Saturday, September 7, 2024
HomeStorytellingGeneralதொழில் தகைமை எதுவுமின்றி வெளிநாட்டு வேலைவாய்ப்புக்குச் செல்வது விஷப்பரீட்சை!

தொழில் தகைமை எதுவுமின்றி வெளிநாட்டு வேலைவாய்ப்புக்குச் செல்வது விஷப்பரீட்சை!

– தொழில் புரியச் செல்கின்ற நாட்டுக்கு அவசியமான உரிய பயிற்சியைப் பெறுவதே முதலில் அவசியம்

சிறுவயதிலேயே திருமணம் முடித்துவிட்டேன். கணவருக்கு சரியான தொழில் இல்லை. அதனால் தான் பிள்ளைகளை கணவரின் பொறுப்பில் விட்டு சவூதிக்கு பணிப்பெண்ணாக சென்றேன். தொழில் ஒப்பந்ததை கூட சரியாக என்னால் புரிந்துகொள்ளமுடியவில்லை. எனக்கு போதிய படிப்பறிவோ, தொழில்பயிற்சிகளோ இருக்கவில்லை. சவூதி ரியாத் நகரிலுள்ள வீடொன்றுக்கு பணிப்பெண்ணாக இரண்டு வருட தொழில் ஒப்பந்தத்தில் என்னை அனுப்புவதாகவே ஏஜன்சிகாரர்கள் கூறினார்கள். அதன்படி நானும் சவூதி பயணமானேன். எனினும் நான் வீட்டுப் பணிப்பெண்ணாக வேலைக்கு அமர்த்தப்படவில்லை. சவூதி ரியாத் நகரிலிருந்து பல கிலோமீற்றர் தொலைவிலுள்ள கிராமத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டேன். அங்கு எனக்கு காலையிலிருந்து செம்மறி ஆடுகள் பண்னையில் வேலை. பின்னர். இரவில் அதன் அருகிலிருந்த வீடொன்றில் வேலை. சில நேரங்களில் அதிகாலை 3.00 மணிக்கு படுக்கைக்குச் சென்று காலை 5.30 மணிக்கு எழுப்பவேண்டும். நாளுக்கு நாள் நிலைமைகள் மோசமடைந்தன. எஜமானின் மகன்மார்கள் அடிக்கடி அங்கு வந்து தங்குவார்கள். அவர்களின் துன்புறுத்தல்கள் ஒருபக்கமிருக்கும். என்னால் தமிழை தவிர வேறு மொழிகளில் கதைக்கமுடியாது. அதனால் பிரச்சினைகளை வெளியில் சொல்லமுடியவில்லை. எதிர்த்து கேள்வி கேட்டவும் முடியவில்லை. சிறிதுகாலத்தில் நான் நோய்வாய்ப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டேன். அங்கு பணிபுரிந்த இலங்கையைச் சேர்ந்த பெண்ணொருவரின் உதவியுடன் மீண்டும் இலங்கைக்கு வந்தேன்’ என்கிறார் நாவலப்பிட்டி கட்டபுலா தோட்டத்தைச் சேர்ந்த யோகராணி. (பெயர் மாற்றப்பட்டுள்ளது.)

மலையக பெருந்தோட்ட பகுதிகளிலிருந்து வெளிநாட்டு தொழில் தேடி செல்பவர்களின் எண்ணிக்கை நாளாந்தம் அதிகரித்து வருகின்ற போதும் தொழில் திறன், தொழில்சார் பயிற்சிகள், மொழியறிவு என்பன இல்லாமையால் துஷ்பிரயோகங்களுக்கும் சுரண்டலுக்கும் பலர் உட்படுகின்றனர். கட்புலா தோட்டப் பெண்ணின் கதை அதற்கொரு உதாரணம். வேறு பலர் சில சமயங்களில் போலிமுகவர்களிடமும் சிக்கிக் கொண்டு இதை விடப் பல துன்பங்களையும் அனுபவிக்கின்றனர்.இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் புள்ளிவிபரங்களின் படி மலையக பெருந்தோட்ட மக்கள் செறிந்து வாழும் கண்டி, பதுளை, இரத்தினபுரி, மாத்தளை, மொனராகலை, நுவரெலியா, கேகாலை மாவட்டங்களில் கடந்த ஐந்தாண்டுகளில் (2018-2022) தொழிலுக்காக நாட்டை விட்டு வெளியேறியவர்களின் எண்ணிக்கை 64309.

இவர்களில் அதிகமானோர் குறைந்த தொழில் திறன் (low skills), அல்லது ஒரளவு தொழில் திறன், பயிற்சிகளுடனேயே சென்றுள்ளனர்.இப்புள்ளிவிபரங்களின் படி மலையகத்திலிருந்து தொழில்திறனுடன் வெளிநாடுகளுக்கு செல்பவர்களின் எண்ணிக்கை மிக குறைவாகவே காணப்படுவதை அவதானிக்க முடியும். அதிலும் பெண்கள் குறைந்த தொழில்திறனுடனேயே வெளிநாட்டு வேலைவாய்ப்புகளுக்காக சென்றுள்ளதுடன் அதிகளவில் வீட்டு பணியாளர்களாக சென்றுள்ளனர்.

இது தொடர்பில் இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் பயிற்சி மற்றும் ஊடக பிரதிப் பொது முகாமையாளர் செனரத் யாப்பா தெரிவிக்கையில்,

இலங்கையிலிருந்து வெளிநாட்டு வேலைவாய்ப்பை பெற்றுச் செல்வோரில் 23 வீதமானோர் வீட்டுப் பணிப்பெண்களாகவிருக்கின்றனர். சமீப காலங்களாக வீட்டுப்பணிப்பெண்களாக செல்லும் இலங்கை பெண்களின் எண்ணிக்கையிலும் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது. 2021 ஆம் ஆண்டு 35 வீதமான பெண்களும் 2022 இல் 40 வீதமான பெண்களும் 2023 ஆம் ஆண்டு ஜூலை வரையான காலப்பகுதியில் 43 வீதமான பெண்களும் இவ்வாறு வீட்டுப் பணிப்பெண்களாக சென்றுள்ளனர். மலையகத்தை பொறுத்தவரை அதிகளவான பெண்கள் வீட்டுப்பணியாளராகவே செல்கின்றனர். குறைந்த தொழில்திறன் (Low Skills) காரணமாகவே அவர்கள் பெரும்பாலும் மத்திய கிழக்கு நாடுகளுக்கு வீட்டு பணியாளர்களாக செல்கின்றனர். அதுமட்டுமின்றி ஆளுமை, மொழியறிவு, தொடர்பாடல் திறன் போன்ற மென்திறன்களின் முன்னேற்றம் ஏற்படாமை காரணமாகவும் இவர்களால் ஏனைய தொழில்களுக்கு செல்ல முடியாத நிலை காணப்படுகின்றது.

அதிகளவான முறைப்பாடுகளும் வீட்டுப் பணியாளர்களாக செல்பவர்களிடமிருந்தே கிடைக்கின்றன” – என்கிறார் அவர்.

இதனை தடுப்பதற்காக வெளிநாட்டு வேலை வாய்ப்புப் பணியகம் வீட்டுப் பணிப் பெண்களுக்கான பயிற்சி நாட்களை அதிகரித்துள்ள்ளதாகவும் அவர் தெரிவித்தார் ”மத்திய கிழக்கு மற்றும் ஏனைய நாடுகளுக்கு வீட்டுப் உதவிப் பணிப் பெண்களுக்காக முதல் தடவையாக பணிக்குச் செல்லும் பெண்களுக்கு 28 நாட்கள் கட்டாய தங்குமிட (NVQ 3 மட்ட) பயிற்சிநெறி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. NVQ 3 மட்ட சான்றிதழ் மூன்றாம் நிலை தொழில்கல்வி ஆணைக்குழுவினாலேயே வழங்கப்படுகின்றது. இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியக பன்னிப்பிட்டிய, தங்காலை, தம்புள்ள, கண்டி, இரத்தினபுரி, பதுளை, மத்துகம மற்றும் குருநாகல் போன்ற இடங்களில் பயிற்சி நெறியைத் தொடரலாம்.

தற்போது பெண்களுக்கான பராமரிப்பாளர்களுக்கான (Care Givers)வெளிநாட்டு வேலைவாய்ப்புகள் அதிகமாகவுள்ளன. NVQ 3 மட்ட சான்றிதழை வழங்கக்கூடிய 45 நாட்கள் தங்குமிட பயிற்சி நெறியை தொடர்வதற்கான வாய்ப்பும் வழங்கப்பட்டுள்ளது. இதற்கு 22,042 ரூபா கட்டணமாக அறவிடப்படுகின்றது. எனினும் இவை கட்டணம் செலுத்தி பெற்றுக் கொள்ள வேண்டிய பயிற்சியாக காணப்படுவதால் அவற்றை பெரும்பாலும் அக்கறையுடன் பின்பற்றுவதில்லை. அதேபோல் இத்தொழிலுக்கு போதிய ஆங்கில மொழியறிவு தேவைப்படுகின்றது.

வெளிநாட்டு தொழிற்சந்தையில் அதிக கேள்வியுடைய தொழில்களுக்கான பாடநெறிகள் மலையக தொழில்பயிற்சி நிலையங்களில் இல்லை. நாங்கள் தொழில் பயிற்சி அதிகார சபையுடன் ஒப்பந்தமொன்றை கைச்சாத்திட்டுள்ளோம். அதற்கமைய மத்திய மாகாணத்திலுள்ள தொழில்பயிற்சி நிலையங்களில் அத்தகைய 20 பாடநெறிகளை உள்வாங்க நடவடிக்கை எடுத்துள்ளோம். ஆனால் ஜப்பான் மொழியை கற்பிக்கக் கூடிய தமிழ் வளவாளர்களுக்கான பற்றாக்குறை காணப்படுகின்றது. எனவே அத்தகைய வளவாளர்கள் இருப்பின் எங்களை தொடர்பு கொள்ளமுடியும். NVQ மட்ட சான்றிதழ் சர்வதேசத்தால் ஏற்றுக் கொள்ளப்பட்ட ஒன்றாகும். இச்சான்றிதழை கொண்டே தொழில்திறன் மதிப்பீடு செய்யப்படுகின்றது. சிங்கப்பூரில் நிர்மாணத்துறை வேலைவாய்ப்புகளுக்கு NVQ சான்றிதழ் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது” என்று அவர் மேலும் தெரிவித்தார்.

அதேநேரம் மலையக இளைஞர் யுவதிகள் தொழில் கல்வியை பெறுவதிலும் பல்வேறு பிரச்சினைகளை எதிர்நோக்குகின்றனர். இலங்கை தொழிற்பயிற்சி அதிகார சபையின் தகவல்களின் படி இரத்தினபுரி மாவட்டத்தில் 12 தொழிற்பயிற்சி நிலையங்களும் கேகாலை மாவட்டத்தில் 8 தொழிற் பயிற்சி நிலையங்களும் பதுளை மாவட்டத்தில் 8 தொழிற்பயிற்சி நிலையங்களும் மொனராகலை மாவட்டத்தில் 9 தொழிற்பயிற்சி நிலையங்களும் காணப்படுகின்றன. அதேபோல் மத்திய மாகாணத்தில் 9 தொழில் பயிற்சி நிலையங்களும் மாத்தளை மாவட்டத்தில் 6 தொழிற்பயிற்சி நிலையங்களும் நுவரெலியா மாவட்டத்தில் 5 தொழில் பயிற்சிகளும் இயங்குகின்றன.

தொழிற்கல்வியானது பாடசாலையை விட்டு இடைவிலகிய மற்றும் சாதாரணதரத்தில் சிறந்த பெறுபேறுகளை பெறாத மாணவர்களுக்கு தொழில் கல்வி சார் வாய்ப்பினை வழங்கி திறன் மிக்கவர்களாக உருவாக்குவதற்கு உதவுகின்றது. இது மூன்றாம் நிலைக் கல்வி தொழிற்கல்வி ஆணைக்குழுவினால் நிர்வகிக்கப்பட்டுவருகிறது. இது தொழிற்பயிற்சியை முன்னிறுத்தும் ஒரு கல்விமுறையாகும். தொழிற்துறையில் NVQ சான்றிதழ் ஆனது பட்டதாரி மட்டம் வரை காணப்படுகிறது. 18 துறைகளில் 134 மேற்பட்ட டிப்ளோமா பாடநெறிகள் காணப்படுகின்றன. NVQ 7 படிநிலைகளை கொண்டுள்ளது. இளைஞர் யுவதிகள் பயிற்சி நிலையங்களில் இவற்றுள் ஏதாவது ஒரு படிநிலையைப் பூர்த்தி செய்து சான்றிதழைப் பெற்றுக் கொண்டு வெளியேற முடியும். மாணவர்கள் டிப்ளோமா மட்டம் (NVQ 5) உயர் டிப்ளோமா ( NVQ6) அதனைத் தொடர்ந்து பட்டதாரி மட்டம் (NVQ7) வரை தமது தகைமையை வளர்த்துக் கொள்ளலாம் தொழில்பயிற்சி அதிகாரசபையின் NVQ 4 சான்றிதழ் மட்டத்தை பூர்த்தி செய்த மாணவர்கள் உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும் சிறந்த வேலைவாய்ப்புக்களைப் பெறலாம்.

அந்த வகையில் பெருந்தோட்டத்துறையை சேர்ந்த மாணவர்களுக்கு முன்னுரிமை வழங்கும் வகையில் தொண்டமான் தொழிற்பயிற்சி நிலையம் செயற்பட்டுவருகின்றது. இங்கு 17 மேற்பட்ட பாடநெறிகள் காணப்படுகின்றன. பயிற்சிகளின் பின்னர் சர்வதேசரீதியில் தொழிற்தகைமை சான்றிதழ்களை (NVQ) வழங்கப்படுகின்றது. பயிற்சி பெறும் மாணவர்களுக்கு விடுதி மற்றும் உணவு இலவசமாக வழங்கப்படுகின்றது. பெருந்தோட்ட மக்களின் பிள்ளைகளுக்கே முன்னுரிமை வழங்கப்படுகின்றது. இங்கு 6 மாத கால மற்றும் ஒரு வருடகால பயிற்சி நெறிகள் காணப்படுகின்றன. 6 மாத கால கற்கை நெறி நிறைவடைந்த பின்னர் தொழிற் பயிற்சிநெறி 6 மாத காலம் பெறவேண்டும். அதன் பின்னர் வருட இறுதியில் இறுதி மதிப்பீடு மேற்கொள்ளப்பட்டு சான்றிதழ்கள் வழங்கப்படுகின்றன. தொழில்பயிற்சி கல்லூரியில் இணையும் மாணவர் ஒருவர் பயிற்சி மட்டம் 1முதல் 7வரை கற்க முடியும். மட்டம் 3, மட்டம் 4 என்பவற்றுக்கான பயிற்சிகள் வழங்கப்படுகின்றன. இந்நிலையத்தில் (NVQ) மட்டம் 4 இன் நிலையை வெற்றிகரமாக பூர்த்தி செய்த ஒருவர் இலங்கையிலுள்ள ஏனைய தொழிற்பயிற்சி நிலையங்களில் மட்டம் 5 தேசிய டிப்ளோமா மட்டம் 6 உயர் தேசிய டிப்ளோமா 7 தொழில்சார் பட்டதாரி தகமை சான்றிதழ்களை பெற்றுக்கொள்ள முடியும்.

எனினும் இவற்றில் வருடாந்தம் உள்வாங்கப்படும் மாணவர்களின் எண்ணிக்கை நாட்டின் ஏனைய பகுதிகளுடன் ஒப்பிடுகையில் மிக குறைவாக காணப்படுவதுடன் தொழில் கல்வியை பெற்ற ஒருசிலரே வெளிநாட்டு வேலைவாய்ப்புகளை பெற்றுச் செல்கின்றனர்.தொண்டமான் பயிற்சி நிலையத்தின் புள்ளி விபரங்களின்படி கடந்த ஐந்தாண்டு காலப்பகுதியில் நுவரெலியா மாவட்டத்தில் தோட்டப்புறங்களிலிருந்து தொழில் பயிற்சிகளை பெற்றவர்களில் 3% சதவீதமானோரே வெளிநாட்டு வேலைவாய்ப்புகளை பெற்றுச் சென்றுள்ளனர்.

இதுதொடர்பில் தொண்டமான் பயிற்சி நிலைய அதிகாரியொருவர் தெரிவிக்கையில், தற்போது 17 வகையான பாடநெறிகள் எமது பயிற்சி நிலையத்தில் கற்பிக்கப்படுகின்றன. எனினும் இன்று வெளிநாட்டு தொழில்சந்தையில் அதிக வேள்வி அதிகமாகவுள்ள கொரியா மொழி கற்கை நெறி, பாரமரிப்பாளர் (care Givers), ஜப்பான் மொழி கற்கை நெறி போன்றன காணப்படாமை பெரும் குறைப்பாடாகவுள்ளது. ஒருகாலத்தில் ஜப்பான் மொழி பாடநெறி கற்பிக்கப்பட்ட போதும் பொருளாதார நெருக்கடி காரணமாக இடைநிறுத்தப்பட்டது.

வளவாளர்களுக்கான பற்றாக்குறையும் காணப்படுகின்றது. அதேபோல் மலையக இளைஞர்களின் தொழிற்பயிற்சி வீதம் குறைவாக காணப்படுவதற்கு மூன்று பிரதான காரணிகள் தாக்கம் செலுத்துகின்றன. குடும்பம், பாடசாலை, சமூகம் என்பன தொழில் பயிற்சிகளை பெறுவதில் பெரும் தாக்கம் செலுத்துகின்றது. குடும்பத்தில் காணப்படும் வறுமை, பெற்றோரிடம் ஆர்வமின்மை, உடனடி வருமானத்துக்கான தேவை என்பவற்றை குறிப்பிடலாம். அதேபோல் பாடசாலை மட்டத்தில் சரியான வழிகாட்டலின்மை, சமூகத்திலுள்ள ஏனையவர்களின் நடத்தையின்பால் விருப்பம் என்பவற்றை குறிப்பிடலாம் என அவர் தெரிவித்தார்.

இதுதவிர அதுமட்டுமின்றி பெரும்பாலான தோட்டப்பகுதிகள் தெருவமைப்புகளிலிருந்து தனிமைப்படுத்தப்பட்டிருப்பதாலும் போதிய போக்குவரத்து வசதிகளின்மையாலும் தொலைத்தூரங்களிலுள்ள தொழில்பயிற்சி நிலையங்களுக்கு சென்று வருவதில் சிரமங்களை எதிர்நோக்குகின்றன. மேலும் தொழில் பயிற்சிகளில் சேர்வதற்கான அடிப்படை தகைமைகளின்மை,மொழியறிவின்மை,பயிற்சிநெறிகள் தொடர்பான தெளிவான தகவல்கள், விளக்கங்கள் கிடைக்காமை, பயிற்சிநெறிகளில் இணைவதில் நிலவும் கடும்போட்டி போன்ற காரணங்களும் இளைஞர்கள் தொழில் பயிற்சியை பெறுவதில் தடையாகவுள்ளது.

இது இவ்வாறிருக்க முறையாக தொழில்பயிற்சிகளை பெற்று, கட்டாரில் தொழில்புரிந்து நாடு திரும்பிய கொட்டகலையைச் சேர்ந்த கந்தையா சிறிதரன் தெரிவிக்கையில்,

கல்வி பொதுத்தராதர சாதாரண தர பரீட்சை எழுதிய போதும் உயர்த்தரத்தை தொடருமளவுக்கு பெறுபேறுகள் கிடைக்காது என்பதை அறிந்தமையால் தொழில் பயிற்சி பாடநெறியொன்றை பெற்று அதன்மூலம் தொழிலொன்றை தேடிக் கொள்ள தீர்மானித்தேன். அதன்படி சாதாரண தர பரீட்சைகள் எழுதிய கையோடு கொட்டக்கலையில் அமைந்திருந்த தொழில் பயிற்சி நிலையத்திற்கு சென்று இலத்திரனியல் சார் 6 மாதகால பாடநெறியொன்றை தெரிவு செய்து படித்தேன். தந்தையோடு சேர்ந்து இலத்திரனியல் வேலைகளை செய்த அனுபவமிருந்தமையால் என்னால் பாடநெறியை சிறப்பாக பூர்த்திச் செய்து சான்றிதழையும் பெறமுடிந்தது. ஆங்கில மொழியறிவையும் ஒரளவு வளர்த்துகொண்டேன். நல்ல சம்பளத்தில் கட்டாரிலுள்ள கம்பனியொன்றில் மின் சுழற்சி, மின் இலத்திரனியல் பொருத்துனராக வேலை கிடைத்தது. அங்கு பெரும்பாலும் சிறந்த தொழில் பயிற்சிகளை பெற்ற இந்தியர்கள் தொழில்புரிந்தனர். சுமார் 1500 இலங்கையர்கள் அங்கு தொழில் செய்தனர். எனினும் முறையான தொழில் பயிற்சிகளை பெற்றவர்கள் 7 பேரே இருந்தனர். ஏனையவர்கள் எந்தவித தொழில் பயிற்சிகளோ, அனுபவங்களோ கொண்டிருக்கவில்லை. இதனால் சாதாரண உதவியாளர்களாக தொழில்செய்தனர். அவர்களுக்கு சம்பளம் மிக குறைவாகவே கிடைத்தது. அவர்கள் எடுக்கும் சம்பளம் அவர்களுடைய உணவு மற்றும் தங்குமிட செலவுகளுக்கே போதாது இருந்தது என்றார் அவர்.

தொழின்திறனுடன் கூடிய புலம்பெயர்வை ஊக்குவிப்பதற்கான எதிர்கால நடவடிக்கைகள் குறித்து பெருந்தோட்ட அபிவிருத்தி நிறுவன தலைவர் பாரத் அருள்சாமியிடம் வினவிய போது

சர்வதேச தொழிற்சந்தைக்கு ஏற்புடைய புதிய பாடநெறிகளை தொண்டமான் பயிற்சி நிலையத்தில் அறிமுகப்படுத்தவுள்ளோம். உதாரணமாக மோட்டார் , இலத்திரனியல், சுற்றுலா மற்றும் விருந்தோம்பல் சார் புதிய பாடநெறிகளை அறிமுகப்படுத்தவுள்ளோம். அதேபோல் நீர்வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சின் கீழ் இயங்கும் நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபையின் மூலம் குழாய் பொருத்துனர் பாடநெறிகளை புதிதாக அறிமுகப்படுத்தவுள்ளோம். சுவிட்ஸ்லாந்து, அவுஸ்திரேலியா போன்ற நாடுகளில் குழாய் பொருத்துனர்களுக்கு அதிக கேள்வி நிலவுகின்றது. தற்போது இரத்மலானையில் இப்பாடநெறி உள்ளது. இதனை நாங்கள் செப்டெம்பர் மாத இறுதியில் தொண்டமான் பயிற்சி நிலையத்தில் ஆரம்பிக்க திட்டமிட்டுள்ளோம். இதற்காக சிறிய கட்டணமொன்றும் அறவிடப்படவுள்ளது. அதேபோல் ஜப்பான் தூதரகத்துடன் இணைந்து ஜப்பான் மொழி பாடநெறியொன்றையும் ஆரம்பிக்கவுள்ளோம். அதற்கான பேச்சுவார்த்தைகளும் அமைச்சர் ஜீவன் தொண்டமான் தலைமையில் நடைபெற்றுள்ளன. ஆரம்பத்தில் ஜப்பான் மொழி பாடநெறி தொண்டமான் பயிற்சி நிலையத்தில் கற்பிக்கப்பட்ட போதும் வளவாளர்களுக்கு சம்பளம் வழங்குவதில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியான சூழல் காரணமாக அப்பாடநெறி நிறுத்தப்பட்டது. இன்றைய சூழலில் மாணவர்களிடமிருந்தும் அதனை அறவிடமுடியாத நிலை காணப்படுகின்றது. இதுதவிர தலைமைத்துவ பயிற்சிகள், மொழியறிவு, ஆளுமை திறன், தகவல் தொடர்பு, போன்ற மென்திறன்களை மேம்படுத்த சில வேலைத்திட்டங்களை ஆரம்பித்துள்ளோம். ஆரம்பகட்டமாக கொத்மலை, மஸ்கெலியா, புசல்லாவ போன்ற பகுதிகளில் செயலமர்வுகளை நடாத்தியுள்ளோம். இதனை ஏனைய பகுதிகளுக்கு விஸ்தரிக்க நடவடிக்கை எடுக்கப்படும். அதேபோல் ஆங்கில மொழியறிவு வீதம் குறைவாக காணப்படுகின்றமையால் வெளிநாட்டு வேலைவாய்ப்புகளை மட்டுமின்றி உள்நாட்டு நிறுவனங்களில் கூட தொழில்வாய்ப்பை பெற்றுக் கொள்ள முடியாத நிலை காணப்படுகின்றது. இதனை பாடசாலை மட்டத்திலிருந்து மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்படவேண்டும். கடந்தகாலங்களில் மத்திய மாகாணத்தில் கல்வி.பொதுத்தராதர சாதாரண தரப் பரீட்சையில் ஆங்கிலபாட பெறுபேறுகளை அதிகரிக்க பரீட்சை முன்னோடி கருத்தரங்குகளை நடத்தினோம். பிரிட்டிஷ் கவுன்சிலினுடன் இணைந்து எதிர்காலத்தில் spoken english courses நடாத்தவுள்ளோம். இதற்கான பேச்சுவார்த்தைகள் வெற்றியளித்துள்ளன. இவற்றை தமிழ் வளவாளர்களை கொண்டு நடாத்தவும் திட்டமிட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

(வசந்தா அருள்ரட்ணம்)

இந்தக் கட்டுரை முதலில் ஆகஸ்ட் 28, 2023 அன்று தமிழ் தினகரன் வார வெளியிடப்பட்டது.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments