Friday, May 24, 2024
HomeResource Centerமீத்தேன் பற்றி புலனாய்வு செய்வதற்கான GIJN இன் வழிகாட்டி - காலநிலை மாற்றத்தை எதிர்கொள்வதற்கான ஓர்...

மீத்தேன் பற்றி புலனாய்வு செய்வதற்கான GIJN இன் வழிகாட்டி – காலநிலை மாற்றத்தை எதிர்கொள்வதற்கான ஓர் திறவுகோல்

மீத்தேன் மூலங்களைப் பற்றிய ஊடக அறிக்கையிடல் காலத்தின் தேவை கருதி  மிக அவரசமாக உள்ளது.

காலநிலை விஞ்ஞானிகளின் கூற்றுப்படி, மீத்தேன் உமிழ்வைக் குறைப்பதே காலநிலை மாற்றத்தை எதிர்த்துப் போராடுவதற்கான விரைவாக உள்ள ஒரே வழியாகும். மிக அதிகமான  பசுமை இல்ல வாயுக்களில் இரண்டாவதாக உள்ள (கார்பன் டை ஆக்சைடுக்கு- (carbon dioxide) பின்னால்) மீத்தேன் உமிழ்வானது, சடுதியாக அதிகரித்து  புதிய உச்சத்தை அடைகிறது.

மீத்தேன் வாயு வெளியீடு தொடர்பான, GIJN இன் முழுமையான வழிகாட்டியின் இந்த சுருக்கமானது, புலனாய்வு ஊடகவியலாளர்களுக்கு மீத்தேன் உமிழ்வுகளின் குறிப்பிட்ட மூலங்களை கண்டறிந்து அதற்கு காரணமான நிறுவனங்களையும் நாடுகளையும் பொறுப்புக்கூற வைக்க உதவும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. நாங்கள் அவற்றினை இவ்வாறு விவரிக்கிறோம்:

எங்கள் உதவிக்குறிப்புகள் மற்றும் கருவிகளின் சுருக்கப்பட்ட பதிப்பு பின்வருமாறு:

தரவுகளை விசாசரனை செய்தல்

மீத்தேன் உமிழ்வுகள் வழக்கமாகக் குறைவாகக் கணக்கிடப்படுகின்றன அல்லது கவனிக்கப்படுவதில்லை என்பது தொடர்பில் விஞ்ஞானிகளிடையே ஓர்  பரந்த உடன்பாடு உள்ளது. இதுவே அறிக்கையிடலுக்கு தகுதி வாய்ந்த ஒரு முக்கியமான விடயமாக  கருதிக்கொள்ள முடியும்.

மீத்தேன் உமிழ்வு பற்றிய பல முதன்மையான மூலங்கள் உள்ளன.

ஒட்டுமொத்த மீத்தேன் உமிழ்வுகளைக் கண்காணித்து வெளியிடும், பாரிஸை தளமாகக் கொண்ட அரசுகளுக்கிடையேயான அமைப்பான

 சர்வதேச சக்தி முகாமைத்துவ  நிறுவனம் – International Energy Agency (IEA), சமீபத்தில் மீத்தேன் டிராக்கர் 2022-Methane Tracker 2022 அறிக்கையை வெளியிட்டுள்ளது.  IEA இன் மீத்தேன் டிராக்கர் தரவுத்தளத்தில் நாடு ரீதியாக தரவுகள் வழங்கப்பட்டிருப்பதுடன், இது உமிழ்வு பற்றிய தகவல் மற்றும் உமிழ்வினை “குறைப்பதற்கான சாத்தியம்” பற்றிய மதிப்பீடுகளையும் கொண்டுள்ளன.

Illustration: Marcelle Louw for GIJN

கதை யோசனைகள்:

உங்கள் நாட்டின் உமிழ்வுகள் என்ன?

அவை எங்கிருந்து வருகின்றன?

அவற்றின் அளவீடுகள் துல்லியமாக உள்ளதா?

காலநிலை மாற்றத்திற்கான ஐக்கிய நாடுகளின் கட்டமைப்பு மாநாட்டிற்கு United Nations Framework Convention for Climate Change (UNFCCC) இணங்க, தேசிய அரசாங்கங்களால் UN காலநிலை மாற்றம் (UN Climate Change) தொடர்பான அலுவலகத்திற்கு  தேசிய மீத்தேன் உமிழ்வு தரவு சமர்ப்பிக்கப்படுகிறது.

அபிவிருத்தியடைந்த நாடுகள் தங்கள் பசுமை இல்ல வாயு வெளியேற்றம் பற்றி National Inventory Reports (NIRs) எனப்படும் வருடாந்திர அறிக்கைகளை சமர்ப்பிக்கின்றன. (UNFCCC தளத்தில் தேசிய வருடாந்த சமர்ப்பிப்புகள் 2021 ஐப் பார்க்கவும்). அபிவிருத்தியடைந்து வரும்  நாடுகள் தங்கள் இரு வருட புதுப்பிப்பு அறிக்கைகளின் – Biennial Update Reports (BURs) ஒரு பகுதியாக தங்கள் உமிழ்வுத் தரவைச் சமர்ப்பிக்கின்றன.

மீத்தேன் உமிழ்வு அளவீட்டில் ஒரு முக்கியமான பலவீனம் ஏற்படுகிறது, ஏனெனில் ஒவ்வொரு நாடும் தனது மதிப்பீடுகளைச் மேற்கொள்ள வெவ்வேறு முறைகளைப் பயன்படுத்தஅனுமதிக்கப்பட்டிருப்பதால் இது கேள்விக்குரிய தரவுகளை உருவாக்குகின்றது.

அரசாங்கங்களால் சேகரிக்கப்பட்ட மீத்தேன் உமிழ்வு தரவுகளில் உள்ள மற்றொரு அடிப்படையான பிரச்சனை என்னவென்றால், அது உண்மையான அளவீடுகளின் அடிப்படையில் அல்லாது, மதிப்பீடுகள் மற்றும் சமன்பாடுகளை அடிப்படையாகக் கொண்டது.  இந்தப் பிரச்சனைக்கு சில நாடுகள் தேவையான  சட்டங்களைக் கூட  இயற்றி உள்ளன.

Illustration: Marcelle Louw for GIJN

மீத்தேன் கசிவு குறித்து ஆராய்தல்

மீத்தேன் உமிழ்வுகளின் மூலங்கள் – குறிப்பாக இயற்கை எரிவாயு மற்றும் மசகு எண்ணெய் உற்பத்தி போன்றவை முழுமையாக பகிரங்கப்படுத்தலாம்.

இதற்கான மூலங்களை கண்டறிதலுக்கு அகச்சிவப்பு கேமராக்கள் (infrared cameras) மற்றும் செயற்கைக்கோள்கள் தேவை, அதாவது இச்செயன்முறைக்கு நிபுணர்களுடன் ஒத்துழைப்பு மிகவும் அவசியமாகும்.

GIJN அகச்சிவப்பு கேமராக்கள் (infrared cameras) கொண்ட இரண்டு சுற்றுச்சூழல் தொடர்பாக இயங்கும் குழுக்களை அடையாளம் கண்டுள்ளது, அவை ஊடகவியலாளர்களுடன் இணைந்து மீத்தேன் உமிழ்ப்பான்கள் குறித்து நில மட்டத்தில் புலனாய்வு நடத்த தயாராக உள்ளன.

கதை யோசனைகள்:

 • கசிவுகளைக் கண்டறியக்கூடிய அகச்சிவப்பு கேமராக்களைக் கொண்ட குழுக்கள் அல்லது விஞ்ஞானிகளுடன் இணைந்து பணியாற்றுங்கள்.
 • வளர்ந்து வரும் எண்ணிக்கையிலான  மூலங்களில் இருந்து செயற்கைக்கோள் படங்களைப் பெற முயலுங்கள்.

Clean Air Task Force (CATF) ஐரோப்பா முழுவதிலும் உள்ள எண்ணெய் மற்றும் எரிவாயு நிலையங்களில் இருந்து வெளியேறும் உமிழ்வை ஆவணப்படுத்தியுள்ளதுடன் பிற பகுதிகளுக்கும் விரிவுபடுத்த எதிர்பார்க்கிறது. அத்திட்டம் தொடர்பான YouTube விளக்கமும் அகச்சிவப்பு (OGI) தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதற்கான விளக்கத்தினை தொடுப்புக்களில் காணலாம்.

CATF கேமரா இயக்குனருடன் பணியாற்ற ஆர்வமுள்ள ஊடகவியலாளர்கள் ரோவன் எம்ஸ்லியைத் (Rowan Emslie) தொடர்புகொள்ளவும்.

அகச்சிவப்பு கேமரா திறனைக்கொண்டிருப்பதுடன் ஊடகவியலாளர்களுடன் ஒத்துழைக்க விருப்பம் கொண்ட மற்றொரு NGO Earthworks ஆகும். ஆர்வமுள்ள ஊடகவியலாளர்கள் ஜஸ்டின் வாஸர் (Justin Wasser) அல்லது ஜோஷ் ஐசன்ஃபீல்டை (Josh Eisenfeld) அணுக வேண்டும்.

செயற்கைக்கோள் படங்களின் அடிப்படையில் உமிழ்வு தகவல்களைப் பெற வணிக ரீதியான மூலங்கள் உள்ளன. இலவசமாக மற்றும் தள்ளுபடிகளை வழங்கக்கூடிய பல நிறுவனங்கள் வரையறுக்கப்பட்ட தகவல்களை வழங்குகின்றன.

Geofinancial Analytics என்பது புதிய MethaneScan Data Lake உள்ளிட்ட பல தயாரிப்புகளைக் கொண்ட ஓர் அமெரிக்க நிறுவனமாகும், இது வட அமெரிக்காவை மையமாகக் கொண்டு 100,000 சக்தி உற்பத்தியாளர்களுக்கு மீத்தேன் உமிழ்வு மதிப்பீடுகளை வழங்குகிறது.  இதன் தரவுத்தொகுப்புகள் மற்றும் வரைபடங்கள் 50% தள்ளுபடியில் (மாதத்திற்குUSD1,000) லாப நோக்கமற்ற நிறுவனங்களுக்கும், தமது அறிக்கையிடலுக்காக நிதி உதவி தேவைப்படும் ஊடகவியலாலர்களுக்கும் கிடைக்க கூடியதாக உள்ளன.

Kayrros, ஒரு தரவு பகுப்பாய்வு நிறுவனம், எப்போதாவது ஊடக வெளியீடுகளை வெளியிடுகிறது அல்லது தனது கண்டுபிடிப்புகள் குறித்து ஊடகவியலாளர்களின் கவனத்திற்கு கொண்டுவருகிறது. ப்ளூம்பெர்க் (Bloomberg) ஊடக நிறுவனமானது கேய்ரோஸ் தரவுத்தளத்தை ஆராய ஓர் ஒப்பந்ததை மேற்கொண்டது, இவ்வசதி மற்றவர்களின் பாவனைக்கும்  திறந்திருக்கும் என்று நிறுவனத்தின் நிர்வாகி ஒருவர் கூறினார்.

GHGSat தளம் கூட சில சமயங்களில் அதன் செயற்கைக்கோள்களால் கண்டறியப்பட்ட மீத்தேன் உமிழ்வு பற்றிய தகவல்களையும் வெளியிடுகிறது.

ஐரோப்பிய விண்வெளி நிறுவனம் (European Space Agency) மற்றும் விண்வெளி ஆராய்ச்சிக்கான நெதர்லாந்து நிறுவனமான SRON, ஆகியவற்றிலிருந்தும் அவ்வப்போது உமிழ்வு பற்றிய கண்டுபிடிப்புகள் வெளிவருகின்றன.

பல புதிய மூலங்கள், தகவல்களைப் பகிர்வதற்கான ஆணையுடன் வெளிவரத் தயாராக இருக்கின்ற போதிலும் 2023 வரை அவை வெளிவரப்போவதில்லை.

 • Carbon Mapper என்பது அமெரிக்க விண்வெளி நிறுவனமான நாசாவால் உருவாக்கப்பட்ட தொழில்நுட்பத்தையும் அதன் சொந்த மீத்தேன் உணர்திறன் கொண்ட செயற்கைக்கோள்களின் தரவையும் பயன்படுத்துவதாக உறுதியளிக்கும் ஒரு அமெரிக்க இலாப நோக்கற்ற கூட்டமைப்பு ஆகும், அவை 2023 இல் விண்ணிற்கு ஏவப்பட உள்ளன.
 • MethaneSAT சுற்றுச்சூழல் பாதுகாப்பு நிதியத்தின் -Environmental Defense Fund (EDF) துணை நிறுவனத்தால் உருவாக்கப்பட்டது ஓர் நிறுவனமாகும். இது 2022 பிற்பகுதியில்  ஆரம்பிக்க திட்டமிடப்பட்டுள்ளது.
 • சர்வதேச மீத்தேன் உமிழ்வு ஆய்வகம் –International Methane Emissions Observatory (IMEO)நிறுவனங்களின் தரவுகள், செயற்கைக்கோள் தொழில்நுட்பம் மற்றும் அறிவியல் ஆய்வுகள் ஆகியவற்றைப் பயன்படுத்தி உமிழ்வைக் கண்காணிக்க ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் UN சுற்றுச்சூழல் திட்டத்தால் நிறுவப்பட்டது.
 • ஒரு அமெரிக்கத் திட்டமான Project Astra என்பது, “மசகு எண்ணெய் மற்றும் எரிவாயு உற்பத்திப் பகுதி முழுவதும் [மீத்தேன்] உமிழ்வைக் கண்காணிக்கும்” வலையமைப்பை நிலத்தடி உணரிகளின் மூலம் பயன்படுத்த திட்டமிட்டுள்ளது.
 • Global Gas Flaring Explorer என்பது, உலக வங்கியின் Global Gas Flaring Reduction Partnership (GGFR) 2021 அறிக்கையின்படி “புதிய மற்றும் மேம்படுத்தப்பட்ட இணைய அடிப்படையிலான பயன்பாடாகும், இது உலகளாவிய எரிவாயு எரியும் தரவை வரைபடமாக்குவதோடு மட்டுமில்லாது 2022 இல் அனைவரும் பயன்படுத்தக்கூடியதாக இருக்கும்” என்று கூறுகிறது.  

உமிழ்வுகள் பற்றிய தகவல்களுக்கு படங்கள் மட்டுமே சாத்தியமான மூலங்கள் மட்டும் அல்ல. இதோ இது தொடர்பில் வேறு சில குறிப்புகள்:

 • கட்டுப்பாட்டாளர்கள் வைத்திருக்கும் பொது ஆவணங்களைத் தேடுங்கள்,
 • இந்த பகுதியில் பணிபுரியும் உள்ளூர் விஞ்ஞானிகள் மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்களுடன் நட்புறவை வளர்த்துக் கொள்ளுங்கள், ஏனெனில் இது தொடர்பில்  நிறைய ஆராய்ச்சிகள் நடந்து வருகின்றன
 • மசகு எண்ணெய் மற்றும் எரிவாயு வசதிகள் மற்றும் பிற சாத்தியமான உமிழ்வு தளங்களில் பணிபுரியும் தொழிலாளர்களுடன் பேசுங்கள்.

தற்போது கவனத்திற்கு உள்ளாகியிருக்கும் உமிழ்வுகளின் மூலங்கள் தொடர்பாக  கருத்துகளைத் தேடுவது வழமையான ஊடக செயன்முறையாக இருக்கின்ற போதிலும் , சில சமயங்களில்  அவற்றிற்கான பதில்கள் புரிந்துகொள்ள முடியாததாகவும், ஊடகவியலாளர்களை மிரட்டுவதும் போலும் இருக்கும்.

உமிழ்வுகள் சட்டப்பூர்வமானவை அல்லது இயல்பான இயக்க நடைமுறைகள் என்று அதற்கு பொறுப்பானவர்கள் கூறலாம். இந்த அறிக்கைகள் சரியாக இருக்கலாம் என்பதுடன் அவற்றை சரிபார்க்கவும் கடினமாக இருக்கலாம். ஆகவேதான் உள்ளூர், தேசிய அரசாங்க கட்டுப்பாட்டாளர்கள் மற்றும் அறிவாற்றல் கொண்ட அரசு சாரா நிறுவனங்களின்  பக்கம்  கவனத்தை திருப்புவது மிகவும் அவசியம் ஆகும். இது தொடர்பான புலனாய்வில் அருகிலுள்ள குடியிருப்பாளர்கள், தொழில் வல்லுநர்கள், மேலும் ஊழியர்கள் அல்லது தற்போது விசாரிக்கப்படும் நிறுவனத்தின் முன்னாள் ஊழியர்கள் மற்ற சாத்தியமான மூலங்களாக இருக்கக் கூடும்.

கார்ப்பரேட் நிறுவனங்களின் உமிழ்வுகளை ஆய்வு செய்தல் – மறக்கப்பட்ட  வாக்குறுதிகள்

பல நிறுவனங்கள் தங்கள் மீத்தேன் உமிழ்வுகள் பற்றி வெளிப்படையாக இல்லை, ஆனால் அவை அது தொடர்பான மேலதிக தகவல்களை வெளியிடுவதற்கும் குறைவாக உமிழ்வு வெளியேற்றத்தினை மேற்கொள்ளவும்   அதிக அழுத்தத்திற்கு ஆளாகி உள்ளன. அதிகரித்து வரும் இவ்வாறான எதிர்பார்ப்புகள் வர்த்தக துறை சார் ஊடகவியலாளர்கள் உட்பட பொதுவான ஊடகவியலாளர்கள் மேலும் கேள்விகளைக் கேட்கத் தூண்ட வேண்டும்.

மீத்தேன் உமிழ்வுகளில் மூன்றில் ஒரு பங்கிற்கு காரணமான மசகு எண்ணெய் மற்றும் எரிவாயு தொழில், கவனம் செலுத்த வேண்டிய மிக முக்கியமான ஓர் துறையாகும். அனைத்தும் அல்லாது பல நிறுவனங்கள் தங்கள் உமிழ்வுகள் தொடர்பில் அறிக்கைகளை வெளியிடுகின்றன ஆனால் அவை அறிக்கையிடும் முறைகள் சில சமயங்களில் சிக்கலாக இருக்கலாம்.

Illustration: Marcelle Louw for GIJN

கதை யோசனைகள்:

 • முக்கிய தொழில்களில் கவனம் செலுத்துங்கள்.
 • அறியப்பட்ட அல்லது மதிப்பிடப்பட்ட உமிழ்வு நிலைகள் பற்றி கேளுங்கள்.
 • குறிப்பிட்ட உமிழ்வு தொடர்பான இலக்குகள் மற்றும் தணிப்பு முயற்சிகள் பற்றி கேளுங்கள்.

அளவீட்டின் சிக்கலானது விசாரணைக்கு எதிராக ஒரு கவசத்தை உருவாக்குகிறது, ஆனால் ஊடுருவ முடியாதது அல்ல. அதை ஊடுருவ, காலநிலை மாற்றம் குறித்த கல்விசார் மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவன நிபுணர்களையும், கார்ப்பரேட் நிறுவன கண்காணிப்பாளர்கள் மற்றும் முதலீட்டாளர்களிடம் கலந்தாலோசிப்பது சிறந்தது. இது தொடர்பில் நிறுவனங்களிடம் கூட விளக்கம் கேட்க முடியும்.

மீத்தேன் பற்றிய பெரு நிறுவனங்களினால் அவை இருக்கும் இடம் தொடர்பாக வெளியிடப்படும் அறிக்கைகள் பொதுவாக “நிலைத்தன்மை”/ sustainability” என்ற தலையங்கத்தின் கீழ்  அந்நிறுவனங்களின்  இணையதளங்களில் கிடைக்கின்றன. சில கார்ப்பரேட் நிறுவன அறிக்கைகள், ஒருங்கிணைக்கப்பட்ட வடிவத்தில், இலாப நோக்கற்ற அமைப்பான CDP தளத்தில் கிடைக்கின்றன.

உமிழ்வின் ஒரு மூலம் எரியக்கூடிய கழிவு வாயுக்களை எரிப்பதாகும்.

உலக வங்கியின் Zero Routine Flaring  (ZRF) முன்முயற்சி அரசாங்கங்கள் மற்றும் எண்ணெய் நிறுவனங்களை தங்கள் கழிவு வாயு  எரிப்பு பற்றி பகிரங்கமாக தெரிவிக்க பட்டியலிடுகிறது. நாடுகள் மற்றும் பெருநிறுவனங்களால் சுயமாக அறிக்கையிடப்பட்ட எரியும் தரவு ZRF இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

எண்ணெய் மற்றும் எரிவாயு துறையில் உமிழ்வுகள் பற்றிய சிறந்த நிறுவன அறிக்கையிடலை எளிதாக்க பல்வேறு முயற்சிகள் நடந்து வருகின்றன.

The Oil and Gas Methane Partnership (OGMP) என்பது 74 பெரிய கார்பரேட் நிறுவனங்களை உறுப்பினர்களாகக் கொண்ட ஒரு முயற்சியாகும், இது உலகின் எண்ணெய் மற்றும் எரிவாயு உற்பத்தியில் 30% ஆகும். பல்வேறு UN நிறுவனங்களும் EDF அமைப்பும் இதில் ஈடுபட்டுள்ளன. இவற்றின் மூலம் பெறப்பட்ட தரவுகளின் முதல் அறிக்கை நவம்பர் 2021 இல் வெளியிடப்பட்டது.

The Oil and Gas Climate Initiative (OGCI) என்பது ஒரு அறிக்கையிடல் கட்டமைப்பை உருவாக்கிய ஒரு தொழில் முயற்சியாகும். சில மசகு எண்ணெய் மற்றும் எரிவாயு நிறுவனங்களின் கூட்டமைப்பு சிறந்த நடைமுறைகளைக் கொண்ட  மீத்தேன் வழிகாட்டும் கோட்பாடுகளை (Methane Guiding Principles) உருவாக்கியது.

கார்ப்பரேட் நிறுவனங்களின் மீத்தேன் உமிழ்வுகளைப் பற்றி அறிக்கையிடும் போது, பின்வரும் கேள்விகள் புலனாய்வை தொடங்குவதற்கு ஒரு நல்ல ஆரம்பமாக இருக்கும்:

 • உங்கள் மீத்தேன் உமிழ்வு அளவுகள் என்ன?
 • அவை உயர்கின்றனவா அல்லது வீழ்ச்சியடைகின்றன, எவ்வளவில் மாற்றம் நிகழ்கிறது?
 • உங்கள் புள்ளிவிவரங்கள் எவ்வாறு கணக்கிடப்படுகின்றன?

கார்ப்பரேட் நிறுவனங்களின்  செயல்பாடுகள் குறிப்பிட்ட தரநிலைகளை கொண்டிருக்கின்றன என்பதனை சான்றளிக்க பல சரிபார்ப்பு முறைகளும் வடிவமைக்கப்பட்டுள்ளன. அத்தகைய சரிபார்ப்பு முயற்சிகளில் அவர்கள் சேருவார்களா என்பது நியாயமான ஓர் கேள்வி. மீத்தேன் ஒழுங்குமுறை தொடர்பான முன்மொழியப்பட்ட அரசாங்கக் கொள்கைகள் குறித்து நிறுவனங்களின் நிலைப்பாடுகளைப் பற்றிக் கேட்பது மேலும் பல விடயங்களை வெளிப்படுத்தும்.

மீத்தேன் உமிழ்வைக் குறைப்பதாக வாக்குறுதிகளை வழங்கும் பெருநிறுவனங்களின் எண்ணிக்கையில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. எவ்வாறாயினும், அவர்களின் உறுதிமொழிகளின் விவரங்கள் அவ்வளவு தெளிவாக இல்லாமல் இருக்கலாம், மேலும் அவர்களின் உறுதிமொழிகளின் வெளிப்படைத்தன்மை மிகவும் விவாதத்திற்குரியது.

உறுதிமொழி குறித்த  தகவல்கள் மற்றும் வழிமுறைகளைப் பார்க்கவும். சில பரிந்துரைகள் கீழே உள்ளடக்கப்படுள்ளன:

 • குறிப்பிடப்பட்ட குறைப்பு இலக்குகள் நீண்ட காலங்களுக்கு, உதாரணமாக  10 அல்லது 20 வருடங்களுக்கு இருப்பதனால் குறுகிய கால மற்றும் இடைநிலை கால இலக்குகளைப் பற்றி கேட்கலாம்.
 • எப்பொழுதும் அதிகம் பேசப்படாத விடயமான, குறித்த  திட்டம் எவ்வாறு சரியாக செயல்படுத்தப்படும் என்பதைப் பற்றி விசாரிக்கவும்.
 • உமிழ்வு குறைப்புகளை அடைவதற்கான வழிமுறைகளைப் பாருங்கள்.

ஆரம்ப இலக்குகளாக மிகப்பெரிய மீத்தேன் உமிழ்ப்பான்களைத் தேர்ந்தெடுப்பது அர்த்தமுள்ளதாக இருக்கிறது. தேசிய அளவில் அரசுக்கு  சொந்தமானதாக இருக்கும்  பெட்ரோலிய நிறுவனங்கள் குறித்து கவனத்தை செலுத்துவது நம்பிக்கைக்குரியதாக இருக்கும்.

மீத்தேன் வெளியேற்றம் பிரித்தெடுக்கும் இடத்தில் மட்டும் நிகழ்வதில்லை. விநியோகச் சங்கிலி முழுவதும் உமிழ்வுகள் மீது அதிக கவனம் செலுத்தப்படுகிறது.

மீத்தேன் உமிழ்வானது, விவசாயம், விமானம், கடல்வழி கப்பல் போக்குவரத்து மற்றும் பிற துறைகளில் இருந்து உருவாகின்றது.

குறிப்பாக விவசாய உற்பத்தியில் மீத்தேன் முக்கிய மூலமாக உள்ளது, முக்கியமாக நெல் சாகுபடி (வெள்ளம் நிறைந்த நெல்களில் பாக்டீரியாவால் வெளியிடப்படுகிறது) மற்றும் கால்நடை வளர்ப்பு போன்றவை பிரதான காரணிகளாகும். பண்ணை மட்டத்தில் மட்டுமல்ல, மூலப்பொருட்களைப் பயன்படுத்தும் பேரு நிறுவனங்களிடமிருந்தும், என்ன மாதிரியான தணிப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள   முடியும் என்ற கேள்விகள் எழுப்பப்படுகின்றன.

தீர்வுகள் பற்றிய சமீபத்திய ஆராய்ச்சியைப் பின்பற்றுவது மீத்தேன் பற்றிய அறிக்கையிடலுக்கு மிகவும் அவசியமான இணைப்பாக அமையும். புதிய யோசனைகள் விரைவான வேகத்தில் சோதிக்கப்படுகின்றன.  இது தொடர்பில் அறிவியலைப் பின்பற்றுவது சரியான நேரத்தில் கேள்விகளை எழுப்பச் செய்யும்.

Illustration: Marcelle Louw for GIJN

கதை யோசனைகள்:

 • தேசிய குறைப்பு நிலைகள் எப்படி, ஏன் தேர்ந்தெடுக்கப்பட்டன?
 • இலக்குகள் எவ்வாறு நிறைவேற்றப்பதுவதுடன் அவை சரிபார்க்கப்படும்?

தனியான தேசிய அரசாங்கங்களால் சமர்ப்பிக்கப்பட்ட UN இன் Nationally Determined Contribution (NDCs) அறிக்கைகளில் இதே போன்ற உமிழ்வு உறுதிப்பாடுகள் பற்றிய தகவல்களைக் காணலாம். NDCகள் UN இன் NDC பதிவேட்டில்- NDC Registry வெளியிடப்படுகின்றன. UNFCCCகூட NDC தொகுப்பு அறிக்கைகளையும் தயாரிக்கிறது. (அக்டோபர் 2021 பதிப்பை இங்கே காணலாம்.)

சில நாடுகள் தங்களது தேசிய உமிழ்வு தரவுகளை இந்த அறிக்கைகளில் வெளியிடுகின்றன.

உலகளாவிய மீத்தேன் உறுதிமொழியில் (Global Methane Pledge) கையொப்பமிட்ட 111 நாடுகள் 2020 ஆம் ஆண்டிலிருந்து 2030 ஆம் ஆண்டிற்குள் 30% குறைப்பு என்ற உலகளாவிய இலக்கை ஒப்புக்கொண்டுள்ளன. இருப்பினும், இந்த உறுதிமொழியில் கையெழுத்திடுவது தனிப்பட்ட நாடுகளை குறிப்பிட்ட இலக்குகளுடன் பிணைக்காது.

இத்திட்டங்களின் விமர்சனங்களுக்கான சிறந்த மூலங்கள் உள்ளூர்/பிராந்திய சுற்றுச்சூழல் குழுக்கள், விஞ்ஞானிகள், வணிக சமூகம் மற்றும் அரசியல் பிரமுகர்களாக இருக்கலாம்.

உமிழ்வை அளவிடுவது ஒரு முக்கியமான தொடக்க புள்ளியாக இருப்பதால், உமிழ்வை மதிப்பிடுவதற்கு பயன்படுத்தப்படும் முறையை ஊடகவியலாளர்கள்  ஆராயலாம்.

மாகாணங்கள் மற்றும் நகரங்கள் போன்ற துணை-தேசிய அதிகார வரம்புக்குட்பட்ட கட்டமைப்புக்களும்  நிகர பூஜ்ஜிய உமிழ்வு உறுதிமொழியை மேற்கொண்டுள்ளன.

“மீத்தேன் வாயு உமிழ்வு ஒரு பெரிய பிரச்சனை என்பதில் எந்த சந்தேகமும் இல்லை, இது நமது கிரகத்திற்கு ஒரு முக்கியமான தருணத்தில் காலநிலை மாற்றத்தை மேலும்  துரிதப்படுத்துகிறது” என்று தற்போது மேரிலாந்து பல்கலைக்கழகத்தின் பட்டதாரி பள்ளியின் இயக்குநரான ரஃபேல் லோரெண்டே(Rafael Lorente) கூறினார். “ஊடகவியலாளர்களின் பிரச்சனை அந்தக் கதையை அழுத்தமான முறையில் சொல்வது.”

மேலதிக வளங்கள்

Climate Change: GIJN’s Guide to Investigating Methane (full guide)

New Data Tools and Tips for Investigating Climate Change

Investigating Environmental Crimes and Climate Change

டோபி மெக்கின்டோஷ் (Toby McIntosh)  GIJN இன் வள மையத்தின் மூத்த ஆலோசகர் ஆவார். அவர் வாஷிங்டனில் ப்ளூம்பெர்க் (Bloomberg)  BNA உடன் 39 ஆண்டுகள் இருந்தார். அவர் FreedomInfo.org இன் முன்னாள் ஆசிரியர் (2010-2017) ஆவார், அங்கு அவர் உலகளவில் FOI கொள்கைகளைப் பற்றி எழுதினார், மேலும் FOI வழக்கறிஞர்களின் சர்வதேச வலையமைப்பான FOIANet குழுவிலும் பணியாற்றுகிறார்.

மூலம்

This story was originally published by the Global Investigative Journalism Network (GIJN)

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments