Sunday, April 28, 2024
HomeStorytellingGeneralதொடரும் பேரவலத்தில் - புலம்பெயர் தொழிலாளர்

தொடரும் பேரவலத்தில் – புலம்பெயர் தொழிலாளர்

** *முறையான பயிற்சி வழங்கி அனுப்பினாலும்* *நிற்கதியாகும்*

*பெண்கள் ஏராளம்*

** *அழகிய பெண்களையே எதிர்பார்க்கும் வீட்டு எஜமானர்கள்*

** *தொழில் பயிற்சி மட்டுமல்ல, மொழிப் பயிற்சியும் அத்தியாவசியம்* 

** *ஒப்பந்தத்தை மீறி தொழில் செய்ய மறுத்தால் குண்டூசி சித்திரவதை*

** *சுய கௌரவத்தை இழந்து நாட்டுக்கும் வீட்டுக்கும் வருமானம் தேடும் புலம்பெயர் தொழிலாளர்*

**திறன் பயிற்சியும்  முறையான பதிவும் இருந்தாலும் தொடரும் அவல வாழ்வு*

இலங்கையின் இன்றைய பொருளாதார நிலையானது, ஒரு குடும்பத்தில் எத்தனைப் பேர்  இரவு பகல் உழைத்தும் போதாத நிலையிலேயே உள்ளது. அந்தளவுக்கு அத்தியாவசிய பொருட்கள், மருந்துப் பொருட்கள்,  பாடசாலை உபகரணங்கள் உள்ளிட்ட அனைத்து பொருட்களின்  விலை அதிகரிப்பு மற்றும்  மின்சாரம், நீர் கட்டண அதிகரிப்பு என்று நாளுக்கு நாள் அதிகரித்து சென்றாலும் உழைப்புக்கேற்ற ஊதியமானது விலைவாசிகளை ஈடுகட்டுவதாக அமையவில்லை.

எனவே,அதனை ஈடுசெய்ய இன்று பெரும்பாலான இலங்கையர்கள் புலம்பெயர் தொழிலாளர்களாக நாட்டை விட்டு வெளியேறும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். இவ்வாறு அதிகளவானவர்கள் புலம்பெயர் தொழிலாளர்களாக செல்கின்றமையானது அவர்களின் குடும்ப பொருளாதாரத்துக்கும் நாட்டின் அந்நிய செலாவணி அதிகரிப்புக்கும் காரணமாக அமைவதோடு இந்தப் பணப்பரிமாற்றங்கள் தேசியப் பொருளாதாரத்திற்கு பாரிய பங்களிப்பையும் வழங்குகின்றன.

இவ்வாறு செல்பவர்களுள் பலர் முறையாக பதிவு செய்யப்பட்ட முகவர் நிலையங்கள் ஊடாக சட்டரீதியாகவும் உரிய திறன் பயிற்சிகளையும் பெற்று புலம்பெயர் தொழிலாளர்களாக செல்லும் நிலையில், பலர் அதிக பணத்துக்கு ஆசைப்பட்டு அல்லது முகவர், தரகர்களின் பேச்சில் மயங்கி அல்லது உரிய ஆவணங்கள் இன்றி சட்டவிரோதமாகவும் இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தில் பதிவு செய்யப்படாத முகவர் நிலையங்கள் ஊடாகவும் சென்று பல்வேறு இன்னல்களை சந்திக்கின்றனர். 

அத்துடன் தாம் செல்லும்  நாட்டிற்கு உரிய மொழி அறிவு உள்ளிட்ட திறன் பயிற்சிகளை பெற்றுக்கொள்ளாமலும் புலம்பெயர் தொழிலாளர்களாக செல்வதால் தமது அத்தனை கனவுகளையும் சிதைத்து வெறுங்கையுடன் நாடு திரும்ப வேண்டிய இக்கட்டான நிலைக்கு தள்ளப்படுகின்றனர்.

இந்த நிலையில் பொருளாதாரக் காரணங்கள், சமூகக் காரணிகள், அரசியல் ஸ்திரமின்மை, மோதல்கள், சுற்றுச்சூழல் பிரச்சினைகள் தமது சொந்த நாடுகளில்  வேலை வாய்ப்புகள் இல்லாமை, குறைந்த ஊதியம், வறுமை அல்லது சாதகமற்ற வாழ்க்கைச் சூழல்களில் இருந்து தப்பிக்க தங்கள் சொந்த நாடுகளை  விட்டு வெளியேறும் புலம்பெயர் தொழிலாளர்களின் எண்ணிக்கை அனைத்து நாடுகளிலும் நாளுக்கு நாள் அதிகரித்தே செல்கின்றன.

அதற்கமைய இந்த ஆண்டு இதுவரையான காலப்பகுதிக்குள் 1,79,759 பேர் புலம்பெயர் தொழிலாளர்களாக இலங்கையில் இருந்து பல்வேறு நாடுகளுக்குச் சென்றுள்ளனர் என இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் பிரசார பொதுமக்கள் தொடர்பாடல் பிரிவின் முகாமையாளர்  பிரசன்ன அபேவிக்ரம கூறினார். 

மேலும் இது தொடர்பில் கூறிய அவர் “இதில் வீட்டுப் பணியாளர்களாக 66,406 பேரும் ஏனைய தொழிற்றுரைக்கு 1,13,353 பேரும் சென்றுள்ளதுடன், அதிகமான புலம்பெயர் தொழிலாளர்கள் கட்டார், குவைட், சவுதி அரேபியா ஆகிய நாடுகளுக்குச் சென்றுள்ளதாகவும் தெரிவித்தார்.

நாட்டில் வேலையின்மையை போக்குவதற்கும் வறுமையை குறைப்பதற்கும் வெளிநாட்டு வேலைவாய்ப்பை இலங்கை அரசாங்கமும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகமும் தீவிரமாக ஊக்குவித்து வருவதுடன், பல மத்திய கிழக்கு நாடுகள், ஏனைய சில சட்ட மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட ஒப்பந்தங்களையும் ஏற்படுத்தியுள்ளனர்.

இதன்காரணமாக இதுவரை இலங்கையர்களுக்கு தொழில்வாய்ப்பை வழங்காத பல நாடுகளும் இலங்கையின் புலம்பெயர் தொழிலாளர்களுக்காக பல்வேறு துறைகளில் தமது நாடுகளின் கதவுகளை திறந்துள்ளன.

இவ்வாறு பணிகளுக்காக புலம்பெயர் தொழிலாளர்களாக செல்பவர்கள் கவனிக்கப்பட வேண்டிய விடயங்கள் 

அதில் முக்கியமானதொன்று இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தால் அங்கீகரிக்கப்பட்ட முகவர் ஊடாக பயணித்தலாகும். அத்துடன் முறையான திறன் பயிற்சி, உரிய ஆவணங்களுடன் பயணித்தல், தாம் தற்போதைய தோற்றத்துடன் இருக்கும் நிழற்படங்களை தமது ஆவணங்களில் இணைத்தல் போன்றன புலம்பெயர் தொழிலாளர்கள் கவனத்தில் கொள்ளப்பட வேண்டிய முக்கிய விடயங்களாகும்.

எனினும் இந்த விடயங்கள் தொடர்பில் அரச மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்கள் பல்வேறு வேலைத்திட்டங்கள், செயலமர்வுகள், விழிப்புணர்வு கருத்தரங்குகளை நாடு முழுவதிலும் முன்னெடுத்தாலும்  அவை பலனற்று போவதை பல சம்பவங்கள் உணர்த்துகின்றன.

அவ்வாறு மொழிப் பயிற்சி இன்றி முதற்தடவையாக சவுதி நாட்டுக்குச் சென்று உடலில் குண்டூசிகள் ஏற்றப்பட்ட சிவரஞ்சனி முகம் கொடுத்த சம்பவத்தின் அனுபவங்களைப் பார்ப்போம்…

சிவரஞ்சனியின் உடலில் ஏன் குண்டூசிகள் ஏற்றப்பட்டன?

தாய், தந்தை உள்ளிட்ட 5 சகோதரர்களைக் கொண்ட குடும்பத்தில் ஆறாவது பெண்ணாகப் பிறந்த 30 வயதான  சிவரஞ்சனி அண்மையில் ஊடகங்களில் பரபரப்பாக பேசப்பட்டவராவார்.  லிந்துல- கிளனிக்கல்ஸ் தோட்டத்தைச் சேர்ந்த ஒரு பிள்ளையின் தாயான இவர், சொந்த வீடு கட்டும் கனவுடன் சவுதிக்கு புலம்பெயர் தொழிலாளியாக சென்ற இவர், இன்று உடலின் பல இடங்களில் குண்டூசிகள் செலுத்தப்பட்டு, பல்வேறு சித்திரவதைகளுக்கு மத்தியில் நாடு திரும்பியுள்ளார்.

“எனக்கு சவுதி மொழி அறிவு இன்மை மற்றும் அங்கு ஆவணங்களில் இணைக்கப்பட்ட   புகைப்படத்துடன்  என்னை நேரடியாக பார்க்கும் போது வித்தியாசமாக இருப்பதாகக்  காரணம் காட்டியே  இவ்வாறு சித்திரவதைக்கு உள்ளாக்கினார்கள்“ என்றார்.

“எங்களுக்கு தோட்டத்தில் வீடு இருக்கவில்லை என்பதால், கூலி வீட்டிலேயே வசித்து வருகிறோம்.  வீட்டு கூலியாக மாதாந்தம் 3,000 ரூபாய் செலுத்த வேண்டும்“

“எனவே சொந்தமாக வீடு  வாங்கும் கனவுடன்  எங்கள் ஊருக்கு அருகில் வசிக்கும் தரகர் ஒருவரின் உதவியுடன் கொழும்பு- சங்கராஜா மாவத்தையிலுள்ள முகவர் ஒன்றின் ஊடாக இந்த வருடம் ஆறாம் மாதம் 17ஆம் திகதி சவுதிக்கு பயணமானேன்.”

“எனக்கு  முகவர் தனக்கு எவ்வித திறன் பயிற்சியும் வழங்க நடவடிக்கை எடுக்காததால் “அண்ணா எனக்கு மொழி பிரச்சினை உள்ளது முதற் தடவையாக சவுதிக்கு செல்கிறேன். எனவே னனக்கான பயிற்சிகளை வழங்குங்கள் என்றேன். ஆனால் முகவரோ  பயிற்சி குறித்து பிறகு பார்த்துக்கொள்ளலாம் முதலில் நீங்கள் செல்லுங்கள் என்றார்“. 

 நான் சவுதிக்கு பணிப்பெண்ணாக  சென்ற வீட்டில் எனக்கு அவர்களின்  மொழி தெரியவில்லை என்று வீட்டு எஜமானி திட்டினார். அதுமாத்திரமல்ல  முகவர் ஊடாக நான் அனுப்பிய புகைப்படத்தில் இருந்ததைப்போன்று நேரடியாக இல்லை என்றும்  உன் புகைப்படத்தை பார்த்து தான் எடுத்தோம் ஆனால் நேரடியாகப் பார்க்கும் போது நீ வித்தியாசமாக இருக்கிறாய் என திட்டினார்கள்.“ 

“அந்த வீட்டின் மலசலக் கூடத்திலுள்ள உயரமான யன்னலை துப்பராக்கும் பணி எனக்கு வழங்கப்பட்ட போது, ஏணியில் ஏறி அதனை துப்புரவு செய்தேன் ஏணி வழுக்கியதால்  கீழே  விழுந்து தலையில் பலத்த காயம் ஏற்பட்டது”. 

“இவ்வாறு இரண்டொரு நாட்கள் செல்கையில் ஒரு நாள் நான் குளித்து விட்டு வெளியே வரும் போது,  வீட்டு எஜமானி  குண்டூசியால்  என் கைகளில் குத்தினார்.  குண்டூசீயை குத்தி விட்டு வெளியே எடுத்து விட்டதாகவே நான் நினைத்தேன். மறுநாள் என் கைகள் வீங்கின. அப்படியே  இலங்கைக்கு வந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்பே கை, கால்கள், நெஞ்சில் குண்டூசிகள் இருப்பதை அறிந்து கொண்டேன்“.

“புகைப்படத்திலிருந்து வந்த வெறுப்பே இவை அனைத்துக்கும் காரணமாக அமைந்தது. இதனால்,என்னை பயிற்சி இன்றி அனுப்பிய முகவர் மற்றும் தரகருக்கு எதிராக பசுமலை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளேன்” என்றார்.

இதேவேளை,  பாதிக்கப்பட்டு நாடு திரும்பிய இப்பெண் அரசாங்கம் அல்லது இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் நலன்புரி விடங்களையும் இழந்துள்ளார். அதாவது காப்புறுதி பணத்தை கூட பெற முடியாமல் போனமைக்கு காரணம் பதிவு செய்யப்படாத முகவர் ஊடாக சென்றமையாகும்.

எனவே இந்தப் பெண்ணுக்கான திறன், மொழி பயிற்சிகளை வழங்காமல் அவரை அனுப்பிய முழு பொறுப்பையும் சம்பந்தப்பட்ட முகவர் நிலையமே எடுக்க வேண்டும்.

ஆனால், போலி முகவர் நிலையங்கள் ஊடாக புலம்பெயர் தொழிலாளர்களாகச் சென்று பாதிக்கப்பட்ட நிலையில் தினம் தினம் பலர் நாடு திரும்பினாலும் சம்பந்தப்பட்ட முகவர் நிலையங்கள் எவ்வித தடையும் பயமுமின்றி தமது சட்டவிரோத செயற்பாடுகளை தொடர்ந்து முன்னெடுத்து சென்று கொண்டிருக்கின்றமை ஆச்சிரியமாக உள்ளது.

காரணம் இலங்கை வெளிநாட்டு பணியக அதிகாரிகளே இந்த விடயத்தில் கவனமெடுத்து இவ்வாறான போலி முகவரகங்களை தடைசெய்யும் நடவடிக்கையையும் முன்னெடுக்க வேண்டியது கட்டாயமாகும்.

இவ்வாறான சம்பவங்களை தடுக்கவும் தவிர்ப்பதற்காகவுமே இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகமானது தற்போது நாடளாவிய ரீதியில் பல்வேறு வேலைத்திட்டங்களை முன்னெடுத்து வருவதுடன் அதனால் பல குடும்பங்கள் நன்மையடைந்தும் வருகின்றன.

இலங்கை வெளிநாடு வேலைவாய்ப்பு பணியகத்தின் வேலைத்திட்டங்கள்

அதாவது ஒரு தடவையோ ஒன்றுக்கு மேற்பட்ட தடவையோ உரிய திறன் பயிற்சிகள் மற்றும் முறையான பதிவுகள் ஊடாக புலம்பெயர் தொழிலாளர்களாக சென்று பணிபுரிபவர்கள் மற்றும்  பணிபுரிந்து நாடு திரும்பியவர்களை கௌரவித்து, அவர்களின் செயற்பாட்டினை ஊக்குவிக்கும் வகையில் அவர்களின் பிள்ளைகளுக்கு புலமைப் பரிசில்கள் கற்றல் உபகரணங்கள் வழங்கும் நடவடிக்கை மே மாதம் 26ஆம் திகதி  தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார தலைமையில் நடைபெற்றது.

ஊவா மாகாண புலம்பெயர் நலன்திட்ட மத்திய நிலையத்தின் ஊடாக இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டதுடன் இதன்போது,   212 மாணவர்களுக்கு தலா 10,000 ரூபாய் பெறுமதியான கற்றல் உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டன. 

மேலும் புலமைபரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்கள், உயர்தரம் மற்றும் சாதார தரம் சித்தியடைந்த மாணவர்களுக்கும் பல்கலைக்கழகங்களுக்கு தெரிவான மாணவர்களுக்கும் இந்த புலமைப்பரிசில்களும் கற்றல் உபகரணங்களும் வழங்கி வைக்கப்பட்டன.

“90 பேருக்கு 2.33 மில்லியன் ரூபாய் பெறுமதியான புலமைப்பரிசில்கள் வழங்கப்பட்டது “என   வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் பிரசார பொதுமக்கள் தொடர்பாடல் பிரிவின் முகாமையாளர்  பிரசன்ன அபேவிக்ரம தெரிவித்தார். 

அதேப்போல் “சட்டரீதியாக பதிவு செய்து ஒன்றுக்கு மேற்பட்ட தடவைகள் புலம்பெயர் தொழிலாளர்களாக சென்று வந்த  179 புலம்பெயர் தொழிலாளர்களின் பிள்ளைகளுக்கு 15 இலட்சத்து 75ஆயிரம் ரூபாய் பெறுமதியான புலமைப் பரிசில்கள் வழங்கி வைக்கப்பட்டது என  இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் ஊவா மாகாணத்துக்கு பொறுப்பான சிரேஸ்ட முகாமையாளர் திருமதி கால்லகே தெரிவித்தார்.

அதேபோல், அண்மையில் யாழ்ப்பாணத்திலும் ‘GLOCAL FAIR 2023’ என்ற வேலைத்திட்டமும் முன்னெடுக்கப்பட்டது.

இதன்போதும் புலம்பெயர் தொழிலாளர்களாகச் சென்று நாடு திரும்பி சுயதொழிலில் சிறப்பாக ஈடுபட்டு வரும் பலர் கௌரவிக்கப்பட்டதுடன் பதிவு செய்யப்பட்ட 25 நிறுவனங்களின் உரிமையாளர்களும்   கௌரவிக்கப்பட்டனர்.

ஏமாற்றுக்காரர்களிடம் ஏமாறாமல் தொழில் வாய்ப்பை பெறுதல் தொழில் பயிற்சி நிலையங்கள்,பயிற்சி தொடர்பான தகவல்கள், நலன்புரி விடயங்கள் தொடர்பான அனைத்து விடயங்களும் இதன்போது முன்னெடுக்கப்பட்டன.

அத்துடன், முறையாக பதிவு செய்து  ஆறு தடவைகளுக்கு மேல் புலம்பெயர் தொழிலாளர்களாக   சென்று வந்த  97 பேரின் பிள்ளைகளுக்கு   7 இலட்சத்து 17ஆயிரம் ரூபாய் புலமைப்பரிசில்கள் வழங்கி வைக்கப்பட்டன.

வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தால் பதுளையில் முன்னெடுக்கப்பட்ட  குறித்த வேலைத்திட்டத்தால் பயனடைந்த  திருமதி  எம்.பி நஸீரா இவ்வாறு கூறுகிறார் ;

” நான் மஹியங்கனைப் பகுதியில் வசிக்கிறேன். எனக்கு  நான்கு பெண் பிள்ளைகள் இருக்கின்றனர். இதில்  தரம் 10 இல் கல்வி பயிலும் இரண்டாவது மகளுக்கும் தரம் ஆறில் கல்வி பயிலும் மற்றொரு மகளுக்கும் இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் கீழ், பதுளை புலம்பெயர் நலன் திட்டம் மத்திய நிலையம் கற்றல் உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டது” என  திருமதி  எம்.பி நஸீரா தெரிவித்தார்.

“எனது கணவர் தற்போது 9 மாதங்களாக குவைட் வீடொன்றில் சாரதியாக பணியாற்றி வருவதுடன், இதற்கு முன்னரும்  முறையாக பதிவு செய்து திறன் பயிற்சிகள் பெற்று  6 வருடங்கள் குவைட்டில் பணிபுரிந்து நாடு திரும்பினார். அவரது இந்த நடவடிக்கையைப் பாராட்டி எ னது பிள்ளைகளுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டன. , மேலும், 10,000 ரூபாயைப் பெறுவதற்கான விண்ணப்பத்தையும் அதிகாரிகளுக்கு வழங்கியுள்ளேன்“ என்றார்.

“தற்போதைய பொருளாதார நெருக்கடியின் மத்தியில் பாடசாலை உபகரணங்களின் விலைகள் பன்மடங்கு அதிகரித்துள்ளன. எனவே, எனது பிள்ளைகளுக்கு கிடைத்த கற்றல் உபகரணங்களால் அந்த பொருள்களை கடையில் வாங்கும் செலவு எனக்கு மீதமாகியுள்ளது” என்றார். 

திறன் பயிற்சி ஏன் அவசியம்?

“போதுமான பயிற்சி இல்லாமல் செல்லும் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் அபாயகரமான உபகரணங்களைக் கையாள்வதற்கான அறிவும் திறமையும் இல்லாமல் இருக்கலாம். அல்லது பணிகளைப் பாதுகாப்பின்றிச் செய்யலாம். இது பணியிட விபத்துக்கள், காயங்கள் மற்றும் உயிரிழப்புகளின் அதிக ஆபத்துக்கு வழிவகுக்கும்“ என இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் வடமாகாணத்துக்கு பொறுப்பான அதிகாரி சுனில் ஹிந்தரமுல்ல தெரிவித்தார்.

“அத்துடன் இவ்வாறான  தொழிலாளர்கள் பெரும்பாலும் முதலாளிகளால் சுரண்டலுக்கு ஆளாவதுடன் அவர்கள் தங்கள் திறன்களுக்கு அப்பாற்பட்ட பணிகளைச் செய்ய நிர்பந்திக்கப்படலாம் அல்லது சரியான இழப்பீடு இல்லாமல் நீண்ட நேரம் வேலை செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்படலாம்”.

குறைந்த சம்பளம் வழங்கப்படலாம். பாகுபாடு அல்லது பாரபட்சத்தை தொழில் இடங்களில்  சந்திக்கலாம் என்றார்.

“எனவே இவ்வாறான விடயங்களிலிருந்து பாதுகாப்பு பெறுவதற்கும் தொழிற் திறன், தொழிநுட்ப அறிவை வளர்த்துக்கொள்ளவும் அதிக சம்பளத்தை பெறுவதற்கும் இலங்கையிலிருந்து செல்லும் ஒவ்வொரு புலம்பெயர் தொழிலாளியும் பதிவு செய்யப்பட்ட முகவர் ஊடாக  திறன் பயிற்சி பெற்று செல்வது அவசியம்” என்றார்.

”அதாவது வரையறுக்கப்பட்ட கல்வி வாய்ப்புகள் அல்லது நிதிக் கட்டுப்பாடுகள் போன்ற பல்வேறு காரணிகளால் தொழில், திறன் பயிற்சியின்றி புலம்பெயர் தொழிலாளர்களாக செல்பவர்கள்  அதன் பாதிப்பை பன்மடங்காக எதிர்கொள்வர்”  என இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் வடமாகாணத்துக்கு பொறுப்பான அதிகாரி சுனில் ஹிந்தரமுல்ல தெரிவித்தார்.

மஹேஸ்வரி விஜயனந்தன்

இந்தக் கட்டுரை முதலில் ஆகஸ்ட் 20, 2023 அன்று தமிழன் வார இதழில் வெளியிடப்பட்டது.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments