Wednesday, April 24, 2024
HomeStorytellingGeneralதேர்தல் பிரச்சாரத்தில் புறக்கணிக்கப்பட்ட சுகாதார வழிகாட்டல்; சட்ட நடவடிக்கைக்கு தயாரகும் சுகாதாரத் துறை

தேர்தல் பிரச்சாரத்தில் புறக்கணிக்கப்பட்ட சுகாதார வழிகாட்டல்; சட்ட நடவடிக்கைக்கு தயாரகும் சுகாதாரத் துறை

ஏனைய தேர்தல்களைப் போலல்லாமல், நாளை (5) நடைபெறவுள்ள பாராளுமன்ற தேர்தல் மக்கள் விடுதலை முன்னணி தலைமையிலான தேசிய மக்கள் சக்திக்கு பாரிய சவாலாக மாறியுள்ளது.

நாட்டில் கொரோனா வைரஸ் பரவல் காரணமாக அரசாங்கத்தினால் வெளியிடப்பட்டுள்ள சுகாதர வழிகாட்டல்களே இந்த சவாலிற்கான பிரதான காரணமாகும். கடந்த ஏப்ரல் 25ஆம் நடைபெற தயாராக இந்த தேர்தல், ஏற்கனவே இரணடு தடவைகள் பிற்போடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

இந்த தேர்தலுக்கான தேசிய மக்கள் சக்தியின் கூட்டங்களில் பங்குபற்றியவர்களின் பெயர், முகவரி, தேசிய அடையாள அட்டை இலக்கம், தொலைபேசி இலக்கம் போன்ற தகவல் சேகரிக்கப்பட்டன.

இந்த தகவல்களை சேகரிப்பதற்காக தொற்றுநீக்கிய பேனா மற்றும் புத்தகங்கள் அக்கட்சியினரால் பேணப்பட்டன. இந்த தகவல்கள் அனைத்தும் தற்போது கணணி மயப்படுத்தப்பட்டுள்ளன.

அதுபோன்றே தொற்றுநீக்கி கொண்டு கைகளினை கழுவிய பின்னர் கூட்ட மண்டபத்திற்குள்  அனுமதிக்கப்பட்டனர். கூட்ட மண்டபத்தில் ஒரு மீற்றர் சமூக இடைவெளி கட்டாயம் பேணப்பட்டது.

கடந்த தேர்தல்களின் போது பாதுகாப்பு காரணங்களிற்கு முக்கியத்தும் வழங்கப்பட்டது. இதனால் பிரச்சாரக் கூடத்திற்கான அனுமதிகள் பொலிஸாரிடமிருந்தே பெறப்பட்டன.

எனினும், இந்த தேர்தலில் சுகாதாரத்திற்கே அதிக முக்கியத்துவம் வழங்கப்படுகின்றன. இதனால் பொதுச் சுகாதார பிரிசோதகர்களின் ஊடாக பிரதேச சுகாதார வைத்திய அதிகாரியிடமிருந்து பிரச்சாரக் கூட்டத்திற்கான அனுமதி பெறப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

“இதன் காரணமாக, தேர்தல் பிரச்சாரங்களிற்காக அதிக நிதி செலவிடப்பட்டதாக” தேசிய மக்கள் சக்தியின் திருகோணமலை மாவட்ட முதன்மை வேட்பாளரான அருண் ஹேமச்சந்திர தெரிவித்தார்.

“கடந்த தேர்தல்களை விட சுமார் 40 – 45 சதவீத மேலதிக செலவு இந்த தேர்தலுக்கு ஏற்பட்டுள்ளதாக” அவர் குறிப்பிட்டார்.

எனினும், ஏனைய கட்சிகளினால் மேற்கொள்ளப்பட்ட தேர்தல் பிரச்சாரங்களின் போது இந்த சுகாதர வழிகாட்டல்கள் மீறப்பட்டமையினை அவதானிக்க முடிந்தது. குறிப்பாக, திகாமடுல்ல தேர்தல் மாவட்டத்தில் சுகாதார வழிகாட்டல்களுக்கு மாற்றமாகவே அனைத்து தேர்தல் பிரச்சாரக் கூட்டங்களும் இடம்பெற்றதை நேரடியாக காண முடிந்தது.

கொரோனா வைரஸ் தொற்றாளர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்ற நிலையிலேயே இந்த பாராளுமன்ற தேர்தல் நாளை இடம்பெறவுள்ளது. சுகாதார அமைச்சின் சுகாதார மேம்பாட்டு பணியகத்தின் தகவல்களின் பிரகாரம் இன்று (04) செவ்வாய்க்கிழமை பி.ப 4.00 மணி வரை நாட்டில் 2,828 பேர் கொரோனா வைரஸுக்கு தொற்றுக்குள்ளாகியுள்ளனர்.

இதில் 2,524 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளதுடன் 11 பேர் உயிரிழந்துள்ளனர். தற்போது 293 பேருக்கு கொரோனா வைரஸ்  தொற்றுக்குள்ளாகியுள்ள நிலையில் 69 பேர் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்த தேர்தலின் ஊடாக 196 பாராளுமன்ற உறுப்பினர்கள் தெரிவுசெய்யப்படவுள்ளனர். அதேபோன்று 29 பேர் தேசியப்பட்டியல்  ஊடாகவும் நியமிக்கப்படவுள்ளனர். எனினும், இந்த தேர்தல் பிரச்சார நடவடிக்கைகளுக்கான ஒழுங்குவதிகளை உள்ளடக்கிய வர்த்தமானி அறிவித்தலொன்று கடந்த ஜுலை 17ஆம் திகதி வெளியிடப்பட்டது.

எனினும், இந்த வழிகாட்டல்கள் அனைத்தும் மீறப்பட்ட நிலையிலேயே  தேர்தல் பிரச்சார நடவடிக்கைகள் கடந்த ஞாயிற்றுக்கிழமை (02) நள்ளிரவுடன் நிறைவடைந்ததை அவதானிக்க முடிந்தது.

திகாமடுல்ல தேர்தல் மாவட்டத்தின் பல பிரதேசங்களில் ஐக்கிய மக்கள் சக்தி, அகில இலங்கை மக்கள் காங்கிரஸ், தேசிய காங்கிரஸ், ஐக்கிய தேசிய கட்சி, இலங்கை தமிழரசு கட்சி மற்றும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன ஆகிய கட்சிகள் பல கூட்டங்களை ஏற்பாடு செய்திருந்தன.

சுமார் ஆயிரக்கணக்கானோர் கலந்துகொண்ட இந்த கூட்டங்களில் எந்தவொரு சுகாதார வழிகாட்டலும் பேணப்படாததை நேரடியாக அவதானிக்க முடிந்தது. இந்த கூட்டங்களில் கலந்துகொண்ட எவரும் மார்ஸ்க் அணியாத நிலையில் ஒரு மீற்றர் சமூக இடைவெளி என்ற சொல்லுக்கே இடம் வழங்கப்படவில்லை.

இந்த கூட்டங்களில் கலந்துகொண்டவர்களின்  பெயர், முகவரி, தேசிய அடையாள அட்டை இலக்கம் மற்றும் தொலைபேசி இலக்கம் ஆகியவற்றினை பதிவு செய்துகொள்வதற்கான எந்தவொரு நடவடிக்கையும்  ஏற்பாட்டாளர்களினால் முன்னெடுக்கப்படாமையினை நேரடியாக அவதானிக்க முடிந்தது.

அது மாத்திரமல்லாமல் கூட்டத்தில் கலந்துகொண்டவர்கள் கை கழுவுவதற்கான எந்த வசதிகளும் ஏற்படுத்தப்படவில்லை. பிரச்சார கூட்டத்தில் இரு வேட்பாளர்கள் உரையாற்றுவதற்கு இடையில் தொற்றுநீக்கிகளைக் கொண்டு மைக் சுத்தம் செய்யப்பட வேண்டும் என சுகாதர வழிகாட்டலில் குறிப்பிடப்பட்டுள்ளது. எனினும் இந்த விடயம் பின்பற்றப்படவில்லை.

இதேவேளை, ஐக்கிய மக்கள் சக்தியினை ஆதரித்து இடம்பெற்ற கூட்டங்களில் கண்டி மாவட்டத்தில் போட்டியிடும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீமும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸினை ஆதரித்து இடம்பெற்ற கூட்டங்களில் வன்னி தேர்தல் மாவட்டத்தில் போட்டியிடும் அக்கட்சியின் தலைவரான றிசாத் பதியுதீனும் கலந்துகொண்டனர். இவர்களுக்கு கட்சி ஆதரவாளர் பலர் முத்தமிட்டதுடன் பல மாலைகளையும் அணிவித்தனர்.

இவ்வாறு சுகாதர வழிகாட்டல் பேணப்பப்படாமல் கூட்டங்கள் ஏற்பாடு செய்யப்பட்டமையினால் அம்பாறை மாவட்டத்தில் கொரோனா வைரஸ் பரவலுக்கு சூழ்நிலை காணப்படுவதாக பிரதேச மக்கள் அச்சம் வெளியிட்டனர். திகாமடுல்ல தேர்தல் மாவட்டத்தில் நான்கு பேர் மாத்திரமே இன்று வரை கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகியமை முக்கிய விடயமாகும்.

எவ்வாறாயினும் சுகாதாரம் அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ள வர்த்தமானி அறிவித்தலில் குறிப்பிடப்பட்டுள்ள  ஒழுங்குவிதிகளை அமுல்படுத்துவது நடைமுறைச் சாத்தியமற்றது என அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் திகாமடுல்ல மாவட்ட முதன்மை வேட்பாளரான சட்ட முதுமானி வை.எல்.எஸ்.ஹமீட் தெரிவித்தார்.

“எமது மாவட்டத்தில் தேர்தல் பிரச்சாரக் கூட்டங்கள் திறந்த வெளிகளில் இடம்பெறுவதே வழமையாகும். இதன்போது கூட்டத்திற்கு யார் வருகிறார், கூட்டத்திலிருந்து யார் வெளியேறுகின்றார் என்பது தொடர்பான ஆவணங்களை பேணுவது மிகக் கடினமாகும்” என அவர் குறிப்பிட்டார்.

“ஒழுங்குவிதிகளை மீறுவோருக்கு எதிராக எடுக்கப்படும் சட்ட நடவடிக்கைகள் குறித்து இந்த ஒழுங்குவிதியில் தெளிவாகக் குறிப்பிடப்படவில்லை. இதனால், சுற்றுநிரூபம் போன்றதொன்றே இதுவாகும்” என அவர் மேலும் கூறினார்.

இதேவேளை, கிழக்கு மாகாணத்திலுள்ள அனைத்து வேட்பாளர்களுக்கும் இந்த வர்த்தமானி அறிவித்தல் தொடர்பில் விசேட விழிப்புணர்வு வழங்கப்பட்டதாக மாகாண சுகாதார பணிப்பாளர் ஏ.லதாகரன் தெரிவித்தார்.

“எனினும் கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் பணிமனைக்குட்பட்ட பிரதேசத்தில் மாத்திரம் இந்த ஒழுங்குவிதிகளை மீறும் வகையிலான பிரச்சாரக் கூட்டங்கள் இடம்பெற்றதாக தனது கவனத்திற்கு கொண்டுவரப்பட்டுள்ளது” என அவர் மேலும் குறிப்பிட்டார்.

கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் பணிமனைக்குட்பட்ட பிரதேசங்களில் கடந்த ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற தேர்தல் பிரச்சார கூட்டங்களில் சுகாதார வழிகாட்டல்களும் எதுவும் பேணப்படவில்லை என அகில இங்கை பொதுச் சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் கல்முனை கிளையின் தலைவரான ஏ.எல்.எம்.ஜெரீன் தெரிவித்தார்.

“இதனால் கூட்டத்தில் கலந்துகொண்ட வேட்பாளர்களுக்கா அல்லது பொதுமக்களுக்கா அல்லது கூட்ட ஏற்பாட்டாளர்களுக்கா சட்ட நடவடிக்கை எடுப்பது என தொடர்பில் தீர்மானமொன்றினை எடுக்க முடியாத நிலையிலுள்ளதாக” அவர் குறிப்பிட்டார்.  

“எவ்வாறாயினும் தேர்தல் நிறைவடைந்த பின்னர் இது தொடர்பில்; பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் மற்றும் பிரதேச சுகாதார அதிகாரிகளுடன் கலந்துரையாடி இறுதி முடிவெடுக்கப்படும்” என பொதுச் சுகாதார பரிசோதகர் ஜெரீன் மேலும் கூறினார்.

கடந்த மார்ச் 2ஆம் திகதி முதல் ஓகஸ்ட் 1ஆம் திகதி வரையான காலப் பகுதியில் சுகாதார வழிகாட்டல்களை மீறிய 202 தேர்தல் முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளது என தேர்தல் வன்முறைகளுக்கான கண்காணிப்பு நிலையம் (CMEV) தெரிவித்தது.

தேர்தலுக்கு 19 நாட்களுக்கு முன்னரே வெளியிடப்பட்டமை கவலையளிக்கின்றது எனவும் CMEV குறிப்பிட்டது.  சுகாதார அமைச்சினால் முதலாவதாக வெளியிடப்பட்ட வரைபு வழிகாட்டியிலும் தற்போது வெளியிடப்பட்டுள்ள வர்த்தமானியிலும் பாரிய வித்தியாசம் காணப்படுவதாக CMEV குற்றஞ்சாட்டியது.

குறிப்பாக பிரச்சாரக் கூட்டமொன்றில் 100 பேர் மாத்திரமே கலந்துகொள்ள முடியும் என வரைபில் குறிப்பிடப்பட்டிருந்தது. எனினும் வர்த்தமானியில் அது 300ஆக அதிகரிக்கப்பட்டுள்ளதுடன் கட்சி தலைவர் கலந்துகொள்ளும் கூட்ட்தில் 50 பேர் கலந்துகொள்ள முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளதாக CMEV கூறியது.

“இதனால் மேலும் சில விடயங்களை இந்த வர்த்தமானியில் உள்ளடக்குமாறு  சுகாதார அமைச்சிடம் பலமுறை கோரிக்கை விடுத்த போதில் இன்று வரை அது தொடர்பான வர்த்தமானி வெளியிடப்படவில்லை” என  CMEV மேலும் குறிப்பிட்டது.

இதேவேளை, இந்த வர்த்தமானி அறிவித்தலில் தனக்கு திருப்தியில்லை என தேர்தல் ஆணைக்குழுவின் உறுப்பினரான ரத்ன ஜீவன் ஹுல் தெரிவித்தார். “இந்த சட்டத்தினை மீறுபவர்களுக்கு எதிராக கட்டாயம் சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். எனினும் அது இதுவரை யாருக்கு எதிராகவும் மேற்கொள்ளப்படவில்லை” என அவர் மேலும் குறிப்பிட்டார்.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments