Saturday, May 25, 2024
HomeStorytellingGeneralவெறுப்புப்பேச்சு அச்சுறுத்தல்களால் வாக்களிக்கச் சிந்திக்கும் குருணாகல் முஸ்லிம்கள்

வெறுப்புப்பேச்சு அச்சுறுத்தல்களால் வாக்களிக்கச் சிந்திக்கும் குருணாகல் முஸ்லிம்கள்

தனது செல்லப்பறவைகளுக்கு தண்ணீர் வைத்துவிட்டு வழமை போல போனில் பேஸ்புக் பார்த்துக் கொண்டிருக்கும்போது அந்த வீடியோவை கண்ட மொஹமட் பாரிஸுக்கு (பெயர் மாற்றப்பட்டுள்ளது)வயது 29) இதயம் வேகமாகத் துடிக்கத் தொடங்கியது. எல்லோராலும் ஆதரிக்கப்பட்ட அரசியல் தலைவர் ஒருவர் அச்சுறுத்தும் தொனியில் வாக்குப்பெட்டிகளை எண்ணி எத்தனை முஸ்லிம்கள் தமக்கு வாக்களித்திருப்பார்கள் என்று பார்க்கப் போவதாகவும் மோதினால் சும்மா விட மாட்டோம் என்றும் மிரட்டும் அந்த வீடியோவை பாரிஸ் பார்த்தார்.

குருணாகல் மாவட்டத்தில் மாவத்தகம தேர்தல் தொகுதியில் வசிக்கும் பாரிஸ் வெளிநாட்டில் தொழில் புரிந்துவிட்டு கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக அங்கு திரும்ப முடியாமல் இருக்கும் நிலையில் மொட்டுச்சின்னத்தில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் வேட்பாளரான ஜொன்ஸ்டன் பெர்னான்டோவின் பகிரங்க மேடைப்பேச்சை பார்த்த போதே இவ்வாறு பதற்றம் அடைந்தார்.

சிங்கள, முஸ்லிம் இனங்களுக்கு இடையில் பிளவை ஏற்படுத்தி வெறுப்பைத் தூண்டி அவர்களுக்கிடையில் எதிர்வரும் தேர்தலில் தாம் வாக்களிப்பதா இல்லையா என்ற குழப்பத்தில் குருணாகல் முஸ்லிம்கள் ஊசலாடுகின்றார்கள். நல்லிணக்கத்தை விரும்பும் சிங்கள மக்களும் இந்த வெறுப்புப்பேச்சினால் அதிருப்தி அடைந்துள்ளார்கள். எவ்வாறாயினும் தேர்தல் சூழலில் வெறுப்புப் பேச்சு தவிர்க்க முடியாத ஒரு பிரச்சினையாக உள்ளது என தேர்தல் ஆய்வாளர்களும் கண்காணிப்பளர்களும் தெரிவிக்கின்றார்கள்.

“ஏற்கனவே இந்த மாவட்டம் இனவாதிகளால் சிதைந்து கிடக்கின்றது. மேடைகளில் எங்களுக்கு எதிராக இவர்கள் வெறுப்பைத் தூண்டி அச்சுறுத்துவதைப் பார்த்தால் ஓட்டு போடும் ஆசை கொஞ்சம் கூட இல்லை” என பாரிஸ் தெரிவிக்கின்றார். பாரிஸ் அரசியல் பற்றியும் தேர்தல் பற்றியும் பெரியளவில் அலட்டிக்கொள்ளாத ஒருவர் என்ற போதிலும் அனைத்து முஸ்லிம்களையும் பாதித்த அமைச்சரின்  வெறுப்பை தூண்டும் இந்த அச்சுறுத்தும் வார்த்தைகள் இவரையும் விட்டு வைக்கவில்லை

ஜுலை எட்டாம் திகதி பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ  முன்னிலையில் பொதுஜன பெரமுன கட்சிக்காக குருணாகல் நகரத்தில் புளுஸ்கை விடுதியில் இடம்பெற்ற பிரசாரக் கூட்டத்தில் பேசிய அமைச்சர் ஜொன்ஸ்டன், “நாங்கள் அடித்தால் நேரடியாக அடிப்போம். மறைமுகமாக நாங்கள் தாக்க மாட்டோம். அது நன்றாக குருணாகல் மாவட்ட மக்களுக்குத் தெரியும். எங்களோடு மோதினால் சும்மா விட மாட்டோம்” என்று கூறியதோடு நிறுத்தி விடாமல் தேர்தல் முடிவடைந்த பின்னர் மாவட்டத் தலைவராக வாக்குப்பெட்டிகளை கீழே கொட்டி தான் எண்ணிப்பார்க்கும்போது நூற்றுக்கு 75 சதவீதம் முஸ்லிம்களுடைய வாக்குகள் தனது கட்சிக்கு இருக்க வேண்டும். அப்படி நடந்தால்தான் தம்மால் முஸ்லிம்களின் பிரச்சினைகள் குறித்து பேச முடியும் என சிரித்த முகத்துடன் அச்சுறுத்தும்பானியில் பேசினார்.

இதற்கு மூன்று நாட்களின் பின்னர் பிரதமரின் மகனும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஷ  கலந்துகொண்ட குருணாகல் மாவட்ட முஸ்லிம் இளைஞர் சம்மேளன நிகழ்ச்சியில், ஜுலை எட்டாம் திகதியன்று பிரதமர் கலந்து கொண்ட கூட்டத்தில் கலந்து கொண்டவர்கள் கையை உயர்த்துமாறு கேட்டுக்கொண்டார். கூட்டத்தில் இருந்த பலர் கையை உயர்த்தவே “பாதிக்கு மேல் வந்திருக்கிறார்கள் என்றால் ‘அதை’ப்பற்றித் பேசத்தேவையில்லை”என மூன்று நாட்களுக்கு முன் தான் ஆற்றிய உரை பற்றி குறிப்பிட்டார்.

குருணாகல் மாவட்ட முஸ்லிம் இளைஞர் சம்மேளன உரையில் நல்லிணக்க வார்த்தைகளை அவர் பேசியதுடன் தான் முன்னர் கூறியதைப் பற்றி சொல்லும்போது “யாராவது தாக்கினால் திரும்ப தாக்குவோர்தான் எல்லோரும்! யாராவது தாக்க வரும்போது ஓடி ஒழிவதை விட எதிர்த்து நிற்பதுதான் சிறந்தது. அவ்வாறுதான் நான்”எனக்கூறினார். மேலும் சர்ச்சைக்குறிய கருத்தான வாக்குப்பெட்டிகளை எண்ணிப்பார்ப்பது தொடர்பான கருத்தை மீண்டுமொரு முறை தெரிவித்துவிட்டு மேலதிகமாக எங்களுக்கு வாக்களித்து உதவுங்கள் என்று பணிவாக வேண்டிக்கொண்டார்.

“இங்கே மொட்டுக்கட்சிக்கு அதிகமான ஆதரவு இருக்கிறது. பொதுஜன பெரமுனவின் வீடியோவுக்கு கம்மன்ட் போட பயமாக இருந்தது. நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளவுமில்லை. இதைப்பற்றிய பல செய்தி இணைப்புகள் வட்ஸப்பில் நண்பர்கள் அனுப்பியிருந்தார்கள். வாக்களிக்காவிட்டால் வெற்றியின் பின்னர் தாக்குவோம் என பகிரங்கமாக அச்சுறுத்துகின்றார்கள்” என மொஹமட் பாரிஸ் தெரிவிக்கின்றார்.

முஸ்லிம்களுக்கு எதிரான கட்டவிழ்க்கப்பட்ட வன்முறைகள் கடந்த வருடத்தில் இருந்து அதிகரித்துக் கொண்டு வருகின்றது. கடந்த வருடம் இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னர் குருணாகல் மாவட்டத்தின் ஹெட்டிபொல, பிங்கிரிய, பண்டுவஸ்நுவர, மேற்கு வாரியபொல ஆகிய இடங்களில் இடம்பெற்ற இனவாதத் தாக்குதல்களில் சுமார் 457 முஸ்லிம் குடும்பங்கள் தமது சொத்துக்களை இழந்தனர். 147 வீடுகளும் முஸ்லிம்களுக்குச் சொந்தமான 132 வியாபார தளங்கள், 29 முஸ்லிம் பள்ளிவாசல்கள், 52 வாகனங்களுடன் 2 பொதுக்கட்டடங்களும் சேதமுற்றதாக முஸ்லிம் எய்ட் ஸ்ரீலங்கா வெளியிட்ட அறிக்கைகள் தெரிவிக்கின்றன. ஏற்கனவே ஆறாத காயத்தில் உள்ள இந்த மக்களுக்கு இந்த வெறுப்புப்பேச்சு வெந்த புண்ணில் வேல் பாய்ச்சும் கதைதான்.

“ஓட்டு போடுவது எங்களுடைய உரிமை. நாங்கள் யாருக்கு வாக்களித்தோம் என்பதை தேர்தல் முடிந்த பிறகு பார்ப்போம் என்று சொல்கின்றார்கள். வாக்களிப்பதில் இரகசிய தன்மை எந்தளவு பேணப்படுகின்றது என்று தெரியவில்லை. நான் இந்த முறை வாக்களிக்கப் போவதில்லை” என மாவத்தகமயில் வசிக்கும் நிஹார் அஹமட் (வயது 22) தெரிவிக்கின்றார்.

வெறுப்புப் பேச்சு தொடர்பாக தேர்தல் வன்முறைகளை கண்காணிப்பதற்கான நிலையத்தின் (சி.எம்.ஈ.வி) தேசிய ஒருங்கிணைப்பாளர் மஞ்சுள கஜநாயக்க விடிவெள்ளிக்கு கருத்து தெரிவிக்கையில் “வெறுப்புப்பேச்சை ஆதரிக்க முடியாது. ஒவ்வொரு வெறுப்புப்பேச்சின் பின்னணியிலும் இனம், மதம், சமயம், கட்சி, பால் என மனிதர்கள் பிரிந்திருக்கும் நிலை வெறுப்புப்பேச்சு பேசுவோருக்கு சாதகமாக உள்ளது எனக்குறிப்பிட்டார். வெறுப்புப்பேச்சினை பரப்புவோர்களின் முதல் நோக்கம் பாதிக்கப்படும் நபருக்கு எதிராக மக்களை தூண்டுவதாகும் என அவர் மேலும் குறிப்பிட்டார்

ஊயிர்த்த ஞாயிறுக்குப் பின்னரான இனவாதத் தாக்குதல்கள் குருணாகல் வைத்தியசாலையில் டொக்டர் ஷாபி சிங்கள தாய்மார்களுக்கு கருத்தடை செய்த குற்றச்சாட்டு பொதுஹர சிலை உடைப்பு விவகாரம், தொல்பொருள் கட்டட சேதம் என வெறுப்பைத் துண்டும் பலரின் பசிக்கு குருணாகல் காலங்காலமாக இரையாகியுள்ளது.

இந்த வெறுப்புபேச்சுக்கு பின்னர் ஆளும்கட்சி வெற்றியடைந்தால் முஸ்லிம்கள் தாக்குவார்கள் என்ற அச்சத்தில் குருணாகல் முஸ்லிம்கள் உள்ளார்கள். இப்போது இந்த வெறுப்புப் பேச்சுக்குப் பின்னர் குருணாகல் முஸ்லிம்கள் குறித்த தரப்பினர் வெற்றியடைந்தால் தாக்குவார்கள் என்ற பயத்திலும் ஒரு சிலர் வாக்களிக்கத் தேவையில்லை என்ற எண்ணத்திலும் இன்னும் சிலர் யார் என்ன சொன்னாலும் அவர்கள்தான் வெற்றியடைவார்கள் என்ற மாயையிலும் இருக்கிறார்கள்.

வெறுப்புப்பேச்சு தொடர்பாக கொழும்பு பல்கலைக்கழகத்தின் அரசியல் விஞ்ஞானம் மற்றும் பொது கொள்கைப்பிரிவின் விரிவுரையாளர் மொஹமட் பஸ்லான்,  விடிவெள்ளிக்கு கருத்து தெரிவிக்கும்போது, “தேர்தல் காலங்களில் இவ்வாறான வெறுப்புப்பேச்சு சாதாரணமானது எனவும் ஜொன்ஸ்டன் பெர்னான்டோவின் பேச்சு குறிப்பிட்ட ஒரு இனத்துக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்துவதால் வெறுப்புப்பேச்சு என்ற வரையரைக்குள் இருப்பதாகவும் தெரிவித்தார். வரலாற்று ரீதியாக சுதந்திரக்கட்சி வெறுப்புப்பேச்சுக்களை பேசுவதில் முன்னிலை வகிப்பதாகவும் அதன் புதிய வடிவம் பொதுஜன பெரமுன என்ற வகையில் தற்போது அக்கட்சி முன்னிற்பதாகவும் பஸ்லான் குறிப்பிட்டார்.

அவ்வாறே 2020 பாராளுமன்றத்தேர்தலின் வெறுப்புப்பேச்சு மற்றும் மொழிப்பிரிவினை தொடர்பாக தேர்தல் வன்முறைகள் கண்காணிப்பு நிலையம் (சி.எம்.ஈ.வி) வெளியிட்டுள்ள அறிக்கையில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியை வெறுப்புப்பேச்சுக்களை அதிகமாக வெளியிட்ட கட்சியாக பதிவு செய்துள்ளது. ஜூலை 29 ஆம் திகதி தேர்தல் வன்முறைகள் கண்காணிப்பு நிலையத்தின் அறிக்கையின்படி பதிவு செய்யப்பட 9 வெறுப்புப்பேச்சு சம்பவங்களில் 4 பொதுஜன பெரமுன  கட்சி சார்ந்த ஒன்றாகும்.

வெறுப்புப்பேச்சு தொடர்பாக கருத்துத் தெரிவித்த விரிவுரையாளர் சாமுவேல் ரத்னஜீவன் ஹேர்பட் ஹூல் கருத்துத் தெரிவிக்கையில் பேஸ்புக்கில் பரவும் வெறுப்புப்பேச்சினை தேர்தல் ஆணைக்குழு எதிர்கொள்வது உத்தியோகப்பற்றற்றது என்றும் இதற்கான தீர்வுகள் தயார்படுத்தல் நிலையிலேயே இருப்பதாகவும் குறைந்தது வெறுப்புப்பேச்சு என்றால் என்ன என்பதற்கான ஒரு முறையான வரைவிலக்கணம் கூட இல்லை என்றும் அவர் தெரவித்தார்.

தேர்தல் ஆணைக்குழுவிடம் வெறுப்புப்பேச்சுக்கு எதிராக எந்த வித சட்டமும் கிடையாது என்பதால்ர்வதேச சட்டமான சிவில் மற்றும் அரசியல் உரிமைகளுக்கான ஐக்கிய நாடுகளின் சர்வதேச உடன்படிக்கை (ஐ.சி.சி.பி.ஆர்) சட்டத்தைதான் நடைமுறைபடுத்த வேண்டியுள்ளதாகவும் எவ்வாறாயினும் தேர்தல் ஆணைக்குழுவிடம் வெறுப்புப்பேச்சை அறிக்கையிட தொழில்ரீதியான தரமானவர்கள் கிடையாது என்றும் அவர் தெரிவித்தார். அத்துடன் பேஸ்புக்கில் பரவும் வெறுப்புப்பேச்சு முறைப்பாடுகளை பரிசோதிக்க ஆங்கிலத்தில் சரளமானவர்களின் எண்ணிக்கையில் தட்டுப்பாடு இருப்பதுடன் தமிழ் மொழியில் வரும் வெறுப்புப்பேச்சுகளை மொழிபெயர்ப்பதில் குறைபாடுகள் இருப்பதாகவும் ஹூல் தெரிவிக்கின்றார்.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments