில்களுடன் உங்களிடம் முழுமையான பதில் உள்ளதா? நேர்காணலின் முழுப் பிரதியையும் சரிபார்ப்பது அவசியமாக இருக்கலாம்.
 • விசாரணையின் பிரதான கருப்பொருள் பற்றிய அனைத்து எதிர்மறை விவரங்களும் அவசியமா? பொருத்தமான விடயங்களில் தணிக்கை செய்யும் நிலைப்பாடுகளுக்கு நீங்கள் தயாராக உள்ளீர்களா?

வரிக்கு வரி செம்மைப்படுத்தும்போது (editing) செய்யும் போது, எல்லா உண்மைகளையும் வெளித்தோற்றத்தில் பாதிப்பில்லாதவையும் கூட சரி பார்க்க வேண்டியது அவசியமாகும்.  ஒரு சிறிய தவறு உங்களை இழிவுபடுத்த விரும்புபவர்களால் பயன்படுத்தப்படலாம். “அது உண்மை என்று எனக்குத் தெரியும்” என்று சொல்வது  இந்த விதிவிலக்கை நியாயப்படுத்தாது.

இறுதியாக, பெயர்கள், தலைப்புகள், தேதிகள், புள்ளிவிவரங்கள் மற்றும் சரிபார்க்கக்கூடிய அனைத்தையும் மீண்டும் சரிபார்க்கவும். அதில் மேற்கோள்கள் அடங்கும் – நேர்காணல் செய்பவர் தவறாக இருந்தால், அதைப் பற்றி நீங்கள் தெரிந்து கொண்டிருக்க  வேண்டும்.

10 உண்மைச் சரிபார்ப்பு உதவிக்குறிப்புகள்

 1. அசல் ஆவணங்களைப் பயன்படுத்தவும்: முதல் அசல்  ஆவணங்களைப் பெற முடியும் போது, ​​வேறு எதையும் ஏற்றுக்கொள்ளக்கூடாது.
 2. மேற்கோள் காட்டுவதற்கு முன் சரிபார்க்கவும்: பிற ஊடகங்கள் வெளியிடும் உண்மைகள் எவ்வளவு நம்பகமானதாகத் தோன்றினாலும் அவற்றை நம்ப வேண்டாம்.
 3. எண்களுடன் துல்லியமாக இருங்கள்: மிகைப்படுத்துவதற்கான தூண்டுதலில் இருந்து  விலகி இருங்கள். எடுத்துக்காட்டாக, 12 பேர் பாதிக்கப்பட்டிருந்தால், “பல” (தெளிவற்ற மதிப்பீடு) என்று குறிப்பிடுவதற்குப் பதிலாக அந்த எண்ணை (உண்மை) தெரிவிக்க வேண்டும்.
 4.  உங்களுக்கும் பாதிக்கப்பட்டவர்களுக்கும் இடையேயான தூரத்தை கடைப்பிடியுங்கள்: பாதிக்கப்பட்டவர்களை நீங்கள் எவ்வளவு நம்புகிறீர்கள் என்பது முக்கியமல்ல, சரிபார்க்கப்படாமல்  அவர்கள் சொல்வதை உண்மையாக எடுத்துக்கொள்ளாதீர்கள். எடுத்துக்காட்டாக பின்வரும் கூற்றை  ஒப்பிடவும், ” அவரது நினைவில் எதுவும் இல்லை” (சரிபார்ப்பது கடினம்) “அவரது நினைவில் எதுவும் இல்லை என்று கூறுகிறார்” (அவரது அறிக்கை ஒரு உண்மை).
 5. மதிப்பார்ந்த  தீர்ப்புகளை நிரூபிக்க கடினமாக இருப்பதைத் தவிர்க்கவும்: முடிவுகளை ஒரு படி அதிகமாக எடுத்துக்கொள்வது தேவையற்ற சிக்கல்களை உருவாக்கலாம். எடுத்துக்காட்டாக, முதலாளி “பாதுகாப்பு விதிகளைப் புறக்கணித்தார்” என்று நீங்கள் முடிவு செய்தால், அவர்கள் வேண்டுமென்றே அவ்வாறு செய்தார்கள் என்பதை நீங்கள் நிரூபிக்க வேண்டும். ஆனால், மறுபுறம், முதலாளி “பாதுகாப்பு விதிகளைப் பின்பற்றவில்லை” என்பது ஒரு உண்மையைக் கூறுகிறது.
 6. குறைபாடுகளுடன் வெளிப்படையாக இருங்கள்: உங்களுக்குத் தெரியாத விடயங்களைப் பற்றி பொதுமக்களிடம் வெளிப்படையாக இருங்கள். உங்களால் நிரூபிக்க முடியாத விடயம்  தொடர்பில் தூண்டல்களை வெளியிடுவது பற்றி கவனமாக இருக்கவும் . வெளிப்படைத்தன்மை உங்கள் நம்பகத்தன்மையை பலப்படுத்துகிறது, மாறாக குறைபாடுகள் பற்றி நீங்கள் வெளிப்படையாக இருக்க தவறும்போது அல்ல.
 7. அடையாளம் காணப்படும் விவரங்களைத் தவிர்க்கவும்: கிராபிக்ஸ், புகைப்படங்கள் மற்றும் வீடியோ உள்ளடக்கங்களில்  தேவையற்ற தனிப்பட்ட தகவல்கள் அகற்றப்பட வேண்டும்: ஆவணங்கள், உரிமத் தகடுகள், தெரு எண்கள் மற்றும் தபால் பெட்டியில் உள்ள பெயர்கள் மற்றும் பிற விவரங்கள்.
 8. சட்டம்- சட்டமாக (frame-by-frame )பகுப்பாய்வு செய்யுங்கள்: படம் உண்மையானதா அல்லது போலியானதா? புகைப்படங்கள் கதை வரைபில்   இல்லாததால், அவை உண்மைச் சரிபார்ப்பில் பெரும்பாலும் கவனிக்கப்படுவதில்லை. இருப்பினும், Google Images, Facebook மற்றும் பிற தளங்கள் படங்களைக் கண்டறிவதை எளிதாக்குகின்றன – சில நேரங்களில் மிகவும் எளிதாக இருக்கும். தேவைப்படும்போது, ​​படத்தின் தலைகீழ் தேடல்  மற்றும் பிற கருவிகளைப் பயன்படுத்தி, படத்தின் மூலத்தை  சரிபார்க்கவும். (இந்த தலைப்பைப் பற்றி மேலும் அறிய, படங்களைச் சரிபார்ப்பது தொடர்பில்  GIJN இன் நான்கு விரைவான வழிகள் பற்றிய கட்டுரையை (Four Quick Ways to Verify Images) படிக்கவும்.)
 9. சுயபரிசோதனையுடன் முடிக்கவும்: ஊடகவியலாளர்கள் இன்னும் ஏதேனும் விடயங்கள் தொடர்பில் கவலைப்படுகிறார்களா? இன்னும் சந்தேகங்கள் இருக்கிறதா? இருந்தால் பிறகு, தயவு செய்து பேசுங்கள், ஏனெனில் இதுவே இறுதி வாய்ப்பு!
 10. மாற்றங்கள் செயல்படுத்தப்படுவதை உறுதிசெய்யவும்: செய்தி வரைபில்  மேற்கொள்ளப்பட்ட  அனைத்து மாற்றங்களும், பெயர்களின் திருத்தப்பட்ட எழுத்துப்பிழை போன்றவை, கிராபிக்ஸ் மற்றும் வெளியீட்டின் பிற பகுதிகளுக்குப் பயன்படுத்தப்பட வேண்டும். எனவே, இது தொடர்பில் ஒரு பின்தொடர்தல் நடைமுறை அவசியம்.

இந்த செயல்முறை தவிர்க்க முடியாமல் தவறுகளை வெளிப்படுத்தும். அது கதையின் நம்பகத்தன்மையையும் ஒரு புலனாய்வு ஊடகவியலாளராக  உங்களின் நம்பகத்தன்மையையும் பாதிக்கும்.

வரிக்கு வரி செம்மைப்படுத்துவதன் மூலம் உண்மைத்தரவுகள் பற்றிய பிழைகளைப் பற்றிக் கவலைப்பட்டு, நள்ளிரவில் விழித்திருக்க தேவையில்லை என்பதால், இதன் உடனடி வெகுமதியை நீங்கள் பெற்றுக்கொள்ளக் கூடியதாக இருக்கும். அதற்குப் பதிலாக, தவறு நடந்திருப்பதற்கான  சாத்தியத்தை குறைக்க உங்களால் முடிந்ததைச் செய்துள்ளீர்கள் என்ற நம்பிக்கையில் நீங்கள் நன்றாக தூங்கலாம்.

நில்ஸ் ஹான்சன் (Nils Hanson) ஒரு விருது பெற்ற சுதந்திர புலனாய்வு ஆசிரியர் ஆவார். 2018 வரை 14 ஆண்டுகளாக, அவர் மிஷன் இன்வெஸ்டிகேட்டின் (Mission Investigate) நிர்வாக தயாரிப்பாளராக இருந்தார். அவர் 30 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவமுள்ளவர் என்பதோடு  சுமார் 500 புலனாய்வுகளை  அறிக்கையிட்டுள்ளார். கடைசி இரண்டு ஆண்டுகளில், அவரது தலைமையின்கீழ்  இந்த திட்டம் பத்து சர்வதேச விருதுகளை வென்றது. புலனாய்வு இதழியல் பற்றிய அவரது கையேடு ஸ்வீடனில் முக்கிய பாடமாக கருதப்படுகின்றது.

மூலம்

This story was originally published by the Global Investigative Journalism Network (GIJN)

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments