முஸ்லிம் இளைஞர்கள் ஆயுதம் தூக்குவதாக கூறிய, இராஜினாமா செய்த நீதியமைச்சர்?

0
140

சிங்களவர்களை எச்சரிக்கும் வகையில் ஜனாஸாக்களை அடக்கம் செய்ய அனுமதிக்காவிட்டால் ‘முஸ்லிம் இளைஞர்கள் ஆயுதம் தூக்குவார்கள்’ என்று நீதியமைச்சர் அலி சப்ரி சொல்லியிருப்பதாக ஒரு சில பதிவுகள் சமூக ஊடகங்களில் கடந்த மாதத்தின் இறுதிப்பகுதியில் உலா வந்தன. மேலும், ‘முஸ்லிம் நீதியமைச்சரின் சுயரூபம் வெளிவந்திருக்கிறது’ ‘சிங்களவர்கள் இவரை புறக்கணிக்க வேண்டும்’ என்ற இனவாதத்தை தூண்டும் பின்னூட்டங்களும் அவற்றில் தெரிவிக்கப்பட்டிருந்தன.

ஞாயிற்றுக் கிழமைகளில் வெளிவரும் ‘இரிதா மவ்ரட’ என்ற பத்திரிகை இதே விடயத்தை கடந்த டிசம்பர் 20 அன்று தனது பத்திரிகையின் முன்பக்கத்தில் அறிக்கையிட்டிருந்தது. ‘நிலைமை அபாயகரம் : இனவாத முஸ்லிம் இளைஞர்கள் தோற்றம்’ என்று தலைப்பிட்ட அந்த செய்தியின் உப தலைப்பில் ‘நீதியமைச்சர் எச்சரிக்கை’ என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. ஜனாஸாக்களை எரிக்க அனுமதிக்காவிட்டால் முஸ்லிம் இளைஞர்கள் இவ்வாறு அடிப்படைவாதத்தை கையில் எடுப்பார்கள் என்று எச்சரிக்கும் வகையில் நீதியமைச்சர் கருத்து வெளியிட்டுள்ளதாகவே இந்த செய்தியின் தலைப்பு அமைந்திருந்தது.

எனினும் இதற்கு மாற்றமாக அந்தப்பத்திரிகையின் செய்தியில் பின்வருமாறு குறிப்பிடப்பட்டுள்ளது “இது மிகவும் ஆபத்தான நிலைமையாகும். முஸ்லிம்களை பிரதிநிதித்துவம் செய்யும் அரசியல்வாதிகளுக்கு இந்த சிறிய விடயத்திற்கு எதிரான நடவடிக்கைகளை எடுக்க முடியாது என்பது புரியுமாயின் அவர்கள் அமைதியாக இருக்க மாட்டார்கள். குரல் கொடுப்பவர்கள் ஒன்றிணைந்து இதற்கு எதிராக ஏதாவது முடிவு செய்தால் அது பெரிய பிரச்சினையாக இருக்கும். அப்படி எதுவும் நடக்கக்கூடாது என்று நாங்கள் பிரார்திப்போம்” என எழுதப்பட்டிருந்தது.

ஈ-பேப்பர் – https://bit.ly/2Y2JRhB

இரிதா மவ்ரட பத்திரிகைச் செய்தியை மேற்கோல்காட்டி சமூக ஊடகங்களில் நீதியமைச்சரின் அறிவு மற்றும் சிந்தனை என்பவற்றை கேள்விக்குட்படுத்தும் வகையில் பதிவுகள் போடப்பட்டிருந்தன. தனிநபர் தாக்குதல் என்பதைத் தாண்டி இனங்களுக்கிடையில் பிரிவினையை ஏற்படுத்தி வன்முறையைத் தூண்டும் வகையிலான பின்னூட்டங்கள் அந்தப்பதிவுகளுக்கு போடப்பட்டிருந்தன. இவ்வாறு ‘ஜனபதிட கியமு’ என்ற சிங்கள மொழி பேஸ்புக் பக்கம் ஒன்றில் இந்தப் பத்திரிகைச் செய்தியை மேற்கோள்காட்டி ‘நீதியமைச்சரின் மூலையைப் பரீர்சித்துப் பார்க்க வேண்டும்’ என்றதொரு பதிவு போடப்பட்டிருந்தது. 200 பேஸ்புக் பவனையாளர்களால் பகிரப்படிட்டிருந்த இந்தப்பதிவு பதவிடுவதற்கு ஊடக தர்மம் இடம் கொடுக்காத பின்னூட்டங்களால் அழுக்குப்படிந்திருந்தது.

இணைப்பு – https://bit.ly/3pboBSP
இணைப்பு – https://bit.ly/3pboBSP

இந்தப் பின்னூட்டங்கள் அனைத்தும் முஸ்லிம்களுக்கு எதிராக போடப்பட்டிருந்தன. நீதியமைச்சர் முஸ்லிம் ஒருவர் என்றபோதிலும் அவரை சிங்களவர்கள் மனமுவந்து அமைச்சராக ஏற்றுக்கொண்டதாகவும் இப்போது அவரின் உண்மையான சுயரூபம் வெளிவந்திருப்பதாகவும் பலர் கருத்து வெளியிட்டிருந்தனர். இந்தப்பின்னூட்டங்களின் ஊடாக முஸ்லிம்கள் அனைவரும் இனவாதிகள் அல்லது தீவிரவாதத்தை கையில் எடுக்கக்கூடியவர்கள் என்ற விம்பத்தை தோற்றுவிப்பதற்கான சூழலை உருவாக்க பலர் முனைந்தனர்.

இதேபோன்று “கொரோனா வைரஸ் தாக்கம் ஏற்பட்டு உயிரிழக்கும் முஸ்லிம்களின் உடல்களை நல்லடக்கம் செய்வதற்கு அனுமதி வழங்காவிட்டால் முஸ்லிம் இளைஞர்கள் ஆயுதம் தூக்குவார்கள்”என்று நீதியமைச்சர் அலி சப்ரி தெரிவித்ததாக கூறி வட்ஸப் வழியாக திரை நிழற்பிரதி (Screen Shot) புகைப்படம் ஒன்று பரவி வருகின்றது. குறியீட்டு வசனங்களை பயன்படுத்தி இந்தப் புகைப்படத்தை பேஸ்புக்கில் தேடியபோது தனிநபர் ஒருவர் பதிவிட்டிருந்ததை காண முடிந்தது.

இணைப்பு – https://bit.ly/3pbLci2

இந்தப் புகைப்படத்தில் குறித்த தகவலுடன் “அச்சுறுத்தலா? பயமுறுத்தலா? அல்லது மறைமுகமாக செய்யும் சதியா? சிங்களவர்களைத் தூண்டி தங்கள் காரியத்தை சாதிக்கும் முயற்சியா?” என்ற இனவாதத்தை தூண்டும் வாசகங்களும் பதியப்பட்டிருந்தன. இவ்வாறு சமூக ஊடகங்களின் பல்வேறு இடங்களில் நீதியமைச்சர் சொன்னதாக மேற்கூறிய கருத்தை மேற்கோள்காட்டி இனவாதத்தை தூண்டும் பின்னூட்டங்கள் பதிவு செய்யப்படுகின்றன.

இணைப்பு –https://bit.ly/3pbLci2

செய்தியின் பின்னணி

இணைப்பு – https://bit.ly/3iBg0Xf

ஹரி டிவி என்ற யுடியுப் அலைவரிசையில் ஒலிபரப்பாகும் Stand With Lahiru என்ற நிகழ்ச்சிக்கு நீதியமைச்சர் அலி சப்ரி நேர்காணல் ஒன்றை வழங்கிய பின்னரே இந்த இனவாத சிந்தனைகள் பரவியுள்ளன. மேலும் இந்த நேர்காணல் ராவய எனும் சிங்களப் பத்திரிகையில் எழுத்து வடிவில் பிரசுரிக்கப்பட்டிருந்தது. இந்த நேர்காணலில்தான் “கொரோனா வைரஸ் தாக்கம் ஏற்பட்டு உயிரிழக்கும் முஸ்லிம்களின் உடல்களை நல்லடக்கம் செய்வதற்கு அனுமதி வழங்காவிட்டால் முஸ்லிம் இளைஞர்கள் ஆயுதம் தூக்குவார்கள்”என்ற சர்ச்சைக்குறிய கருத்தை நீதியமைச்சர் தெரிவித்ததாக சமூக ஊடகங்களில் கருத்து வெளியிடப்படுகின்றது. மேலும் இந்த கருத்துக்களுக்கு நீதியமைச்சர் அலி சப்ரி தனது பேஸ்புக் ஊடாக மறுப்பு தெரிவித்திருக்கிறார்.

இணைப்பு – https://bit.ly/2Y1OWqy

நீதியமைச்சர் தெரிவித்ததாக பகிரப்படுகின்ற இந்த கருத்துக்களின் உண்மைத் தன்மையை ஆராய, நீதியமைச்சர் ஹரி தொலைக்காட்சிக்கு வழங்கிய நேர்காணலையும் அதன் எழுத்து வடிவ வெளியீடான ராவய பத்திரிகையின் நேர்காணலையும் நாங்கள் ஆய்வுக்கு உட்படுத்தினோம். ஆய்வுகளின்படி “இலங்கையில் கொரோனாவால் மரணிக்கும் உடல்களை கட்டாய தகனம் செய்ய வேண்டும் என்ற அரசாங்கத்தின் நிலைப்பாட்டினால் இலங்கை முஸ்லிம்கள் விரக்தி அடைந்துள்ளதால் இந்த சந்தர்ப்பத்தை தீவிரவாத குழுக்கள் சாதகமாக பயன்படுத்திக் கொண்டு செயற்படலாம், இதனால் முஸ்லிம் இளைஞர்கள் அவர்களால் ஈர்க்கப்படுவார்கள்” என்றுதான் நீதியமைச்சர் குறித்த நேர்காணலில் தெரிவித்தார். இதே விடயம் எழுத்து வடிவில் ராவய பத்திரிகையில் வெளியாகியிருக்கிறது.

ராவய பத்திரிகையில் வெளியான நேர்காணல் – https://bit.ly/2MdoSpZ

எனவே முஸ்லிம் இளைஞர்கள் ஆயுதம் தூக்குவார்கள் என்றும் நீதியமைச்சர் எச்சரிப்பு செய்ததாக வெளிவந்த செய்திகளில் எந்தவிதமான உண்மையும் இல்லை. இது திரிபுபடுத்தப்பட்ட போலியானதொரு தகவல் என்பதை மேற்கூறிய விடயங்களின் மூலம் புரிந்துகொள்ள முடிகின்றது.

நீதியமைச்சர் இராஜினாமா?

இந்நிலையில் டிசம்பர் மாத இறுதிப்பகுதியில் நீதியமைச்சர் அலி சப்ரி தனது நீதியமைச்சர் பதவியையும் பாராளுமன்ற உறுப்பினர் பதவியையும் இராஜினாமா செய்ய ஜனாதிபதியிடம் கடிதம் ஒன்றை சமர்பித்துள்ளதாக சமூக ஊடகங்களில் செய்திகள் வெளியாகின. லங்கா நிவ்ஸ் வெப் என்ற ஆங்கில வலைதளம் ஒன்றில் ‘நீதியமைச்சர் அலி சப்ரி இராஜினாமா – ஜனாதிபதி கடிதத்தை ஏற்க மறுக்கிறார்’ என்று தலைப்பிடப்பட்ட செய்தியொன்றை காண முடிந்தது. குறித்த செய்தியில், கொவிட் -19 தொற்று ஏற்பட்டு இறந்தவர்களை அடக்கம் செய்வது தொடர்பான சர்ச்சையை அடுத்து, அரசாங்கத்தை ஆதரிக்கும் குழுவினர் அடக்கம் செய்யப்படக்கூடாது என்ற முடிவில் உறுதியாக இருப்பதால் நீதியமைச்சர் தனது பதவியை இராஜினாமா செய்ய முடிவு செய்திருப்பதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

இணைப்பு – https://bit.ly/2Y2XBsX

“இலங்கையின் முஸ்லிம் சமூகத்திற்கு எதிராக வளர்ந்து வரும் பாகுபாட்டிற்கு ஒரு முஸ்லிம் பிரஜையாக பதிலடி கொடுக்கும் வகையில் நீதியமைச்சர் அலி சப்ரி தனது அமைச்சுப் பதவியையும் பாராளுமன்ற உறுப்பினர் பதவியையும் இராஜினாமா செய்ய முடிவெடுத்துள்ளார்,” என அதில் சித்திரிக்கப்பட்டிருக்கின்றது. சமூக ஊடகங்களில் இந்த விடயம் காட்டுத் தீயாக பரவியது.

இணைப்பு – https://bit.ly/2YiLV5z

இந்த செய்தியை சமூக வலைதளங்களில் பகிர்ந்தவர்கள் இதனை எதிர்த்தும் ஆதரித்தும் கருத்துக்களை வெளியிட்டு வந்தனர். ஒரு சாரார் அமைச்சர் இராஜினாமா செய்வதாக எண்ணி மகிழ்ச்சியடைந்தும் இன்னொரு சாரார் துக்கமைடைந்தும் பதிவுகளை பகிர்ந்து கொண்டிருந்த நிலையில் “எனக்கே தெரியாத எனது இராஜினாமா! ஐயோ, எமது நாட்டு ஊடகங்களின் நிலைமை!” என்று நையாண்டியான பதிவொன்றை தனது பேஸ்புக்கில் அமைச்சர் பதிவிட்டிருந்தார். இதிலிருந்து குறித்த வலைதளத்தில் வெளியான செய்தி போலியானது என்பது புலனாகின்றது.

இணைப்பு – https://bit.ly/2MiwLKt

மேலும் கொவிட்- 19 தொற்றினால் இறந்தவர்களின் உடல்களை பலவந்தமாக தகனம் செய்வதை ஆதரிக்கும் வகையிலான பக்கசார்புடைய செய்தியாக இந்த செய்தி இருக்கின்றது. இதற்கு சான்றாக ‘உடல்களை தகனம் செய்வது தொடர்பான உயர் நீதிமன்றத்தை மதிக்குமாறு அரசாங்கத்தை ஆதரிக்கும் சக்திகளால் இந்த சர்ச்சை வளர்ந்துள்ளது’ என்ற வார்த்தைப் பிரயோகத்தை குறிப்பிடலாம். மேலும் அலி சப்ரியின் அண்மைய நடவடிக்கைகள் முஸ்லிம் சமூகத்தின் இருப்புக்காக செயற்படுகின்றது என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

உடல்களை பலவந்தமாக எரிப்பதற்கு ஆதரவு தெரிவிப்பவர்களினதும் நீதியமைச்சர் அலி சப்ரியின் மீது அதிருப்தியுடையவர்களினதும் செயற்பாடாகவே இந்த போலிச்செய்தி அமைந்திருக்கின்றது என்பதை மேற்குறிப்பிட்ட விடயங்களின் ஊடாக புரிந்துகொள்ள முடிகின்றது.