Saturday, April 27, 2024
HomeStorytellingGeneralபறந்துபறந்துஉழைத்தாலும்இன்னும்பரிதாபநிலைதான்

பறந்துபறந்துஉழைத்தாலும்இன்னும்பரிதாபநிலைதான்

 ** புலம்பெயர் தொழிலாளர்கள்: பிரச்சனைகளை முறையிடுவதற்கு தயங்க வேண்டாம்

** ஒப்பந்தத்தில் பொருந்திய தொழில் வழங்காவிடின் உடனே முறையிடுங்கள்

** இலங்கை வெளிநாட்டு வேலை வாய்ப்பு பணியகம் எப்போதும் உஷார்

** தொழில் செய்யும் நிறுவனங்கள்//  உரிமையாளர்களோடு நல்லுறவை பேணுங்கள்.

இலங்கையை பொறுத்த வரைக்கும், புலம்பெயர்வு என்பது காலம் காலமாக நடைபெற்று கொண்டு இருக்கும் ஒரு நிகழ்வே ஆகும். ஆதலால் தொழில் சார் புலம்பெயர் என்பது இலங்கைக்கு புதிதான ஒரு விடயம் அல்ல. பிரித்தானிய ஆதிக்கத்தின் கீழான காலத்தில் பிரதானமாக பிரித்தானியருக்கு சொந்தமான இறப்பர் தோட்டங்களில் பணி புரிவதற்காக இலங்கை தமிழர்கள் முதல் முறையாக புலம் பெயர்ந்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது (IPS , 2008)

 இன்றைய காலத்தில் பெரும்பாலான தொழிலாளர்கள் கட்டார், சவுதி அரேபியா, ஐக்கிய அரபு இராஜ்ஜியம், குவைத் ஆகிய நாடுகளுக்கு புலம் பெயர்கின்றனர். அவர்களின் தொழில் சார்ந்த புலம்பெயர்வுக்கு பொருளாதார பிரச்சனை, வேலைவாய்ப்பு இன்மை, குறைந்த ஊதியம், சுற்று சூழல் பிரச்சனை போன்றவை காரணமாக  அமைந்தாலும்  குடும்ப வறுமை அதற்கான பிரதான காரணமாக அமைகின்றது. ஆனாலும் கூட பல  தொழிலாளர்கள் முறையற்ற வேலை பயிற்சி  மற்றும் திறன் அற்ற புலம்பெயர்வை மேற்கோள்கின்றார்கள். இதன் மூலம்  பல குடும்பங்களின் வாழ்கை கேள்வி குறியாகி உள்ளது… திறன் அற்ற புலம்பெயர்வை இல்லாது ஒழிக்கும் முயற்சியில் இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

 பொருளாதார  இலக்கோடு  புலம்பெயரும் திறன் தொழிலாளர்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகள் இன்னும் பெரும் சவாலாகவே இருக்கின்றன. பயிற்சிகள் இல்லாமல் சட்ட விரோதமாக வெளிநாடு செல்வோர் எதிர்கொள்ளும் பிரச்சனைகள் ஒரு புறமும், முழுமையான பயிற்சிகள்  பெற்று  தொழிலுக்கு  ரன் தொழிலாளர்களாக வெளிநாடு செல்கின்றவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகளும் துன்பத்தின் தொடர் கதைகளாகவே இருக்கின்றன.

 உரிய தொழிலுக்கு முழுமையான பயிற்சி பெற்று ஒப்பந்த அடிப்படையில் செல்கின்றவர்களும், மத்திய கிழக்கு நாடுகளில் பெரும் பிரச்சனைகளை எதிர் கொண்டு நாடு திரும்பும் அவலமும் தொடர்ந்து கொண்டு தான் இருக்கின்றன. ஒப்பந்தம் செய்வது ஒரு தொழிலுக்கும், அங்கு சென்றதும் வழங்கப்படுவது வேறு தொழிலுமாக இருக்கின்றது. இதுவும் புலம்பெயர் திறன் தொழிலாளர்களுக்கு  கடுமையான பாதிப்பை ஏற்படுத்துகின்றது.

 மத்திய கிழக்கு நாடுகளுக்குச் சென்று நெருக்கடி ஆகின்ற பெரும்பாலான தொழிலாளர்கள் இப்படியானவர்களாகவே இருக்கின்றார்கள்.

பயிற்சி எடுத்துச் சென்ற தொழிலுக்கு பதிலாக வேறு தொழில்களே, ஒரு சில எஜமானர்களால் வழங்கப்படுகின்றன. இதனால் நிலை குலைந்து போகும் நமது தொழிலாளர்கள், தொழிலுக்கு மட்டும் எஜமானர்களால் துன்புறுத்தப்பட்டு  வருவது இப்போதும் நடந்து கொண்டுதான் இருக்கின்றன.

 அரசாங்கமும் வெளிநாட்டு வேலை வாய்ப்பு பணியகமும் கடுமையான பயிற்சிகள் வழங்கி துரித பணிகளில் ஈடுபட்டாலும், முற்றுப்புள்ளி வைக்க முடியாமல்  இருக்கிறது என்பது கவலைக்குரியதாகவே இருக்கின்றது.

திறன் புலம்பெயர் தொழிலாளியாக சென்று நாடு திரும்பிய ஒருவர் தன்னுடைய நிலை பற்றி விபரிக்கிறார்;

“நான் 1986 ஆம் ஆண்டு வெளிநாடு சென்றேன் தம்பி… நான் வெளிநாடு சென்ற நேரத்தில் எனக்கு சம்பளம் 250 ரியால். அந்த நேரத்தில் ஒரு ரியால் 7 ரூபாய்க்கு சமம் ” என தனது வெளிநாட்டு வாழ்கை வரலாற்றை கூற ஆரம்பித்தார் திறன் புலம்பெயர் தொழிலாளர் மட்டக்களப்பு மண்முனை தென் எருவில்பற்றை சேர்ந்த  மஹிந்திரராஜா.

மேலும் தொடர்ந்த மஹிந்திரராஜா ” நான் இலங்கையில் இருந்து போகும் போது எனக்கு மேசன் வேலை , பைப் லைன் வேலைகள் எல்லாவற்றிலும் திறனோடு தான் சென்றேன் … அந்த நேரம் மேசனுக்கு இலங்கையில் ஒரு நாள் சம்பளம் 7 ரூபாய் தான்.. வெளிநாடு போகும் போதே எனக்கு கடன்..

2 வருட ஒப்பந்தத்தில் தான் வெளிநாடு சென்றேன். அங்கு சென்று பைப் லைன் வேலைக்கும் பார்ட் டைம் வேலைக்கும் சென்றேன். 700 ரியால் சம்பளத்திற்கு வேலை செய்யிறவங்களை விட நான் அதிகமாகவே வேலை செய்வேன். ஆனாலும் எனக்கு ஒப்பந்தத்தின் அடிப்படையில் சம்பளம் 250 ரியால் தான் தந்தார்கள். எனக்கு ஒப்பந்தம் முடிஞ்சு நான் இலங்கை வந்த பிறகு  நான் வேலை செய்த கம்பெனி எனக்கு விசா அனுப்பியது. 700 ரியால் சம்பளம் தருகின்றோம் வேலைக்கு வாங்க என்று… எனக்கு 700 ரியால் அந்த காலத்தில் பெரிய காசு…

நான் விரைவாக அந்த கம்பனிக்கு வேலைக்கு சென்று விட்டேன். நான் சென்ற பிறகு எனக்கு தனியாக ப்ராஜக்ட் (Project) செய்ய ஒரு டீம் தந்தார்கள். என்னுடைய ஸ்பான்சர் சம்பளமும் 1500 ரியாலாக உயர்ந்தது… என்னுடைய வேலை நேர்த்தியாக இருந்ததால் எனக்கும் ப்ராஜக்ட் அளவு அதிகரித்தது. சம்பளமும் இறுதியாக 5000 ரியாலாக மாறி விட்டது.

நானும் வீடு, காணி அனைத்தும் வாங்கி செட்டில் ஆன பின்பு  நாட்டுக்கு வந்திட்டேன்.. இப்போது  கார் , வீடு காணிகள் இருக்கின்றன. ஒரு கடைத் தொகுதியை கட்டுவித்து வாடகைக்கு கொடுத்துள்ளேன். அனைத்தும் என்னுடைய திறமையில் கிடைத்தது தான் தம்பி ” என தனது தொழில் திறனின் முக்கியத்துவம் பற்றி கூறினார் மஹிந்திரராஜா…

வெளிநாடுகளுக்கு தொழில் அடிப்படையில் புலம்பெயர்பவர்களின் திறன்களை விருத்தி செய்ய இலங்கை அரசு பல்வேறு செயற்திட்டங்களை மேற்கொண்டு வருகிறது.கடந்த சில வாரங்களுக்கு முன் யாழ்பாணத்தில் நடைபெற்ற “குளோக்கல் பெயார் 2023 ”  நடமாடும் சேவையை இதற்கு ஒரு உதாரணமாக கூறலாம்.

தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சின் மூலம் நடாத்தபட்ட இச்சேவை மூலம்  வெளிநாட்டு வேலைவாய்ப்புகள் தொடர்பான பிரச்சினைகளுக்கான தீர்வுகள் உள்ளிட்ட பல சேவைகளுக்கான விழிப்புணர்வு செயற்திட்டமும் கண்காட்சியும் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.  இவ்வாறு பல செயற்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருவது மக்கள் மத்தியில் ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்தும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை.

 **புலம்பெயர் தொழிலுக்கு சட்ட விரோதமாக செல்வோரின் அவலம்

திறன் அற்ற தொழிலாளர் புலம்பெயர் நாளுக்கு நாள் அதிகரித்து செல்லும் ஒரு விடயமாக உள்ளது. பதிவு செய்யப்படாத முகவர் நிலையங்கள் மூலம் புலம்பெயர்வது மற்றும் சட்டவிரோதமாக புலம்பெயர்வது என்பவை இதற்கான காரணங்களாக உள்ளன.

” திறன்  தொழிலாளர் புலம்பெயர் தொடர்பான சரியான விழிப்புணர்வு மக்கள் இடத்தில் இருக்கும் பட்சத்தில்  மட்டுமே இதில் இருந்து தப்பிக்க முடியும் ” என கூறுகிறார், அம்பாறை மாவட்டம் நீலாவணை நாற்பது வீட்டுத் திட்டத்தில் வசிக்கும் குடும்பஸ்தர் ஒருவர்,

 ” சிங்கள மொழி பேசுகின்ற முகவர் ஒருவர் மூலமாகத்தான் நான் அரபு நாட்டுக்கு, வீட்டு வேலை பணிப்பெண்ணாக சென்றேன்.. அரபு நாட்டில் இருக்கின்ற ஏஜெண்ட் என்னை  ஒரு வீட்டுக்கு கூட்டி சென்று வேலைக்கு சேர்த்தார். சேர்க்கும் போது அவருடைய தொலைபேசி இலக்கத்தை தந்து எதுவும் பிரச்சனை என்றால், இந்த நம்பருக்கு கால் பண்ணுங்க…. நான் உடனடியாக வருவேன் என்று சிங்களத்தில் பேசினார், அந்த ஏஜெண்ட்.

அதற்கு பிறகு பல முறை அந்த தொலைபேசி இலக்கத்திற்கு கால் பண்ணி இருக்கின்றேன். 1000 தடவை கால் செய்தால் ஒரு தடவை தான் கால் எடுப்பாங்க.  அப்பவும் நமக்கு சரியான தீர்வு கிடைக்காது. சிறிது நாட்கள் அட்ஜெஸ்ட் பண்ணி போங்க என்று கூறி விட்டு ஃபோன் கட் பண்ணிடுவாங்க”

மேலும் தொடர்ந்த அந்த குடும்பஸ்தர் ” அவர்கள் எதிர்பார்க்கின்ற ஸ்டைல் க்கு எனக்கு சமைக்க தெரியவில்லை. 3 மாசம் பிறகு தான் அந்த சமையலை நான் கற்றுக் கொண்டேன். அது வரை தினம் தினம் எனக்கு பிரச்சனை தான்.. மறுபடியும் வீட்டுக்கு ஓடி வந்திடலாம் என்று தோணும். குடும்ப சூழ்நிலை, பிள்ளைகளோட படிப்பு எல்லாத்தையும் மனசுல வைத்து தான் அந்த கஸ்டங்களை எல்லாம் தாக்கு பிடித்தேன். இருந்தாலும் என்னால் ஒரு கட்டத்துக்கு மேல் தாக்கு பிடிக்க முடியவில்லை. நான் நாட்டுக்கு வர போகின்றேன் என்று ஒரு பிடிவாதத்தில்  நின்று நாட்டுக்கு வந்து விடடேன். நாட்டுக்கு வந்த பிறகு  எனக்கு இன்னும் தல வலி கூட தொடங்கியது. என்னுடைய கணவரும் என்னை போன்று வெளிநாடு சென்று அங்கு வேலை பிடிக்காமல் வந்து விட்டார். பிறகு குடும்பத்தை பார்க்க வெளிநாடு சென்ற நானும் வந்துவிட்டேன். வீட்டு செலவுக்கு பணம் இல்லை, கடனும் கூடுதலாக இருந்தது. என்ன செய்வது என்று தெரியாமல் இருந்த நிலை அது ” என தனது பொருளாதார நிலையை விபரித்தார் அக் குடும்பஸ்தர்.

 ” மறுபடியும் வெளிநாடு போகலாம் என்று முடிவு எடுத்தேன் எனக்கு வேற வழி தெரியவில்லை.  நல்ல ஏஜெண்ட் ஒருவர் தான் எனக்கு அனைத்தும் ஒழுங்கு படுத்தி தந்தவர்… இங்கு ஒரு மாசம் அப்படி ட்ரைனிங் தந்தார்கள். வீடு கிளீன் பண்றது அரபிக் மொழி அனைத்தும் பழக்கி தந்தார்கள். அனைத்தும் தெரியும் என்ற நம்பிக்கையில் நான் மறுபடியும் வெளிநாடு சென்றேன்.

இப்போது நான் வேலைக்கு சென்ற வீடும் நல்லது. நன்றாக பழகுவார்கள் நம்மை நன்றாக கவனிப்பார்கள். 2 வருட ஒப்பந்தம் முடிந்ததும் நாட்டுக்கு  வந்து மறுபடியும் அந்த வீ‌ட்டிற்கே வேலைக்கு சென்றேன். மொத்தமாக 5 வருடம் அங்கு நான்  இருந்தேன்.

முதல் தடவை சரியான ஏஜெண்ட் மூலம் சென்று இருந்தேன் என்றால் எனக்கு என்று சேமிப்பு ஒன்று இருந்து இருக்கும் என இப்போது தான் யோசிக்கின்றேன் ” என்று தனது சோகத்தை வெளிப்படுத்தினார் அந்த குடும்பஸ்தர்..

குடும்பஸ்தர்கள் அவர்களின் குடும்ப சூழ்நிலை காரணமாக திறன் அற்ற தொழிலாளர் புலம்பெயர்வுக்கு தள்ளப்படுவதோடு தமது குடும்பத்தின் நலன் கருதி வெளிநாடுகளில் தாங்கள் அனுபவிக்கும் இன்னல்களை

பொறுத்துக் கொள்கிறார்கள் என உணர முடிகிறது. மற்றும் அதில் பலர் வெளிநாட்டு வாழ்க்கையை முடித்து வீடு திரும்பும் போது கூட  தமக்கு என்று எந்த சேமிப்பும் இல்லாமலே நாட்டை வந்தடைகின்றனர். நாட்டுக்கு வந்தடையும்  அவர்கள் வெளிநாடு செல்ல முன் தாம் வாழ்ந்த வாழ்க்கையை மீண்டும் தொடர ஆரம்பிக்கின்றனர்.

ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்டுள்ள வேலை வழங்கப்படாத சந்தர்ப்பங்கள்

ஒப்பந்தத்தில் தொழிலாளர்களுக்கு  ஒரு வேலை குறிப்பிடப்பட்டு வெளிநாடு சென்ற பின்  வேறு வேலை வழங்கப்படும் சந்தர்ப்பங்களும் தற்போது காணப்படுகின்ற ஒரு பிரச்சினையாக உள்ளது. இத்தகையவர்கள் எஜமானர்களால் தண்டிக்கப்படுவதும், சித்திரவதைகளுக்கு   உள்ளாகுவதும் இன்னும் தொடர்ந்து கொண்டு தான் இருக்கின்றன.

 பயிற்சி பெறுகின்றவர்கள் தாங்கள் அதனில் தேர்ச்சி பெற்று, தெளிவாக ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டு புலம்பெயர்ந்து தொழிலுக்கு செல்கின்ற பொழுது, சம்பந்தப்படாத ஒரு தொழில்  பலாத்காரமாக திணிக்கப்படுவது, பெரும் சங்கடங்களை அவர்களுக்கு ஏற்படுத்துகிறது.

 இப்படியானவர்கள் என்ன செய்யலாம்..?

“ஒருவருக்கு ஒப்பந்ததில் ஒரு வேலை குறிப்பிடப்பட்டு வெளிநாடு சென்ற பிறகு வேறு வேலை வழங்கப்படும் சந்தர்ப்பங்களில் கண்டிப்பாக பாதிக்கப்பட்டவரால் முறைப்பாடு வழங்கமுடியும் ” என கூறுகின்றார்  வெளிநாட்டு வேலை வாய்ப்பு பணியகத்தின் பிரதிப் பொது முகாமையாளர் (பயிற்சி மற்றும் ஆட்சேர்ப்பு) செனரத் யாப்பா

 ” ஆனால் தற்போது பலர் ஒரு வேலையில் தமக்கு திறன் இருப்பதாக கூறி வெளிநாடு சென்று, பின்னர் அவ் வேலை பற்றிய அறிவு இன்மையால் பல இன்னல்களை எதிர்கொள்ளும் சந்தர்ப்பங்களும் அதிகமாக காணப்படுகின்றது. உதாரணமாக:- தமக்கு வெல்டிங் வேலை தெரியும் என கூறி வெளிநாடு சென்ற பிறகு அந்த வேலை செய்ய திறன் இல்லாத காரணத்தால் கஷ்டப்படுகிறார்கள். என்னவாக இருந்தாலும்,உங்களுக்கு பிரச்சனை ஏற்படும் சந்தர்ப்பங்களில் உங்களால் முறைப்பாடு செய்ய முடியும். கம்பனிக்கும் தொழிலாளர்களுக்கும் இடையே இதன் போது பரஸ்பர உடன்பாடு ஏற்படும் போது பிரச்சனை ஒன்றும் இல்லை. மாறாக நீங்கள் கம்பனி உடன் உடன்படவில்லை என்றால் நிச்சயமாக முறைப்பாடு செய்ய முடியும் ”  என்றும் செனரத் யாப்பா கூறுகிறார்.

 ஒன்று மட்டும் உண்மை,

பல புலம் பெயர் தொழிலாளர்கள் வெளிநாட்டு வேலைக்கு செல்லும் ஆர்வத்தில் தொழில் திறன் இருப்பதாக கூறி தங்களை தாமே ஏமாற்றி கொண்டுதான் இருக்கின்றார்கள்.

 ஆகவே, பொருளாதார நெருக்கடியில் புலம்பெயர துடிக்கின்ற தொழிலாளர்களே, பொறுமையோடும்  நிதானத்துடனும் பிரச்சனைகளை கையாளுங்கள்.

 முழுமையான பயிற்சியை முடியுங்கள். அதன் பின்னர், சட்ட அங்கீகாரம் பெற்ற வெளிநாட்டு முகவர் நிலையங்கள் ஊடாக உங்கள் பயிற்சித் திறமைக்கேற்ற தொழிலுக்கு செல்லுங்கள்.இது ஆரோக்கியமான செயல்பாடு மட்டுமல்ல,  உங்கள் எதிர்காலத்துக்கு கட்டியம் கூறும் நடவடிக்கையாக அமையும்.

இந்தக் கட்டுரை முதலில் ஆகஸ்ட் 31, 2023 அன்று தமிழ் நாளிதழ்வார இதழில் வெளியிடப்பட்டது.

     

சி.நிலுசன்

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments